மேலாதிக்க மனோநிலை மாறாதவரையில்

 December 7, 2023


‘அரசாங்கத்துக்கு நல்லிணக்கத்தில் அக்கறை இல்லை’, என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். அவரின் கருத்து முற்றிலும் சரியானது.
யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்கள் முடிவுற்ற பின்னரும்கூட விடுதலைப்புலிகளை முன்வைத்து மட்டுமே அரச இயந்திரங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்கம் பற்றி பேசுகின்றார் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பேசுகின்றார் – இன்னும் பல தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க முறைமையிலிருந்து கற்றுக்கொள்ளப் போவதாகக் கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலிருந்து தென்னாபிரிக்கா தொடர்பில் பேசி வருகின்றனர்.
ஆனால், எந்தவொரு முன்னேற்றகரமான நகர்வுகளும் இதுவரையில் இடம்பெறவில்லை.
இலங்கையின் அனைத்து அரச கட்டமைப்புகளும் போர்க் காலகட்டமைப்புகளாகவே இருக்கின்றன.
போர்க் கால மனோநிலையிலேயே படைத் துறையினரும் நாட்டின் புலனாய்வு கட்டமைப்புகளும் இருக்கின்றன.
இவ்வாறான கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படாத வரையில் நாட்டில் நல்லிணக்கம் என்பது கானல் நீர்தான்.
போர்க் கால அரச மனோநிலை என்பது அனைத்திலும் பயங்கரவாதத்தை தேடுவதுதான்.
தமிழர் அனைவரும் விடுதலை புலிகள் என்னும் கண்ணோட்டத்தில்தான் அரச அணுகுமுறை இருந்தது.
அந்த அடிப்படையில்தான் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
இந்த அணுகுமுறையில் இப்போதும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.
பிரபாகரனின் பிறந்த தினத்தில், பிறந்த ஒருவர் அவரது பிறந்த தினத்துக்காகக்கூட ஒரு கேக்கை கொள்வனவு செய்து கொண்டு வீதியால் சுதந்திரமாக செல்ல முடியாத சூழலே காணப்படுகின்றது.
இவ்வாறானதொரு சூழலில் நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றது. போருக்கு பின்னரான நல்லிணக்க முயற்சிகளின் அடிப்படையே பரஸ்பர நல்லுறவுதான்.
நல்லுறவு இல்லாது போனால் நல்லிணக்கம் என்பது எவ்வாறு சாத்தியப்படும்? தமிழ் மக்கள் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை நம்ப வேண்டுமாயின், முதலில் அவர்கள் அச்சமற்ற சூழலில் வாழ வேண்டும். ஆனால், அவ்வாறானதொரு சூழல் இன்றுவரையில் சாத்தியப்படவில்லை.
இப்போதும் தமிழ் மக்கள் அரச படை அதிகாரிகளை அச்சத்துடன்தான் நோக்க வேண்டியிருக்கின்றது.
புலனாய்வாளர்களை பார்த்து அச்சப்பட வேண்டியிருக்கின்றது. ஏனெனில், போர்க் கால மனோநிலையால் இறுகிப் போயிருக்கும் அரச கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படவில்லை.
முன்னர் அவர்கள் எவ்வாறான மனோநிலையில் தொழில்பட்டார்களோ, அதே மனோநிலையில்தான் இப்போதும் தொழில்படுகின்றனர்.
அவர்களின் மீது குற்றம்சாட்ட முடியாது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவது போன்று – நல்லிணக்கத்தில் அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறையில்லை.
அரசாங்கம் நல்லிணக்கம் என்பதை உதட்டளவில் தான் உச்சரிக்கின்றது.
ரணில் பல்வேறு விடயங்களை கூறினார்.
ஆனால், எதனையுமே நடைமுறையில் நிரூபிக்கவில்லை.
‘ஈழநாடு’ தொடர்ச்சியாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டி வந்திருக்கின்றது.
அதாவது, நல்லிணக்கத்தின் ஆரம்பம் என்பது – மக்கள் அரசாங்க முயற்சிகளை நம்ப வேண்டும்.
அவ்வாறு நம்ப வேண்டுமாயின், ஆட்சியாளர்கள் சில விடயங்களை செயலில் காண்பிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் நல்லிணக்கத்தின் ஆரம்பம் அரசமைப்பில் இருப்பவற்றை ஆட்சியாளர்கள் அமுல்படுத்த வேண்டும்.
மாகாண சபைகள் எவ்வித தலையீடுகளும் இன்றி இயங்க வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் மாகாண சபைகளுக்கு திரும்ப வேண்டும்.
போர்க் கால அரச கட்டமைப்புகள் முற்றிலும் மறுசீரமைக்கப்படவேண்டும்.
இவ்வாறானதொரு சூழலில்தான் நல்லிணக்கம் துளிர்விடும்.
மக்கள் அச்சத்துடன் இருக்கின்றபோது நல்லிணக்கம் என்றுமே சாத்தியமற்றது.   நன்றி ஈழநாடு 


No comments: