உயரத்தில் வைத்த விளக்கு - (அமரர் ஜே ஐ தம்பிராஜா 1938 -2023) - யோகன் (கன்பரா)


நவாலியூரில் நான் வாழ்ந்த இளமைக் காலங்களில்  தினசரி பத்திரிகைகள் வாசிப்பதெற்கென பொது சன சமூக நிலையங்கள் பல இருந்தன. முருகானந்த  சனசமூக நிலையம், முரசொலி சன சமூக நிலையம்வளர்மதி சன சமூக நிலையம் என்பன நினைவுக்கு வரும் பெயர்கள். ஆனால் நூலகங்கள் என்று அப்போது ஊரில் இருந்ததில்லை. இது நவாலி YMCA  இனரின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்று. இதை சாத்தியமாக்க உழைத்த பலரில் ஒருவரான ஜோசேப் அண்ணன் (ஜே ஐ தம்பிராஜா) 11-10-2023 அன்று மறைந்து விட்டார்.  

 நவாலித் தென் இந்தியத் திருச்சபை வளவில் இருந்த கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்த YMCA பின்னர் எழுபதுகளின் இறுதியில் நவாலி சேச்சடியில்  பிரசாத் வீதியில் அமைந்திருந்த தனியார் மதில் வீடொன்றுக்கு  இடம் மாறியது. அந்த வீட்டின் ஒரு அறையில் YMCA நூலகம் ஆரம்பித்ததிலிருந்து பின்னர் அதே பிரசாத் வீதியில் வயற்கரையை அண்மித்திருந்த  வீடொன்றுக்கு இடம் மாறியது முதல் நூலகம் எழுச்சியுடன் இயங்கத் தொடங்கியது.

இந்த வீட்டையும் காணியையும் கலைஞர் S அருமைநாயகம் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து YMCA  வாங்கிக் கொண்டது. இதே கலைஞர் அருமைநாயகம்தான் ஏ. ரகுநாதன் தயாரித்த 'நிர்மலா' திரைப்படத்தை  இயக்கி, எடிட்டிங் செய்தவர்.  அவரது வீட்டுக் கட்டிடத்தில் YMCA  அலுவலகமும், நூலகமும் இயங்கி வந்த வேளையிலேயே முன்னாலிருந்த காணியில் புதிய கட்டடத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

எனக்குத் தெரிய திரு W. G. அன்னப்பா, திரு C. அருமைநாயகம் போன்ற  YMCA  தலைவர்களின் வரிசையில்  ஜோசேப் அண்ணனும் (திரு ஜே ஐ தம்பிராஜா) இணைந்து தொடர்ச்சியான உழைப்பின் பின்னணியில், திரு N அன்புராசா, திரு S விஜயகுலசிங்கம் போன்ற முழு நேர பணியாளர்களின் ஆற்றலுனும், அர்ப்பணிப்புனும் மற்றும் பல தொண்டர்களின் உழைப்புடனும் அந்த கட்டிடம் எழுந்து வருவது யாவருக்கும் உற்சாகத்தைத்  தந்தது. 

முன்னாள் YMCA தலைவராகவிருந்த திரு C. அருமைநாயகம் மட்டக்களப்பு செல்ல தலைமைப் பொறுப்பை ஜோசேப் அண்ணன் ஏற்றுக்  கொண்டார்.

அவர் தலைவராகவிருந்த காலத்திலேயே  புதிய மண்டபமும் மேல்மாடியில் நூலகமும் அமைக்கப்பட்டு வேலைகள் பூர்த்தியடைந்தன.

சிறுவர் போஷாக்குணவத் திட்டத்தின் கீழ்  சனிக்கிழமை    காலையில் பாலும் கடலையும் வறிய குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன. இலவச உயர்தர மாணவர் ஆங்கில , விஞ்ஞான வகுப்புகள், தையல் வகுப்புகள், முதலுதவி வகுப்புகள்  என்று அந்தக் கட்டிடம் முழுவதையுமே பொது மக்கள் பயன்பாட்டுக்கென பல நிகழ்ச்சித் திட்டங்களினால் நிறைத்திருந்தார் ஜோசேப் அண்ணன்.  திரு W . N  தேவகடாட்சம் அவர்கள் வருடாந்தம் YMCA  பாசறையை  திறம்பட நடாத்தி வந்ததுடன் முதலுதவி வகுப்புகளை நடாத்துவதற்கும் பேருதவியாகவிருந்தார்.

YMCA மற்றும் நவாலித் திருச்சபையின் வேலைகள் என்று பல பொது வேலைகளுக்கிடையில் தனது வருமானத்துக்கான தொழிலாக ஜோசேப் அண்ணன் நாவற்குளியில் அமைந்திருந்த சிக்மா நீரிறைக்கும் எந்திரங்களை வார்க்கும் தொழிற்சாலையில் நிர்வாக முகாமையாளராகவும் இருந்தார். 

அவர் தொழிலில் முகாமைத்துப் பணி செய்தாலும் மாலையில் YMCA  வரும்  போது வேட்டியும், சேட்டுடனும் வரும் சாதாரண மனிதராராகவே அவரைக் காண்போம். மண்டபத்தில் குப்பை கூளங்கள் இருந்தால் அவரே தும்புத்தடி  எடுத்து பெருக்கினார். நூலக புத்தகங்களின் மேல் தூசியைக் கண்டதால் துணியெடுத்துத் தட்டினார். தொண்டு செய்யம் பணிவு ஒரு தலைவனுக்கு வேண்டுமென்பதே செய்து காட்டியிருந்தார். பாரத நாட்டில் மகாத்மா காந்தி எப்படி வாழ்ந்து காட்டினாரோ அதைப் போல எளிமையாகவிருப்பதையே விரும்பினார்.  அதை விட பொதுப் பணத்தை தேவையற்ற முறையில் கூலியாட்கள்  வைத்து விரயம் செய்ய விரும்பாதவர் அவர். 

எல்லாரையும் அரவணைத்துச்செல்லும் மனம் இருந்தது அவருக்கு. எந்த இனத்தவரையும், எந்த மதத்தினரையும், பணக்காரனோ, ஏழையோ அவருக்கு எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் குணம் வாய்த்திருந்தது. அதனால் அவருக்கு இளைஞர், முதியோர்,  சிறுவர் என்று ஒரு பெரிய நட்பு வட்டம்  எப்போதும் இருந்ததை கண்டிருக்கிறேன்.

வழியில் இளைஞர்களைக் கண்டால் 'என்ன தம்பி எப்பிடியிருக்கிறீர். என்ன YMCA பக்கம் காணேல்லை?' என்று கேட்காமல் போக மாட்டார். 

பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டிலிருந்த என்னையும், நண்பன் S மோகனராஜாவையும் YMCA நிர்வாகக் குழுவில் சேர்த்துக்கொள்ள ஜோசேப் அண்ணன் விரும்பினார். எம்மிலும் வயதில் மூத்தோர்கள் இருந்த நிர்வாகக் குழுவில் நாங்கள் அனுபவத்தில் குறைந்தவர்களெனினும் எம்மிடமிருந்த ஆற்றல்களையும் பயன்படுத்த விரும்பியிருந்தார் போலும்.  இந்தக் காலத்திலேயே நூலகப் பணிகளுக்கு உதவுமாறும் எங்களைக் கேட்டுக் கொண்டார்.

பல்கலைக்கழகம் செல்லுமுன் எனது வாசிப்பில் ஜெயகாந்தன் இடம் பிடித்திருந்தார். பலகலைக்கழக நண்பர்களில் செல்வாக்கினால் எனது வாசிப்பிலும் மாறுதல்கள் வந்தன. கவிஞர்களில் மகாகவி, விவரத்தினம், சேரன் ஜெயபாலன் என்று ஒருபுறமும், நாவல் ஆசிரியர்களான சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் , அம்பை,  நாகராஜன் என்று மறுபுறமும் இதைவிட ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளான தாய், அன்னை வயல் , ஜமீலா போன்ற படைப்புகளைத் தந்த  மாயகோவ்ஸ்கி மற்றும்  சிங்கிஸ் ஐத்மொதவ், மற்றும் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் அன்டன் செகோவ், டோல்ஸ்டாய்   போன்றவர்களின் படைப்புகளை வாசிக்கும் ஆர்வமும் வந்தது.

நவாலி YMCA இல் சாதாரணமாக குடும்பப் பெண்கள் மாலையில் வந்து இரவல் வாங்கிச் செல்லும் புத்தகங்கள் பெரும்பாலும்  ரமணி சந்திரன் அல்லது சிவசங்கரி, லக்ஸ்மி போன்ற எழுத்தாளர்கள் எழுதியவையாகவிருந்தன.

இந்த குடும்பப் பெண்கள்  விருப்ப நூல் வரிசைகளுக்கு எதிராக நாங்கள் மேற்சொன்ன எழுத்தாளர்கள்  எழுதிய நூல்களையும்  கொண்டு வந்து சேர்த்தோம்.

K.K.S வீதியில் இருந்த ஸ்ரீலங்கா புத்தக நிலையத்திலும், பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் இந்த வகையான நூல்கள் நிறைய இருந்தன.

நான் பிரசாத் வீதி மதில் வீட்டில் நூலகம் இருந்தபோதும், பிறகு பழைய கட்டிட அறையிலும்  கடைசியாக  புதிய கட்டிட மேல் மாடியிலும் இருந்த போதும் நூலகத்தில் நின்று உதவி செய்திருக்கிறேன். 

புத்தகங்களை இரவல் வாங்குபர்களின் விபரங்களை ஒரு கொப்பியில் குறித்துக் கொள்வதும்,  இடம் மாறிவிடும் புத்தகங்களை சரியாக அடுக்குவதும், அவ்வப்போது பைண்டிங் செய்வதும்  என்று சின்னச் சின்ன வேலைகள் இருக்கும். இதற்காகவே பைண்டிங் செய்வதைப் பற்றிய ஒரு செய்முறைப் பயிற்சி வகுப்பின் மூலம் இந்த வேலையையும் கற்றுக் கொண்டோம்.

மாலா அக்கா என்று நாங்கள் அழைக்கும் திருமதி J சத்தியராஜா நூலகத்திலும் மற்றும் சிறுவர் போஷாக்குணவுத் திட்டத்திலும் பணி செய்தார்.  

1983 இல் நாட்டின் அரசியல் கொதிநிலையில் இருந்த காலத்திலேயே YMCA இன் இளைஞர் குழுவான Hi Y Club தனது 30 வது வருட நிறைவைக் கொண்டாடியது. இந்த கிளப்பின் முதலாவது நிர்வாகக் குழுவில் ஜோசப் அண்ணனும் இருந்திருக்கிறார்.  30 வது வருட நினைவு மலர் வெளியிட வேண்டுமென்று ஜோசப் அண்ணனும் இளைஞர் குழுப் போஷகர் ஜோன் செல்வராசாவும் விரும்பினர். அதற்கென ஒரு நினைவு மலர்க்குழுவை அமைத்து அதன் பத்திராதிபராக என்னிடம் பொறுப்பைத் தந்தனர்

நான் எழுதிய கட்டுரை ஒன்றும் கவிதையொன்றும் அதில் பிரசுரமானது. ஆனால் அந்த நினைவு மலர் பிரதியை நான் தொலைத்து விட்டேன். பிறகு பல  ஆண்டுகளுக்கு  பிறகு இங்கு அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னரே ஜோசப் அண்ணனை நீண்ட காலத்தின் பின்னர் சந்தித்தபோது அந்த நினைவு மலர் கைவசம் இல்லை என்று அவரிடம் சொன்னேன்.

அடுத்தமுறை அவர் இலங்கை சென்று திரும்பியபோது எப்படியோ ஒரு பிரதியைத்  தேடி கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வந்து தந்தார். அது என் கைக்கு வந்தது இன்றும் மன நிறைவைத்   தருகிறது.

அவரது மனைவியான காலஞ்சென்ற புஷ்பம் தம்பிராஜா முன்னர் உடுவில் மகளிர் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு கல்லூரியொன்றிலும்  ஆசிரியையாகவிருந்த காலத்தில் வெளியிட்ட தமிழ் பாடப் பயிற்சி நூல்களையும் இங்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு  தந்துவினார்.   

நூல்களின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகவே அவர் பின்னர்  தனது பாட்டனாரின் பெயரில் யோசுவா புத்தக நிலையம் என்று ஒன்றை கொழும்பு மட்டக்குளியாவில் ஆரம்பித்து நடாத்தி வந்தார். அங்கே செல்லும் சந்தர்ப்பம் எனக்கு ஒருமுறை கிடைத்தது. நான் பலகாலம் தேடி வாசிக்க வேண்டுமென்று நினைத்திருந்த மகாகவியின் ‘கோடை’ நாடகப் பிரதி நூலும் அதிஷ்டவசமாக  அங்கே கிடைத்தது.

அவரது மூத்த சகோதரர் சின்னண்ணன் என்று அழைக்கப்படும் காலஞ்சென்ற ஐசக் இயேசுசகாயம் மருதனார்மடம் கிறீஸ்தவ சேவா ஆசிரமத்தை  நிறுவியவர்களில் ஒருவர். இளமையிலேயே துறவறம் பூண்ட அவர் பல தமிழ் கிறீஸ்தவப் பாடல்களை நல்ல சங்கீத மெட்டுகளில் எழுதி இசையமைத்தவர்.  நினைவில் நிற்கும் அவரது பல பாடல்களை  இன்றும் ஆராதனைகளில் இசைக்க கேட்கிறோம். அவரது இளைய சகோதரரும் முன்னர் அங்கிலிகன் சபையில் மத குருவாகவிருந்தவர். 

 நான் நவாலியூரை விட்டு வந்து முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன.. பிற்காலத்தில் 90 களில் நவாலியூரில் வாழ்ந்த  அருண்மொழிவர்மன் என்பவர் தனது இணையைத்தளத்தில் YMCA நூலகம் குறித்து இப்படி பதிவு செய்கிறார்.

 என்னுடைய சிறுவயதில் நவாலியில் நாம் குடியிருந்தபோது அங்கிருந்த YMCA நூலகத்தில் அங்கத்தவனாக இருந்தேன்.  சிறுவர்களுக்கென்று இரண்டு இறாக்கைகளும் (racks) பெரியவர்களுக்கென்று சில இறாக்கைகளுமாக மொத்தம் பத்துக்கு உட்பட்ட புத்தக இறாக்கைகளை மட்டும் கொண்டிருந்த சிறியதோர் நூலகமாக அது இருந்தது.  கிட்டத்தட்ட பதினொரு வயது இருக்கும்போது பொது அறிவுப் புத்தகங்கள் என்கிற பெயரில் அந்நாட்களில் வந்துகொண்டிருந்த புத்தகங்களை வாசிப்பதில் பெருவிருப்பிருந்தது.  அப்படித் தேடுகின்றபோதுதான் அந்த நூலகத்தில் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் தொகுதியொன்றும் இருந்ததைக் கண்டுகொண்டேன்.  நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லவிடமாட்டார்கள்.  ஆனாலும் அதனை வாசித்து முடிப்பது என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.  அதுமட்டும் போதாதென்று அந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்த்து அதன் முக்கியமான பகுதிகளை அப்படியே பிரதியெடுப்பது என்றும் தீர்மானித்து நான்கு கட்டுக் கொப்பி என்று சொல்லப்படுகின்ற 160 பக்கக் கொப்பியொன்றினை வாங்கி அதில் கலைக்களஞ்சியத்தில் இருக்கின்ற முக்கியமான பகுதிகள் என்று நான் நினைத்த பகுதிகளையெல்லாம் அப்படியே பார்த்து எழுதியும் வந்தேன்.

 இதை எழுதியவர் பற்றி அறிந்தபோது அவர் தொடர்ச்சியாக ஈழத்தில் யுத்த சூழலில் தான் வாழ்ந்த காலங்களை பற்றி இணையத்தில் எழுதுபவர் என்றும் குறிப்பிடத்தக்க இளந்தலைமுறை எழுத்தாளரென்றும் அறிந்தேன்ஒருவேளை நூலகத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான ஜோசேப் அண்ணன் குறித்து  அறிந்திருந்தாரோ தெரியவில்லை. ஒருவேளை அவர்அறிந்திராவிட்டாலும் கூட அவரது இந்த பதிவு ஜோசேப் அண்ணனுக்கு முகமறியா ஒருவரின் அஞ்சலியாகவும் அமைந்து விடும்.

இயேசு நாதர் தனது மலைப்  பிரசங்கத்தில் ஓரிடத்தில் இப்படிச் சொன்னார்:

'விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல் விளக்குத்  தண்டின் மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்'.

இங்கே மரக்கால் என்பது தானியங்களை அளக்கும் ஒரு கொத்து போன்றது. ஜோசேப் அண்ணன் தனது திறமைகளை மூடி வைத்தவரல்ல. அவரது வாழ்வும் உயரத்தில்-மரத்தண்டில் வைத்த விளக்குப் போல சமூகத்துக்கு ஒளியாக ஜொலித்திருக்கிறது.

85 வருடங்களை பூர்த்தி செய்த நிலையில் தனது வாழ்வுக்கான கடமைகளை முடித்து விட்ட திருப்தியுடன் அவுஸ்திரேலியாவில் தனது இரு பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் ஓய்வெடுக்க வந்தவர் பைபிளில் சொல்லப்பட்டது போல நல்ல ஒட்டத்தை  ஓடி முடித்து விட்டு இப்போது நிரந்தரமாக ஓய்ந்திருக்கிறார். அவருக்கு எமது அஞ்சலி.   

 

No comments: