NSW சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பு (Federation of Community Language Schools) ஒழுங்கு செய்த சமூக மொழிகள் மாநாடு

 .


NSW சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பு (Federation of Community Language Schools) ஒழுங்கு செய்த சமூக மொழிகள் மாநாடு

NSW சமூக மொழிகள் பாடசாலைக் கூட்டமைப்பின் மாநாடு, சனிக்கிழமை, 7 அக்டோபர் 2023 அன்று University of Western Sydney, Bankstown வளாகத்தில் இடம்பெற்றது. இந்தியத்  துணைக் கண்டங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். இவர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டு அடிப்படையில் சமூக மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்.  


நியூசவுத்வேல்ஸ்  சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, சமூக மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முன்முயற்சியாகவும், அதற்கான திட்டமிடலாகவும், இரண்டாவது மொழியைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகின்றவிதமாகவும் அமைந்தது.  புலம்பெயர்ந்த குடும்பங்களிடையே தாய்மொழிப் பாவனை படிப்படியாக குறைந்துவருகிறது என்பதுபற்றிய அக்கறையும் இதன்மூலம் வெளிப்பட்டது.

தமிழ், சிங்களம், குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், நேபாளம், பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு, உருது போன்ற மொழிகளைப் பயிற்றுவிக்கும் பாடசாலைகளிலிருந்து இவ் ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக மிக அதிகமாகக் காணப்பட்டது. இது வரும் ஆண்டுகளில் தமிழ் மொழிக்கற்றலின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான களத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது.  வென்ற்வேத்வில் தமிழ் பாடசாலை, ஹோம்புஸ் தமிழ் பாடசாலை, பாலர் மலர், மவுண்றூயிட் தமிழ் கல்வி நிலையம் மற்றும் ஈஸ்ற்வூட் தமிழ் பாடசாலைகளிலிருந்து தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.


கூட்டமைப்பில் துணைக்கண்ட மொழிகளைப் பிரநிதித்துவப் படுத்துபவரும் ஹோம்புஸ் தமிழ்ப் பாடசாலை ஆசிரியரும் சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான திரு.திருநந்தகுமார் அவர்களின் தொடக்க உரையுடன் மாநாடு ஆரம்பமாகியது. தாய் மொழியானது ஒரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை வளர்த்துக் கொள்ளவும், சுய அடையாளத்தை உணர்ந்து கொள்ளவும் உறுதுணையாக அமைகின்றது என்பதையும், தாய் மொழியைக் கற்கும் மாணவர்கள் வலுவான தகவல் தொடர்புத் திறனை வளர்த்து, மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் இடையிலான உறவை ஆராய்வார்கள், மொழி அறிவுள்ளவர்கள் கலாசார சமூக செயல்பாடுகள் மூலம் தொடர்ந்தும் தங்கள் தாய் மொழியைப் பாதுகாப்பார்கள் என்றும் தனது உரையின்போது தெரிவித்தார்.

 

மெல்பேர்ன் பல்கலைக்கழக கல்வித்துறைப் பொறுப்பாளர் பேராசிரியர் Joseph Lo Bianco தனது சிறப்புரையின் மூலம் பங்குபற்றிய அனைவரையும் உற்சாகப்படுத்தினார். 'மொழி மாற்றம்' என்ற கருப்பொருளில் அவரது உரை இடம்பெற்றது. ஒரு மொழி படிப்படியாக அடுத்தடுத்த தலைமுறைகளில் அதன் ஆதிக்கத்தை இழந்து செல்கிறது என்றும் இது ஒரு தனிப்பட்ட இனத்தின் மொழிக்கான பிரச்சினை அல்ல, உலகளாவிய சமூகமொழி சார்ந்த பிரச்சனை என்றும் குறிப்பிட்டார். Lo Bianco இலங்கைக்கும் தென் இந்தியாவுக்கும் தான் சென்றதாகவும், தமிழ்மொழி மீதுள்ள ஆர்வத்தினால் தான் தமிழைக் கற்கமுற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மொழிக் கல்வியில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க மொழியியலாளர் Joshua Fishman அவர்களது 3G (Three Generation) model பற்றியும் Lo Bianco தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது முதலாம் இரண்டாம் தலைமுறைகளுக்கிடையேயான மொழி இழப்பு 5 லிருந்து 20 வீதமாகவும், இரண்டாம் மூன்றாம் தலைமுறைகளுக்கிடையேயான மொழி இழப்பு 40 லிருந்து 60 வீதமாகவும் உயர்ந்துள்ளதாகவும், இப்படிப்பட்ட மொழிகளை புத்துயிர் அளிப்பது  அல்லது அவற்றை நிலையானதாக மாற்றுவதற்கான மாதிரிகளையும் செயல்முறைகளையும் அழகாக விபரித்தார். அவற்றில் முக்கியமானவையாக, வயதானவர்களிடமிருந்து மொழியைப் பெறும் வகையில் குடும்பக்கட்டமைப்பு அமைந்திருப்பது, தினசரி பயன்பாட்டில் வீடுகளில் பேச்சுமொழி தாய்மொழியாக இருப்பதில் கவனம் எடுப்பது, பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசினாலும் பெற்றோர்கள் தமிழில் பதிலளிப்பது, தாய் மொழி பயன்படுத்தக்கூடிய இடங்களில் அனைத்து வயதினரிடையேயும் அம்மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மொழி மேம்படுத்தப்படும் அல்லது குறைந்தபட்சம் தக்கவைக்கப்படும் என்பதையும் எடுத்துக்கூறினார்.

மொழியின் பயன்பாடு பழக்கத்தில் இல்லாதிருந்தால் அதனைப் பாதுகாப்பதென்பது சாத்தியப்படாது என்ற செய்தி அதனூடாக வெளிப்பட்டது. Lo Bianco ன் கூற்றுப்படி, வீடு, படிப்பு, வணிகம் மற்றும் சமூக தொடர்புகள் போன்ற வாழ்க்கையின் பல துறைகளிலும் சமூக மொழிகளை தொடர்ச்சியாகக் கையாளுவதற்கான மாற்று வழிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

  

A/Professor Peter Friedlander of Australian National University, இன்னொரு கோணத்தில் தனது உரையாடலை முன்னெடுத்தார். சமூக மொழிகளை சமகாலத்தோடு இணைத்து வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டினார். மாணவர்களின் வாழ்க்கையோடு இணைந்த, அவர்களின் தற்போதைய நடைமுறையில் உள்ள உரையாடல் வடிவங்களை அறிந்து கற்பிப்பதன் மூலம், பிள்ளைகள் தங்கள் சொந்த நாடுகளில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, தமது அவுஸ்திரேலிய அனுபவங்களை புதுமையான முறையில் விபரிக்க முடியும் என்று கூறியிருந்தார். மேலும்  இன்றைய இளைய சமுதாயம் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையையும் எடுத்துக்காட்டினார். அதாவது அவர்கள் தங்கள் சமூகத்துடன் இணைவதற்கும், ஆங்கிலம் பேசத் தெரியாத தங்கள் தாத்தா பாட்டிகளுடனான தொடர்பைப் பேணுவதற்கும் பல சிரமங்களை மேற்கொள்கிறார்கள் என்றும் இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தாய் மொழியைக் கற்பது அவசியம் என்ற உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Mark Buttigieg, MLC, NSW பன்முக கலாச்சார அமைச்சிற்கான பாராளுமன்றச் செயலாளர், தனக்கேயுரிய தனிப்பட்ட கோணத்தில் தாய்மொழியின் அவசியத்தை எடை போட்டார். அவர் தனது குடும்பத்தின் தாய்மொழியான Maltese மொழியைக் கற்றுக் கொள்ளாததற்கு வருத்தம் தெரிவித்தார். ஆங்கிலம் போதுமானது என்ற கடந்தகால நம்பிக்கையே இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். அவுஸ்திரேலியாவில் 80,000 இந்தி மொழி பேசும் மக்கள், 50,000 பஞ்சாபி மொழி பேசுபவர்கள், 38,000 தமிழ் மொழி பேசுபவர்கள் இருப்பதாக  தரவுகள்  பகிரப்பட்டன. இருந்த போதும் தமிழ் மொழியைக் கற்கும் மாணவர்கள் எண்ணிக்கைதான் அனைத்து மொழிகளிலும்  முன்னிற்கிறது என்பது ஆறுதலடைய வைத்தது.

  

இதேபோன்ற கருத்தில், பன்முக கலாச்சாரத்திற்கான நிழல் மந்திரி, Mark Coure, இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிகளைக் கற்பிப்பதில் தங்கள் முயற்சிகளை விரிவுபடுத்துமாறு கல்வியாளர்களை வலியுறுத்தினார். அவர் சுட்டிக்காட்டியது போல், ஆஸ்திரேலியா தொடர்ந்தும் பன்முகப்படுத்தப்படுவதால், புலம்பெயர்ந்தோர் அவர்களுடன் கொண்டு வரும் செழுமையான தங்கள் மொழிகளைப் பாதுகாப்பது முக்கியமான பேசுபொருளாக மாறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்றன. மாணவர்களை வசீகரிக்கும் வகையில் கற்றல் சூழலை உருவாக்குவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய அவை உதவின. வென்ற்வேத்வில் தமிழ் பாடசாலை முன்பள்ளி வகுப்புகளுக்கான ஆசிரியை திருமதி சிவகாமி தயாநிதி அவர்கள் தனது செயலமர்வில் தமிழ் மொழியை வகுப்பறைகளில் கற்பிக்க உபயோகிக்கும் முறைகளையும் உத்திகளையும் பகிர்ந்து கொண்டார். ஒலி வடிவத்தில் பரிட்சயம் இல்லாது வரிவடிவத்தில் கவனம் செலுத்துவது சிறந்த பலனைத்தராது என்பதையும், மாணவர்களின் எழுத்து, வாசிப்பு, பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை மேம்படுத்துவதற்கான கற்பித்தல் உத்திகளையும், மாணவர்களின் கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுவதற்கான வகுப்பறைச் செயல்பாடுகளையும், மொழி கற்பித்தலில் கதை சொல்லும் நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றையும் செயல்முறை உதாரணங்களுடன் திருமதி சிவகாமி தயாநிதி அவர்கள் விபரித்தவிதம் அனைவரையும் கவர்ந்தது.

நியு சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்குமாக பயிலரங்குகள் நடாத்தி ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வசதிகள் செய்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இப்பயிலரங்குகளை திரு திருநந்தகுமார் அவர்கள் நடைமுறைப்படுத்துவனால் அவர் அனைத்துத் தமிழ் ஆசிரியர்களுக்கும் நன்கு பரிட்சயமானவர்.  திருமதி சிவகாமி தயாநிதி அவர்களின் செயலமவர்வைத் தொடர்ந்து திரு திருநந்தகுமார் அவர்களது செயலமர்வு நடைபெற்றது. அதில் மொழியைக் கற்பிப்பதில் உள்ள நுணுக்கங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. முக்கியமாக மொழித் திறனை வளர்ப்பதில் எவ்வாறான கற்பித்தல் அணுகுமுறைகள் பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றியும், வாசிப்பு, எழுதுதல், பேசுதல் மற்றும் கேட்டல் போன்ற தனித்தனி பகுதிகளின் கீழ் அவை எப்படிக் கற்பிக்கப்படவேண்டும் என்பது பற்றிய தரவுகளும், பாரம்பரிய கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்களும் சுருக்கமாகப் பேசப்பட்டன.

மொழி என்பது ஒரு உரையாடல் கருவி மட்டுமல்ல. பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்த மூதாதையர்களின் மொத்த அறிவும், அனுபவமும் நூல் வடிவாக, செய்தியாக, கதையாக, பாடலாக மொழி மூலம் பரப்பப்படுகிறது. அந்த மொழி அழியும்போது அதனோடு  அந்த அறிவும் அனுபவமும் சேர்ந்தே அழிந்து போகும். மேலும், ஒரு இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி இவற்றின் மீது உயர்ந்த மதிப்பீடு இல்லாத ஒரு சமூகத்தால் எதையும் தக்க வைக்க முடியாது.

ஆஸ்திரேலியா போன்ற பல்கலாச்சார தேசத்தில் பன்மொழி என்பது ஒரு ஆடம்பரமல்ல, அது அவசியமானது. அந்தவகையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் சமூகமொழிக் கல்வியை எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதையும், சமூகமொழியைக் கற்பிப்பதில் உள்ள சவால்களும் மற்றும் அந்த சவால்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதைப் பற்றியும் நிறையவே இன்றைய நாளில் அறியமுடிந்தது. இந்த ஒன்றுகூடல், அதில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி, அவுஸ்திரேலியாவில் வாழும் கலாசாரம் நிறைந்த, மொழியியல் பன்முகத்தன்மை கொண்ட எதிர்காலச் சந்ததியினருக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

எழுத்து

சௌந்தரி கணேசன்

 

 


No comments: