காசி யாத்திரை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


1973ம் வருடம் வெளிவந்த காசி யாத்திரை என்ற இந்த படத்தின் பேரைப் பார்த்து பக்திப் படம் என்று நினைத்து விடாதீர்கள்! முழு நீள நகைச்சுவை படமாக இதனை எடுத்திருந்தார் இயக்குனர் எஸ் பி முத்துராமன். இவருடைய ஆரம்ப கால படங்களுள் ஒன்றாக இப் படம் அமைந்தது.

ஏவி எம் பட நிறுவனத்தில் நீண்ட காலம் உதவி இயக்குனராக

பணிபுரிந்தவர் முத்துராமன். ஏவி எம் நிறுவனம் காசேதான் கடவுளடா படத்தை தயாரித்த போது அப் படத்தை இயக்கும் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் ஏவி எம் செட்டியார் படத்தை இயக்கும் பொறுப்பை அப் படத்தின் கதை வசனத்தை எழுதிய கோபுவிடமே ஒப்படைத்தார். அது மட்டுமன்றி கோபுவின் உதவியாளராக பணியாற்றும் படி முத்துராமனிடம் சொன்னார். படவுலகில் தனக்கு சமமான அனுபவத்தை கொண்ட கோபுவின் உதவியாளராக பணியாற்ற முத்துராமனின் தன் மானம் இடம் தரவில்லை. செட்டியாரிடம் சண்டை போட்டுக் கொண்டு ஏவி எம் நிறுவனத்திலிருந்து விலகி விட்டார். அவ்வாறு விலகி ஊருக்கு புறப்பட்ட முத்துராமனை தடுத்தாற் கொண்ட கதாசிரியரும், தயாரிப்பாளரும் , அவரின் நண்பருமான வி சி குகநாதன் தான் கதை வசனம் எழுதி தயாரிக்கும் சில படங்களை அடுத்தடுத்து டைரக்ட் செய்யும் வாய்ப்பை முத்துராமனுக்கு வழங்கினார். அப்படி வழங்கப்பெற்ற படங்களில் ஒன்று தான் காசி யாத்திரை.

காசேதான் கடவுளடா பாணியில் நகைசுவை படமாக இது உருவானது. படத்தின் கதாநாயகன் வேறு யாமில்லை வி கே ராமசாமிதான். கதாநாயகி மனோரமா. இவர்கள் இருவரையும் பிரதான பாத்திரங்களாக வைத்து படத்தை உருவாக்கினார்கள். பிரம்மச்சரிய சங்கத்தின் தலைவரும், ஆஞ்சநேய பக்தருமான பரமசிவம் பிள்ளை இல்லறத்துக்கு முற்றிலும் எதிரானவர். தன் அண்ணன் பிள்ளைகள் இல்லறத்தில் ஈடு படாமல் தன்னைப் போல் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஆனால் அவர்களோ அவருக்கே தெரியாமல் காதலில் ஈடுபடுகிறார்கள். போதாக் குறைக்கு அவரையும் காதல் வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். இதற்காக ஆண்டாள் என்ற நாடக நடிகையை பயன் படுத்தி அவருக்கு காதல் மயக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இறுதியில் பிரம்மச்சரியமா, துறவறமா வென்றது என்பது தான் படத்தின் கதை.


பரமசிவம் பிள்ளையாக நடிக்கும் வி கே ஆர் பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறார். தீவிர பிரம்மச்சாரியாக இருந்து கொண்டு தனக்கு வந்த காதல் கடிதத்தை படித்து ரசிப்பதும், ஆண்டாள் மீது சபலப்படுவதுமாக வி கே ஆர் நடிப்பில் அசத்துகிறார். அவருக்கு பொருத்தமாக மனோரமா இரட்டை வேடத்தில் கலக்குகிறார். இவர்களுக்கு சளைக்காமல் நடிக்கும் சுருளிராஜனுக்கு இப் படம் நல்ல சான்ஸ். அவரும் அதனை தவற விடவில்லை. இவர்களுடன் ஸ்ரீகாந்த், ஜெயா, சோ, குமாரி பதமினி, எம் ஆர் ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், காந்திமதி, ஐ எஸ் ஆர், டைபிஸ்ட் கோபு, என்று ஒரு காமெடி குரூப்பே படத்தில் இடம் பெற்றது. குடிகாரனாக வரும் சோ அவ்வப்போது அரசியலையும் கலந்து பேசுகிறார். காந்திமதிக்கு கொடுத்த இறுக்கமான டிரஸ் டூ மச் .

ஆரம்பத்தில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் மேடை நாடகமாக

நடிக்கப்பெற்ற காசி யாத்திரை பின்னர் படமானது. நூறு தடவைக்கு மேல் மேடையேறிய இந்த நாடகத்தின் நூறாவது நாள் மேடையேற்றத்துக்கு சிவாஜி கணேசன் தலைமை தாங்கி நடிகர்களையும், ரசிகர்களையும் பாராட்டி கௌரவித்தார். பின்னர் நாடகம் படமான போது படத்துக்கான திரைக் கதையை குகநாதனும், அவரிடம் உதவியாளராக பணிபுரிந்த பஞ்சு அருணாசலம், சுருளிராஜன் ஆகியோரும் எழுதினார்கள்.

படத்தின் வசனங்களை குகநாதன் எழுத , பாடல்களை வாலியும், பஞ்சு அருணாசலமும் எழுதினார்கள். இசை சங்கர் கணேஷ். ஆனால் பாடல்கள் எடுபடவில்லை. முத்துராமனின் நிரந்தர கமராமேனாகத் பிற் காலத்தில் திகழ்ந்த பாபு படத்தை ஒளிப்பதிவு செய்தார்.


முத்துராமன் இயக்கிய முதல் நகைச்சுவை படம் இதுவாகும். சில காலம் கடந்து முத்துராமன், குகநாதன் நட்பில் விரிசல் ஏற்பட்டது. சாதாரண இயக்குனராக அன்று செயற் பட்ட முத்துராமன் சில ஆண்டுகள் கழித்து எந்த ஏவி எம் நிறுவனத்தில் இருந்து விலகி ஊருக்கு போக நினைத்தாரோ , அதே நிறுவனத்தின் ஆஸ்த்தான டைரக்டராகி பல வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார் என்பதும் அவரின் சினிமா யாத்திரை தொடர்ந்தது என்பதும் வரலாறு! 



No comments: