கல்வித் தெய்வமே காட்டுவாய் கருணை !

 

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியாவெள்ளைத் தாமரையில் வீணையுடன் வீற்றிருக்கும்
தெள்ளமுதே சரஸ்வதியே திரும்பிநீ பார்த்திடுவாய்
உள்ளிருக்கும் கசடனைத்தும் உருவழிய வைத்திடுவாய் 
வல்லமையே சரஸ்வதியே வணங்குகிறேன் வரமருள்வாய்

ஏட்டிலும் இருப்பாய் பாட்டிலும் இருப்பாய் 
மீட்டிடும் வீணை ஒலியிலும் இருப்பாய் 
கேட்டிடும் குரல்கள் அனைத்திலும் இருப்பாய்
கேட்கிறேன் கல்வியைத் தந்திடு தாயே 

வீரமொடு செல்வம் வந்தாலும் அம்மா 
வெற்றியினை அடைய கல்வியது வேண்டும்
ஆற்றலுடை கல்வியினை அளித்து  விடுதாயே
அனுதின முன்னைப் பணிகிறேன் அம்மா 

சென்றிடு மிடமெல்லாம் சிறப்படைய வேண்டின்
சீரான கல்விதான் துணையாகும் அம்மா
நன்றாகப் படிப்பதற்கு நற்கருணை காட்டு
நாமகளே நாளுமே பணிகிறேன் அம்மா 

கற்றவர் அவையில் ஏறிட வேண்டும்
கற்றவர் துணையாய் ஆகிட வேண்டும்
கசடறக் கல்வியைக் கற்றிட வேண்டும்
கல்வித் தெய்வமே காட்டுவாய் கருணை 


No comments: