ஏழைப் பங்காளன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 காதல் மன்னன் என்று ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட ஜெமினி

கணேசன் திடீர் என்று ஏழைப் பங்காளனாக தன்னை அடையாளப்படுத்த விரும்பியதன் பலனாக 1963ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் ஏழைப் பங்காளன். இசையமைப்பாளர் கே வி மகாதேவனின் இசைக் குழுவில் இருந்த வயலின் கே வி மகாதேவன் , ஜெமினியின் அனுசரணையோடு இந்தப் படத்தை தயாரித்தார்.


அமெரிக்கா சென்று படித்து பட்டம் பெற்று தமிழகம் திரும்பும் ரகு

இங்கே ஏழை எளியவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து கலங்குகிறான். அவர்களுக்கு உதவத் துடிக்கிறான். ஆனால் கோடீஸ்வரரான அவனது வளர்ப்புத் தந்தை அதனை எதிர்க்கிறார். வேலைக்கு தான் ஊதியமே தவிர அவர்களின் தேவைகளுக்கு அல்ல என்று வலியுறுத்துகிறார். இதனால் மனமுடைந்த ரகு வீட்டை விட்டு வெளியேறி சேரிப் பகுதிக்கு சென்று ஏழை , பாளைகளுடன் வசிக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். ஆனால் படிப்பறிவு இல்லாமல் அறியாமையில் வாழும் அவர்களினால் தாக்கப்படுகிறான். ஆனாலும் மன்னிக்கும் மனப்பான்மையுடன் அவர்களை திருத்த முயலுகிறான். இதற்கிடையில் அங்கே ஆப்பம் விற்கும் சின்னப்பொண்ணுவின் காதலும் கிடைக்கிறது. ஏழைப் பங்காளனான ரகு தன் முயற்சிகளில் வெற்றி பெற்றானா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் கதையை சொன்னவுடனே இது யார் நடித்திருக்க வேண்டிய படம் என்பது புரிந்திருக்கும். இந்த படத்தின் விளம்பரம் வெளிவந்தவுடன் , படத்தின் கதாசிரியர் மா . லக்ஷ்மணனை அழைத்த எம் ஜி ஆர் படத்தின் தலைப்பை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் விளம்பரம் செய்தாகி விட்டது இனி முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் மறுத்து விட்டார். ஆனாலும் ஜெமினி நடித்த இந்தப் படத்தைப் பார்த்த பெரும் தலைவர் காமராஜ் , படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஏழைப் பங்காளன் என்ற பேரில் எம் ஜி ஆர் நடித்தால் தான் ஜனங்க ஒத்துக்குவாங்க என்று அபிப்ராயம் சொன்னார்!

படத்தில் ஜெமினிக்கு ஜோடி ராகினி. லலிதா , பத்மினி சகோதரிகளில் இளையவரான ராகினிக்கு கதாநாயகியாக நடிக்கும் சான்ஸ் இதில் கிடைத்தது. நடிப்போடு நன்றாக நடனமும் ஆடி ரசிகர்களை கவருகிறார் ராகினி. ஜெமினி தன் பங்கிற்று உணர்ச்சிகரமாகவும் , இதமாகவும் நடிக்கிறார். வழக்கமாக காதலிக்காக உருகுபவர் இதில் ஏழைகளுக்காக உருகுகிறார். நாகேஷ், மனோரமா நகைச்சுவை , நாகேஷ் படத்தில் விற்கும் சாயா போல் சுவையாக இருக்கிறது.


படத்தின் வில்லன் நம்பியார். பழகிய வேடம், பழகிய நடிப்பு . அவரின் அடியாள் அசோகன். சேரிப்பகுதியில் இருக்கும் தாதா போல் அடாவடித்தனம் பண்ணுகிறார். எஸ் வி ராமதாசுக்கு முரட்டுத்தனம் கலந்த நல்லவன் வேடம் . பயன்படுத்த தவறவில்லை. இவர்களுடன் பாலாஜி, புஷ்பலதா, டீ எஸ் முத்தையா, கே டி சந்தனம், ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

படத்தின் கதை வசனத்தை எழுதியவர் மா லட்சுமணன். அப்பாவி பணக்காரர் தான தருமம் செய்து ஓட்டாண்டியாகி, வில்லனிடம் தஞ்சம் அடைந்து அவனின் கைப் பாவையாகும் கதை . ஏற்கனவே அன்னை இல்லம், குங்குமம் ஆகிய இரண்டு படங்களின் மூலக் கதையை ஒத்ததாக இந்தப் படத்தின் கதையும் அமைந்திருந்தது. ஆனலும் வசனங்களில் தன் கைவரிசையை காட்டியிருந்தார் அவர்.

கே வி மகாதேவன் இசையில் மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம் பாடல் இனிமையாக ஒலிக்க , காட்சி அழகாக படமாக்கப்பட்டது. தாயாக மாறவா தாலாட்டு பாடவா பாடல் பொருள் பொதிந்து ஒலித்தது. அன்றைய காலகட்டத்தில் அறிமுக பாடலாசிரியராக அறியப்பட்ட பஞ்சு அருணாசலம் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியிருந்தார். முட்டையை விட்டு குருவி வந்து முழிச்சு முழிச்சு பார்க்குதய்யா ராமையா பாடலை வெளியூரில் இருந்த படி தொலைபேசி வாயிலாக கண்ணதாசன் சொல்ல அதனை எழுதி , பாடலுக்கு இசையமைக்கப்பட்டது.
பெரும்பாலான காட்சிகள் ஸ்டுடியோவில் போடப் பட்ட சேரி செட்டில் எடுக்கப்பட்டன. அதனை அமைத்தவர் ஆர்ட் டைரக்டர் ஏ . பாலு. படத்தை ஒளிப்பதிவு செய்தவர் தம்பு.

பிரபல இயக்குனராக உருவாகி இருந்த கே சங்கர் படத்தை இயக்கினார். அன்றைய சூழலில் வெற்றி, தோல்வி இரண்டையும் மாறி மாறி சந்தித்துக் கொண்டிருந்த அவரால் இப்படத்தை வெற்றி படமாக்க முடியவில்லை. அதன் பின்னர் ஜெமினி ஹீரோவாக நடித்த எந்தப் படத்தையும் அவர் இயக்கவும் இல்லை!

படத்தின் பெயர் கிடைக்காத போதும், பத்தாண்டுகள் கழித்து எம் ஜி ஆர் நடித்த நேற்று இன்று நாளை படத்தில் கதாநாயகன் வளர்ப்பு தந்தையிடம் இருந்து ஒதுங்கி சேரிபுரத்துக்கு சென்று தங்கி அங்குள்ள மக்களுக்கு சேவை செய்கிறான். அங்கு வசிக்கும் ஆப்பக்கார அன்னம் அவனை காதலிக்கிறாள் என்று கதை அமைக்கப்பட்டிருந்தது!

No comments: