உலகச் செய்திகள்

காசா வைத்தியசாலை மிலேச்ச தாக்குதலில் சுமார் 500 பேர் பலி! - தாம் மேற்கொள்ளவில்லை என இஸ்ரேல் மறுப்பு

காசா மருத்துவமனை தாக்குதலை அடுத்து அரபுலகெங்கும் பெரும் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு இஸ்ரேல் சென்ற பைடனின் இராஜதந்திர முயற்சிகளும் ஸ்தம்பிதம்

பலஸ்தீனர்களை ஏற்க எகிப்து மறுப்பு

இஸ்ரேல் -காசா மோதல்: இன்றைய நிலைவரம்

ஹமாஸ் அமைப்பை நீக்குவதே போரின் இலக்கு – இஸ்ரேல் தெரிவிப்பு


காசா வைத்தியசாலை மிலேச்ச தாக்குதலில் சுமார் 500 பேர் பலி! - தாம் மேற்கொள்ளவில்லை என இஸ்ரேல் மறுப்பு

October 18, 2023 3:16 pm 

– மிலேச்சத்னதம் வெளிப்படுவதாக உலக நாடுகள் இஸ்ரேல் மீது கண்டனம்
– அமெரிக்க ஜனாதிபதி பைடனின் விஜயத்திற்கு முன்னதாக சம்பவம்

காசா நகர மையத்தில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேலிய விமானப்படை நேற்றையதினம் மேற்கொண்ட தாக்குதலில் 500 பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய விமானப்படையின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த அல் அஹ்லி மருத்துவமனையில் பலஸ்தீன பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர். அத்துடன் காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாடசாலை வளாகமும் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தாக்குதல் காரணமாக வைத்தியசாலையின் இடிபாடுகளுக்கு மத்தியில் மக்கள் சிக்கியுள்ளதோடு, உடல் உறுப்புகள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மனிதாபிமான அமைப்பான பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம், “மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபததி ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றடையும் நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடி இது தொடர்பில் கேட்டதாகவும், இத்தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை எனவும், ஹமாஸ் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல் தவறுதலாக அல் அஹில் மருத்துவமனை மீது வீழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் செல்லும் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த வருத்தமடைவதாகவும், நடந்த விடயம் தொடர்பில் விசாரிக்குமாறும் தனது தேசிய பாதுகாப்புக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் குறித்த தாக்குதல் தொடர்பில் எந்தவொரு தரப்பையும் அவர் சாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜோர்தான் மற்றும் எகிப்திய தலைவர்கள் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை பைடன் சந்திக்கவிருந்த உச்சிமாநாட்டை ஜோர்தான் இரத்து செய்துள்ளக, ஜோர்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆயினும், அல் அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் மிலேச்சத்தனம் வெளிப்படுத்தப்படுவதாக, உலக நாடுகள் பலவும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் போராளிகளை அழிப்பதாக கூறி பலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரிட ஆரம்பித்துள்ள நிலையில், பலஸ்தீன பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் காயங்கள் தொடர்பில் இஸ்ரேல் மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.   நன்றி தினகரன் 





காசா மருத்துவமனை தாக்குதலை அடுத்து அரபுலகெங்கும் பெரும் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு இஸ்ரேல் சென்ற பைடனின் இராஜதந்திர முயற்சிகளும் ஸ்தம்பிதம்

October 19, 2023 6:11 am 

காசா மருத்துமனை மீதான தாக்குதல் முஸ்லிம் உலகெங்கும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கான ஆதரவை உறுதி செய்ததோடு, எந்த ஆதாரத்தையும் வெளிப்படுத்தாது மருத்துமனை தாக்குதல் இஸ்ரேல் அன்றி வேறு தரப்பால் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அல் அஹ்லி அல் அரபி மருத்துமனை மீது நேற்று முன்தினம் (17) நடத்தப்பட்ட வான் தாக்குதல் 12 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காசா மீதான தொடர் தாக்குதலின் பயங்கர நிகழ்வாக இருந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் பைடனின் பிராந்தியத்திற்கான அவசர விஜயத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலை அடுத்து அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பை அரபுத் தலைவர்கள் ரத்துச் செய்தனர்.

சுமார் 500 பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டினர். எனினும் இதனை மறுக்கும் இஸ்ரேல், பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் வீசிய ரொக்கெட் குண்டு ஒன்றே தவறி மருத்துவமனை மீது விழுந்ததான கூற்றை நிறுவ முயன்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இஸ்ரேலை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதியை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார். தென்யாகுவை அருகில் வைத்து பேசிய பைடன்: காசா மருத்துவமனையில் இடம்பெற்ற வெடிப்பு பெரும் கவலையையும் கோபத்தையும் தருகிறது. நான் பார்த்ததன் அடிப்படையில், நீங்களன்றி (நெதன்யாகு) மற்ற தரப்பு மூலமே இது நடத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

பைடனின் மத்திய கிழக்கு விஜயம் ஓர் அமைதி முயற்சியாகவே இருந்தது. அவர் ஜோர்தான், எகிப்து மற்றும் பலஸ்தீன அதிகாரசபை தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றுக்காக அம்மான் செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் மருத்துவமனை தாக்குதலை அடுத்து அந்த மாநாட்டை அரபுத் தரப்பினர் ரத்துச் செய்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் உறுதியான ஆதரவுக்கு நெதன்யாகு, பைடனிடம் நன்றியை தெரிவித்துக்கொண்டார். “இஸ்ரேலிய தேசத்தை பாதுகாப்பதற்காக இறைவன் உங்களுக்கு அருள்பாலிக்கட்டும்” என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

எனினும் மருத்துவமனை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தும் அரபுலகம் அதற்கு கடும் கோபத்தை வெளியிட்டு வருகிறது. இதற்கு எதிராக லெபனான், ஜோர்தான், லிபியா, யெமன், துனீசியா, துருக்கி, மொரோக்கோ, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையிலும் பெரும் ஆர்ப்பட்டங்கள் வெடித்தன.

இதில் 2020 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் மொரோக்கோ இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை கடுமையாகக் கண்டித்தன. அதேபோன்று இஸ்ரேலோடு உறவை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அண்மையில் அதனை இடை நிறுத்திய சவூதி அரேபியா, இந்தத் தாக்குதல் “இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை செய்த கொடூரமான குற்றம்” என்று குறிப்பிட்டது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்பட்டது என்றும் சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறி இருப்பதாகவும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கும் கட்டார் இதனை “கொடூரமான படுகொலை” என்று சாடியதோடு, “இந்த மோசமான சம்பவத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும்” என்று ஜோர்தான் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இது ஒரு போர் குற்றம் என்றும் மனித குலத்திற்கு எதிரான செயல் என்றும் திட்டமிட்ட அரச பயங்கரவாதம் என்றும் தெரிவித்தது.

அரபு லீக் தலைவர் அஹமது அப்துல் கெயித், இந்த பேரவலத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். “மருத்துவமனை ஒன்றில் பாதுகாப்பற்றிருக்கும் மனிதர்கள் மீது தாக்குவதற்கு எத்தனை கொடூரமான மனம் வேண்டும்?” என்று முன்னர் ட்விட்டர் என்று அறியப்பட்ட எக்ஸ் சமூகதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலை அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக “கோபத்தின் தினத்தை” நேற்று அறிவித்தது. லெபனானின் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் தூதரகங்களுக்கு நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தியதோடு பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

திரிபோலி மற்றும் பிற லிபிய நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி, காசா மக்களுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியபடி ஒன்று திரண்டனர். ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ், பிரெஞ்சு தூதரகங்களுக்கு வெளியிலும், துருக்கி மற்றும் ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டனர்.

இதேவேளை மருத்துமனை மீதான தாக்குதலை அடுத்து மேற்குக் கரையில் ஏற்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு எதிராக மக்கள் கோசம் எழுப்பியதோடு பலஸ்தீன பாதுகாப்பு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இஸ்ரேல் சிவப்பு கோட்டை தாண்டி இருப்பதாக சாடிய மஹ்மூத் அப்பாஸ், மருத்துவமனை மீதான தாக்குதல் கொடூரமாக படுகொலை என்றும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்காக அவர் மூன்று நாள் துக்க தினத்தையும் அறிவித்துள்ளார்.

மருத்துமனை மீதான இந்தத் தாக்குதலுக்கு உலகெங்கும் இருந்து பெரும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

குவிந்து கிடக்கும் சிதறிய உடல்கள்

கடந்த செவ்வாய் இரவு (17) அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த படங்கள் பெரும் குழப்பத்தின் காட்சிகளைக் காட்டுகின்றன. இரத்தம் தோய்ந்த, உடல் சேதமான மக்கள் இருளில் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். இடிபாடுகள் நிறைந்த தெருவில் உடல்களும் சிதைந்த வாகனங்களும் கிடக்கின்றன.

ஏவுகணை ஒன்று அப்பகுதியைத் தாக்குவதையும் அதைத்தொடர்ந்து அங்கு குண்டுவெடிப்பு நடப்பதையும் ஒரு வீடியோ காட்டுகிறது.

“எல்லை கடந்த மருத்துவர்கள்“ என்ற மனிதாபிமான உதவி அமைப்பைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் காசன் அபு சித்தா, இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், தாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூறினார். இந்தச் சம்பவத்தை ‘ஒரு படுகொலை’ என்று அவர் விபரித்தார்.

மீட்பாளர்கள் இரத்தம் தோய்ந்த இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இதில் 300 பேர் வரை உயிரிழந்திருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு தலைவர் ஒருவர் குறிப்பிட்டபோதும், சுகாதார தரப்பு 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் மீட்பாளர்கள் தொடர்ந்து சடலங்களை மீட்டு வருவதாக பலஸ்தீன அமைச்சரவை பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.

“மக்கள் ‘எம்மை காப்பாற்றுங்கள்’, ‘எம்மை காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டபடி சத்திரசிகிச்சை பிரிவுக்கு ஓடுகிறார்கள். மருத்துவமனைக்குள் இருந்தவர்களே காயமடைந்திருக்கிறார்கள்” என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பதல் நயிம் தெரிவித்தார்.

“மருத்துவமனை முழுவதும் இறந்த, சிதறடிக்கப்பட்ட சடலங்களே உள்ளன. எம்மால் முடிந்தவரை மக்களின் உயிரைக் காக்க நாம் முயன்றபோதும் மருத்துவ பணியாளர்களை விடவும் அந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவர்கள் உயிருடன் இருப்பதை எம்மால் பார்க்க முடிந்தபோதும் அவர்களுக்கு உதவ எம்மால் முடியவில்லை. அவர்கள் உயிர்த்தியாகம் செய்துவிட்டார்கள்” என்றும் அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை தாக்குதலுக்கு மத்தியில் காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மருத்துமனை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10,859 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 12 நாட்களுக்குள் காசாவின் உயிரிழப்பு எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 51 நாட்கள் நீடித்த இஸ்ரேல்–காசா மோதலில் கொல்லப்பட்ட மொத்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கடையில் இடம்பெறும் மோதல்களில் மேலும் 62 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 1,250 பேர் காயமடைந்துள்ளனர்.

அங்கு இஸ்ரேலிய சுற்றுவளைப்பு தேடுதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை காசாவில் பொதுமக்களுக்கு எதிரான போருக்கு இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா மற்றும் அனைத்து மேற்குலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. லெபனானில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய ஹமாஸ் அதிகாரி ஒருவரான ஒசாமா ஹம்தான் இதனைத் தெரிவித்தார்.

காசாவுக்கான உதவிகள் அனுமதிக்கப்படாத நிலையில் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஏற்கனவே காசாவில் மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்தை துண்டித்து முழு முற்றுகையை அமுல்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தவிர்த்து காசாவுக்கான ஒரே வாயிலான இருக்கும் எகிப்துடனான ராபா எல்லைக் கடவையில் எகிப்துப் பக்கமாக உதவிப் பொருட்களை ஏற்றிய நூற்றுக்கும் அதிகமான லொரிகள் காத்துள்ளன. இஸ்ரேலின் தொடர்ச்சியான வான் தாக்குதலுக்கு இடையே உதவி விநியோகத்தை மேற்கொள்ள முடியாதிருப்பதாக எகிப்து குறிப்பிட்டுள்ளது.

காசாவின் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து சுழல்வதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக உலக சுகாதார அமைப்பின் மருத்துவ விநியோகங்கள் எல்லையில் சிக்கி இருப்பதாகவும் இந்த மருத்துவ உதவிகளை அனுப்ப நாம் காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் உயிர்கள் பறிபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





பலஸ்தீனர்களை ஏற்க எகிப்து மறுப்பு

October 19, 2023 12:47 pm 

காசா மீதான இஸ்ரேலிய போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களை எகிப்தை ஏற்கும்படி கோருவதற்கு பதில் அவர்களை நெகேவ் பாலைவனத்திற்கு அனுப்பலாம் என்று எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலில் நெகேவ் பாலைவனம் உள்ளது. காசாவில் தாம் விரும்பும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை பலஸ்தீனர்களை நெகேவ் பாலைவனத்திற்கு அனுப்ப முடியும். பின்னர் அவர்களால் காசாவுக்கு திரும்ப முடியும்” என்று ஜெர்மனி தலைவர் ஒலேப் ஸ்கோல்ஸ் உடன் கெய்ரோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து சிசி தெரிவித்தார்.

இதன்போது எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் பலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் வழங்குவதற்கு சிசி எதிர்ப்பை வெளியிட்டார்.

“பலஸ்தீனகர்கள் எகிப்துக்கு அனுப்பப்பட்டால், இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏற்பட்டால் எகிப்து அதன் விளைவுகளை தொடர்ந்து அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்பதோடு சினாய் இஸ்ரேலுக்கு எதிரான தளமாக மாறிவிடும். அப்போது எகிப்து பயங்கரவாதத்திற்கான தளமாக அடையாளப்படுத்தப்பட்டுவிடும்” என்றார் சிசி.

காசா மீதான முழு முற்றுகை பலஸ்தீனர்களை சினாய்க்கு அனுப்பும் திட்டம் என்றும் அவர் சாடினார்.

ஏற்கனவே பெரும்பான்மையான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





இஸ்ரேல் -காசா மோதல்: இன்றைய நிலைவரம்

இஸ்ரேல் – காசா போர் 12 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் காசாவிலுள்ள அலி அராப் மருத்துவமனை மீது நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதல்களில் சுமார் ஐந்நூறு பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காசான் அபு சித்தா என்ற வைத்தியர், அடையாளம் காண முடியாதளவுக்கு பலரது உடல்கள் சிதைந்து காணப்பட்டன.
உயிரிழப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். ஏனென்றால் கட்டிட சிதைவுகளுக்குள் பலர் சிக்கியிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாகரிக சக்திகளுக்கும் மிருகத்தனமான சக்திகளுக்கும் இடையிலான போர் இதுவென்று இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளார்.
ஹமாஸ் படையினரை ஒழிப்பதற்கு அமெரிக்க இயன்றளவு உதவிகளை வழங்கும் என ஜோ பைடன் இதன்போது உறுதியளித்துள்ளார்.


மேலும், இருதரப்பு மோதலை உடனடியாக நிறைவுக்கு கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டெரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களும் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில மணிநேரங்களுக்கு முன்னர் காசாவின் தெற்கு பகுதியிலுள்ள நகரமான கான் யூனிஸ் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

• காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,478 ஆக உயர்வு, 10,859 பேருக்கு காயம்
• இஸ்ரேலில் 1,403 பேர் உயிரிழப்பு, 3,800 பேருக்கு காயம்
• காசாவில் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்ப்பு
• ஈரான், ஜோர்தான், லெபனான், டுனீசியா ஆகிய நாடுகளில் போராட்டம்
• காசா மிக மோசமான நிலையில் உள்ளதாக அறிவித்தது யுனிசெப்
• மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம்
நன்றி ஈழநாடு 


 


ஹமாஸ் அமைப்பை நீக்குவதே போரின் இலக்கு – இஸ்ரேல் தெரிவிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த 7ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணயக் கைதிகளாக சிறை பிடித்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

பணயக் கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல் உட்பட ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.

இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் தாக்குதலை அடுத்து பதிலடியாக, 11ஆவது நாளாக வான், தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் பாதுகாப்பு படையும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலின்போது, காசா முனையில் வன்முறை தொடராமல் அதனை தடுக்கும் வகையில் புட்டின் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமரும் பல்வேறு தலைவர்கள் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகளுடன் பேசி வருகிறார். எகிப்து, ஈரான், சிரியா மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களுடன் நெதன்யாகு இன்று தொலைபேசி வழியே தொடர்புகொண்டு பேசிய அத்தியாவசிய விடயங்கள் பற்றி அதிபர் புட்டினிடம் தெரிவிக்கப்பட்டது என ரஷ்யா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இஸ்ரேல் நாட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் புட்டின் இரங்கல்களை தெரிவித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திற்கான இலக்குகளை கொண்ட நடவடிக்கையை தொடர ரஷியா விரும்புகிறது என நெதன்யாகுவிடம் புட்டின் வெளிப்படுத்தியதுடன், அரசியல் மற்றும் தூதரக அளவிலான அமைதியான தீர்வை அடைய வேண்டும் என்றும் புட்டின் தெரிவித்துள்ளார் என தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

எனினும், காசா முனை பகுதியில் இராணுவ மற்றும் அரசியல் கட்டுப்பாட்டை கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பை நீக்குவது என்பதே போரின் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது என சமீபத்திய மந்திரி சபை கூட்டம் தெரிவிக்கின்றது.   நன்றி ஈழநாடு 




No comments: