இலங்கைச் செய்திகள்

அரசியலமைப்புக்கமைய அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து போராட்டம் 

பலஸ்தீன தூதுவரிடம் தமது கவலையை வெளியிட்ட ரிஷாட் எம். பி

இலங்கையின் கடன் மீட்சிக்காக உகந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் – சீன நிதி அமைச்சர் தெரிவிப்பு

அஜித் மான்னப்பெரும எம்பிக்கு 4 வார பாராளுமன்ற தடை

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளம் அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயல்

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை அகற்ற கோரி முறைப்பாடு


அரசியலமைப்புக்கமைய அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

- பின் பாராளுமன்றத் தேர்தல்; 2025 முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

October 22, 2023 10:13 am 

– இலங்கையை ஸ்மார்ட் நாடாகக் கட்டியெழுப்புவதே நோக்கம்
– ஸ்மார்ட் நாட்டிற்கான ஸ்மார்ட் கட்சியாக ஐ.தே.க. வை கட்டியெழுப்புவோம்

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்மார்ட் நாடு – 2048ஐ வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், திருத்தப்பட்ட கட்சியின் புதிய யாப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒன்லைன் மூலம் அமைப்புக்களை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் நாட்டிற்கு முன், ஐக்கிய தேசியக் கட்சி ஸ்மார்ட் கட்சியாக கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“என்னில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற குறியீட்டை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “சிய ரத” வின் பழைய இதழ் ஒன்று அதன் ஸ்தாபகரான திருமதி மாயா களுபோவிலவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப சகல துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்காக அரச நிறுவனங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஊழலைக் கட்டுப்படுத்த பல கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டுக்காக பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு ஸ்மார்ட் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, பிரதித் தலைவர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

பௌத்த பிக்குகள் தலைமையிலான மதகுருமார்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட பிரமுகர்கள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான கட்சி உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து போராட்டம் 

October 19, 2023 1:34 pm 

யாழில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (19) மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“IMF மரணப் பொறியை தோற்கடிப்போம்”, “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம் - நன்றி தினகரன் 
பலஸ்தீன தூதுவரிடம் தமது கவலையை வெளியிட்ட ரிஷாட் எம். பி

- ஏ.எச்.எம். பௌசி மற்றும் அப்துல் ஹலீம் எம்.பிக்களும் பங்கேற்பு

October 19, 2023 6:04 pm 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச். டார் செயிட்டை இன்றையதினம் (19) சந்தித்துக் கலந்துரையாடினார்.

எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் இதன்போது அவர் தெரிவித்தார்.

போர் விதிகளை மீறி இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள வான் தாக்குதல்களை கண்டிப்பதுடன், முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும் என்றும் பலஸ்தீனத் தூதுவரிடம் அவர் மேலும் குறிப்பிட்டதுடன், உயிரிழந்வர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் குற்றுயிராகக் கதறும் சகோதரர்களுக்காகப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, அப்துல் ஹலீம் ஆகியோரும் பங்கேற்றிருந்ததோடு அவர்களும் இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


இலங்கையின் கடன் மீட்சிக்காக உகந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் – சீன நிதி அமைச்சர் தெரிவிப்பு

October 19, 2023 4:24 pm 

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார்.

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) காலை பீஜிங்கில் இடம்பெற்றதோடு இதன் போதே சீன நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கடியை சமாளிக்க இதுவரை இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் வரவேற்றார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து பூரண ஆதரவை வழங்கும் எனவும் சீன நிதி அமைச்சர் உறுதியளித்தார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதாகவும் சீன நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சவாலான பணியில் இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 

அஜித் மான்னப்பெரும எம்பிக்கு 4 வார பாராளுமன்ற தடை

October 19, 2023 11:36 am 

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு, இன்று (19) முதல் 4 வார காலத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இடைநிறுத்தப்படுவதாக, சபாநாயகர் அறிவித்துள்ளார்.

வாய்மூல கேள்விக்கான பதில் வழங்கும் நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் எதிர்க்கட்சி எம்.பி. அஜித் மான்னப்பெருமவினால் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளிக்காது, அதனை அவையில் சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.

மு.ப. 10.30 இற்கு வாய்மூல கேள்விகளுக்கான நேரம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்து அதனை ஆட்சேபித்திருந்தார். ஆயினும் அதனை வாய்மூலம் தெரிவிக்குமாறு எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும அவையில் செங்கோலை எடுக்கச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற அவை அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு, இன்று (19) முதல் 4 வார காலத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இடைநிறுத்தப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.   நன்றி தினகரன் 

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளம் அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயல்

October 19, 2023 6:00 am 

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ் உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் “இனத்தைக் குறிப்பிடும் போது இந்திய தமிழ் / சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்/ சோனகர் எனப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்”

எனும் தலைப்பின்கீழ் பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் தொடர்பிலே, அமைச்சர் தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தாக ஜனாதிபதி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான, பிரதமர் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

” பதிவாளர் நாயகத்தின் யோசனையுடன் நாம் உடன்படவில்லை. எமது மக்களுக்கு 200 வருடகால அடையாளம் உள்ளது. 200 ஆவது வருடத்தில் எமது அடையாளத்தை அழிப்பதற்கு முற்படுகின்றனர். இதனை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற முற்படுவோம்.

எமது மக்கள் போரிடவும் இல்லை, தனி நாடு கோரவும் இல்லை. தனி அடையாளத்தைதான் கோருகின்றனர். அதனையும் அழிக்க முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. இலங்கை தமிழர் என பதிவு செய்தால் அது பெரும் அநீதியாக அமைந்துவிடும். முப்பது வருடங்கள் பிரஜா உரிமை இல்லாமல் வாழ்ந்தோம், எமது தொழிலாளர்கள் அடிமைகள்போல் வழிநடத்தப்படுகின்றனர், தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான நகர்வுகளும் இல்லை. எமக்கு எமது அடையாளம் வேண்டும். எனவே, மேற்படி இந்த யோசனையை ஆதரிக்க முடியாது. அதனை எதிர்ப்போம்.” – என்றார்.   நன்றி தினகரன் 
யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை அகற்ற கோரி முறைப்பாடு

October 18, 2023 7:50 am 

யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு பொதுமகன்கள் ஆகியோர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, தூபியை அமைக்க பெறப்பட்ட, செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள், தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களுடன் நாளைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இரவு இடித்து அழிக்கப்பட்டது.

அதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் 10ஆம் திகதி துணைவேந்தர் சிறிசற்குணராஜாவினால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய தூபி நிர்மாணிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து வருடந்தோறும், ‘மே 18’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் இப்பகுதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தூபிக்கு உரிய அனுமதிகள் பெறப்படவில்லை என்றும், அவ்வாறு அனுமதி பெறப்படாத தூபியை உடைத்து அகற்றுமாறும் கோரியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.   நன்றி தினகரன் 
No comments: