தன்னார்வத் தொண்டர் இன்பரூபனின் வாழ்வும் பணிகளும் முருகபூபதி ( அண்மையில் வடமராட்சியில் நடந்த இன்பரூபனின் மணிவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இடம்பெற்ற ஆக்கம் )


தினமும் வடமராட்சியிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்து, அரியாலை கண்டி வீதியில் அமைந்திருக்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனைக்குள் பிரவேசித்து, தனக்குரிய கடமைகளை படிப்படியாக நிறைவேற்றியவாறு, குறித்த பணிகள் தொடர்பாக வெளிக்கள வேலைத் திட்டங்களுக்கும் சென்று, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து பயணக்களைப்பு முகத்தில் தோன்றாமலிருக்க அனைவருடனும் புன்சிரிப்போடு உரையாடிவிட்டு, மாலையானதும் காலையில் புறப்பட்டு வந்த திசைநோக்கி, மீண்டும் சென்று, இரவுப்பொழுதில் வீடடைந்து, குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கும்  ஒருவருக்கு சேவை நலன் பாராட்டு விழா என அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

எமக்கு இறைவன் இரண்டு கரங்களை தந்திருக்கிறார். அதில் ஒன்று எமக்கு. மற்றது, ஏனையவர்களுக்கு என்பது வாழ்வியல் தத்துவம். இந்த தத்துவத்தை கடைப்பிடிப்பவர்கள் எவராயினும் அவர்கள் எமது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களே.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக நாம் இயக்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் தொடர்பாளர் நிறுவனமாக செயற்பட்டுவரும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் இம்மாவட்டங்களில் நடத்தப்பட்டுவரும் தகவல் அமர்வு – மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில்  நான் சந்தித்த சுறுசுறுப்பான அன்பர்தான் இன்பரூபன்.

அவரது பெற்றோர்கள் இவருக்கு மிகவும் பொருத்தமாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று நான் எண்ணுவதுண்டு.

இன்முகத்துடன் அனைவருடனும் உறவாடும், இவர் இருக்குமிடம் கலகலப்பாகவும் இருக்கும். சுவாரஸ்யமாகப்பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்துவார்.

இந்த இயல்புகள்தான் எம்மையும் இவருடன் நெருங்கச்செய்திருக்கிறது.

இலங்கையில் பல வருடகாலமாக நீடித்த உள்நாட்டுப்போரினால்


பெற்றவர்களை இழந்து நிர்க்கதியாகி, வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்ட தமிழ் மாணவர்களின் நலன் கருதி நாம் 1988 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை, இங்குள்ள மனிதநேயமும் கருணை உள்ளமும் கொண்ட அன்பர்களின் ஆதரவுடன் உருவாக்கினோம்.

இந்நிறுவனத்தின்  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் தொடர்பாளர் அமைப்பாக இயங்கிவரும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் அன்பர் திரு. இன்பரூபன் அவர்கள், 1997 ஆம் ஆண்டு தொடக்கம் இணைந்து இயங்கிவருகின்றார்.


இந்த நிறுவனத்தின் இயக்குநர் சபை உறுப்பினராகவும் திகழ்ந்திருக்கும் இன்பரூபன், இவரைப் போன்றே தன்னார்வப்பணிகளில் ஆர்வம் மிக்க அன்பர் சொக்கநாதன் யோகநாதன் அவர்களை குறித்த அபிவிருத்தி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்க முன்னின்று பரிந்துரை செய்திருக்கிறார்.

அன்பர் சொக்கநாதன் யோகநாதன்  கொவிட் பெருந்தொற்றினால் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் என்ற துயரமான செய்தியையும் நாம் கடந்து வந்திருக்கின்றோம்.

அமரர் சொக்கநாதன் யோகநாதனுக்காக மெய்நிகரில் ( Zoom ) ஒழுங்கு செய்யப்பட்ட இரங்கல் கூட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் இன்பரூபனின் பங்களிப்பு விதந்து கூறப்படவேண்டியது.

யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் உட்பட பல துறைகளில் சேவையாற்றி வருகிறது. இந்தப்பணிகளிலெல்லாம் அன்பர் இன்பரூபன் செயலூக்கமுள்ள தொண்டராக இயங்கி வருகிறார்.

எமது கல்வி நிதியம் வடக்கில் யாழ். சிறுவர் அபிவிருத்தி


நிலையத்தின் ஊடாகவே  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதிக்கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது.  இது தொடர்பான அமர்வுகள் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் வருடாந்தம் நடக்கும் வேளைகளில் இன்பரூபனும் அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

இதற்கான பயணங்களில் நாம் ஈடுபடும்போது, எமது பயணக்களைப்பினை போக்குவதற்கு இன்பரூபன் இன்ப அதிர்ச்சியூட்டும் செய்திகளைச்  சொல்லி எம்மை உற்சாகப்படுத்துவது வழக்கம்.

 “ வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்   என்பார்கள்.  இன்பரூபனுடன் பயணித்துப்பாருங்கள். இந்த உண்மை புலனாகும்.

2016 ஆம் ஆண்டு முதல், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் திட்ட முகாமையாளராக இயங்கிவரும் இன்பரூபன் அவர்கள்,  முன்மொழிந்திருக்கும் சில ஆக்கபூர்வமான திட்டங்கள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஆளுமைப்பண்புகளுடன் அயர்ச்சியின்றி இயங்கிவரும் திரு. இன்பரூபன் அவர்களுக்கு அவரது ஊர் மக்கள் விழா எடுத்து பெருமைப்படுத்துவதையிட்டு, தொலைவிலிருந்து மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றோம்.

சமூகத்திற்காக பேசுபவர்களும் சமூகத்தை பேசவைப்பவர்களும் தன்னார்வத்தொண்டர்களே. அந்த வகையில் தனது வாழ்நாளை அர்த்தமுடன் செலவிடும் அன்பர் இன்பரூபன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

------00------

letchumananm@gmail.com

No comments: