ஆணவம் மிஞ்சினால்…. ! இறுதியில் என்னதான் எஞ்சும்…? அவதானி

 “ நாம் எமது எண்ணங்களை மேம்படுத்தாவிட்டால்,  எமது வாழ்க்கை


முன்னோக்கிச்  செல்லாது. நமது வாழ்க்கையின் அடிப்படை நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது  “ என்ற கூற்றையே  கௌதம புத்தர்,  " நமது எண்ணங்களே நாம் " என்று  இரத்தினச்சுருக்கமாகக்  கூறினார்.

இவ்வாறு சொன்ன புத்தர் பெருமானின் உருவச்சிலையை வைத்துக்கொண்டு இலங்கையில் அரசியல் ஏட்டிக்குப்போட்டியாக நடக்கிறது.

இரண்டு மொழிகளை பிரதானமாகப் பேசும் எமது நாட்டில்  மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள்,  பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யாமல்,  மதத்தை வைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பினர்.

அன்று 1957  இல்  தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக


பண்டாரநாயக்காவும் தந்தை செல்வாவும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியபோது, அதனை எதிர்த்து, களனியிலிருந்து கடும்போக்காளர்களையும் பௌத்த பிக்குகளையும் திரட்டிக்கொண்டு, கண்டி தலதா மாளிகை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டவர் ஜே. ஆர். ஜெயவர்தனா.

அவரது கட்சியினர்,  “ பண்டாரநாயகம் – செல்வநாயகம்… ஐயா… தோசே மசாலவடே  “ என்று பாடிக்கொண்டு ஊர்வலமும் சென்றனர்.

இத்தகைய அழுத்தங்களையடுத்து பண்டாரநாயக்கா,  கடும்போக்காளர்கள், பௌத்த பிக்குகளின் முன்னிலையிலேயே அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார்.

அவ்வாறிருந்தும் அந்த கடும்போக்காளர்கள் மனம் மாறவில்லை. அவர்களின் பிரதிநிதிகளே பண்டாரநாயக்காவை கொலை செய்வதற்கு சதித்திட்டமும்  தீட்டினர்.

இறுதியில் ஒரு பௌத்த பிக்குவான சோமராமதேரோ என்ற பிக்குவால் பண்டாரநாயக்கா சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தச் சதியில் சம்பந்தப்பட்ட  மாப்பிட்டிகம புத்தரகித்த தேரோ, கைதாகி ஆயுள் சிறைத்தண்டனை பெற்று, சிறையிலேயே இறந்தார்.  சோமராம தேரோவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வரலாற்றை நன்கு தெரிந்திருப்பவர்கள்தான், இன்றும் தங்கள் மதத்தை பிரதானப்படுத்தி தமிழ்ப் பிரதேசங்களில்  பௌத்த விகாரைகளை அமைப்பதில் தீவிரம் காண்பிக்கின்றர்.

இதுவிடயத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் சிலரும்  கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்ப்பிரதேசமான தையிட்டியில் விகாரை அமைப்பதை நிறுத்தமாட்டோம் என்று  சூளுரைக்கின்றார் படைகளின் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வா.

வேற்று இனத்தவர்களுக்கு காணிகளை விற்கவேண்டாம் என்று வடபிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் சொல்கிறார்.


தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு கலசம் அமைத்தவேளையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடபிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை சமூக வலைத்தளங்கள் பேசுகின்றன.

வடபிரதேசத்தின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அறப்போராட்டக்காரர்களுக்கு வழங்கிய சிற்றுண்டிப் பொதிகளும் குளிர்பானப்போத்தல்களும் குப்பையில் வீசப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு சமகாலத்தில் வடக்கில் விகாரைகள் அமைக்கும் விவகாரமும்  சிலைகளை நிறுத்தி வேடிக்கை  காண்பிக்கும் செயல்களும்தான் அதிகரித்துள்ளன.

ஊடங்களில் இச்செய்திகள் வெளிவரும்போது, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்  கவனத்திற்கு வருவதில்லை. அல்லது இரண்டாம் பட்சமாகிவிடுகின்றது.

மதம் சார்ந்த பிரச்சினைகள் வரும்போது, ஆட்சியிலிருப்பவர்கள் கண்டும் காணாமல் கடந்துவிடுகின்றனர். அடுத்து வரவிருக்கும் தேர்தலில் வாக்கு சரிவு ஏற்படாதிருக்க விழிப்போடு இருக்கின்றனர்.

கடந்த ஆண்டுதான் தென்னிலங்கை மக்கள் விலைவாசி உயர்வினாலும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டினாலும் எரிபொருள் பற்றாக்குறையினாலும் மருந்து வகைகள் போதியளவு இன்றியும் வீதிக்கு இறங்கி போராடினார்கள்.  காலிமுகத்திடல் போராட்டம் உலகப்பிரசித்தியடைந்ததைத்தவிர வேறு எந்தவொரு உருப்படியான பலனும் மக்களுக்கு கிட்டவில்லை.

முன்பிருந்த ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் புதியவர் அதிபர் பதவிக்கு வந்தார்.  பழைய மொந்தையில் புதிய கள் என்பது போன்று சடுகுடு விளையாட்டு தொடர்கின்றது.

இந்தப் பின்னணியில் தமிழ்ப் பிரதேசமான கிளிநொச்சி மாவட்டத்தில், ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றன என்ற செய்தி வெளியாகின்றது.

உணவு பற்றாக்குறைவினால் சிறார்களும் கர்ப்பிணித் தாய்மாரும் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  உலக வங்கி அபாய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இலங்கையில் வறுமை 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக உலக வங்கி சொல்கிறது.

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாமல்,  இந்தியாவை நோக்கி படகுகளில் புறப்படுபவர்கள் பற்றிய செய்திகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த இலட்சணத்தில்தான்  இலங்கையில் விகாரைகளை அமைப்பதில் அரசின் ஆசிர்வாதத்துடன் காரியங்கள் நடந்தேறிவருகின்றன. 

நாட்டிற்கு தற்போது அவசியமாகியிருப்பது என்ன…? என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல்,  விகாரைகளை அமைக்கின்றவர்கள் ஒருபுறம், அதற்கு எதிரான போராட்டங்களை தொடர்பவர்கள் மற்றும் ஒரு புறம்.

இந்த இரண்டு தரப்பாருக்கும் மத்தியில்தான் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்கள் சிக்குண்டுள்ளனர்.

மதத்தை முன்னிருத்தி இயங்கும் அரசியல் இறுதியில்  தேசத்தை அதலபாதாளத்தை நோக்கியே தள்ளிச்செல்லும். மதத்தை ஆயுதமாக்கினால்,  ஆணவம்தான் எஞ்சும் என்பதற்கு கடந்த கால சரித்திரங்கள் சான்று.

ஆணவத்தின் எதிரொலிதான் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவின் படுகொலை. பேரினவாதத்தின் எதிரொலிதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம்.

நாட்டை அபிவிருத்திப்பாதையில் அழைத்துச்செல்வதை விடுத்து, தொடர்ந்தும் மதம் சார்ந்தே இயங்கி, நில ஆக்கிரமிப்புடன் விகாரைகளை  அமைத்துக்கொண்டே  செல்வதன் மூலம் சிங்கள பெளத்த மக்களை திருப்திப்படுத்த நினைக்கும் அரசாங்கம், அதற்கான நியாயத்தை தனது படையணி தளபதிகள் மூலம் சொல்லி வருகின்றது.

இங்குதான் அவர்கள் யாருக்காக விகாரைகளை ஆங்காங்கே அமைத்து பிரச்சினைகளை உருவாக்குகின்றனரோ, அவர் சொன்ன கருத்தையே இந்த பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆட்சியாளர்கள் தமது எண்ணங்களை மேம்படுத்தவேண்டும்.  தாம் தேசத்தின் அனைத்து மக்களுக்காகவும்தான் பதவியிலிருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் இயங்கவேண்டும்.

இல்லையேல் இந்த விகாரைகள் அமைக்கும் தொடர்ச்சியான வேலைத்திட்டம்  ஏழைச்சிங்கள மக்களை ஏமாற்றும் கைங்கரியமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

---0---

 

 

 

 

 

 

No comments: