இலங்கைச் செய்திகள்

 யாழ். புளி வாழைப்பழம் வாரம் ஒருமுறை துபாய்க்கு

வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்

இரண்டாவது ஓடுதளத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பம்

பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு முதல் ஜப்பானிய மொழி

நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இலங்கை நடவடிக்கை


யாழ். புளி வாழைப்பழம் வாரம் ஒருமுறை துபாய்க்கு

யாழ். விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர் சம்பாதிப்பு

யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளி வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள்

தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் மூன்று வருடங்களில் வருமானத்தை ஐந்து இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன குறிப்பிடுகின்றார்.வடமாகாணத்தில் 8000 ஏக்கர் காணிகளை இனங்கண்டு இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடமிருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாம்பழம், பப்பாளி, பாசிப்பழம் போன்றவற்றை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் மிளகாய்த் தேவையை பூர்த்தி செய்ய 1000 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.   நன்றி தினகரன் 





வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்

கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்கிறார் வடக்கு ஆளுநர் வவுனியா விசேட, ஓமந்தை விசேட நிருபர்கள்

வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு (21) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது, வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகாவித்தியாலத்துக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாகும். வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டுள்ளன . இதற்கு காரணம் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும். இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமையும் ஒன்று. முதலாம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டம் காணப்படுகிறது.இதுவும் பாரிய பிரச்சினை என, பிரதேச செயலாளர்கள் அப்போது தெரிவித்தனர்.

எனவே, இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழும் சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் வாழ வைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். சமூகத்தை வாழவைக்கும் வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இதேவேளை, சில விடயங்களின் புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக விவாகரத்து அதிகரித்தல், குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, போன்ற பல்வேறு சமூக பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறையவே இருக்கின்றன.இதை, இங்கே கூடியுள்ள புலம்பெயர் சமூகங்களும், உள்ளூர் சமூகங்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.  நன்றி தினகரன் 





இரண்டாவது ஓடுதளத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பம்

பணிகளை துரித கதியில் பூர்த்திசெய்ய அரசு நடவடிக்கை

கடன் மீள் கட்டமைப்பு பயன் கிடைப்பதற்கு முன் விமான நிலைய, விமான சேவைகள் நிறுவனங்களின் நிதியை பயன்படுத்தவும் தீர்மானம்

இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. நாடு பொருளாதார ரீதியாக  வங்குரோத்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், ஜப்பான் ஜெய்கா நிறுவனத்தால் இந்த இரண்டாவது ஓடுதளத்தை நிர்மாணிக்க வழங்கப்பட்ட கடன் நிறுத்தப்பட்டன.இதனால், நிர்மாணப்பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில்,சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மீள் கட்டமைப்பு தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தி வருவதால்,இதன் பயன் கிடைக்கும் வரை காத்திருக்காது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தி இரண்டாவது ஓடுதளத்தின் அத்தியாவசிய நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் நிர்மாண நடவடிக்கைகளை ஜப்பான் விமான நிலைய ஆலோசனை நிறுவனத்தின் (JAC) மேற்பார்வையின் கீழ் இலங்கை எக்சஸ் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக துறைமுக, கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்நடவடிக்கைக்காக 500 மில்லியன் ரூபா விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தால் செலவிடப்படவுள்ளது. நிர்மாண பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் துறைமுக, கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சின் செயலாளர் கே.டி. எஸ் ருவன்சந்திர, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மற்றும் நிர்மாண ஆலோசனை நிறுவன அதிகாரிகள் மற்றும் நிர்மாண நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.   நன்றி தினகரன் 





பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு முதல் ஜப்பானிய மொழி

ஜப்பானிய தொழில்சந்தை இலக்கு;

அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது - மனுஷ

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை ஆற்றிய அமைச்சர், அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

நன்றி தினகரன் 




நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இலங்கை நடவடிக்கை

ஐ.நா பேரவையில் ஜெனீவா பிரதிநிதி ஹிமாலி சுட்டிக்காட்டு

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை கூடிய மூன்றாம் நாள் அமர்வில்

இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு (ஜெனிவா நேரப்படி பி.ப 3.00 மணி) மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வாய்மொழிமூல அறிக்கையை வாசித்தார்.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையிலும் பதில் உரையாற்றியபோதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கை தீவிர சமூக, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டமை உள்ளடங்கலாக பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தமிழ் அரசியல் தரப்பினருடன் நடாத்தப்பட்ட சந்திப்பு குறித்தும், அதன்போது காணி விடுவிப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசியல்கைதிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை பற்றியும் பேரவையில் பிரஸ்தாபித்த ஹிமாலி அருணதிலக, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்தில் இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கென விசேட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், படையினர் வசமிருந்த 92 சதவீத தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





No comments: