கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்
காசாவின் மிகப்பெரிய நகரங்களில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிப்பு
மேற்குக் கரையில் 6 பலஸ்தீனர்கள் பலி
விமான நிலையம் அளவு நிலத்தில் 1.8 மில். மக்களை அனுப்ப திட்டம்
காசா விவகாரத்தில் குட்டரஸ் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம்
கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்
வடக்கு காசாவில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தங்கி இருந்த பாடசாலை ஒன்றுக்கு அருகில் கைது செய்யப்பட்ட பலஸ்தீன ஆடவர்கள் பலரையும் இஸ்ரேலிய படை அவர்களின் உடைகளை அகற்றி உள்ளது.
தமது கைதுக்காக எதிர்ப்பை வெளியிடாத நிலையில் இந்த ஆடவர்களை பாடசாலைக்கு அருகில் நிறுத்திய இஸ்ரேலிய படை அவர்களின் உடைகளை களைந்து உள்ளாடையுடன் மாத்திரம் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விசையில் அழைத்துச் சென்றுள்ளது. பெயித் லஹியாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைக்கு அருகிலேயே இது நிகழ்ந்துள்ளது.
இதில் அல் அரபியா செய்தி நிறுவனத்தின் காசா செய்தியாளர் தியா கோஹ்லொட் மற்றும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டவர்களில் இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மூத்த குடிகளும் இருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இராணுவ வாகனத்தில் ஏற்றப்படுவதும் வெளியான புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.
பல நாட்கள் முற்றுகைக்குப் பின்னர் பெயித் லஹியாவில் உள்ள கலீபா பின் செயித் அல் நஹ்யா மற்றும் அலப்போ பாடசாலைகளுக்கு இஸ்ரேலிய துருப்புகள் கடந்த வியாழக்கிழமை (07) நுழைந்தன. இதனை அடுத்து அங்குள்ள ஆண்கள் கைது செய்யப்பட்டதாக ஜெனீவாவை மையமாகக் கொண்ட யூரோ–மெடிடேரியன் என்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதன்போது வீடு வீடாக சோதனை நடத்தி இருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் அங்கு தங்கி இருப்பவர்களின் ஆண்களை கைது செய்திருப்பதோடு சில வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் அந்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
காசாவின் மிகப்பெரிய நகரங்களில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிப்பு
மேலும் பல நூறு பேர் பலி: வடக்கில் ‘பஞ்சம்’
காசா பகுதியின் மிகப்பெரிய நகரங்களில் இஸ்ரேலிய படை மற்றும் ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து சண்டையிட்டு வரும் நிலையில் மேலும் பல நூறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இடம்பெயர்ந்துள்ள சுமார் இரண்டு மில்லியன் பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெறுவதற்காக இடம் மற்றும் உணவை பெறுவதற்கு போராடி வருகின்றனர்.
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரான கான் யூனிஸின் கிழக்கில் தீவிர சண்டை நீடித்து வருவதாக குடியிருப்பாளர்கள் கூறியிருப்பதோடு காசா நகருக்கு அருகிலும் ஜபலியா மற்றும் கான் யூனிஸிலும் நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல்களில் மேலும் 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் பலஸ்தீன முன்னணி கவிஞராக ரபாத் அலரீர் கொல்லப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை ஒன்றை முறியடித்ததாக ஹமாஸ் அமைப்பு நேற்று தெரிவித்தது. பணயக்கைதிகள் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் துருப்புகள் அதிகாலையில் முன்னேறி வந்த நிலையில் பலஸ்தீன போராளிகள் அவர்களுடன் சண்டையிட்டு சிலரை கொன்று மேலும் சிலரை காயப்படுத்தியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு டெலிகிராமில் கூறியது.
காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை நேற்று 17,177 ஆக அதிகரித்திருந்தது. இதில் 7,112 சிறுவர்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் 46,000 பேர் வரை காயமடைந்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை கொன்று 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்த ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் தற்போது காசாவின் பிரதான நகர மையங்களை சுற்றிவளைத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கடந்த வியாழக்கிழமை (07) தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் ஹமாஸிடம் இருந்து பொதுமக்களை பிரிப்பதன் தேவையை வலியுறுத்தியிருந்தார்.
போர் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்கு பைடன் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. போர் விமானங்கள், கவச புல்டோசர்களின் உதவியோடு இஸ்ரேலிய துருப்புகள் தெற்கில் கான் யூனிஸ் அதேபோன்று வடக்கில் காசா நகர் மற்றும் ஜபலியாவில் சண்டையிட்டு வருகிறது.
இந்த உக்கிர மோதல்களால் ஏற்கனவே தெற்கை நோக்கி வெளியேறி இருக்கும் பலஸ்தீனர்கள் மேலும் தெற்காக எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபா பகுதியை நோக்கி வெளியேறுவதற்கு தள்ளப்பட்டுள்ளனர். காசா மக்கள் தொகையில் 80 வீதமான 1.9 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
“இரண்டு மாதங்களாக வீதிகளில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வருகிறோம். எமது வாழ்நாளில் நாம் சந்தித்த மிகக் கடுமையாக இரு மாதங்களாக இது உள்ளது” என்று கான் யூனிஸில் இருந்து ரபாவை நோக்கி வெளியேறி இருக்கும் அப்துல்லா அபூ தக்கா என்பவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ரபாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அங்குள்ள நாசர் மருத்துவமனையில் சிறுவர்கள் உட்பட 20 சடலங்களை கண்டதாக ஏ.எப்.பி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் சிக்கியுள்ள பலஸ்தீன மக்கள், மிகக் குறைவான வாழ்வாதாரப் பொருட்களோடு, மேலும் குறுகிய இடங்களுக்கு இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்படுவதால் விரக்தியில் உள்ளனர்.
இரண்டு மாத காலமாகத் தொடர்ந்து வரும் போரில் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இஸ்ரேல் தனது தாக்குதலை விரிவாக்கிக் கொண்டே செல்வதால் காசாவில் பாதுகாப்பான இடம் என்பதேயில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் எந்த ஒரு உதவியும் வராத நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பு பஞ்சத்தை அறிவித்துள்ளது. “ரொக்கெட் குண்டுகள் அல்லது குண்டுத் தாக்குதல் இன்றியே இங்கு நாம் உயிரிழந்து வருகிறோம். நாம் பட்டினி மற்றும் வெளியேற்றங்களால் ஏற்கனவே இறந்துவிட்டோம்” என்று காசா நகர வாசியும் தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றிருப்பவருமான அப்துல்காதர் அல் ஹத்தாத் தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
மேற்குக் கரையில் 6 பலஸ்தீனர்கள் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அகதி முகாம் ஒன்றில் இஸ்ரேலிய துருப்புகள் ஆறு பலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
நப்லுஸில் இருந்து வடக்காக 17 கிலோமீற்றர் தொலையில் இருக்கும் பாரா அகதி முகாமை இஸ்ரேலிய படை நேற்றுக் காலை சுற்றுவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளது. இதன்போது குடியிருப்பாளர்கள் கற்களை எரிந்து எதிர்ப்பை வெளியிட்டிருப்பதோடு சில பகுதிகளில் துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு ஜெரூசலம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மேலும் பல இடங்களிலும் இஸ்ரேலிய படை சுற்றிவளைப்புகளை நடத்தி பலரை கைது செய்துள்ளது.
இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேற்றவாசிகள் இந்த ஆண்டில் மேற்குக் கரையில் குறைந்தது 476 பலஸ்தீனர்களை கொன்றிருப்பதோடு, ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் 268 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். நன்றி தினகரன்
விமான நிலையம் அளவு நிலத்தில் 1.8 மில். மக்களை அனுப்ப திட்டம்
தெற்கு காசாவில் உள்ள சிறு நகரான அல் மவாசியின் ஒரு பகுதியை பாதுகாப்பான இடம் என்று அறிவித்திருக்கும் இஸ்ரேல் பலஸ்தீனர்களை அங்கு செல்லும்படி கூறியுள்ளது.
வடக்கு காசாவை அடுத்து தெற்கு மீது இஸ்ரேல் சராமாரி குண்டு வீசிவரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பாதுகாப்பு பகுதி போரினால் வெளியேற்றப்பட்டுள்ள 1.8 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்களுக்கு இடவசதி அளிக்கப் போதுமானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
பழங்குடி மக்களின் கரையோர நகரான அல் மவாசி சுமார் 1 கி.மீ. அகலம் மற்றும் 14 கி.மீ. நீளமான குறுகலான மற்றும் சிறிய நிலப்பகுதியாகும்.
“காசா ஏற்கனவே சனநெரிசல் மிக்க பகுதியாக இருக்கும் நிலையில் விமான நிலையம் ஒன்றுக்குள் சுமார் 1.8 மில்லியன் மக்களை உள்ளடக்குவது பற்றி நாம் பேசுகிறோம்” என்று ரமல்லாவை தளமாகக் கொண்ட சட்ட நிபுணர் புஷ்ரா காலிதி தெரிவித்துள்ளார்.
சன நெரிசல் மிக்க இடத்தில் வாந்திபேதி, இரைப்பைக் குடலழற்சி போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைச்சின் தலைவர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
காசா விவகாரத்தில் குட்டரஸ் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம்
No comments:
Post a Comment