வானொலி மாமா நா மகேசன் அவர்களுக்கு தமிழ்முரசுஆஸ்திரேலியாவின் அஞ்சலிப் பூக்கள் - செ .பாஸ்கரன்

 .

மகேசன் மாமாவுடன் 2019ம் ஆண்டு 
“வானொலி மாமா” மகேசன் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து விட்டார்.
1965 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “சிறுவர் மலர்” நிகழ்ச்சிமூலம் “வானொலி மாமா” ஆகி இறுதிவரை வானொலி மாமா என்றே பயணித்தவர் 22 ஜூன் 2023 ல் எம்மை விட்டு பிரிந்து விடடார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் முழக்கம், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல்லாண்டு காலம் தமிழ்ச் சமூகத்துக்குச் சேவையாற்றியவர்.
நிகழ்ச்சி தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக, விமர்சகராக, நேர்முக வர்ணனையாளராக, சமய துறை வல்லுனராக, நாடக நெறியாளராக, இலக்கிய வாதியாக பல் துறையிலும் வானொலியில் பணிபுரிந்தவர்.

புதியவர்களை ஊக்குவிப்பதும் தட்டிக்கொடுப்பதும் இவர் இயல்பாகும். சிரித்தவண்ணம் எல்லோருடனும் அன்பாக பழக்க தெரிந்தவர்.
குழந்தைகளுக்கு தமிழையும் சமயத்தையும் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் நூல்களும், நாடகங்களுமாகப் படைத்தவர். குறிப்பாக ஆத்திசூடி அற நெறிக் கதைகள், அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி, பாலர் நாடகங்கள் பத்து, நாடகக் கவியரங்கு நான்கு, ஒளவை வந்தால் உள்ளிட்ட ஏராளம் சிறுவர் இலக்கியங்கள் படைத்தவர்.

தமிழ் பாடசாலைகளிலும் சைவ பாடசாலை களிலும் சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர்.
சைவ இறுதிச் சடங்கு பலவற்றை நடத்தியதோடு சைவ இறுதிச் சடங்கு- நடைமுறையும் விளக்கமும், சிட்னி முருகன் பிள்ளைத் தமிழ், ஆறுமுகமான பொருள், திருமுறையும் திருக்கதையும் என்று பல்வேறு நூல்களையம் சிறுவர்களுக்கான கவிதைகள் , நாடக நூல்களையும் தந்திருக்கின்றார்.


அவரோடு சேர்ந்து சிட்னி முருகன் தேர்த்திருவிழாவை நேரடி ஒலிபரப்பு செய்ததும்,
கவியரங்குகளில் பங்கு கொண்டதும், தமிழ் அறிவுப் போட்டிகளின்போது நடுவர்களாக இருந்ததும் மறக்க முடியாதவைகள்.
அவரோடு சேர்ந்திருந்த காலங்கள் பொன்னானவை, அவர் நினைவுகள் என்றென்றும் என்னோடும், தமிழ்ச் சமூகத்தோடும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

மனிதன் பிறக்கின்றான் இறக்கின்றான், ஒரு சிலர் மட்டுமே இறந்தும் இறவாமல் வாழ்வார்கள் வானொலிமாமா நா .மகேசனும் வாழ்ந்துகொண்டடே இருப்பார்.

செ .பாஸ்கரன்
25.06.2023

No comments: