கோமாதா என் குலமாதா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரைப் படங்களில் மிருகங்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தை


பெற்று கொடுத்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவேரையே சேரும். தான் எடுக்கும் பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒண்டிரண்டு மிருகங்களை நடிக்க வைத்து படத்தை வெற்றி படமாக்கும் ஆற்றல் அவருக்கே உண்டான தனிக் கலை. வேட்டைக்காரன், நீலமலைத் திருடன், நேர்வழி, நல்லநேரம், என்று மிருகங்களை நடிக்க வைத்து இவர் எடுத்த படங்கள் வசூலில் சக்கைபோடு போட்டன. இடையில் மிருகங்களை தவிர்த்து துணைவன், பெண் தெய்வம்,தெய்வம்,மாணவன் என்று சில படங்களை தயாரித்த தேவர் நல்ல நேரம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மிருகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தயாரிக்க தலைப் பட்டார். அந்த வரிசையில் 1973ம் ஆண்டு தேவர்

தயாரித்த படம்தான் கோமாதா என் குலமாதா. தன்னுடையஇரண்டாவது பட நிறுவனமான தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் படத்தை உருவாக்கினார் தேவர்.

படத்தின் பேருக்கு ஏற்றாற் போல் படத்தின் முக்கிய கதா பாத்திரம் மாடுதான். இந்த மாடு கதாநாயகியுடனேயே எப்போதும் காணப்படுகிறது. அவள் சொல்வதை செய்கிறது, அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது, விபத்துக்குள்ளாக இருந்த ரயிலை சிவப்பு விளக்கை ஆட்டி நிறுத்தி விபத்தை தடுக்கிறது. கதாநாயகனுக்கும் நல்ல புத்தியை புகட்டுகிறது. இவ்வளவு நல்லதை செய்யும் கோமாதா என் குலமாதா என்பது சரிதானே.

படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரமிளா. ஏற்கனவே பாலசந்தரின் அரங்கேற்றத்தில் விலைமாதுவாகவும், இன்னும் சில படங்களில் அடங்காபிடாரியாகவும் நடித்த இவருக்கு இந்தப் படத்தில் துடிப்பான வேடம். அதனை சிறப்பாக செய்திருந்தார் பிரமிளா. அதே போல் கதாநாயகனாக வருபவர் ஸ்ரீகாந்த். பல படங்களில் வில்லனாக நடித்த இவரை இப்படத்தில் ஹீரோவாக்கி விட்டார் தேவர். ஆனாலும் படத்தில் அவர்தான் வில்லன். பெண்களை கெடுக்கிறார், குடித்து கும்மாளம் போடுகிறார், உதாரியாக செலவு செய்கிறார் இறுதியில் ஐந்தறிவு படைத்த ஜீவன் அவரை மனிதனாக்குகிறது.

படம் முழுதும் மாடு செய்யும் சாகசங்கள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருந்தன . கிளைமக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான மாடுகள் திரண்டு வந்து வில்லனை துரத்துவது நல்ல த்ரில்! ஒளிப்பதிவாளருக்கு ஜே !

கிராமத்தில் தாய், தந்தை இன்றி வாழும் விஜயாவுக்கு உள்ள ஒரே துணை அவள் வளர்க்கும் லட்சுமி என்ற மாடுதான். ஊருக்கு உபகாரம் செய்யும் அவளுக்கு உபத்திரம் கொடுக்க வருகிறான் அருண் என்ற பணக்கார இளைஞன். இருவருக்கும் சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் ஆகிறது. ஆனால் அருண் திருந்துவதாக இல்லை. ஆனாலும் லஷ்மி அவனை மனிதனாக்கி விஜயா வாழ்வில் ஒளியேற்றுகிறது.

படத்தில் நகைச்சுவைக்கு நாகேஷ் பொறுப்பு. ஏமாற்றவில்லை அவர். கவர்ச்சிக்கு எம் பானுமதி. தாய்ப்பாசத்துக்கு எஸ் என் லட்சுமி. குணசித்திரத்துக்கு அசோகன், சுந்தரராஜன் இவர்களுடன் தேங்காய் சீனிவாசன், வி கோபாலகிருஷ்ணன் , பேபி சுமதி ஆகியோரும் உள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் புறம் தள்ளிவிட்டு லஷ்மி என்ற மாடு முன் நிற்கிறது , படத்தையும் நகர்த்துகிறது.


படத்துக்கு இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ். படத்தில் நான்கே நாலு பாடல்கள்தான். நான்கையும் பி சுசீலாவே பாடிவிட்டார். வசனங்களை மா ரா எழுதினார். இயல்பான வசனங்கள் , ரசிக்கும் படி அமைந்தது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பாக ஓசூரில் படமாக்கப்பட்டன.

படத்தை இயக்கியவர் தேவரின் தம்பி எம் ஏ திருமுகம். தேவர்

தயாரித்த முதல் படமான தாய்க்கு பின் தாரம் தொடங்கி , அவரின் பெரும் பாலான படங்களை தொடர்ந்து இயக்கி வந்த திருமுகம் இறுதியாக டைரக்ட் செய்த தேவர் படம் இதுதான். வர்ணத்தில் உருவான கோமாதா என் குலமாதா படத்தை அலுப்புத் தட்டாமல் இயக்கியிருந்தார் திருமுகம். படமும் வெற்றி படமானது. பின்னர் தெலுங்கு,ஹிந்தி,கன்னட மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது.

1 comment:

Anonymous said...

M.A திருமுகம் கடைசியாக சிவாஜியை வைத்து தர்மராஜா படத்தை இயக்கினார் , இது தேவர் பேனர் படமல்ல , 1980 இல் வெளிவந்தது.