கோலாலம்பூரின் வளர்ச்சியையும் வனப்பையும் சுற்றிக்காண்பித்த நண்பர் பீர்முகம்மது, மலேசியா மக்கள் ஓசை பத்திரிகையை எனக்கு காண்பித்தார்.
முதல்நாள் அவர் என்னை அதன்
அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றபோது அங்கிருந்த ஒரு பத்திரிகையாளர் என்னை பேட்டி கண்டிருந்தார்.
அந்தப்பேட்டி வெளியான மக்கள்
ஓசையைத்தான் நண்பர் எனக்கு காண்பித்தார். அப்போது நான் மீண்டும் சிங்கப்பூர் செல்வதற்கு
தயாராகிக்கொண்டிருந்தேன்.
அந்த பேட்டி எனக்கு ஏமாற்றமாகவிருந்தது.
அதில் எனக்குத் திருப்தியில்லை. நான் ஏதோ சொல்ல, அவர்கள் ஏதோ எழுதியிருந்தனர். சமகால பத்திரிகையாளர்களுக்கு
பயிற்சி தேவை என்று எனது ஆதங்கத்தை நண்பரிடம் சொல்லிவிட்டு, சிங்கப்பூர் புறப்படும்
பேரூந்தில் ஏறினேன்.
சிங்கப்பூர் வந்ததும், குறிப்பிட்ட பேட்டிக்கான எனது எதிர்வினையை
எழுதி, தொலைநகல் மூலம் அந்தப்பத்திரிகைக்கு அனுப்பினேன்.
சுமார் ஆறு மணிநேரத்தில்
சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும், அடுத்தடுத்து நண்பர்கள் கண்ணபிரானும், மூர்த்தியும்
என்னைப்பார்க்க வந்தார்கள்.
கண்ணபிரான் சிங்கப்பூர்
பத்திரிகை தமிழ்முரசு இதழுடன்
( 2006 ஏப்ரில் 26 ஆம் திகதி வெளியானது ) வந்தார். அதில்
இரண்டாம் பக்கத்தில் அங்கு மாதந்தோறும் நடைபெறும் கடற்கரைச்சாலை கவிமாலை நிகழ்ச்சியில்
தமிழக கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான அய்யப்பமாதவனும், நானும் விருந்தினர்களாக
கலந்துகொள்ளும் செய்தி வெளியாகியிருந்தது.
அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்லவே
கண்ணபிரான் வந்திருந்தார். இந்த கவிமாலை நிகழ்ச்சியின் அமைப்பாளர் பிச்சினிக்காடு இளங்கோ,
தமிழக அரசின் வேளாண்மைத்துறையிலும், திருச்சி அகில இந்திய வானொலியிலும் சிங்கப்பூர்
ஒலிபரப்பு கழகத்திலும் பணியாற்றியவர்.
வீரமும் ஈரமும், முதல்
ஓசை, உயிர்த்தடை, இரவின் நரை முதலான கவிதைத் தொகுப்புகளையும் தோரணம் என்ற இருவட்டையும்
வெளியிட்டிருப்பவர்.
தமிழ்நாட்டில் சிறுபத்திரிகை
வட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களுடன் தொடர்பிலிருப்பவர்.
அன்றைய தினம் கண்ணபிரான்
அழைத்துச்சென்ற அந்த கவிமாலை நிகழ்ச்சியில் பல இளம் கவிஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அவர்கள் தத்தமது கவிதைகளை வாசித்து சமர்பித்தனர்.
அவர்களை பிச்சினிக்காடு
இளங்கோ அறிமுகப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவில் அந்த
2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடந்த தமிழ்
எழுத்தாளர் விழாவிற்குப்பின்னர், நான் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சி அது.
பிலிப்பைன்ஸ், மலேசியா பயண அலுப்பை அந்த கவிமாலை நிகழ்ச்சி போக்கிவிட்டது. வீரியமிக்க கவிஞர்கள் குழாம் அங்கே உருவாகி வருவதை அந்த நிகழ்வு உணர்த்திற்று. அந்தக்கவிஞர்களில் சிலர் தமது இளமைக்காதலை தமது கவிதைகளில் வெளிப்படுத்தினர்.
ஒருவர் தனது முன்னாள் காதலியின் பெயரையே தனது குழந்தைக்கு சூட்டியிருக்கிறார். அதனை பகிரங்கமாகவும் சொன்னார். இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்திலும் இதுதான் நடந்தது.
பலரது வாழ்வில் காதல் கருகி மலர்ந்திருக்கிறது.
அந்தக்கவிஞர்கள் சிரிப்பலைகளினால்
மண்டபத்தை அதிர வைத்தனர்.
தமிழக கவிஞர் அய்யப்ப மாதவன்
பிறகொரு நாள் கோடை என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ஒளியில் கவிதை என்ற
இருவட்டையும் வெளியிட்டவர். அன்றைய நிகழ்ச்சியில் அவர் தற்கால கவிதைச்சூழல் பற்றி உரையாற்றினார்.
தமிழகத்தின் வானம்பாடிகளை நினைவுபடுத்தினார்.
என்னைப்பற்றிய அறிமுகத்தை நண்பர் கண்ணபிரான் வழங்கினார்.
எனக்கு கூட்டங்களில் பிரசங்கம் செய்து பழக்கம் இல்லாதமையினால் கலந்துரையாடல் போன்றே எனது உரையை நிகழ்த்தினேன். சபையோரையும் எமது உரைக்குள் இழுத்துவிடும் உத்தி இது.
“ கவிஞர்களுக்கு
கற்பனை அதிகம். பெண்களின் கூந்தலில் இயற்கை மணமா..? செயற்கை மணமா..? என்று வாதிட்டு,
சிவனும் புலவர் நக்கீரனும் மோதிக்கொண்ட புராணத்தை படித்தவர்கள் நாங்கள். பெண்களை வர்ணிப்பதில்
கவிஞர்கள் ஈடு இணையற்றவர்கள்.
காதலைப்பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. கயல் விழிகள், சங்குக்கழுத்து, கார்மேகக் கூந்தல், கொவ்வை இதழ்கள், மாம்பழக் கன்னங்கள், முத்துப்பற்கள், வாழைத்தண்டு கால்கள் என்றெல்லாம் பெண்களை வர்ணிப்பவர்கள் கவிஞர்கள்.
ஆனால், எங்கள் ஈழத்து கவிஞர்களோ,
மரணத்துள் வாழ்ந்துகொண்டு கவிதை பாடியவர்கள்.
எங்கள் தேசம் இலங்கை, மரணங்கள் மலிந்த பூமி. தமிழ்ப்பிரதேசங்கள் யுத்த
மேகங்களினால் சூழ்ந்திருக்கிறது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இலக்கியம்
என்றொரு வகையும் சேர்ந்துள்ளது என்பதை, தமிழக சிங்கப்பூர், மலேசியா கவிஞர்கள் கவனத்தில்
கொள்ளவேண்டும்.
தென்றலையும், காதலையும்
பெண்களையும் உவமானமாகக்கொண்டு கவிதை படைத்துக்கொண்டிருப்பவர்கள் மத்தியில், மரணத்துள் வாழ்ந்துகொண்டு கவிதை படைப்பவர்களை இனம்
கண்டு கொள்ளுங்கள். “ என்று எனது உரையில் அழுத்தமாகச் சொன்னேன்.
அந்தக் கவிமாலை முடிவில் பலரும் என்னருகே வந்து எனது முகவரி,
தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் விபரங்களை பெற்றனர். இந்த எதிர்பாராத பயணத்தினால், மலேசியா, சிங்கப்பூர் இலக்கிய உலகத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பிலிப்பைன்ஸில் அந்த ஆண்டு
( 2006 ) மறைந்த எனது மனைவியின் தந்தையாரின் இறுதி நிகழ்வையடுத்து, சில நாட்களில் ஒருநாள்
சிங்கப்பூர் கடலில் அவரது அஸ்தியை கரைத்தோம்.
அதன்பின்னர் செண்பக விநாயகர்
ஆலயத்தில் அவருக்கான ஆத்ம சாந்தி பூசையும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடாகியிருந்தது.
ஏறக்குறைய ஆயிரத்து எண்ணூறு
வருடங்கள் பழைமை வாய்ந்த அந்த ஆலயம் பற்றி,
மனைவியின் அக்கா பத்மினி சில தகவல்களை சொன்னார்
காத்தோங் என்னுமிடத்தில் ஒரு நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு விநாயகர் சிலையை அருகிலிருந்த செண்பக மரத்தடியில் வைத்து மக்கள் வணங்கியிருக்கிறார்கள்.
பின்னாளில் அங்கு செண்பக
விநாயகர் ஆலயம் தோன்றியிருக்கிறது. அது அமைந்திருந்தவிடத்தில் இலங்கையர்கள் பெரும்பான்மையாக
வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் விநாயகர் எழுந்தருளியிருக்கும் அந்த வீதிக்கு Ceylon Road என்ற பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது.
அந்த ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்தேன். ஒரு காட்சி
என்னை வியப்பில் ஆழ்த்தியது.
ஆலயத்தையும் அதன் அருகிலிருந்த
ஒரு பௌத்த விகாரையையும் ஒரு சிறிய மதில்தான் பிரிக்கிறது. ஆலயத்தின் நிலத்தில் வளர்ந்திருந்த ஒரு வாழை மரத்தின் இலைகளும் விகாரையின் நிலத்தில் வளர்ந்திருந்த
ஒரு சிறிய தென்னை மரத்தின் கீற்றுக்களும் அந்த
மதிலுக்கு மேலாக காற்றில் ஒன்றையொன்று தழுவி சரசமாடிக்கொண்டிருந்தன.
ஆலயத்தில் அந்த இரவு நேரத்தில்
மேள, நாதஸ்வர ஒலியுடன் ஐயரின் மந்திரமும் கேட்கிறது. அருகிலிருந்த விகாரையில் அமைதி
குடிகொண்டிருந்தது.
அங்கிருந்த பௌத்த துறவிகள்
வேளைக்கே உறங்கச்சென்றிருக்கவேண்டும். அல்லது உள்ளிருந்து தியானம் செய்துகொண்டிருக்கவேண்டும்.
நான் அறிந்தவரையில் பௌத்த
பிக்குகள் மதியம் பன்னிரண்டு மணிக்குமேல் கடித்து மென்று உண்ணும் உணவுகளை தவிர்த்து,
புலனடக்குவார்கள். அவர்களின் பிரார்த்தனையில்,
“ விக்கா பதம் சமாதிகாமி “
என்று ஒரு வசனம் வரும்.
அவர்கள் மதியத்திற்குமேல் கடித்து உண்ணமாட்டார்கள். இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் மினுவாங்கொடை உடுகம்பொலவில் கொரஸ கிராமத்திலிருந்த ஶ்ரீ சுதர்மாணந்த விகாரையிலும் மருதானையில் தொமட்டகொட வீதியில் அமைந்திருக்கும் விகாரையிலும், கம்பகா நாலந்தா வித்தியாலயத்திலும் பல பௌத்த பிக்குகளுக்கும் சிங்கள ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கும் தமிழ் கற்பித்தேன்.
அதனால், அவர்களின் மதம்,
தியானம், உணவுவேளைகள் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன்.
பின்னாளில் நான் வெளியிட்ட
எனது குறிப்பிட்ட சில சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலை ( மதக்க செவனெலி – Shadows Of Memories ) என்னிடம் தமிழ் கற்ற பௌத்த பிக்கு வண. பண்டிதர் . எம். ரத்னவன்ஸ தேரோ அவர்களுக்கே
சமர்ப்பணம் செய்திருக்கின்றேன்.
நண்பர் செங்கை ஆழியானும் தனது கதைகள் சிங்களத்தில்
மொழிபெயர்க்கப்பட்டபோது குறிப்பிட்ட தேரோவுக்கே அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார். மல்லிகையும் அவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்திருக்கிறது.
அவர் பற்றி நான் எழுதிய நினைவுப்பதிவுகள்
மும்மொழியிலும் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.
அன்று சிங்கப்பூர் செண்பக
விநாயகர் ஆலயத்தில் இரண்டு தாவரங்கள் ( வாழையும் தென்னையும் ) ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டிருந்ததை
பார்த்தபோது அந்தக்காட்சியை கண்சிமிட்டாமல் பார்த்தேன்.
இவ்வேளையில் இத்தகைய ஒரு
பதிவை நான் எழுதநேர்ந்துள்ளமையின் உறைபொருளையும் மறைபொருளையும் இதனைப்படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.
இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்
எனது பயணியின் பார்வை தொடரிலும் எழுதியிருக்கின்றேன்.
சமகாலத்தில் இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில்
அரசின் ஆசீர்வாதத்துடன் திட்டமிட்டு விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் நிலைமை வேறுவிதமாக
அமைந்திருக்கிறது.
அவரவர் மதத்தை அவரவர் அமைதியாக
பின்பற்றக்கூடியவாறு அரசின் நிர்வாகம் இயங்குகிறது.
நாம் சிங்கப்பூரில் கற்றுக்கொள்வதற்கு
நிறைய இருக்கிறது.
( தொடரும் )
No comments:
Post a Comment