அம்மன் அருள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரை வானில் முன்ணனி நடிகர்களாக வலம் வந்து


கொண்டிருந்த ஜெய்சங்கர், ஏவி எம் ராஜன், ஶ்ரீகாந்த் மூவரும் இணைந்து 1973 ஆண்டு ஒரு படத்தில் நடித்தனர். சமுகக் கதையின் அடிப்படையில் உருவான பக்திப் படமாக இப் படம் உருவானது.

தமிழ் மேடைநாடக கதாசிரியராக திகழ்ந்த பிலஹரி எழுதிய ஆராதனை என்ற நாடகமே இவ்வாறு அம்மன் அருள் என்ற பேரில் படமானது. இவர் எழுதிய ஆலயம், பாலாடை, கஸ்தூரி திலகம், ஆகிய நாடகங்கள் மேடையில் இருந்து திரைக்கு வந்தது போல் இந்த ஆராதனையும் அம்மன் அருள் ஆனது. புதிய பட நிறுவனமான அம்பிகா மூவிஸ் படத்தை தயாரித்தது.

ஊர் கோவில் பக்தர்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர் அக்

கோவில் பூசாரி. அவரின் மகள் கற்பகம் . அந்த ஊரின் பண்ணையாரின் மகனான பாபுவை பாம்பு கடித்து விட கற்பகம் கை வைத்தியம் செய்து அவனை காப்பாற்றி விடுகிறாள். தொடர்ந்து அவர்களிடையே காதல் மலர்கிறது. பண்ணையார் ஆரம்பத்தில் இதனை எதிர்த்தாலும் பின்னர் மகனின் விருப்பத்துக்கு இணங்குகிறார். பூசாரியும் மகளின் காதலுக்கு அனுமதி வழங்குகிறார். இதனிடையே இந்த திருமணத்துக்கு அம்மன் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டி பண்ணையார் கோவிலுக்கு வருகிறார். மடிக்கப் பட்ட ஒரு கடதாசியில் குங்குமமும், மற்ரொன்டில் விபூதியும் வைத்து அம்மனிடம் அனுமதி பெறும் படி பூசாரியிடம் கூறுகிறார் பண்ணையார்.

பண்ணையார் வேறு ஒரு பெண்ணுக்கு தன் மகனை கல்யாணம் செய்து கொடுக்க நினைக்கிறார் என்று பூசாரி சந்தேகிக்கிறார் . தன் மகள் காதல் நிறைவேறி அவளுக்கும் பாபுவுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் என்ற ஆசையில் இரண்டு கடதாசி தாளிலும் விபூதியை மடித்து வைத்து விடுகிறார். குங்குமத்தை எடுத்தால் அம்மனுக்கு சம்மதம் , விபூதியை எடுத்தால் அம்மனுக்கு சம்மதம் இல்லை என்று அர்த்தம். அம்மன் முன் வைத்து எடுத்த கடதாசியில் விபூதி இருப்பதை கண்ட பண்ணையார் தன்னுடைய மகனின் இந்த காதல் கல்யாணத்துக்கு அம்மன் அருள் இல்லை என்று கூறி சென்று விடுகிறார். பூசாரியோ தன் செயல் தனக்கே கேடாக முடிந்து விட்டதாக எண்ணி இடிந்து போய் விடுகிறார். அம்மன் அருளால் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதி படம்.

இப்படி தான் எழுதிய கதைக்கு வசனங்களையும் அருமையாக எழுதியிருந்தார் பிலஹரி. படத்தின் ஓட்டத்துக்கு வசனங்கள் கை கொடுத்தன. பாடல்கள் வாலி. இசை சங்கர் கணேஷ். தங்களால் பக்திப் பாடலுக்கும் இசையமைக்க முடியும் என்பதை ராதா ஜெயலஷ்மி குரலில் ஒலிக்கும் அகிலம் எல்லாம் விளங்கும் அம்மன் அருள் பாடல் முலம் நிரூபித்திருந்தார்கள் இரட்டையர்கள். எஸ் பி பி , சுசிலா குரலில் ஒலித்த ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் பாடலும் இனிமை.


ஜெய்சங்கருக்கு இதில் ஜோடி மஞ்சுளா. இந்த ஒரு படத்தில் தான் இருவரும் இணைந்து நடித்தார்கள். மஞ்சுளாவின் இளமை பாத்திரத்துக்கு பொருந்தியது. ராஜனுடன் அவர் தோன்றும் காட்சிகளில் அவர் நடிப்பு ஜொலித்தது . ஸ்ரீகாந்த்துக்கு வித்தியாசமான வேடம். அசோகனுக்கு, கே ஏ தங்கவேலுவும் படத்துக்கு வலு சேர்க்கிறார்கள். இறுதி காட்சியில் அசோகனின் ஆவேச நடிப்பு பிரமாதம். ஜெய்சங்கர் இருந்தும் சண்டை காட்சி இல்லை. ஸ்ரீகாந்த் இருந்தும் கற்பழிப்பு காட்சி இல்லை. சி ஐ டி சகுந்தலா இருக்கிறார் , ஆனால் அவரின் கவர்ச்சி

நடனம் இல்லை. படம் முழுதும் சேலை அணிந்து அடக்கமாக வருகிறார். தேங்காய் சீனிவாசனின் நகைச்சுவை சுமார். இவர்களுடன் ஒரு விரல் கிருஷ்ணராவ், ராஜவேலு, குமாரி பத்மினி, ஜெயக்குமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தின் முதுகெலும்பு பூசாரியாக நடித்த ஏ வி எம் ராஜன்தான். பாத்திரத்துடனேயே ஒன்றி விட்டார். மகளின் காதலை அறிந்ததும் துடிப்பதும், கடனை திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்று

கலங்குவதும், அம்மன் முன்னால் உருகுவதுமாக தன் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராஜன். அவரின் பாத்திரமும் கண்ணியமாக அமைக்கப்பட்டிருந்தது.

படத்தை டி ராஜகோபால் ஒளிப்பதிவு செய்ய ஆர் விட்டல் படத் தொகுப்பை கையாண்டார். படத்தை இயக்கியவர் பட்டு. நாடகத்தில் இருந்து படமாகும் போது செய்ய வேண்டிய மாற்றங்களை கவனமாக கையாண்டு படத்தை சுவை கெடாமல் இயக்கியிருந்தார் பட்டு. நல்ல படம் அம்மன் அருள்!

No comments: