அனைத்துலக பெண்கள் தினம், மகளிர் விழிப்புணர்வு செயலமர்வு என்றெல்லாம் காலம் காலமாக எங்காவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டேயிருக்கிறது.
பெண்கள் சந்திப்பு மாநாடுகளுக்கும் குறைவில்லை. பெண்ணியம், பெண்ணிலை
வாதம் என்றெல்லாம் உரத்துப் பேசும் பெண்களுக்கும் குறைவில்லை.
பெண்கள் கலந்துகொள்ளும் அறப்போராட்ட எழுச்சிப்பேரணிகளும்
எங்காவது ஒரு ஊரில் நடந்தவண்ணமிருக்கிறது.
ஆனால், நாட்டில் நடக்கும்
பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடாயில்லை. பத்து வயதுக்கும் குறைவான பெண்கள், குழந்தைகளுக்கு
சமம். பருவம் எய்தியிருக்காத அந்தக் குழந்தைளையும் காமுகர்கள் விட்டுவைக்கவில்லை. சமகாலத்தில்
இலங்கையில் எங்காவது ஒரு பெண் குழந்தை நாளாந்தம் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிக்
கொண்டேயிருக்கிறது.
ஆனால், வெளியே செய்திகள் கசிவது குறைவு. காரணம் அக்குழந்தையின்
எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்.
வடபுலத்தில் அண்மைக்
காலத்தில் ஊரையும் மக்களையும் காக்கவேண்டிய
பொலிஸ் காவலர்கள் ஒரு பெண்பிள்ளையை தொடர்ந்து
பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்திருக்கும்
செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.
கடைக்குச்சென்று பொருட்கள் வாங்க வந்த பெண்பிள்ளையை ஒரு முதியவர்
துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முனைந்திருக்கிறார்.
அந்தப்பிள்ளையின் அவலக்குரல்கேட்டு வீதியில் சென்றவர்கள் ஓடிச்சென்று காப்பாற்றியிருக்கின்றனர்.
காதலிப்பதாகக் கூறி, அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு
நில்லாமல், அந்தக் காட்சியை வீடியோவில் பதிவு செய்து தங்கள் ஈனத்தனத்தையும் தொடரும்
கயவர்களின் நடமாட்டமும் பெருகியிருக்கிறது.
இச்செய்திகளையெல்லாம் தினம் தினம் பத்திரிகை ஊடகங்களில்தான் பார்த்து தெரிந்துகொள்கின்றோம். வீட்டுக்குள் முடங்கியிருந்து தென்னிந்திய தொலைக்காட்சி நாடகங்களில் தங்கள் நேரத்தையும் பொழுதையும் செலவிடும் பெற்றோர்கள் குறிப்பாக குடும்பத் தலைவிகள், வெளியே என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி இருப்பதுபோலத் தெரிகிறது.
உங்கள் பெண் பிள்ளைகளை நம்பிக்கையானவர்களுடன் மாத்திரம் வெளியே
அனுப்புங்கள். அல்லது அவர்களுக்கு தற்காப்பு
கலையை சொல்லிக்கொடுங்கள்.
பெண்கள் சமூகத்தின் கண்கள். அந்தக்கண்களை நிரந்தரமாக குருடாக்குவதற்கான
ஈனச்செயல்களில் ஈடுபடும் மனித உருவில் நடமாடும் மிருகங்கள், தற்போது காவல் துறையிலும்
இருக்கின்றது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.
ஒரு பெண்பிள்ளை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
ஆளாகியிருந்தால், அதற்கு யார் காரணம்…? என்பதை கண்டறிவதற்குள், சட்டத்தின் ஓட்டைகளுக்குள்ளால்
குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்.
ஒரு ஊரிலிருந்து மற்றும் இரண்டு ஊர்களுக்கு இடமாற்றலாகிச்சென்ற
அந்த நபர், தான் கடமை ஏற்கும் இடங்களிலும் தனது கைவரிசையை கச்சிதமாக காண்பிக்கமுடியும். காவலர் என்பதனால் வெளியே சொல்வதற்கு அவள் அச்சமடைவாள்
என்ற அசட்டுத்தைரியம்தான் வீடியோ பதிவு செய்யும் அளவுக்கு அந்த நபர்களுக்கு துணிச்சல்
வந்திருக்கிறது.
ஒரு புறம் வேடம் மறுபுறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
கதைதான் இன்று வடபகுதியில் என்பதை அறியும்போது,
அங்கிருக்கும் பிரஜைகள் குழுக்கள்,
பெண்கள் அமைப்புகள் இனிமேல் உஷாருடன் இயங்கவேண்டும் எனச்சொல்லத் தோன்றுகிறது.
பெற்றவர்களும் பாடசாலை ஆசிரியைகளும் தங்கள் பிள்ளைகள், மாணவிகளுடன் தொடர்பாடலை வளர்த்துக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில்
நாம் வாழ்கின்றோம்.
பெரும்பாலான பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் பொழுதை முகநூலில்
செலவிட்டுக்கொண்டு , படங்களை பதிவேற்றுவதிலும், கேலித்தனமான கருத்துக்களை பதிவேற்றுவதிலும் ‘ டிக்டொக்
‘ காணொளி காட்சிகளை ரசிப்பதிலுமே நேரத்தை
செலவிடுகின்றனர் போலத் தெரிகிறது !
தினமும் தங்கள் பிள்ளைகளின் தனிப்பட்ட விடயங்களை எத்தனை பெற்றோர்,
கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். ஆசிரியைகள்
– மாணவிகள் உறவு எத்தகைய ஆரோக்கியத்தில் இருக்கிறது..? என்பது பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா..?
தொடர்பாடலற்ற சமூகம் உருப்படாது. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார்கள். தாய்மாரைப்
பொருத்தமட்டில் பெண்பிள்ளைகள் தோளுக்கு மிஞ்சினால் தோழிதான்.
வெளியே சென்று திரும்பும் பெண்பிள்ளையின் அன்றைய பொழுது எவ்வாறு
கழிந்தது என்பதை நேரம் ஒதுக்கி, உணவு உண்ணும் வேளையிலோ, இரவில் உறங்கச்செல்லும் பொழுதிலோ
கேட்டுத் தெரிந்துகொள்ளும் தாய்மாரை இக்காலத்தில் காண்பது அரிதாகிவிட்டது.
ஆளுக்கு ஆள் ஒரு கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டு அதன் தொடுதிரையை
அழுத்திக்கொண்டிருப்பதற்கே நேரம் சரியாகவிருக்கிறது இவர்களுக்கு.
சில வீடுகளில் பிள்ளைகள், படுக்கைக்கு சென்றபின்னரும் போர்வைக்குள்
கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டு நோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் இரவில் உறங்கும்வேளையில் சிறுவர் கதை சொல்லும் பாட்டிமாரை
தற்காலத்தில் காண்பது அரிதாகிவிட்டது. தாயின்
தாலாட்டுக்கேட்க வேண்டிய குழந்தை, ஐபேர்டில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு வளரும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது.?
என்பதைத்தான் பெண்பிள்ளைகளுக்கு எதிரான தொடரும்
வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் சுட்டிக்காண்பிக்கின்றன.
எனவே பெற்றவர்களே எச்சரிக்கையோடு இருங்கள்.
வேலிகளே பயிர்களை மேயும் காலம் இது ! அவதானம் தேவை.
----0----
No comments:
Post a Comment