சிட்னியில் சித்திரைத் திருவிழா



பண்டைத் தமிழருக்குச் சித்திரை மாதம் சிறப்பான மாதமாக இருந்தது.  இந்த மாதத்தில் தான் அவர்கள் பெருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருந்தார்கள்.  சிலப்பதிகாரத்தில் சித்திரை மாதத்தில் நடந்த விழாக்களைப் பற்றி இளங்கோ அடிகளார் ஒரு நேர்முக வர்ணனையே தந்திருக்கின்றார். 

சித்திரை மாதப் பிறப்பைப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அவர்கள் கொண்டாடி வந்திருக்கின்றார்கள். 

அந்த வகையில் சிட்னியின் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சித்திரை


மாதத்தில் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவைச் சென்ற பதினொரு ஆண்டுகளாக சிறப்பாக நடாத்தி வருவது மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது.

புலம்பெயர்ந்த எந்தவொரு இனமும் தனது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.  தனது அடையாளத்தை இழந்துவிட்ட இனம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ முடியாமற் போய்விட்டதை உலகெங்கும் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  அப்படி அடையாளத்தைக் காப்பாற்றுவதில் புலம்பெயர்ந்த முதலாவது சந்ததியினருக்குப் பெரும் பொறுப்பு இருக்கின்றது!

இவற்றை எல்லாம் உணர்ந்து ஒரு தொலைநோக்குப் பார்வையோடு சித்திரைத் திருவிழாவைத் தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடாத்தி வருவதைச் சென்ற 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்குச் சென்ற போது கண்டு மகிழ்ந்தோம்.

இந்த விழாவை ஒரு கலை நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல் நாள் முழுவதுமான தமிழர் கொண்டாடமாக, வர்த்தகமும், பிள்ளைகள் விளையாடத் தளமும் சேர்த்து நடாத்தி, நிகழ்ச்சிக்கு வருகின்ற முழுக் குடும்பத்தினருமே பங்கு கொண்டு மகிழ்ச்சி அடையக் கூடிய நிகழ்ச்சியாக இதனை அமைத்திருந்தமை பாராட்டுதற்குரியது.

அது மட்டுமல்ல.  இந்த நிகழ்ச்சிக்குத் தேசிய அமைச்சர், மாநில அமைச்சர், தேசிய, மாநிலப் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மூத்த சமூகத் தலைவர்கள் என்று பலரையும் அழைத்துக் கௌரவித்து அவர்களுக்கு எமது கலை வண்ணத்தைக் காட்டியமையும் சிறப்பாக இருந்தது.   வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல அரசியற் பிரமுகர்களை ஒரே நேரத்தில் வரச்செய்து ஒரே மேடையில் கௌரவித்ததே ஒரு மிகப் பெரிய சாதனை தான்.  அதனைப் பார்த்த எமக்குப் பெரும் பிரமிப்பாகத்தான் இருந்தது!


உள்ளூர் அரசியலோடு நின்று விடாமல், தமிழக அரசையுந் தொடர்பு கொண்டு அவர்கள் சார்பில் பிரபல நடிகரும் தமிழ் நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவருமான கலைமாமணி வாகை சந்திரசேகர் அவர்களையும் அழைத்துப் புலம்பெயர்ந்த தமிழராகிய நாம் இங்கு வாழும் வண்ணத்தையும் அவர்களுக்குக் காட்டியமை பெருஞ் சிறப்பாகும்.

கலை நிகழ்ச்சிகளில் தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் பறை ஒலிப்புக்கும் முக்கிய இடத்தை வழங்கி இருந்தார்கள்.  பறை ஒலித்த குழுவினர் சிட்னியில் வசிப்பவர்கள்.  பல்வேறு தொழில் சார்ந்தவர்கள்.  தமது ஆர்வத்தினால் பறை ஒலிக்கப் பழகி அதனை அருமையாகத் தொய்வு ஏற்படாமல் ஒலித்தார்கள்.

அது தவிரப் பல்வேறு நடனக் குழுவினர்கள் பல்வேறு வகையான நடனங்களை இங்கு வாழ்கின்ற இளைய தலைமுறையினருக்குப் பழக்கி அங்கு மேடையேற்றினார்கள்.  அன்று அங்கே பரத நாட்டியமும் இருந்தது.  டப்பாங் கூத்தும் இருந்தது.  இவையெல்லாம் பல்வேறு இரசனை உடைய மக்களை எல்லாம் மகிழ்விக்கும் நிகழ்ச்சிகளாக அமைந்தன.  இளைய தலைமுறையினரை எமது பண்பாட்டின் வழிசெல்ல ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளாகவும் அமைந்தன!

நிகழ்ச்சியின் உச்சமாகத் தமிழகத்தில் இருந்து வந்த நாட்டுக்கூத்துப் பாடல்


தம்பதியினர் செந்தில் கணேஷ், இராஜலஷ்மி அவர்களின் பாட்டு நிகழ்ச்சி அமைந்தது.  விறுவிறுப்பான இசைக்கு நாட்டுப்புற வரிகளில் அமைந்த பாடல்களை அவர்கள் பாடிய போது அதற்கேற்பப் பலரும் நடனமாடி ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றார்கள்.

வேற்று இனத்தவரை அழைத்து எமது பண்பாட்டை எடுத்துக் காட்டியும் எம்மவர்களை மகிழ்வித்தும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடாத்துவது கயிற்றில் நடப்பது போன்ற சிரமமான பணியாகும்.  அதனைத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தினர் மிகச் சாதுரியமாகவே நடாத்திச் சாதனை படைத்துள்ளார்கள்.


இதற்கெல்லாம் மூலகாரணமாக இருப்பவர் கழகத்தின் தலைவர் திரு அனகன்பாபு அவர்கள்.   எப்போதும் மலர்ந்த முகத்துடனே எவரைக் கண்டாலும் அன்பு பாராட்டிப் பழகுவது அவரது இயல்பு.  பலருக்கும் எதையும் எதிர்பாராது உதவுவதும் அவரது பண்பு.  இவையெல்லாம் தான் மாறுபட்ட அரசியற் கொள்கை உடையவர்களையும் ஒரே மேடையில் ஏற வைத்தது.  பல்வேறு இரசனை உடைய தமிழ் மக்கள் எல்லாரையும் கலந்து கொண்டு மகிழவும் வைத்தது.

அன்றைய நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாகச் சந்திக்காத பல நல்ல நண்பர்களைச் சந்தித்ததும் மேலும் மன மகிழ்ச்சியைத் தந்து இத்தகைய நிகழ்ச்சிகளின் அவசியத்தைக் காட்டியது.

இத்தகைய அருமையானதொரு நிகழ்ச்சியை எல்லோரும் மகிழ்ச்சி அடையக் கூடிய


வகையில் அமைத்துத் திறம்பட நடாத்திய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தினரை உளமாரப் பாராட்டுகின்றோம்.

தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காகப் பலர் பல மாதங்களாக உழைத்து இந்த நிகழ்வை நடாத்தி இருக்கின்றார்கள்.  இனி வரும் ஆண்டுகளில் தமிழ் மக்கள் திரளாக வந்து அரங்கத்தை நிறைத்துத் தம் ஆதரவை வழங்கி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்!

நிகழ்ச்சிக்கு போன போது வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.  நிகழ்ச்சியை விட்டு நாம் புறப்பட்ட போது வானம் வெளித்திருந்தது.   எமது உள்ளமுந்தான்!

 

கவிஞர் த. நந்திவர்மன்

1 comment:

Anonymous said...

The greatest thing is, this festival has been run by a person who is not Tamil who may not have the in depth knowledge of Tamil history, literature and values.