சூரியகாந்தி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 அந்தஸ்து, கௌரவம் பிரச்னைகளை அடிப்படையாய் கொண்டு


தமிழில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. இவற்றில் பல படங்கள் சமுதாய அந்தஸ்தை பிரதானமாகக் கொண்டே உருவாகி இருந்தன. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சூரியகாந்தி படம் முதல் தடவையாக கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ பிரச்னையை அடிப்படையாக கொண்டு படமானது.


மோகன், ராதா இருவரும் தொழில் செய்து கொண்டே

காதலிக்கிறார்கள். பெற்றோர்கள் அனுமதியுடன் கல்யாணமும் செய்து கொள்கிறார்கள். கல்யாணத்துக்கு பிறகும் வேலை செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். அப்படியென்றால் இல்லறம் மகிழ்ச்சியாகப் போக வேண்டியது தானே . அதுதான் இல்லை . ராதா தன்னை விட அதிகமாக சம்பாதிக்கிறாள் ,அதனால் குடும்பத்தில் அவளுக்கு அதிக மரியாதை , தான் ஒரு செல்லாக்காசு என்று மோகன் நினைத்து நினைத்து மாய்கிறான் . இதனால் தம்பதிகள் இடையே தகராறு வருகிறது. ராதா
விட்டுக் கொடுத்து போக நினைத்தாலும் மோகனின் போலி கௌரவம் , தாழ்வு மனப்பான்மை என்பன அதனை உணரத் தடுக்கிறது. இளம் தம்பதிகள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே படத்தின் கதை .

சிக்கலான இந்த கதையை பிரபல கதாசிரியர் பாசுமணி எழுதினார்.தமிழ் சினிமவுக்கு புதிதான இந்த கதைக்கு வசனம் எழுதினார் பேராசிரியர் ஏ எஸ் பிரகாசம். பல இடங்களில் பிரகாசத்தின் வசனங்கள் பிரகாசித்தது. மோகனாக வரும் முத்துராமனும், ராதாவாக வரும் ஜெயலலிதாவும் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தம். துடுக்காகவும், அலட்சியமாகவும் பல படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு இதில் கணவனை அணுசரித்து , அரவணைத்து போகும் பாத்திரம். அந்த பாத்திரமாகவே மாறியிருந்தார் அவர். நடித்ததோடு நின்று விடாது இரண்டு பாடல்களையும் பாடி இருந்தார் அவர். ஆணவம், முரட்டுத்தனம், பிடிவாதம் போன்ற பாத்திரங்கள் முத்துராமனுக்கு புதிதல்ல , அதனை இதிலும் செய்திருந்தார் அவர்.


70ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தமிழ் திரைக்கு ஒர் அம்மா புதிதாக கிடைத்தார். அவர்தான் நடிகையர் திலகம் சாவித்திரி. இந்தப் படத்தில் முத்துராமனின் அம்மாவாக பாந்தமாக நடித்திருந்தார் அவர். அவருக்கு இணை சுந்தரராஜன். பணக்காரரை போல் வசதியாக வாழவும் முடியவில்லை, ஏழையை போல் கையேந்தி வாழவும் முடியவில்லை ஏன் என்றால் நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்று அடிக்கடி அவர் அங்களாய்ப்பது நல்ல பன்ச்!

நியாய, அநியாயத்துக்கு கட்டுப்பட்ட வடிகட்டிய கஞ்சன் எம் ஆர் ஆர்

வாசு. அவரின் பாத்திரம் கதை நகர்வுக்கு உதவுகிறது. இவர்களுடன் சசிகுமார், ஸ்ரீலேகா, செந்தாமரை, காந்திமதி, எஸ் என் பார்வதி ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தின் இயக்குனர் தனது எல்லா படங்களிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இந்த படத்திலும் அதை செய்யத் தவறவில்லை. சோ,மனோரமா, மொலி , காத்தாடி ராமமூர்த்தி, என்று ஒரு செட்டை படத்தில் இணைத்து விட்டார். இதில் மனோரமா நடிப்பு பேஷ். தெரியாதோ நோக்கு தெரியாதோ என்று சொந்தக் குரலில் பாடி,ஆடி, அசத்தி விட்டார்.


படங்களுக்கு பாடல்களை எழுதிக் கொண்டிருந்த கண்ணதாசன் இதில் ஒரு பாடலை எழுதி படத்தில் தோன்றி நடித்து தன் ஆசையை தீர்த்துக் கொண்டார். பரமசிவம் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது பாடல் டி எம் எஸ் குரலில் கம்பீரமாக ஒலித்தது. அதே போல் வாலியின் நான் என்றால் அது அவளும் நானும் பாடல் வித்யாசமாக அமைந்தது. இரண்டு பாடல் காட்சிகளும் படத்தோடு நன்கு ஒன்றிப் போனது. இசை எம் எஸ் விசுவநாதன்.

வி செல்வராஜ் படத்தை ஒளிப்பதிவு செய்தார். அனுபவஸ்தரான எல் பாலு படத் தொகுப்பை கவனித்தார். முக்தா பிலிம்ஸ் படங்களை மட்டும் இயக்கி கொண்டிருந்த வி சீனிவாசன் , வேணுகோபால் என்பவர் தயாரித்த இந்த படத்தை இயக்கி படமும் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

No comments: