இலங்கைச் செய்திகள்

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்

 ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதியிடம் கையளிப்பு

பேராசிரியர் யோகராசா நேற்று காலமானார்

தாமரை கோபுரத்தால் 14 மாதங்களில் மட்டும் ரூ. 102 கோடி வருமானம்

சமாதானத்தின் செய்தி தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி

உலக தமிழர் பேரவை யாழ். விஜயம்



பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்

- இந்துக்கள் கவலை; இந்தியா தலையீடு

December 8, 2023 1:52 pm 

கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டமை தொடர்பாக இந்திய – இலங்கை உள்ளிட்ட உலகம் வாழ் இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர்.

உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கியபின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் திரு. பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் திரு. தம்பையா உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன. இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பலவாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டில் அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்புகளும், பொதுமக்களும் இராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்டபோது கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய கடந்த 2014 மே மாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு இராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.

அதற்கு ‘மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை’ என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி இராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன. ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள 64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது.

காரைதீவு குறூப் நிருபர் சகா - நன்றி தினகரன் 





 ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதியிடம் கையளிப்பு

- உலக தமிழர் பேரவை மற்றும் பௌத்த தேரர்களால் கையளிப்பு

December 8, 2023 12:36 pm 

உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினரால் ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த அவர்கள் இதனைக் கையளித்துள்ளனர்.

அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “’இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “’இமயமலைப் பிரகடனம்’ உள்ளடக்கியுள்ளது.

இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்த்தாகவும், வடக்கு கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்டங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டம், அந்த மாகாணங்களை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்தார்.

இதன்படி, பூனரின் நகரம் எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக மாறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார். நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தைப் பாராட்டிய உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழு பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் “’இமயமலைப் பிரகடனம்’ வெளியிடக் கிடைத்தமை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க வண. மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சங்க நாயக்க வண. சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர், மேல் மாகாணத்தின் பிரதான சங்க நாயக மற்றும் ஸ்ரீ தர்மரக்ஷித பிரிவின் பதிவாளர் வண. கிதலகம ஹேமசார தேரர், வஜிரவங்ச பிரிவின் பதில் மகாநாயக்க பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித அபிவிருத்தி ஆய்வு மையத்தின் தலைவருமான வண, களுபஹன பியரதன தேரர், மத்திய மாகாணத்தின் பாததும்பர பிரதம சங்க நாயக வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர், ராமன்ய நிகாயவின் பிரதிப் பதிவாளர் வாந்துவே தம்மவங்ச தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோருடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவும் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 

 



பேராசிரியர் யோகராசா நேற்று காலமானார்

December 8, 2023 6:59 am 

ஈழத்து இலக்கியப் பரப்பில் “கருணை யோகன்” என்ற புனைப் பெயரில் புகழ் பெற்றிருந்த ஓய்வுநிலை பேராசிரியர் செ. யோகராசா சுகயீனமடைந்திருந்த நிலையில், நேற்று காலமானார். யாழ்ப்பாணம் கரணவாய் மண்ணின் மைந்தர் செல்லையா யோகராசா. 1960-1972 வரை “கருணை யோகன்” புனைப்பெயரில் இயங்கி கவிதை கதைகளை எழுதி வந்தார். பின்னர் ஆய்வுத்துறையைத் தேர்ந்து கொண்டு, தனது சொந்தப் பெயரில் எழுதத் தொடங்கினார். நவீன தமிழ் இலக்கியம்,தமிழியல் ஆய்வு, ஈழத்து இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம், நாட்டாரியல், கல்வி என்று பலதுறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர் இவர்.

சுறுசுறுப்பாக இயங்கும் இலக்கியத் தேனியாக இலங்கையின் பல பாகங்களையும் இலக்கியச் செயற்பாடுகளுக்காகச் சுற்றிவருபவர். பிரதேசவாதம், சாதிமத வேறுபாடு என்பவை இம்மியும் சேராத,படைப்பு கருதியவர். சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் ,சுவிற்சலாந்து, பிரான்ஸ், தமிழ்நாடு ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மாநாடுகளில் அவர் வாசித்த ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன. ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில், தன் ஆய்வுகள் மூலம் பெரும் பங்காற்றிவரும் செ.யோகராசா தனது ஆய்வுப் பணிக்காக விருதுகள் பல வென்றவராவார்.   நன்றி தினகரன் 





தாமரை கோபுரத்தால் 14 மாதங்களில் மட்டும் ரூ. 102 கோடி வருமானம்

December 7, 2023 6:01 am 

கொழும்பில் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த பார்வையாளர் மூலம் 14 மாத காலப்பகுதிக்குள் 102 கோடியே 59 இலட்சம் (1,025.9 மில்லியன்) ரூபா வருமானத்தை பெற முடிந்துள்ளதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2022 செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் நேற்று முன் தினம் (05) வரையான காலப்பகுதியிலேயே, இந்த வருமானத்தை பெற முடிந்துள்ளது. அக்காலப்பகுதியில் 13,52,324 உள்ளூர் மக்களும், 38,597 வெளிநாட்டவர்களும் இதனைக் காண வந்துள்ளதாகவும் லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் நேற்று (06) காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து, தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க,

“செப்டம்பர் 15, 2022 அன்று தாமரைக்கோபுரத்தை நாங்கள் பொறுப்பேற்றபோது, உணவகத்தைத் திறக்கும் நிலைமையில் இல்லை. அதற்காக நாங்கள் டெண்டர் கோரினாலும், யாரும் முன்வரவில்லை. அதனால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு திட்டத்தைத் தொடர முடிவு செய்தோம். அதன்படி, முகாமைத்துவ நிர்வாக மாதிரிக்கு சென்றோம். அதன்படி சிட்ரஸ் ஹோட்டல் நிறுவனத்தை தெரிவு செய்தோம்;. உணவகத்தின் லாபத்தில் 80 சதவீதம் தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்துக்கும் மீதமுள்ள 20 சதவீதம் சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துக்கும் கிடைக்குமாறு நடவடிக்கை எடுத்தோம். 220 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளோம்.15 செப்டம்பர் 2022 நேற்று முன் தினம் வரை (05) உள்ளூர் 1,352,324 பார்வையாளர்கள் வந்துள்ளனர். 38,597 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்களிடமிருந்து மட்டுமே எமக்கு வருமானம் கிடைத்துள்ளது.   நன்றி தினகரன் 





சமாதானத்தின் செய்தி தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி

- இளைஞர்களின் செய்தி நல்லூரை வந்தடைந்தது

December 6, 2023 11:13 am 

“சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம்” எனும் தொனிப்பொருளில் கண்டியில் இருந்து இளைஞர் அமைப்பை சேர்ந்தோர் யாழ்ப்பாணம் – நல்லூரை வந்தடைந்தனர்.

கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை உள்ள சர்வமத தலைவர்களுக்கு சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் வேலைத்திட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் இந்த செயற்திட்டத்தை கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த இளைஞர்கள் நேற்று (05) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தனர்.

எமது சகோதர மக்களின் பறிக்கப்பட்ட நீதி மற்றும் நியாயத்திற்காக ஒன்றாக குரல் கொடுத்து சகோதர பிணைப்பின் மூலம் , உண்மை மற்றும் நீதியை கண்டறியும் எமது பயணத்தின் முதல் படியாக, நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான பொறிமுறைகள் , அரசியல் கலாச்சாரம் மற்றும் தேர்தல் , காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை , மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், காணி சொத்து பாதிப்புக்கள் மற்றும் பலவந்தமாக வெளியேறல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு , இலங்கையில் வர்த்தகம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் மொழி ஆகிய முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 






உலக தமிழர் பேரவை யாழ். விஜயம்

December 9, 2023 4:43 pm 

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு, இன்று (09) விஐயம் செய்தனர்.

இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும், மேலும் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 

No comments: