இலங்கைச் செய்திகள்

மலையக மக்களது அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்

திருக்கோணேஸ்வரர் ஆலய வழிபாடுகளில் நிர்மலா பங்கேற்பு

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நாடு திரும்பாமல் தடுப்பது எனது பொறுப்பாகும்

இலங்கை – இந்தியா பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு; 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்

காசா பகுதியில் இடம்பெயர்ந்த 17 இலங்கையர்களில் 15 பேர் எகிப்திற்கு

சர்ச்சைக்குரிய கருத்தால் சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம்

இலங்கை முழுவதும் பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்த இந்திய நிதி அமைச்சர்

பிரதமர் தினேஷ் – இந்திய நிதி அமைச்சர் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு

காசா எல்லையில் சிக்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்


மலையக மக்களது அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்

November 3, 2023 6:39 am 

மலையக பெருந்தோட்ட மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடை பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, திருமதி நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

மலையக மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர் பயிற்சி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுமென்றார்.

அத்துடன் ‘நாம்200’ ஆண்டு விழாவில் இந்திய நிதியுதவியின் கீழ் 04ஆம் கட்டமாக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கொட்டக்கலை மவுண்ட் வெர்னன் தோட்ட கீழ் திம்பில வலயத்தில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு ஒன்லைன் ஊடாக அடிக்கல் நாட்டி வைத்தனர்-.

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இணைப்புப் பாலமாக மலையகத் தமிழர்கள் திகழ்வர்களென்றும் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.   நன்றி தினகரன் 

 
திருக்கோணேஸ்வரர் ஆலய வழிபாடுகளில் நிர்மலா பங்கேற்பு

November 3, 2023 6:00 am 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றுக் காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.   நன்றி தினகரன் 

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நாடு திரும்பாமல் தடுப்பது எனது பொறுப்பாகும்

– சவால்களுக்கு மத்தியிலும், நாட்டுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் திறம்பட செயற்படுத்தப்படுகின்றன

November 2, 2023 4:54 pm 

– வரவு செலவுத் திட்டத்தில் சிறிய, நடுத்தர கைத்தொழில்களுக்கான வங்கிக் கடன் சலுகைகள் தொடர்பில் அறிவிப்பு
– தேசிய கைத்தொழில் விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி

யாசகம் செய்யும் நாட்டுக்கு பதிலாக வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடொன்றை கட்டியெழுப்புவது எந்த அளவு கடினமாக இருந்தாலும் அதற்கு அவசியமான தீர்மானங்களை தற்காலத்தில் உரிய வகையில் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் நேற்று (01) நடைபெற்ற தொழிற்சாலைகளுக்கான, தேசிய கைத்தொழில் விருது விழா – 2023 இல் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வற்” வரியை 18% அதிகரிப்பதற்கான தீர்மானத்தை தானோ அல்லது அமைச்சரவையோ விருப்பத்துடன் தேற்கொள்ளவில்லை என்றும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காகவே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களுக்கு உண்மையை கூறி நாட்டுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதே தலைமைத்துவப் பண்பாகும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர்தல் நெருங்கி வரும் தருவாயில் கடினமான தீர்மானங்களை மேற்கொள்வது பாராளுமன்றத்திற்கு மேலும் நெருக்கடியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

நாட்டுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு இளைஞர் தலைமைத்துவமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிற்காக சேவையாற்றக்கூடிய இளம் அமைச்சர்கள் குழுவினர் அரசாங்கத்தில் செயற்பட்டு வருவதாகவும், அவர்களுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டளவில் சுமூகமான பொருளாதார நிலைமையொன்றை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வரவு செலவு திட்டத்தில், சிறு மற்றும் மத்திய தர கைத்தொழிலாளர்களுக்கான வங்கிக் கடன் சலுகை தொடர்பில் அறிவிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திகளை வலுவூட்டுவதற்காக, கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இதற்காக, 21 பிரதான தொழில் துறைகள் மற்றும் 61 உப தொழில் துறைகளை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த 300 தொழில்முனைவோருக்கு பிளாட்டினம் தங்க விருதுகளும், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இன்று விருது பெற்றவர்களைப் பார்த்தபோது, ​​கடந்த வருடம் நினைவுக்கு வந்தது. கடந்த வருடத்தில் இந்தத் தொழில்களை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்ற கேள்விக்குறி காணப்பட்டது. மின்சாரம் இல்லாமை மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத நிலை காரணமாக ஆயிரக்கணக்கான வியாபாரங்கள் கைவிடப்பட்டன.

இன்று எதிர்பாராத வகையில் பெருமளவானவர்கள் தங்கள் தொழில்களில் மீண்டும் ஈடுபட்டு வெற்றிகரமாக முனனோக்கிச் செல்கிறார்கள். சிறு மற்றும் மத்திய தர தொழிற்சாலைகள் பலவும் குறுகிய காலத்தில் மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளன. இருப்பினும் சில பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. வங்கிக் கடன், சந்தை வாய்ப்பு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

அடுத்த வரவு செலவு திட்டத்தில், சிறு மற்றும் மத்திய தர கைத்தொழிலாளர்களுக்கான வங்கிக் கடன் சலுகை தொடர்பில் அறிவிக்க எதிர்பார்த்திருப்பதோடு, அந்த செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம்.

சரிவடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தை நாம் வகுத்துள்ளோம். அதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்துடனும் கடன் வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம்.

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் இயலுமை நம்மிடம் இருக்கிறதா என்பது தொடர்பிலேயே அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக எமது வருடாந்த வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை அனைத்து தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும்.

கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கான ஒதுக்கீடுகளை அடுத்த வரவு செலவு திட்டத்தில் மேற்கொள்ளவிருக்கிறோம். கடனை செலுத்தாதிருந்தால் நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோம். எமது ரூபாவின் தரத்தையும் பேணிக்கொண்டு கடன்களை செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் வரவு செலவு திட்டத்திற்கு தேவையான நிதி இல்லாத போது மத்திய வங்கியில் பணம் அச்சிடப்பட்டது. ஆனால் இப்போது அதை செய்ய முடியாதென சட்டரீதியாகவே தடைபோடப்பட்டுள்ளது. வங்கிக் கடன்களையும் பெற முடியாது. கடந்த காலங்களின் காணப்பட்ட முறையற்ற நிதிச் செயற்பாடுகளே அதற்கு காரணமாகும். அடுத்த வருடத்தில் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்குரிய இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்.

அடுத்த வருடத்திலும் நாடு வங்குரோத்தடையாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனில் நாம் வருமானத்தை தேட வேண்டும். அதற்காகவே “வற்” வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருந்த நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இது எந்தவொரு அரசாங்கத்திற்கும் கடினமான நிலைமையாகும்.

அரசாங்கத்திற்கும் தேர்தல் நெருங்கி வரும் தருவாயிலிருக்கும் பாராளுமன்றத்திற்கும் இது மிகக் கட்டினமானதாகும். இருப்பினும் அதனை செய்யாவிட்டால் அனைவரினதும் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும். அதனால் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மக்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலாவது நாட்டிற்கான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேபோல் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பை நானும், அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

தொடர்ச்சியாக நாம் யாசகம் பெறும் நாடாக இருக்க முடியாது. நாம் எமது வலுவுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விருப்பமில்லாமல் சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பலர் விமர்சித்தாலும் அதனை செய்திருக்காவிட்டால் நாடு மீண்டும் கடந்த வருடத்திலிருந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். இவ்வருடத்தில் +7 ஆக எமது பொருளாதார வளர்ச்சி காணப்படுகின்றது. இன்றளவில் நூற்றுக்கு + 5 ஆக காணப்படுகின்றது. அதனால் நாம் தொடர்ச்சியாக முன்னோக்கிச் செல்வதா பின்னோக்கி நகர்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

மக்களுக்கு உண்மையை கூறி நாட்டுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதே தலைமைத்துவப் பண்பாகும். மேற்படி தீர்மானத்தினால் சிறு தொகையை ஈட்டிக்கொண்டு அதனைக் கொண்டு சிறு மற்றும் மத்திய தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிக் கடன் சலுகைகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் மேற்படி தொழிற்சாலைகள் சரிவை சந்திக்கும்.

தொழிமுயற்சியாளர்கள் என்ற வகையில் நீங்களும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அதனால் மக்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலாவது நாட்டுக்கான தீர்மானங்கள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

எவ்வாறாயினும் நாட்டை முன்னேற்றும் தீர்மானத்துடன் முன்னோக்கிச் செல்வோம். அதனால் யாசகம் பெறும் நாட்டுக்கு மாறான சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப முடியும். இந்நாட்டுக்கு நல்ல எதிர்காலம் இருக்குமென நான் கருதுகிறேன். உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கிறோம். தற்போது நெருக்கடியாக இருந்தாலும் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் சுமூகமாக நிலைமை உருவாகும்.

2024 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் சாரங்க அலகப்பெரும, அமைச்சுகளின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள், பிரதான தொழிற்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.   நன்றி தினகரன் 


இலங்கை – இந்தியா பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு; 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்

November 2, 2023 4:26 pm 

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.

நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உலக பெறுமதிச் சங்கிலியின் ஊடாக பிரதான தரப்பினர்களுடன் இணைவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவானது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகும். முன்னுரிமையான துறைகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவாக மேம்படுத்தும் நோக்கத்துடன் 2018 முதல் இடைநிறுத்தப்பட்ட ETCA தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 29 ஜூலை 2023 அன்று இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் திணைக்களத்தின் இணைச் செயலாளருமான ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகள் குழு இலங்கை வந்து இந்த விரிவான ஒப்பந்தம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.

வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தகத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் முதலீட்டுச் சபை, ஜனாதிபதி செயலகத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க தலைமையிலான தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு (NTNC) தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

பண்டங்கள், சேவைகள், ஆரம்ப கட்ட விதிகள், வர்த்தக தீர்வுகள், சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக வசதிகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகள், சட்ட மற்றும் நிறுவன விடயங்கள் ஆகியவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்டன. அத்துடன், இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (ISFTA) நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடும் விசேட அமர்வு ஒன்று இடம்பெற்றது.   நன்றி தினகரன் 

காசா பகுதியில் இடம்பெயர்ந்த 17 இலங்கையர்களில் 15 பேர் எகிப்திற்கு

November 2, 2023 2:52 pm 

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்த மோதல்கள் காரணமாக காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் ரஃபா எல்லை ஊடாக எகிப்தை சென்றடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் இன்று (02) ரஃபா எல்லை ஊடாக எகிப்தை சென்றடையவுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாபா தெரிவித்துள்ளார்.

எகிப்து தூதரகத்தின் ஊடாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக, காமினி செனரத் யாபா தெரிவித்தார்.

பலஸ்தீன் – எகிப்து இடையிலான ரஃபா எல்லை ஊடாக, காசாவிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ள, வெளிநாட்டவர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட 596 பேரில் இலங்கையர்கள் 17 பேர் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

சர்ச்சைக்குரிய கருத்தால் சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம்

- யாழ். பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு

November 1, 2023 1:05 pm 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று நேற்று (31) ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.

இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நிலையில் குறித்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம் - நன்றி தினகரன் இலங்கை முழுவதும் பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்த இந்திய நிதி அமைச்சர்

November 4, 2023 2:37 pm 

– பௌத்த உறவுகளை மேம்படுத்த ரூ. 15 மில். டொலர்
– மதஸ்தலங்களில் சூரிய மின்சக்திக்கு ரூ. 10 மில். டொலர்
– பெருந்தோட்டங்களில் 10,000 வீடுகள் நிர்மாணம்
– மேம்படுத்தப்பட்ட தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம்
– 10,000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்
– பாடசாலைகளில் RO நீர் சுத்திகரிப்பு தொகுதிகள்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஐவரடங்கிய உத்தியோகபூர்வ பேராளர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் இந்திய வர்த்தக & தொழில்துறை கூட்டமைப்பு (FICII) ஆகியவற்றின சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட உயர் மட்ட வர்த்தக குழுவினர் 2023 நவம்பர் 01-03 வரை இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்தார்.

அத்துடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசி பெற்றிருந்த அவர் கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகையிலும், அநுராதபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகாபோதி விகாரையிலும், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 ஆண்டுகளைக் குறிக்கும் ‘நாம் 200” நிகழ்வில் கௌரவ விருந்தினராக பங்கேற்றிருந்த அவர், இந்திய இலங்கை வர்த்தக மாநாட்டில் ‘தொடர்புகளை மேம்படுத்தல்; செழுமைக்காக ஒத்துழைத்தல்’’ என்ற தலைப்பிலான அமர்விலும் சிறப்புரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்விஜயத்தின் போது திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் இந்திய ஸ்டேட் வங்கியின் கிளைகளும் அவரால் திறந்து வைக்கப்பட்டன.

2023 நவம்பர் 02ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மத உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவிக்கப்பட்ட திட்டமான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை திட்டத்தின் கீழான பணிகளை துரிதமாக செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும் இருதரப்பு ஆவணங்கள் பரிமாறப்பட்டிருந்தன.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டில் இலங்கை முழுவதும் உள்ள மதஸ்தலங்களுக்கு சூரிய மின்கல தொகுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் விபரங்கள் அடங்கிய புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்றைய தினம் பரிமாறப்பட்டிருந்தது.

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் STEM பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை அத்துறைகளில் தயார்நிலைப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் வெகு விரைவில் பயிற்றுனர்களை இலங்கைக்கு அனுப்ப இருப்பதாக இந்திய நிதி அமைச்சர் நாம் 200 நிகழ்வில் அறிவித்திருந்தார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினருக்காக 2023 ஜூலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட 3 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பல்நோக்கு உதவி திட்டத்தின் முதலாவது திட்டப்பணிகளில் ஒன்றாக இந்த இலக்கை எட்டும் நோக்குடன் நிபுணத்துவமிக்க பயிற்றுநர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர்.

அத்துடன் இத்திட்டங்களின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சூரிய மின்விளக்குகளை வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தையல் அலகுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் குறித்தும் அவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து கல்வித்துறையை இலக்காகக் கொண்டு பெருந்தோட்ட பகுதிகளில் 10000 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பைகள் அப்பியாச புத்தகங்கள் ஆகியவற்றை விநியோகிக்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு RO நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இருதரப்பு உறவில் புதியதோர் மைல்கல்லைக் குறிக்கும் வகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய விடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் இலங்கை ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து நிதி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த பிராந்தியங்களில் மூன்றாவது கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 4,000 வீடுகள் திட்டத்தினை விஸ்தரிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இதுவரையில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மொத்தமாக 50,000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையமும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து நிதி அமைச்சரால் மெய்நிகர் மார்க்கமூடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில் இந்திய அரசாங்கத்தால் பல்வேறு வசதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞர்களுக்காக தொழில்கல்வியை வழங்கும் நோக்குடன் கணணிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விஜயமானது பொருளாதாரத் துறையில் காணப்படும் இருதரப்பு ஈடுபாட்டிற்கு மேலும் உத்வேகத்தை அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்த பல்வேறு துறைகளையும் சேர்ந்த கைத்தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இலங்கையில் பரஸ்பர நன்மை அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளையும் ஸ்திரமான வர்த்தக பங்குடைமையினையும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வர்த்தக மாநாடானது இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேலதிக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்காக மிகவும் வலுவாக வாதாடியிருந்தவர் என்பது இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கதாகும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு உதவியை பெற்றுக் கொள்வதில் இது மிகவும் முக்கியமானதாகும். கடந்த வருடம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பல்நோக்கு உதவியை துரிதமாக வழங்குவதில் நிதி அமைச்சர் எனும வகையில் அவரது வகிபாகம் முக்கியமானதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன் பிரதமர் தினேஷ் – இந்திய நிதி அமைச்சர் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு

November 4, 2023 8:20 am 

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் (02) அலரி மாளிகையில் நடைபெற்றதுடன், அவர்கள் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்திய நிதி அமைச்சரின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக 1.0747 பில்லியன் இந்திய ரூபா உதவியில், 824 மில்லியன் இந்திய ரூபாவை மத ஸ்தலங்களில் சூரியசக்தி திட்டங்களுக்காக மட்டும் ஒதுக்கீடு செய்தமைக்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய-இலங்கை நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டு வரும் எல்லையற்ற முயற்சிகளை இந்தியா மிகவும் பாராட்டுவதாக, இந்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

“பல தசாப்தங்களுக்கு முன்னர் நாம் எமது சுதந்திரத்துக்காக போராடிய போது, உங்கள் பெற்றோர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்ததுடன், இப்போது பிரதமராக நீங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த தொடர்ந்து செயற்பட்டு வருவதால், நாம் உங்களை மிகவும் மதிக்கிறோம்” என இந்திய நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க மற்றும் இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.     நன்றி தினகரன் 

காசா எல்லையில் சிக்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

 மேலும் சிலர் வர முடியாதநிலையில்

November 5, 2023 1:24 pm 

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்த மோதல்கள் காரணமாக, காசா பகுதியில் இருந்து எகிப்து வந்தடைந்த 11 இலங்கையர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காசாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 03ஆம் திகதி எகிப்துக்கு வந்தடைந்ததாக பலஸ்தீனில் உள்ள இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்துக்கு வந்த அவர்கள், ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக, அந்த அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்தார்.

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்த மோதல்கள் காரணமாக காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் ரஃபா எல்லை ஊடாக வரவிருந்த நிலையில், அவர்களில் நால்வர் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக அவர்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.      நன்றி தினகரன் 

No comments: