எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 69 பதினைந்து நாட்களில் பல்வேறு சந்திப்புகள் ! சரியான திட்டமிடலின் மூலம் நிகழ்ச்சிகளை சாத்தியமாக்கலாம் ! ! முருகபூபதி

 


கனடாவிலிருந்த இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புகளை  குறுகிய காலத்திற்குள் நடத்தவேண்டியிருந்தது. ஜூன் மாதம் 15 ஆம் திகதி அதிகாலையே  டொரன்டோவை விட்டு புறப்படவேண்டியிருந்தமையால்,  சந்திப்புகளுக்கான நாளை குறிப்பதில் கவனம் செலுத்தினேன்.

கனடாவுக்கு வந்திறங்கிய மறுநாள்  என்னைப்பார்க்க இலக்கிய ஆர்வலர் மைதிலி தனது கணவர் தயாநிதியுடன் வந்துவிட்டார்.

அவரை அன்றுதான் முதல் முதலில் நேருக்கு நேர் சந்திக்கின்றேன்.  இறுதியாக வெளியான எனது கதைத் தொகுப்பின் கதை நூல் பற்றி ஒரு மெய்நிகர் கலந்துரையாடலில் மைதிலி சிறந்த திறனாய்வைச் செய்திருப்பவர்.

எம்மை கனடாவுக்கு அழைத்த நண்பர் முத்துலிங்கம் ஜூன் 08 ஆம் திகதி, ஷேக்ஸ்பியரின் நாடகத்திற்கு அழைத்துச்செல்லுவதற்கான ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.

அந்த ஷேக்ஸ்பியர் நாடக அரங்கம் ஸ்காபரோவிலிருந்து இரண்டு மணி நேரப்பயணத் தூரத்திலிருந்தது.

நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கச் செல்வதற்காக எனது உடன்பிறவாத தங்கை செல்வநளினி ராஜன் நாள் குறித்திருந்தார்.

நண்பர் பதிவுகள் கிரிதரன் தனது சில நண்பர்களுடன் ஒரு உணவு விடுதியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் காலம் செல்வம், நாடகக் கலைஞர் ஜயகரன் ஆகியோருடன் இணைந்து தேடகம் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் சாம்ராஜுக்கும் எனக்குமான சந்திப்பு கூட்டத்தையும் ஒழுங்குசெய்திருந்தார்.

வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் அலுவலக


நிருபராகவும், கனடாவுக்கு வந்த பின்னர் தமிழர் செந்தாமரை பத்திரிகையை ஆரம்பித்தவருமான நண்பர் அரசரத்தினத்தின் மனைவி ராஜி, தமது தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலுக்கு நாள் குறித்திருந்தார். கனடா மூர்த்தி அந்த நேர்காணலை செய்யவிருந்தார்.

ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் இரண்டு வானெலிகளில் நேரடி ஒலிபரப்பில் நேர்காணல்களை ஏற்பாடு செய்திருந்தார்.

இவை தவிர மற்றும் சில இலக்கிய நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்களையும் அவர்களின் வீடு தேடிச்சென்று பார்க்கவேண்டியிருந்தது.


அனைத்தையும் ஒவ்வொன்றாக முடிக்கவேண்டுமாயின் நிகழ்ச்சித் திட்டமிடல் அவசியம்.  கனடாவுக்கு வந்து, அவுஸ்திரேலியாவுக்கு திரும்பும் வழியில் முதலில் கத்தாருக்கும், அதன்பின்னர் இலங்கைக்கும் செல்லும்வகையில் எனது பயண நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

நண்பர் பதிவுகள் கிரிதரன், நான் தங்கியிருந்த தங்கை செல்வமணி ராஜதுரையின் இல்லம் வந்து என்னை அழைத்துக்கொண்டு ஒரு உணவு விடுதிக்குச்சென்றார்.  அவருடன் வந்தவர் எழுத்தாளர் கடல்புத்திரன். இவரது எழுத்துக்களை பதிவுகளில் படித்திருக்கின்றேன்.

இவர் தனது உடன்பிறந்த தம்பி என்று கிரிதரன் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த உணவு விடுதியில் எழுத்தாளர்கள் தேவகாந்தனையும், எல்லாளனையும் சந்தித்தேன்.

தேவகாந்தனுடன் அதற்கு முன்னர் ஒரே ஒரு தடவைதான் தொலைபேசியில் பேசியிருந்தாலும், அவரது படைப்புகளை படித்திருக்கின்றேன்.  எம்மத்தியிலிருக்கும் சிறந்த படைப்பாளி.  அவருடன் அந்த முதல் தொலைபேசி உரையாடல் இலக்கியம் சார்ந்து அமைந்திருக்கவில்லை எனச்சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் அவரது மகள் சென்னையில் திடீரென மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து, அவருக்கு ஆறுதல் சொல்வதற்காக தொலைபேசி இலக்கம் தேடிப்பெற்று தொடர்புகொண்டிருந்தேன்.

மகளை இழந்த தீராத சோகத்திலிருந்தபோது அவருடன் பல வருடங்களுக்கு முன்னர் பேசியிருந்தேன்.  அதன்பிறகு இந்த அவசர யுகத்தில் அவருடன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனக்கு வழங்கியிருந்தது.

கிரிதரன் இச்சந்திப்பு குறித்து தனது பதிவுகள் இணைய இதழில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்:

கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதியுடன்  5


Spice உணவகத்தில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோருடன் சந்தித்தோம். 

 எழுத்தாளர் முருகபூபதி  குறிப்பாகப் போர்க்காலச்சுழலில்  தன் ஊடகத்துறை அனுபவங்களை, எதிர்கொண்ட பிரச்சினைகளையெல்லாம் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

கதை, கட்டுரை, நாவல் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துகள் என இவரது இலக்கியக் களம் பரந்தது. இவர் சமூகச் செயற்பாட்டாளரும் கூட. கடந்த 35 வருடங்களாக இவர் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற  அமைப்பின் மூலம் இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதி மாணவர்களுக்கு ஆற்றும் சேவையினைப் பற்றியும் எமக்கு விளங்கப்படுத்தினார். 

இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவரது தலைமையில் இயங்கும் இலங்கை  மாணவர் கல்வி நிதியம்  மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பது உண்மையிலேயே  பிரமிக்கத்தக்கது.

சந்திப்பின்போது முருகபூபதி அவர்கள் தனது நூல்களான இலங்கையில் பாரதி, சினிமா:  பார்த்ததும் கேட்டதும், கதைத்தொகுப்பின் கதை ஆகிய நூல்களை எனக்குத் தந்தார். நானும் பதிலுக்கு எனது கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், அமெரிக்கா (திருத்திய இரண்டாம் பதிப்பு) ஆகியவற்றை அவருக்கு வழங்கினேன்.

“ பூரணி  “ என். கே. மகாலிங்கம் தம்பதியரின் உபசரிப்பு

இலங்கையில் நான் வாழ்ந்த காலத்தில் எனது அன்பிற்கும் அபிமானத்திற்குமுரியவர்களாகத் திகழ்ந்த பூரணி என். கே. மகாலிங்கம் தம்பதியர்,  என்னை ஸ்காபரோவிலிருக்கும் தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்தனர்.

எனது இரண்டாவது சிறுகதை  “ அந்தப்பிறவிகள்    பூரணியில் 1972 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வெளியானது.  அன்றுமுதல்  அவர்களுடனான எனது உறவு வளர்ந்து நீடித்திருந்தது.

இம்முறை இந்த தம்பதியரை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஜூன் மாதம் 04 ஆம் திகதி நடந்த இயல்விருது விழாவில் சந்தித்தபோது,   “ அவசியம் வீட்டுக்கு வரவேண்டும்  “ என்று திருமதி மகாலிங்கம்  சொன்னார்.

நண்பர் மகாலிங்கம் வந்து என்னை அழைத்துச்சென்றார்.

தம்பதியர் எனக்கு பரிசுப்பொருட்களும் தந்து நெகிழவைத்தனர்.  திருமதி மகாலிங்கம்,  நாம் நடத்திவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காக கணிசமான நன்கொடையும் தந்தார்.

   உங்கள் உதவி உரியமுறையில் எமது இலங்கை  மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும்.    என்று உறுதி கூறினேன்.

ஜூன் 10 ஆம் திகதி பூரணி மகாலிங்கம் தம்பதியரின் வீட்டில் மதிய உணவருந்திய பின்னர், அவரே நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்புக்கும் அழைத்துச்சென்றார்.

நாடகக்கலைஞர் ஜயகரன் என்னை வரவேற்று அறிமுகப்படுத்திப்பேசியதையடுத்து, எனது இலக்கிய – ஊடகத்துறை அனுபவங்களை வந்திருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இச்சந்திப்பிலும் பலரை சந்திக்க முடிந்தது.

எனது முப்பதாவது நூல்  சினிமா: பார்த்ததும் கேட்டதும் பிரதிகளை சிலர் பெற்றுக்கொண்டனர்.

சபையிலிருந்து எழுந்த கேள்விகளுக்கும் பதில் வழங்கினேன்.

எனது உரையையடுத்து தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர்  சாம்ராஜை காலம் செல்வம் அறிமுகப்படுத்தியதையடுத்து, சாம்ராஜும் உரையாற்றினார்.

எமது உரைகள் காணொளியில் பதிவு செய்யப்பட்டன.  அத்துடன் அன்றைய தினமே முகநூல்களிலும் பதிவேற்றம் கண்டதாக அறிந்துகொண்டேன்.

அதனைப் பார்த்தவர்கள் எத்தகைய எதிர்வினைகளை ஆற்றியிருந்தனர் என்பது தெரியாது.

எனது உரையின் இறுதியில் என்னிடம் முகவரிதான் உண்டு முகநூல் கணக்கு இல்லை என்பதை சொல்லியிருந்தேன்.

நண்பர் பூரணி மகாலிங்கம், எனது உடல் நலனிலும் மிகுந்த அக்கறைகொண்டவர்.

நான் உரியநேரத்தில் இன்சுலின் ஊசியை ஏற்றிக்கொண்டு இரவு உணவை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அவசரப்படுத்தி,  அழைத்துக்கொண்டு, மீண்டும் தமது இல்லம் விரைந்தார்.

எனது வாழ்க்கைப்பாதையில் இத்தகைய உன்னத நண்பர்களையும் பெற்றிருக்கும்  நான் பாக்கியசாலிதான்.

குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பிற்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் நண்பர் குரு அரவிந்தனும், எனது உரையை செவிமடுத்துவிட்டு,  எமது கல்வி நிதியத்திற்கு நன்கொடை வழங்கினார்.

அவரது நன்கொடையும் உரிய முறையில் எமது மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அவரிடம் சொன்னேன்.

( தொடரும் )

No comments: