இஸ்ரேலுடன் உறவை துண்டித்தது பொலிவியா
இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலுக்கு ஹுத்திக்கள் உறுதி
காசாவில் இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் எகிப்துடனான ரபா எல்லை முதல்முறையாக திறப்பு
ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
காசாவில் முன்னேறும் இஸ்ரேலிய படைகளுடன் பலஸ்தீன போராளிகள் பல முனைகளில் மோதல்
இஸ்ரேலிய துருப்புகள் காசா நகரை சுற்றிவளைப்பு; தொடர்ந்தும் மோதல்
இஸ்ரேலுக்கு 14 பில். டொலர் நிதியளிக்க அமெரிக்கா திட்டம்
காசா தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலையில்லை
காசா வரி வருவாயை நிறுத்தியது இஸ்ரேல்
காஸாவில் இதுவரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் தாண்டியது!
இஸ்ரேலுடன் உறவை துண்டித்தது பொலிவியா
காசா மீதான இஸ்ரேலின் போர் தொடர்பில் பொலிவியா இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்திருப்பதோடு மேலும் இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலில் உள்ள தமது தூதுவர்களை திரும்ப அழைத்துள்ளன.
“காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் ஒழுங்கற்ற இராணுவ நடவடிக்கையை கண்டிப்பதோடு இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை துண்டிக்க தீர்மானித்துள்ளோம்” என்று பொலிவிய பிரதி வெளியுறவு அமைச்சர் பிரெட்டி மமானி தெரிவித்துள்ளார். காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாகவும் பொலிவியா தெரிவித்துள்ளது.
இதே நேரம் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் சிலி, காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்திருப்பதோடு இஸ்ரேலுக்கான தமது தூதுவர்களை திரும்ப அழைத்துள்ளன. பிரேசிலும் இஸ்ரேலை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியில் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலுக்கு ஹுத்திக்கள் உறுதி
இஸ்ரேலுக்கு எதிராக மூன்று தடவைகள் ஆளில்லா விமானம் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய யெமனின் ஈரான் ஆதரவு ஹுத்தி கிளர்ச்சியாளர்கள், காசா போர் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். “காசா ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களுடன் கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என்பதை யெமன் இராணுவம் உறுதி செய்கிறது” என்று ஹுத்தி இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலை நோக்கி பெரும் எண்ணிக்கையான பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பியதாக ஹுத்திக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து வான் அச்சுறுத்தல்களும் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்திருந்தது.
முன்னதாக கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி தெற்கு காசாவை நோக்கில் வந்த ஆளில்லா விமானத்தை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியதோடு ஒக்டோபர் 17 ஆம் திகதி அமெரிக்க கடற்படை இஸ்ரேலை நோக்கிச் சென்ற மூன்று ஏவுகணைகள் மற்றும் பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது. ஹுத்திக்களின் அச்சுறுத்தல் அதிகரித்ததை அடுத்து இஸ்ரேல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் செங்கடலில் ஏவுகணை கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டு யெமன் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஹுத்திக்கள் அந்நாட்டின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நன்றி தினகரன்
காசாவில் இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் எகிப்துடனான ரபா எல்லை முதல்முறையாக திறப்பு
- ஜபலியா அகதி முகாம் மீது பயங்கரத் தாக்குதல்
காசாவில் உணவு, எரிபொருள் மற்றும் மற்ற பொருட்கள் தீர்ந்துவரும் அச்சுறுத்தல் அதிகரித்து தரைவழிப் போர் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் அங்குள்ள அதிக சனநெரிசல் மிக்க ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சரமாரி குண்டுத் தாக்குதல்களில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த அகதி முகாம் மீது ஒவ்வொன்றும் ஒரு தொன் எடை கொண்ட 6 ஷெல் குண்டுகள் விழுந்ததாக காசா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தப் பயங்கர தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் என 400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் தொடர்ந்து சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலை உறுதி செய்திருக்கும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் மற்றும் ஏனைய போராளிகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஜபலியா அகதி முகம் மீதான தாக்குதல்களில் ஏழு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது. இதில் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்களும் இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் எந்த பதிலும் அளிக்கவில்லை.
1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அகதிகளாக அடைக்கலம் பெற்ற பலஸ்தீனர்களின் குடும்பங்களே இங்கு வாழ்கின்றனர்.
இந்நிலையில் காசா பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர்கள் காயமடைந்தவர்கள் வெளியேற கட்டாரின் மத்தியஸ்தத்தில் நேற்று உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் உயரிழப்பு எண்ணிக்கை 8500ஐ தாண்டியிருக்கும் நிலையில் எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலேயே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனினும் காசாவில் நேற்று மீண்டும் ஒருமுறை தொடர்பாடல்கள் மற்றும் இணையதள சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டதாக அந்தப் பகுதிக்கான தொலைத்தொடர்பு வழங்குநரான பால்டெல் குறிப்பிட்டுள்ளது.
“பொதுமக்களுக்கு எதிராக தாம் செய்யும் குற்றங்களை உலகம் பார்ப்பதை அவர்கள் (இஸ்ரேல்) விரும்பவில்லை” என்று தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டது தொடர்பில் காசா குடியிருப்பாளர் அஹமது முஹசி தெரிவித்தார்.
காசா மீது பல வாரங்கள் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை இடைவிடாது நடத்திய இஸ்ரேல் உலகின் அதிக சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றான அந்த குறுகிய நிலப்பகுதிக்கு தனது தரைப்படைகளை அனுப்பியுள்ளது.
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. எனினும் காசாவில் பொதுமக்கள் உயிரிழப்பு நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பது உலகெங்கும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் உணவு, எரிபொருள், குடிநீர் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதோடு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் போராடி வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புடன் உறவைக் கொண்டிருக்கும் வளைகுடா நாடான கட்டார் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் படுகாயம் அடைந்த சிலரை காசாவில் இருந்து எகிப்துக்குச் செல்ல அனுமதிக்கும் உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளது.
இதனை அடுத்து ரபா எல்லையைக் கடந்து எகிப்து செல்வதற்காக அம்பூலன்ஸ் வண்டிகள் நேற்று வரிசையில் காத்திருந்தன. ஏற்கனவே காசா எல்லைக்கு அருகில் எகிப்து நடமாடும் மருத்துவமனைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி நேற்றைய தினத்தில் காயமடைந்த 88 பேர் மற்றும் 500க்கும் அதிகமான வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் காசாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர் எகிப்துடனான ரபா எல்லை திறக்கப்படுவது இது முதல் முறையாகும்.
காசாவில் தரைவழி மோதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற சண்டைகளில் பதினொரு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா மீதான போரை ஆரம்பித்தது தொடக்கம் ஒரு நாளில் அதிக இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்ட தினமாக இது பதிவாகியுள்ளது. தவிர மேலும் இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.
எனினும் போர் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படை வீரர்களின் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரெலில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலிலேயே கொல்லப்பட்டனர்.
காசாவில் இருக்கும் இரு பிரதான மருத்துவமனைகளான அல் ஷிபா மருத்துவமனை மற்றும் இந்தோனேசிய மருத்துவமனைகளில் உள்ள மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் வேகமான தீர்ந்துவரும் நிலையில் மின்சாரத் துண்டிப்புப் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.
காசாவில் இருக்கும் எரிபொருள் நிரப்புநிலை உரிமையாளர்கள் தம்மிடம் இருக்கும் எரிபொருளை மருத்துவமனைகளுக்கு வழங்கும்படி காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா கேட்டுள்ளார்.
அடக்கம் செய்வதற்காக தமது உறவினர்களின் சடலங்களை பெறுவதற்கு நேற்றும் பல டஜன் பேர் நாசர் மருத்துவமனை பிரேத அறைக்கு வெளியில் காத்திருந்தனர். அங்கே சடலங்களில் இருக்கும் இடிபாடுகளின் தூசி மற்றும் இரத்தம் கழுவப்பட்டு அடக்கத்திற்காக வெள்ளைத் துணியால் போர்த்தப்படுகிறது.
கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட 15 பலஸ்தீனர்களின் சடலங்கள் வந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஒவ்வொறு நாளும் உயிரிழப்புகள் இடம்பெறுவதோடு ஒவ்வொரு நாளும் அவர்களில் பெண்கள் அல்லது சிறுவர்கள் அல்லது அவர்கள் இருவரும் இருக்கின்றனர்” என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழி தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 271க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,796 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,648 சிறுவர்கள் மற்றும் 2,290 பெண்கள் அடங்குகின்றனர்.
அத்தோடு காசாவில் 22,219 பேர் காயமடைந்திருப்பதோடு 1,120 சிறுவர்கள் உட்பட 2,030 பேர் காணாமல்போயுள்ளனர்.
இதில் 130 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 28 அம்பூலன்ஸ்கள் அழிக்கப்பட்டுள்ளனர். காசாவில் 270க்கும் அதிகமான சுகாதார பராமரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 35 மருத்துவமனைகளில் 16 செயலிழந்திருப்பதோடு 72 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 51 மூடப்பட்டுள்ளன.
மறுபுறம் மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் அங்கு 128 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 1,980 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டினி பிளிங்கன் நாளை (03) இரண்டாவது முறையான இஸ்ரேலுக்கு பயணிக்கவுள்ளார். முன்னதாக கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் இஸ்ரேல் சென்றிருந்ததோடு அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேல் சென்றிருந்தார். நன்றி தினகரன்
ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை மற்றும் ஈரான் ஆதரவுக் குழுக்கள் பயன்படுத்தும் இரு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றதை அடுத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
“அமெரிக்கா மோதலை எதிர்பார்க்கவில்லை என்பதோடு மேலும் மோதலில் ஈடுபடவும் திட்டமிடவில்லை.
எனினும் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரான் ஆதரவு தாக்குதல் ஏற்க முடியாதது மற்றும் நிறுத்தப்பட வேண்டும்” என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் வியாழக்கிழமை (26) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டணிகள் மீது ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்களால் இந்த மாதத்தில் குறைந்தது 16 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 21 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் வெடித்ததை அடுத்தே பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
“தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன” என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமைனிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
காசாவில் முன்னேறும் இஸ்ரேலிய படைகளுடன் பலஸ்தீன போராளிகள் பல முனைகளில் மோதல்
மருத்துமனைகளுக்கு அருகில் குண்டு வீச்சு: போர் நிறுத்தத்தை மறுத்தார் நெதன்யாகு
காசாவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையிலான தரைவழி மோதல் உக்கிரம் அடைந்திருப்பதோடு இஸ்ரேல் அந்தப் பகுதி மீதான வான் தாக்குதல்களை இடைவிடாது தொடர்ந்து நடத்தி வருகிறது. மனிதாபிமான நெருக்கடியை தவிர்ப்பதற்கான போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் காசா மீதான தரைவழி நடவடிக்கையில் அது பிரதானமாக சுரங்கப்பாதைகளை இலக்கு வைத்தே தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நான்காவது நாளாக நேற்று இடம்பெற்ற தரைவழி தாக்குதல்கள் வடக்கு காசாவை இலக்கு வைத்தே இடம்பெற்றது. இதன்போது ஏவுகணை மற்றும் ரொக்கெட் ஏவு நிலைகள் மற்றும் நிலத்தடி சுரங்கப்பாதைகளில் உள்ள இராணுவ நிலைகள் உட்பட சுமார் 300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதில் நடவடிக்கையாக ஹமாஸ் போராளிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படைகள் காசாவின் வடமேற்கு பகுதியை இலக்குவைத்து வான், கடல் மார்க்கமாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்தது.
உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் அச்சம் மற்றும் இந்தப் போர் பிராந்தியத்திற்கு பரவும் அபாயம் காரணமாக காசா மீதான தரைவழி தாக்குதலை தாமதப்படுத்தும்படி அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் கேட்டிருந்தன.
இந்நிலையில் இஸ்ரேலின் செங்கடல் நகரான ஈலட்டில் வான் வழி எச்சரிக்கை சைரன் ஒலி நேற்று எழுப்பப்பட்டது. வான் வழி இலக்கு ஒன்றை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் இராணுவம் பின்னர் தெரிவித்தது. “பொதுமக்களுக்கு அச்சுறுத்தலோ, ஆபத்தோ ஏற்படவில்லை” என்று அது கூறியது.
யெமனின் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியாகக் கூறிய நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த ஆளில்லா விமானம் யெமன் அரசுக்கு சொந்தமானது என்று ஹூத்தி அரசின் பிரதமர் அப்தலசிஸ் பின் ஹப்து தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் 2014 இல் யெமன் தலைநகரை கைப்பற்றியதோடு அந்நாட்டின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் வடக்கு மற்றும் தெற்குக்கு இடையிலான பிரதான வீதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இரு திசைகளில் இருந்து காசா நகர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
ஹமாஸ் பிடியில் இருந்த படை வீரர் ஒருவரை விடுவித்ததாக இஸ்ரேல் கூறியது. எனினும் அதனை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது.
240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறும் நிலையில் ஹமாஸ் அமைப்பு இதுவரை நால்வரை விடுவித்துள்ளது. இதில் பெரும்பாலான பணயக்கைதிகள் சுரங்கப்பாதைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
வடக்கு காசா பக்கமாக படையெடுத்த இஸ்ரேலிய படையுடன் நேற்று மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான அல் யாஸீன் 105 ஏவுகணை மூலம் நான்கு வாகனங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
வடக்கு காசாவில் இரு இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படை தற்போது சலஹா அல் தீன் விதியில் இருப்பதாகவும் அந்தப் படை காசா கரையை ஒட்டிய அல் ரஷீத் வீதியை அடைய முயல்வதாகவும் காசா உள்துறை அமைச்சர் இயாத் அல் பசூம், அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
“ஆக்கிரமிப்புப் படை வடக்கு காசாவை தெற்கில் இருந்து பிரிப்பதற்கு முயன்று வருகிறது” என்று அல் பசூம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காசாவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 8,525 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,542 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். 2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் சூழலில் அங்கு மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தமும் அதிகரித்துள்ளது. எனினும் இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கப்போவதில்லை என்றும் ஹமாஸை அழித்தொழிப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
“போர் நிறுத்தத்திற்கான அழைப்பு என்பது ஹமாஸிடமும் பயங்கரவாதிகளிடமும் காட்டுமிராண்டிகளிடமும் இஸ்ரேலை சரணடையச் சொல்லும் அழைப்பாகும். அது நடக்காது” என்று கடந்த திங்கட்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு தெரிவித்தார்.
பேரழிவுக்கு மேல் பேரழிவு
இஸ்ரேல் வான் மற்றும் தரைவழியால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி உணவு, நீர் மற்றும் எரிபொருளை முடக்கிய இருக்கும் நிலையில் காசாவில் உள்ள மக்கள் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டு வருகின்றனர்.
வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு வெளியில் இஸ்ரேல் திங்கள் இரவு தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவனையில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எரிபொருள் தீர்ந்துவரும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 250 பலஸ்தீனர்களின் உயிர்கள் ஆபத்துக்குள்ளாகி இருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
“எரிபொருள் தீர்வதால் மின்சாரம் இல்லாமல்போவதோடு மின்சாரம் இல்லாததால் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திரகிச்சை பிரிவில் காயமடைந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகள் உயிரிழப்பார்கள்” என்று மருத்துவர் மொயீன் அல் மஸ்ரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய தரைவழி தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்களை மக்கள் கழுதை வண்டியில் ஏற்றி இந்தோனேசிய மருத்துவமனைக்கு எடுத்துவரும் காட்சிகள் அடங்கிய படங்கள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இதன்போது பல டஜன் பலஸ்தீனர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கோசமெழுப்பிக் கொண்டு அந்த கழுதை வண்டியின் பின்னால் வருவதும் தெரிகிறது.
காசா நகரில் இருக்கும் துருக்கி நட்புறவு மருத்துவமனையின் மூன்றாவது மாடியும் குண்டுத் தாக்குதலால் சேதம் அடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் புற்றுநோய் நோயாளர்களுக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து தெற்கு காசாவுக்கான குழாய்வழி நீர் விநியோகமும் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் துண்டிக்கப்பட்டதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று மத்திய காசாவின் மற்றொரு நீர் விநியோகக் குழாயின் அறிவிக்கப்பட்ட திருத்தப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று அது கூறியது.
“தற்போதைய சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு நீர் விநியோகங்கள் எதுவும் இடம்பெறவில்லை” என்று ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
முற்றுகையில் இருக்கும் காசாவுக்குத் தேவைப்படும் உதவியை விடவும் மிகக் குறைவான மனிதாபிமான உதவி வாகனங்களே காசாவை அடைந்திருப்பதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு தேடி மக்கள் ஐ.நா களஞ்சியத்துக்குள் ஊடுருவிய நிலையில் அங்கு சமூக ஒழுங்கு சீர்குலையும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இதனால் ஐ.நாவின் நான்கு உதவி விநியோக மையங்கள் மற்றும் களஞ்சிய வசதிகள் செயலிழந்திருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இது பேரழிவுக்கு மேல் பேரழிவாகும். சுகாதாரத் தேவைகள் அதிகரித்து வருவதோடு அந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான எமது திறன் குறைந்து வருகிறது” என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்தியத்திற்கான அவசர நிலைக்கான தலைவர் ரிக் பிரன்னன் தெரிவித்துள்ளார்.
காசாவுக்கான இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே எல்லைக் கடவையான எகிப்துடனான ராபா எல்லை வழியாக உதவி லொறிகள் மிகக் குறைவாகவே அனுமதிக்கப்படுகின்றன. காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை அமுல்படுத்தி வரும் நிலையில் காசாவுக்கு உதவிப் பொருட்கள் செல்வதற்கான ஒரே வழியாக இது உள்ளது.
கடந்த திங்கட்கிழமை இந்த எல்லை ஊடாக 26 உதவி லொறிகள் காசாவுக்குள் நுழைந்ததாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்தது.
இதேவேளை காசாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல இஸ்ரேல் அதன் எல்லையைத் திறந்துவிடுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிரம் ஷலோம் வழியாக மட்டுமே போதுமான அளவு கனரக வாகனங்கள் செல்லலாம் என்று அது கூறியது.
காசா மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ராபா எல்லை வழியே மட்டுமே நிவாரணப் பொருட்களைக் கொண்டுசெல்வது போதுமானதல்ல என்று ஐ.நா அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு புதிதாக வெளியிட்ட வீடியோ ஒன்றில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று பணயக்கைதிகளை காட்டியது. அவர்கள் நெதன்யாகுவுக்கு தமது கோபத்தை வெளியிட்டுள்ளனர்.
காசாவில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் இராணுவம் மேற்குக் கரையில் ஹமாஸின் மூத்த தலைவர்கள் உட்பட ஆதரவாளர் வீடுகளைத் தகர்த்து வருகிறது.
போர் ஆரம்பித்த முதல் வாரம் தொடங்கி இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் தொடர் சோதனைகளும் சந்தேகப்படுவோரை கைது செய்வதும் சுட்டுக் கொல்வதுமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்–அரூரியின் வீடு தகர்க்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7இல் இஸ்ரேல் மீதான தாக்குதலில் அவருக்கு பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018இல் அவரைக் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இல்லை. லெபனானில் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஐ.நாவின் தரவுகளின் படி மேற்குக் கரையில் இதுவரை 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோவில் இஸ்ரேல் இராணுவம் மேற்குக் கரை பகுதியில் வீதியில் வைத்து ஒரு இளைஞரைச் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. நன்றி தினகரன்
இஸ்ரேலிய துருப்புகள் காசா நகரை சுற்றிவளைப்பு; தொடர்ந்தும் மோதல்
- அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன் மீண்டும் இஸ்ரேல் விரைவு
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது நேற்றும் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தியதோடு அதன் தரைவழி படையினர் காசா நகரை சுற்றிவளைத்ததாக அறிவித்துள்ளது.
காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேலை சென்றடைத்துள்ளார்.
இஸ்ரேலின் முழு முற்றுகையில் உள்ள காசாவில் உணவு, எரிபொருள், நீர் மற்றும் மருந்துகள் தீர்ந்து வரும் சூழலில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்கும் முயற்சியில் பிளிங்கன் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக இஸ்ரேல் சென்றிருக்கும் பிளிங்கன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மற்ற இஸ்ரேலிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் எந்த ஒரு போர் நிறுத்தமும் தற்காலிகமானதும், உள்ளூர் மட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதோடு அது இஸ்ரேலிய தற்பாதுகாப்பை நிறுத்துவதாக இருக்கக் கூடாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
“இடிந்த கட்டடங்களில் இருந்து பலஸ்தீன சிறுவர்கள் வெளியே எடுக்கப்படுவதை பார்க்கும்போது இஸ்ரேல் அல்லது வேற இடங்களில் சிறுவர்களை பார்க்கும்போது ஏற்படுத்துவது போன்ற மனத் தாக்கத்தையே என்னில் ஏற்படுத்தியது” என்று இஸ்ரேலுக்குப் புறப்படும் முன் பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“எனவே இது தொடர்பில் எமக்கு பொறுப்பு இருப்பதோடு நாம் அதனை செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு காசா மற்றும் காசா நகரில் பல இடங்களில் நேற்று மோதல் தீவிரம் அடைந்திருந்தது. காசாவின் மிகப்பெரிய மற்றும் அதிக சனநெரிசல் மிக்க காசா நகரை சுற்றிவளைத்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. இதன்போது ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகளுக்கு இடையே நேரடி மோதல் வெடித்துள்ளது.
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவத்துடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வான் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு குறிப்பாக சுமார் 14,000 பேர் அடைக்கலம் பெற்றிருக்கும் காசா நகருக்கு அருகில் உள்ள அல் குத்ஸ் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் தாக்குதல் தீவிரமடைந்திருந்தன. மருத்துமனைக்கு 500 மீற்றருக்கு அப்பால் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகள் இடையே கடும் மோதல் நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கில் காசாவின் முக்கிய வீதி மற்றும் கரையோர வீதி ஆகிய இரு வீதிகளையும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் மக்கள் தெற்கை நோக்கி வெளியேறுவது கடினமாகியுள்ளது. காசாவின் தென் பகுதியில் இருக்கும் மக்களுக்கே எகிப்தில் இருந்து வரும் உதவிகள் ஓரளவுக்கேனும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் வடக்கு காசாவில் இடம்பெறும் மோதல்களில் மேலும் நான்கு இஸ்ரேலிய துருப்புகளை கொன்றதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது. பெயித் லஹியா சிறு நகரின் வட மேற்கு பகுதியில் உள்ள அல் அம்ரிகியாவில் போராளிகள் இஸ்ரேலிய துருப்புகள் மீது அதிரடி தாக்குதலை நடத்தி நான்கு படையினரை குறுகிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொன்றதாக அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட “யாசின் 105” ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளுடன் பல இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் வாகங்களை இலக்கு வைத்து தமது போராளிகள் தாக்குதல்களை நடத்தியதாக அல் கஸ்ஸாம் படை முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் காசாவில் நீடிக்கும் தரைவழி மோதல்களில் கடந்த வியாழக்கிழமை மேலும் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இதன்படி அங்கு கொல்லப்பட்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் கூறப்படுவதை விடவும் இஸ்ரேலிய துருப்புகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்று ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ ஒபைதா தொலைக்காட்சி உரை ஒன்றில் தெரிவித்தார். “படைகளாகிய நீங்கள் கறுப்புப் பைகளிலேயே திரும்புவீர்கள்” என்று அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகள் தொடர்பில் உளவுத் தகவல்களை சேகரிக்க காசாவுக்கு மேலால் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி சுமார் 1400 இஸ்ரேலியர்களை கொன்ற ஹமாஸ் போராளிகள் 200க்கும் அதிகமான பணயக்கைதிகளை பிடித்தனர். இவர்களில் நால்வரை விடுவித்தபோதும் மற்ற பணயக்கைதிகள் எங்கே என்பது உறுதி செய்யப்படவில்லை.
எனினும் காசா மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் பயணக்கைதிகள் பலரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் உயிரிழப்பு 9 ஆயிரத்தைத் தாண்டி அதிகரித்து வரும் நிலையில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் அரபு நாடுகள் சில தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேலுடன் அண்மையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய ஐக்கிய அரபு இராச்சியம் உடனடி போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயன்று வரும் நிலையில் மோதல் தீவிரம் அடைந்தால் அது பிராந்தியத்திற்கு பரவிவிடும் என்று எச்சரித்துள்ளது. எனினும் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
காசாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட காயமடைந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்கள் வெளியேறுவதற்காக எகிப்துடனான ராபா எல்லைக் கடலை மூன்றாவது நாளாக நேற்றும் திறக்கப்பட்டது. இந்த ராபா எல்லை வழியாக முந்தைய இரண்டு தினங்களில் 700க்கும் அதிகமான வெளிநாட்டு பிரஜைகள் காசாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 196 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது 16 வெவ்வேறு படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றதாக அது குறிப்பிட்டுள்ளது.
இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. இதன்போது 3,826 சிறுவர்கள் மற்றும் 2,405 பெண்கள் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர். குறைந்தது 23,516 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் சுமார் 2,100 பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர். இதில் 1,200 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இடிபாடுகளில் புதையுண்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தவிர கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்களில் குறைந்தது 141 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மேற்குக் கரையில் மாதந்தம் கொல்லப்படும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கையில் வேகமான அதிகரிப்பாக உள்ளது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நேற்று ஜும்மா தொழுகையின்போது இஸ்ரேலிய படை வழிபாட்டாளர்கள் மீது நடத்திய துப்பிக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
இஸ்ரேலுக்கு 14 பில். டொலர் நிதியளிக்க அமெரிக்கா திட்டம்
இஸ்ரேலுக்கு 14.3 பில்லியன் டொலர் உதவி வழங்குவதற்கான திட்டம் ஒன்று அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இது நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று செனட் சபையின் ஜனநாயக கட்சியினர் குறிப்பிட்டிருப்பதோடு இதனை நிராகரிக்கப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் பிரதிநிதிகள் அவையில் 226–196 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதோடு குடியரசுக் கட்சியினர் ஆதரவாக வாக்களித்த நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்து வாக்களித்தனர். குடியரசுக் கட்சியின் புதிய சபாநாயகர் மைக் ஜோன்சனின் கீழ் கொண்டுவரப்பட்ட முதலாவது பிரதான சட்டமூலமாக இது உள்ளது.
எனினும் இஸ்ரேல், தாய்வான் மற்றும் உக்ரைன் உட்பட நாடுகளுக்கு நிதியளிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக 106 பில்லியன் டொலர் அவசரத் திட்டத்தையே ஜனாதிபதி ஜோ பைடன் கோரியிருந்தார்.
எனினும் குடியரசு கட்சியினர் இஸ்ரேலுக்கு உதவுவதில் முன்னுரிமை அளித்துள்ளனர்.
இந்த 14.3 பில்லியன் டொலர் நிதித் திட்டத்தில் இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் குறுகியதூர ரொக்கெட் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு அமைப்புக்கு 4 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
காசா தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலையில்லை
இஸ்ரேலில் தொழில்புரிந்ந ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர்கள் காசாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காசாவைச் சேர்ந்தவர்களுக்கான வேலை அனுமதியை இஸ்ரேல் இரத்துச் செய்துள்ளது.
காசாவில் போர் வெடித்ததை அடுத்து இஸ்ரேலிய துருப்புகளால் தாம் அவமானத்திற்கும் பாகுபாட்டுக்கும் முகம்கொடுத்ததாக இவ்வாறு காசா திரும்பிய பலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளர். காசாவைச் சேர்ந்த சுமார் 4,500 தொழிலாளர்கள் காணாமல்போயிருப்பதாக பலஸ்தீன அதிகாரசபையின் தொழில் அமைச்சு ஒரு வாரத்திற்கு முன் மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில் 3,200 பேர் காசாவுக்கு திரும்பியதாக இஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டது.
இவ்வாறு காசா திரும்பியவர்கள் தாம் பாகுபாட்டுக்கு முகம்கொடுத்தாகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பலஸ்தீன அதிகாரசபை உட்பட யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தனது குழந்தையின் வயதான ஒருவர் தன்மீது சிறுநீர் கழித்ததாக ஒருவர் தெரிவித்தார். மேற்குக் கரையில் தாம் அடைக்கலம் பெற்றபோது பலஸ்தீன அதிகாரசபை தம்மை இஸ்ரேலிய நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். நன்றி தினகரன்
காசா வரி வருவாயை நிறுத்தியது இஸ்ரேல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்காக வரி வருவாயை பலஸ்தீன அதிகாரசபைக்கு தொடர்ந்து வழங்கும் இஸ்ரேல் காசாவுக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
பலஸ்தீன அதிகாரசபை பொதுத் துரை ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவது மற்றும் மின்சார செலவுகளுக்காக இந்த நிதி தேவைப்படுகிறது என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இடைக்கால அமைதி உடன்படிக்கையின் ஓர் அங்கமாக பலஸ்தீனர்கள் சார்பில் வரி சேகரிக்க இஸ்ரேலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதோடு வழக்கமாக அந்த நிதி இஸ்ரேலிய நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் மாதாந்தம் பலஸ்தீன அதிகாரசபைக்கு பரிமாற்றப்படுகிறது.
இதன் அண்மைய பரிமாற்றம் ஒக்டோபர் முடிவில் இடம்பெறவிருந்தது. பலஸ்தீன அதிகாரசபை ஹமாஸுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசாலல் ஸ்மொட்ரிச் இந்த நிதியை நிறுத்தி வைத்திருந்தார். நன்றி தினகரன்
காஸாவில் இதுவரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் தாண்டியது!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரினால் காசாவில் பலி எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியுள்ளது என பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கிய ஒக்டோபர் 7 முதல் இதுவரை காசாவில் உயிரிழந்தோர்கள் எண்ணிக்கை மொத்தமாக 9,061 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,760 குழந்தைகள் மற்றும் 2,326 பெண்கள்.
பலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2,600 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 1,150 குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், காசாவில் 16 மருத்துவமனைகள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகின்றது. இஸ்ரேல் இராணுவத்தின் பீரங்கிகள் வடக்கு காசாவில் ஒரு இடத்தில் மொத்தமாக நிறுத்தப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்று அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் கடந்த சில மணி நேரங்களாக வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் வெளியுறவுத் துறை நிர்வாகி எஜாஸ் ஹைதர் கூறுகையில், “ஹமாஸ் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் இராணுவம் பல முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்திவருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார். .
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பலஸ்தீன பகுதிகளில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை மீட்கும்விதமாக இஸ்ரேல் தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும் என அவர் பேசியிருக்கிறார்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்களையும், இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காயமடைந்தவர்களையும், வெளிநாட்டவர்களையும் காசாவில் இருந்து வெளியேற்றும்விதமாக ரஃபா எல்லை திறந்துள்ளது எகிப்து.
இந்த எல்லை வழியாக சுமார் 7000 பேர் வெளியேற்றப்பட இருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. வெளியேற்றம் தொடர்ந்து வருகிறது.
தங்களது இராணுவத்தின் ட்ரோன் லெபனான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா இயக்கத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் ட்ரோன்களை ஹிஸ்புல்லா தாக்குவது இது இரண்டாவது முறையாகும். காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மூன்றாவது முறையாக மீண்டும் தாக்கியுள்ளது. முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அதற்கு முன்தினம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. மொத்தமாக இந்த மூன்று தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 777 பேர் காயமடைந்தனர். மேலும் 120 பேர் காணவில்லை என பலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, இஸ்ரேல் பகுதியில் இருந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதுதவிர ஆயிரக்கணக்கான ரொக்கெட் குண்டுகளையும் வீசினர். இதையடுத்து இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,500 பேரும் காசா பகுதியைச் சேர்ந்த சுமார் 9,061 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை பிணைக் கைதிகளில் 2 அமெரிக்கர்கள் உட்பட 4 பேரை மட்டும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். மேலும் ஒரு இராணுவ வீரரை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர். இப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னமும் இதற்கான சமாதான நிலை எட்டப்படவில்லை.
இவர்களின் மத்தியில் சிக்கித் தவிக்கும் காசா பகுதி மக்கள் உண்ண உணவு, குடிநீர், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வீதியில் உலா வரும் அவலநிலை அங்கு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர், “காசாவில் போர் நிறுத்தம் குறித்த இஸ்ரேல் நாட்டின் நிலைப்பாட்டினை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல் ஹமாஸ் குழுவிடம் சரணடைவதற்கு சமம். அவ்வாறு செய்தால் பயங்கரவாதத்திற்கு அடிபணிவது போல் ஆகிவிடும். அது ஒருபோதும் நடக்காது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ேலும், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment