இலங்கைச் செய்திகள்

வெடுக்குநாறி மலை சிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

நுவரெலியா நகரில் கேபிள் கார் திட்டம்

இலங்கையர், வெளிநாட்டவருக்கு அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி

 195 நாடுகளின் தலைநகரங்களை 4 நிமிடத்தில் காண்பித்து சாதனை

வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி


வெடுக்குநாறி மலை சிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விடுவிப்பு

பொலிஸரால் கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (11) விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா, வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்டன.  இதையடுத்து வவுனியா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.

எனினும், விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்ட போது நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாது தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக ஆலய பூசகரும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதனாவர்களை நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

எனினும், வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசகரும் இருப்பதால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்குக்ஞ முரணாக அமையும். இதைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரினர். பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகளின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்திய நீதிமன்றம், கைதான இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

அத்துடன், ஆலயத்தில் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற் படுத்தக்கூடாதென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டது.

வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில், சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள் தலைமையிலான வவுனியா சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியிருந்தனர்.

 வவுனியா விசேட நிருபர் - நன்றி தினகரன் 





நுவரெலியா நகரில் கேபிள் கார் திட்டம்

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபிள் கார் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. திட்டத்தை  ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உலகின் புகழ் பெற்ற இசைக் குழுக்களை இலங்கைக்கு வரவழைத்து, இரவு வேளையில் இசை நிகழ்ச்சிகளை நடத்த எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





இலங்கையர், வெளிநாட்டவருக்கு அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 9 முடிவுகள்
- சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் 200 மில். டொலர் கடன்
- ஸ்ரீ லங்கன் விமானங்களின் எரிபொருள் விநியோகத்துக்கு ஒப்பந்தம்
- தேயிலை, இறப்பர், தென்னந் தோட்டங்களை கூறுபோடுதலை கட்டுப்படுத்தும் சட்டத்தில் திருத்தம்

இலங்கைப் பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்தல் பற்றி சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தேசிய காப்புறுதி நிதியத்தின் மூலம் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சுகாதார காப்பீடு (அக்ரஹார) வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் குறிப்பிடத்தக்களவு பிரஜைகள் வேறு சுகாதாரக் காப்புறுதி உத்தேசத் திட்டத்தின் மூலம் காப்புறுதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், அரச சுகாதார சேவைகள் முறைமையில் மேலதிக வசதிகளுக்குப் பதிலாக தனிப்பட்ட ரீதியாக கட்டணம் செலுத்தி குறித்த வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு சில பிரஜைகள் விருப்பத்துடன் உள்ளனர்.

அதற்கமைய, இலங்கைப் பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
சமூகத்தில் மிகவும் இடர்களுக்கு ஆளாகக் கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்காக பலம்வாய்ந்த சமூகப் பாதுகாப்பு வலையமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி நிகழ்ச்சித்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளில் முதன்மையான செயற்பாடாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, திட்டமிடப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகையை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

இலக்காகக் கொள்ளப்பட்ட குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்கல், வறுமை மற்றும் இடர்களுக்கு ஆளாகின்றவர்களுக்கு வாய்ப்புக்களை மேம்படுத்துகின்ற முன்னோடி வேலைத்திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்தல் போன்ற மூன்று (03) கூறுகளின் கீழ் உத்தேசக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் கடன் வசதிகள் பற்றிய பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இலங்கை – தாய்லாந்து உத்தேச வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடலில் சமகால நிலைமை
இலங்கை – தாய்லாந்து உத்தேச வர்த்தக ஒப்பந்தம் பற்றிய நான்காவது சுற்றுக் கலந்துரையாடல் 2023.03.27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றதுடன், குறித்த கலந்துரையாடலின் முன்னேற்றம் பற்றி கௌரவ ஜனாதிபதியினால் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

2024 ஆம் ஆண்டில் முதலாம் காலாண்டில் பேச்சுவார்த்தைகளைப் பூர்த்தி செய்து இருதரப்பினர்களும் கையொப்பமிடுவதற்காக குறித்த ஒப்பந்தத்தை தயார் செய்வதற்கும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை 2023.06.27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளமையை அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

4. புதிய அரசிறை முகாமைத்துவ சட்டத்தை அறிமுகப்படுத்தல்
2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டம் மற்றும் குறித்த சட்டத்திற்கு பின்னர் அறிமுப்படுத்தியுள்ள திருத்தங்களின் கீழ் அரச நிதி நடவடிக்கைகள் நிர்வகிக்கப்படும். விசேட சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் கூடியதான குறித்த நிதி நிபந்தனைகளுடன் இணங்காமைக்கு சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டிருப்பினும் குறித்த நிபந்தனைகளிலிருந்து விடுபடுவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

அத்துடன் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு இயலாத சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய படிமுறைகள் சட்டத்தில் திட்டவட்டமாக குறிப்பிடப்படவில்லை.

குறித்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்டுள்ள கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அரச நிதி முகாமைத்துவச் சட்டமொன்றை வலுவாக்கம் செய்வதற்கு அரசு உடன்பட்டுள்ளது.

அதற்கமைய 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்துடன் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய அரச நிதி நிபந்தனைகள் சட்டகம் ஒன்றை தாபிப்பதற்கு இயலுமான வகையில் புதிய அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும் அதற்கிணையாக 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தை முடிவுறுத்துவதற்கும் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்தம் செய்தல்
ஒரு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான தென்னங்காணிகளை மாத்திரம் துண்டாக்குவதற்கு இயலுமான வகையில் மட்டுப்பாடுகளை விதித்து தற்போது காணப்படுகின்ற சட்டரீதியான ஏற்பாடுகளை திருத்தம் செய்வதற்கான முன்மொழிவொன்று ஜனாதிபதியினால் 2023 வரவு செலவு திட்டம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏற்பாடுகளை வகுப்பதற்காக தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டத் துறை அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. அவுஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்தில் சர்வதேச தரையிறக்க சேவைகளை (Ground Services) வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
அவுஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்தில் சர்வதேச தரையிறக்க சேவைகளை வழங்குவதற்காக தற்போது குறித்த விமான நிலையத்தில் தரையிறக்க சேவைகள் வழங்குகின்ற அனைத்து உரிமப்பத்திரதாரர்களிடம் தரையிறக்க சேவை வழங்குநர்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி முறைமையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அதற்காக இரண்டு விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் Menzies Aviation (Australia) Pvt Ltd நிறுவனத்துக்கு மூன்று வருட காலப்பகுதிக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் காணப்படுகின்ற துறைமுகங்களில் போதுமானளவு இழுக்கும் படகுத் தொகுதியை பேணிச் செல்லல்.
போட்டி விலைமுறி செயன்முறையைக் கடைப்பிடித்து ஐந்து வருட காலப்பகுதிக்கு 70 டொன்களுக்கும் அதிகமான கொள்ளளவுடன் கூடிய இழுக்கும் (Tug) படகுகள் நான்கினை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக 2022-06-13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இழுக்கும் படகுகளை விநியோகிப்பதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், இரண்டு விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய ஐந்துவருட காலப்பகுதிக்காக இழுக்கும் படகுகள் நான்கினை வாடகைக்குப் பெற்றுக்கொள்வதற்கான பெறுகை, விபரங்களுடன் குறிப்பிட்டுள்ள குறைந்த விலைமுறிதாரரான M/s Sri Lanka Shipping Company Limited இற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனியின் CFM Leap-1A வகையின் விமான இயந்திரத்தை திருத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனியின் CFM Leap-1A வகை விமான இயந்திரத்துக்கான பராமரிப்புச் சேவைகளை வழங்குவதற்கான தகைமையுடைய விநியோகத்தர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறி பொறிமுறையின் கீழ் விபரங்களுடன் கூடிய முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதுடன் அதற்காக மூன்று முன்மொழிவுகள் கிடைத்துள்ளன.

அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய CFM Leap-1A வகை விமான இயந்திரங்கள் மூன்றை (03) திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை Lufthansa Technik AG இற்கு வழங்குவதற்காக  துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. ஸ்ரீ லங்கன் விமானங்களுக்கு உலகலாவிய ரீதியில் 16 விமான நிலையங்களில் எரிபொருள் பெறுவதற்க்கு ஒப்பந்தம்
ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானங்களுக்காக 17 விமான நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச விலைமுறி கோரல் முறைமையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அதற்காக 12 கம்பனிகளிலிருந்து 52 விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 49 விலைமுறிகள் அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்துள்ளன.

சீனாவின் ஷங்ஹாய் பியுடொங்க் விமான நிலையத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒரேயொரு விலைமுறிதாரரின் விலைமுறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 16 விமான நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களைக் வழங்கியுள்ளன.

அதற்கமைய குறைந்த விலையை சமர்ப்பித்துள்ள விலைமுறிதாரர்களுக்கு அந்தந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   நன்றி தினகரன் 




 195 நாடுகளின் தலைநகரங்களை 4 நிமிடத்தில் காண்பித்து சாதனை

நுவரெலியாவில் 4 வயது தமிழ் சிறுவன் பெருமிதம்

உலக நாடுகளில் 195 நாடுகளின் தலைநகரங்களை 04 நிமிடங்களில் உலக வரை படத்தில் தொட்டு காண்பித்து சாதனை படைத்து வரும் 04 வயது சிறுவன் தொடர்பில் , நுவரெலியாவில் செய்திகள் பதிவாகியுள்ளன.

2018 மே 20 ஆம் திகதி பிறந்த சிறுவனுக்கு நான்கு வயதாகிறது. நுவரெலியா லவர்ஸ்லீப் விநாயகபுரம் பிரதேசத்திலுள்ள தோட்டத்தில் வசிக்கும் குமாரவேல் காலாநேஷன் மற்றும் செல்வராஜ் லலிதாம்பிகையின் மகனான காலாநேஷன் என்ற சிறுவனே, இவ்வாறு சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

உலக வரை படத்தில் நாடுகளை தொட்டு காண்பிக்கும் பயிற்சியை இந்த சிறுவனுக்கு இரண்டு வயதிலிருந்தே அவருடைய பெற்றோர் அளித்துள்ளனர். ஆசியாவில் சாதனை படைக்கும் வகையில் சிறுவனுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றது. அதன்பின்னர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கும் வகையில், பயிற்சியளிக்கப்படுமென அச்சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர் - நன்றி தினகரன் 




வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை நினைவுகூர்ந்து இன்று 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று திங்கட்கிழமை நடை பெற்ற ஊடக சந்திப்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதனைத் தெரிவித்தனர்.

'வடக்கு, கிழக்கு எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது உறவுகளுடன் பரிமாறி, எமது இனத்தின் வரலாற்றையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளோம்' என்று அவர்கள் தெரிவித்தனர். 'நாம் முன்னெடுக்கும் இச்செயற்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் மறந்து எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்கின்றோம். உங்களின் மாவட்டத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சிக்குரிய அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கி பங்கெடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்' எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 





No comments: