இங்கிலாந்திலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒரு
தமிழ் ஊடகத்தில் பின்வருமாறு ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது.
“ எண்பது வயது அம்மா ஒருவருடன் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரையில்
பேசிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெண்மணி தேவை.
அதற்கான ஊதியம் பேசித்தீர்மானிக்கப்படும். தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில்
வரவும். “
இந்த சிறுவிளம்பரத்தின்
கீழே முகவரியும் தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது.
புகலிட நாடுகளில் வதியும் முதியோரின்
அந்திம கால நிலை எவ்வாறிருக்கிறது என்பதற்கு குறிப்பிட்ட விளம்பரம் ஒரு பதச்சோறு!
பாடசாலைகளில் இளம் தலைமுறை
மாணவர்களின் சுயவிருத்தியை மேம்படுத்துவதற்காகவும் சில பாடத்திட்டங்களை வகுத்துவைத்திருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் மூத்த சகோதரி திருமதி
வேதநாயகி செல்வராசா அவர்கள் எழுதியிருக்கும் நரைவழியோடிய அனுபவ மொழிகள் நூலை
படித்துக்கொண்டிருந்தபோது, மேற்குறிப்பிட்ட விடயங்களே எனது நினைவுக்கு வந்தன.
ஆங்கிலத்தில் “ Experience without education better than education without experience. “ என்ற வாசகம் உள்ளது.
அனுபவம் சிறந்த பள்ளிக்கூடம். அதில் கற்றுத்தேறும்போது வாழ்க்கை குறித்த தெளிவு
பிறந்துவிடும்.
வேதநாயகி செல்வராசா அவர்கள்
தனது வாழ்வில் தான் கற்றதையும் பெற்றதையும் எளிய உரைநடையில், மூத்தோர் முதல் இளையோர்
வரையில் படிக்கத்தக்கதாக இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
ஒரு வகையில் இதில் இடம்பெற்றுள்ள
ஆக்கங்கள் Motivation நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
வேதநாயகி செல்வராசா அவர்கள்
இந்நூலில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஔவையார், பாரதியார், அன்னை திரேசா,
ஆபிராகாம் லிங்கன், ராஜாஜி, திருவள்ளுவர் பற்றியெல்லாம்
பேசுகிறார்.
இந்த முன்னோர்கள் வாழ்ந்த
வாழ்க்கையிலிருந்து கற்றதையும் பெற்றதையும்
தொடர்ந்து எழுதிவந்துள்ளார் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
“ வயதானவர்கள் வாழ்வனுபவத்தின் களஞ்சியமாக இருக்கிறார்கள்.
கல்வியறிவு கற்றுத்தராத அனுபவ பாடங்கள் அவர்களிடம் நிறைய இருக்கிறது. வயதாகிறபோது அவர்களுக்கு
அதிகளவு நேரமும் இருக்கிறது. இந்த அனுபவத்தையும் நேரத்தையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாவிட்டால்,
பல தேவையற்ற சிந்தனைகள் மனதினுள் புகுந்து வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.. “
என்று இந்த நூலில் என்னுரையாக குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை வாழ்வதற்கே. என்ற
வாழ்வியல் தத்துவத்தை ஒவ்வொரு அங்கத்திலும் இழையோடவிட்டுள்ளார் வேதநாயகி செல்வராசா
அவர்கள். அவற்றில் குட்டிக்கதைகளும் இழையோடுகின்றமையால், வாசிப்பதற்கும் சுகமாக இருக்கிறது.
இலங்கையை பூர்வீகமாகக்கொண்டிருக்கும்
இவர், அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கிறார்.
வாசிப்பை நேசிக்கிறார். அதனால், தனது வாசிப்பு அனுபவங்களிலிருந்து சமூகத்திற்கு,
குறிப்பாக இளம் தமிழ்ப்பிள்ளைகளுக்கு பல செய்திகளைச்
சொல்கிறார்.
எங்கள் மத்தியில் எமது
குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் படுக்கையறைக்
கதைகளை ( Bed time stories ) எம்மவர்கள் சொல்லிக்கொடுப்பது குறைந்துகொண்டு வருகிறது.
நாம் சிறுவயதில் பாட்டிமார்,
தாத்தமார் சொல்லித்தந்த கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் தொலைக்காட்சி சீரியல்களை பார்ப்பதில்
நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் எமது இளம்
தமிழ் தலைமுறையினருக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட்டு, இந்த கட்டுரைகளை எழுதித் தொகுத்திருக்கிறார்.
இந்நூலுக்கான முன்னுரையை எழுதியிருப்பவர் தேர்ந்த வாசகியும் தன்னார்வத் தொண்டருமான
யசோதா பத்மநாதன்.
அதில், “ வேதநாயகி செல்வராசா அவர்கள், தனது அனுபவச்சாற்றினை
எண்ணையாக ஊற்றி, வாழ்க்கைத் திரியை அறிவுக்கனலால் ஏற்றி இளைய சந்ததிக்கு கொடுத்திருக்கும்
கைவிளக்கு இந்த நூல். “ என்று விதந்துரைத்திருக்கிறார்.
இந்த பதிவின் தொடக்கத்தில்,
ஒரு மூதாட்டியோடு தினமும் சில மணிநேரங்கள் பேசிக்கொண்டிருக்க ஆள் தேவை என்ற விளம்பரத்தைப்பற்றி
குறிப்பிட்டமைக்கும் காரணம் இருக்கிறது.
வேதநாயகி அவர்கள் தனது முதியவயதில் அத்தகைய ஒரு நிலைக்குச்செல்லாமல், வாசித்திருக்கிறார். வாசித்தவற்றை வாழ்வியல் அனுபவமாக நேசித்திருக்கிறார்.
அந்த நேசிப்பின் உன்னதத்தை
எமக்கு பகிர்ந்திருக்கிறார்.
வேதநாயகி செல்வராசா அவர்களுக்கு
எமது வாழ்த்துக்கள்.
முதியோர் - இளையோர் ஒன்றுகூடல்களில் இந்த நூலும் பேசுபொருளாகவேண்டும்.
No comments:
Post a Comment