எட்டாவது வருடத்தில் 'வெல்லும் சொல்' போட்டிகள் மீண்டும் மிடுக்கோடு அரங்கேறவிருக்கின்றன.
கம்பன் வகுப்பு மாணவரும், கம்பன் கழகச் செயலாளருமான செல்வி ப்ரணிதா பாலசுப்பிரமணியன் கடந்த மூன்று ஆண்டுகள் இப்போட்டிகளைப் பல சவால்களின் (தீநுண்மித் தொற்று) மத்தியில் திறம்பட அரங்கேற்றியிருந்தார்.
இவ்வருடம், இரு கம்பன் வகுப்பு இளைஞர்கள் செல்விகள் அபிநயா பிரபாகர் மற்றும் ஜனனி ஜெகன்மோகன் இணைந்து,
நன்கு ஒழுங்கமைத்து வருகின்றனர்.
இந்ந வருடத்திற்கான போட்டிகள்,
இம்முறை மொத்தம் 20 அணிகள் (அண்ணளவாக 75 மாணவர்கள்) இணைந்து போட்டியிடவுள்ளனர் என்பது மகிழ்ச்சி தருகின்றது.
பெற்றோர், தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் - செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்களின் துணையுடன் மாணவர்கள் சிட்னி, பேர்த் மற்றும் மெல்பேர்ண் நகரங்களில் ஆயத்தமாகி வருகின்றனர்.
இவர்கள் நேரடியாகவும், இணையவழி மூலமாகவும் இணைந்து போட்டியிடுவர்.
பங்கேற்கின்ற அனைவருமே வெற்றியாளர்கள்தான்!
போட்டிகளில் பங்கேற்பதற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை.
பொற் பரிசில்கள், வெற்றிக் கேடயங்கள், சிறந்த பேச்சாளர்களுக்கான பரிசில்கள், அறிவார்ந்த தமிழ்ப் புத்தகங்கள், சான்றிதழ்கள் என்பவை வருடாந்தக் கம்பன் விழாக்களில் வெல்லும் சொல் மாணவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
புலம்பெயர்ந்து இங்கு வாழும் எம் இளம் சமுதாயத்தினரின் பேச்சுத் திறனை,
உடனடியாகச் சிந்தித்து,
சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து,
தம் கருத்துகளை திறம்படத் தெரிவிப்பதற்கு 'வெல்லும் சொல்' நல்லதொரு அரங்கம் என,
பங்கேற்ற இளவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழை உயர்தரப் பரீட்சையில் (அவுஸ்திரேலியா) ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு,
அவர்களது வாய்மொழித் தொடர்பாடலுக்கான பரீட்சைக்கு இப்போட்டிகள் நன்கு துணை செய்கின்றன என,
உயர்தர வகுப்புகளில் தமிழைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தம் கருத்துகளை அவ்வப்போது தெரிவித்தும் பாராட்டியும் இருக்கின்றனர்.
எதிர்வரும் காலங்களில் இப்போட்டிகளில் மேலும் பல மாணவர்கள் தாமாக முன்வந்து பங்கேற்க வேண்டும் என்பது எம் விருப்பம்.
வேட்கையும் தேடலும் தொடரட்டும்!
துணை செய்கின்ற அனைவருக்கும் எம் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
நன்றி.
"சாதனை செய்க பராசக்தி"
No comments:
Post a Comment