Tuesday, June 20, 2023 - 11:42am
பரிசுத்த பாப்பரசர் தினம் எதிர்வரும் 25ஆம் திகதி சிறப்பிக்கப்படுகிறது.
திருச்சபையின் தலைவரான தற்போதைய பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர்.
உலக மக்களை நேசிப்பவர். அனைத்து மதங்களுடனும் ஒப்புரவுடன் பழகுபவர். நாடுகளுக்கு இடையிலான சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என அவரது சிறப்பை பலவிதமாக குறிப்பிட முடியும்.
திருத்தந்தை பிரான்ஸிசின் இயற்பெயர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட இவர் அமெரிக்க கண்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது பாப்பரசராவார்.
ஆர்ஜென்டினாவின் புவனோஸ் ஐரோஸ் நகரில் 1936ஆம் ஆண்டு மார்கழி மாதம்17ஆம் திகதி அவர் பிறந்தார். ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும். புனித பிரான்ஸிஸ் அசிசியின் பெயரையே இவர் தெரிவு செய்துகொண்டமை அவரது தாழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
பாப்பரசராக தெரிவு செய்வதற்கு முன்னர் பெர்க்கோலியோ புவனஸ் ஐரேஸின் பேராயராக 1998 முதல் 2013ஆம் ஆண்டு வரை அவர் கடமையாற்றினார். 2001ஆம் ஆண்டு தொடக்கம் கர்தினாலாக 13 ஆண்டுகள் கடமையாற்றிய அவர் ஆர்ஜென்டீனாவின் ஆயர்கள் மாநாட்டின் தலைவராகவும் 2005ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
பாப்பரசராக பதவியேற்ற பின்னர் திருத்தந்தையின் முதல் சர்வதேசப் பயணம் அவரது அண்டை நாடான பிரேசிலை நோக்கியதாக இருந்தது. 2013ஆம் ஆண்டு ஆடி மாதம் அவர் இப்பயணத்தை மேற்கொண்டார்.
அவ்வாண்டே மார்கழி மாதம் 2013ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த நபர் என்ற விருதை வழங்கி டைம்ஸ் சஞ்சிகை அவரைக் கௌரவித்தது.
இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள தூதரின் நகரிலிருந்து தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் சென்று குடியேறிய மாரியோ ஹோசே - ரெஜினா மரியா தம்பதிகளுக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்த ஜோர்ஜ் மாரியோ பெர்கோக்லியோ தமது ஆரம்பக் கல்வியை அரச பாடசாலையில் பயின்றார். அவரது தந்தை போக்குவரத்துத்துறையில் பணியாற்றினார்.
20 வயது இளைஞராக இருந்தபோது ஏற்பட்ட கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டமையினால் அவரது நுரையீரலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. பாடசாலை கல்வியின் பின்னர் புவனேஸ் ஐரேஸ் பல்கலைகழகத்தில் உயர்கல்விக்காக இணைந்துக்கொண்ட அவர் வேதியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் இணைந்து கொண்டார்.
தத்துவக் கல்வியையும் இறையியலையும் புனித மிக்கேல் கல்லூரியில் கற்ற அவர், தத்துவத்தில் இளமானிப் பட்டம் பெற்று பின்னர் ஜெர்மனியின் பிரைபேர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் முதுமாணிப் பட்டம் பெற்றார்.
1969ஆம் ஆண்டு மார்கழி மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட திருத்தந்தை இயேசு சபையின் ஆர்ஜென்டீனா மாகாணத்தின் தலைவராக 1973ஆம் ஆண்டு பதவியேற்றார். தாம் கல்வி கற்ற புனித மிக்கேல் குருத்துவ கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பீடத்தில் தலைமைப் பொறுப்பேற்றார். இவர் 1980 முதல் 1986ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். மேலும் அக்கலூரியின் பேராசிரியராகவும் அவர் பணியாற்றினார்.
1992ஆம் ஆண்டு ஆனி மாதம் 27ஆம் திகதி பெர்கோக்கிலியோ- புவனேஸ் ஐரேஸ் உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1998ஆம் ஆண்டு மாசி மாதம் 28ஆம் திகதி அந்நகரின் பேராயராக உயர்த்தப்பட்டார். அதேநேரம்- அவர் ஆர்ஜென்டீனாவின் தனி அமைப்பு அல்லாத கீழைச்சபை கத்தோலிக்கர்களுக்கும் ஆயராக நியமிக்கப்பட்டார்.
மூன்றாண்டுகளின் பின்னர் 2001ஆம் ஆண்டு 2001ஆம் ஆண்டு மாசி மாதம் 21ஆம் திகதி இரண்டாம் அருள் சின்னப்பர் திருத்தந்தையினால் கர்தினால் கர்தினால் பதவி வழங்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் ஆயர் பேரவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர் 2011ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்.
இரண்டாம் அருள் சின்னப்பர் 2005ஆம் ஆண்டு மறைந்த பின்னர் நடந்த பாப்பரசர் தேர்வில் இரண்டாம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.அப்போது அதிக வாக்குகள் பெற்று தெரிவாகிய ஜோசப் ரட்சிங்கர் திருத்தந்தையாக பதவியேற்றார்.
2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 13ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டபோது அவரது வயது 79 ஆகும். திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது இயேசுசபை துறவியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக அவர் அறிவித்தமை இலங்கை வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும்.
திருத்தந்தை தனது தாய்மொழியான ஸ்பெயின் மொழியுடன் இத்தாலி மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- எல். ஜொனதன் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment