ஆதவனும் வந்தான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா


ஆதவனும் வந்தான் அவனி


எலாம்  நல் வெளிச்சம்
பூதலத்து இருள் அகன்று
புவி ஒளியில் மிதந்தது 

தேனுண்ண வண் டெல்லாம்

தேடி மலர் அமர்ந்தது
தித்திக்க தேன் பருகி
திசை யறியா நின்றது

மது ஈந்த மாமலர்கள்

மகிழ் வெய்தி நின்றன
வண்டெல்லாம் இசை பாடி
மயக் குற்றுக் கிடந்தன

வண்ணப் பறவை யெல்லாம்

வான் பரப்பில் வந்தன
மண் பார்த்து மகிழ்வாக
வந் தங்கே சேர்ந்தன

மல்லிகை வாச மதை
வளி சுமந்து வந்தது
வானத்து விண் மீன்கள்
மறைந் திருந்து முகர்ந்தன 


கோழி அது குரலாலே

கொண்ட துயில் கலைந்தது
குறை களையும் மருந்தாக
கோவில் மணி ஒலித்தது

 

தேவ னவன் கோவிலிலே

திரு முறைகள் ஒலித்தன
வேத மொடு நாதஸ்வரம்
விண் ணுலகை ஈர்த்தது

 

பூதலத்து மாந்த ரெலாம்
நாதனது பதம் பணிந்தார்
காதலுடன் கரங் கூப்பி
கண்ணீரில் மூழ்கி  நின்றார் !

No comments: