அவுஸ்திரேலியாவில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி தொடக்கிவைத்து நான் உரையாற்றும்போது, சொன்ன கருத்துக்களை இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.
பேரன்புமிக்க எழுத்தாளர்களே – கலைஞர்களே சகோதர சகோதரிகளே, இன்றைய
எமது சந்திப்பு எமது புலம்பெயர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.
நாம் முன்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நேரில் கண்டு கலந்துரையாடியிருக்கலாம்.
ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தறியாமலே கலை, இலக்கிய உணர்வை மாத்திரமே ஆதாரமாகக்கொண்டு
தொலைபேசி வாயிலாகவும் மின் அஞ்சல் மற்றும் தபால் மூலமாகவும் உரையாடியிருக்கலாம்.
எம்மத்தியில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். வித்தியாசமான
பார்வைகளை தத்தமக்கென்றே தனித்துவமாகக் கொண்டிருக்கலாம்.
அதனால்தான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாம்
அனைவரும் இவ்விதம் ஒன்றுகூடல் வேண்டும் என்ற அறைகூவலை விடுத்து அழைத்திருந்தோம். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.
அதுதான் கலை, இலக்கியக் குடும்பம். படைப்பிலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் எம்மால்
ஒன்றுகூடச்செய்து கருத்துப்பரிவர்த்தனை செய்ய மாத்திரமே முடியுமே தவிர ஓரணியில் திரட்டும்
பணியை நாம் செய்யமாட்டோம்.
படைப்பாளிகளும் கலைஞர்களும் சுதந்திரமானவர்கள். அவர்களின் கருத்துச்
சுதந்திரத்தில் தலையிடாமல், நிபந்தனைகள் விதிக்காமல், குற்றம் குறைகளைத் தேடிக்கண்டுபிடிக்காமல் மனித நேயத்தை
மேம்படுத்தி, ஆயிரம் பூக்கள் மலரும் நந்தவனத்தில் உலாவப்போகும் உணர்வுடன் ஆயிரம் சிந்தனை
கொண்டவர்களிடமிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்
எண்ணத்துடனேயே இந்த எழுத்தாளர் விழாவுக்கான பூர்வாங்க வேலைகளை மிகுந்த உற்சாகத்துடன்
ஆரம்பித்தோம்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுசன ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள்,
சமுதாயத்தில் - உலக அரங்கில் மிகவும் வித்தியாசமானவர்கள்.
கவனத்துக்குள்ளாகுபவர்கள். கண்காணிக்கப்படுபவர்கள்.
கணிக்கப்படுபவர்கள்.
காரணம் இவர்கள் போதகர்கள் அல்ல. பெரும்பாலும் போதகர்கள் சமய
நிறுவனங்களையும் அரசியல் நிறுவனங்களையுமே சர்ந்திருப்பர்.
மக்களிடமே வாழ்ந்து, மக்களின் வாழ்வையே தரிசித்து, தாம் உள்வாங்கிக்கொண்ட அனுபவங்களையும், பெற்றுக்கொண்ட தரிசனங்களையும் மீண்டும் தமக்குத் தெரிந்த மொழியில் தமது தனித்துவமான பார்வையுடன் தமக்குத் தோதான சாதனத்தின் வாயிலாக மக்களிடம் பகிர்ந்தளிப்பவர்களும் தேடல் மனப்பான்மையுடன் புதிய புதிய எண்ணங்களை தத்தம் மனதில் விதைத்து விருட்சமாக்கி அதன் நிழலில் மக்களை அரவணைத்து மனித மனங்களை செழுமைப்படுத்தும் பணியிலும் கலாரசனையில் புதிய உத்வேகம் ஊட்டுவதிலும் பெரும் பங்காற்றுபவர்கள் இந்த ஆக்க இலக்கியவாதிகளும் கலைஞர்களும் பத்திரிகையாளர்களும் பொதுசன ஊடகவியலாளர்களும்தான்.
இவர்கள் சார்ந்த துறைகள் ஏராளம். ஓவியம், சிற்பம், புகைப்படம், கைவினை, கணினிக்கலை ( Graphics ) செய்தி ஊடகம், நடிப்பு, இசை, பாட்டு… இவ்விதம் இந்தத் துறைகள் அகலித்து விசாலித்துக்கொண்டே போகும்.
இந்தத் துறைகளில் புதிய புதிய மாற்றங்கள் தோன்றும்.
ஓவியம் நவீன ஓவியமாகிறது. சிற்பக்கலை, புகைப்படக்கலை,
கைவினைக்கலைகளில் புதுமைகளும் மாற்றங்களும் தோன்றின.
அரங்கக் கலைகள், மேடை நாடகம், நவீன நாடகம், இசை நாடகம், கூத்து,
வீதி நாடகம், வட்டக்களரி என்றெல்லாம் மாற்றங்களைத் தோற்றுவித்தது.
கவிதையில் புதுக்கவிதை மலர்ந்தது. நாவல் சிறுகதைகளில் நவீனத்துவம்,
பின் நவீனத்துவம் என்றெல்லாம் மாற்றங்கள் வேகமாக எம்மை அண்டிக்கொண்டிருக்கின்றன.
மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கருங்கல்லில் பதியப்பட்ட தமிழ், பனை ஓலை ஏட்டிலே எழுத்தாணியால் பதியப்பட்ட தமிழ்,
தொட்டெழுதும் பேனையும் பார்க்கர் பேனையும்
குமுழ் முனைப்பேனையும் எழுதிய தமிழ், எழுத்துக்கள் சிறிய மரக்கட்டைகளில் பொழியப்பட்டும்
வெள்ளீயத்திலே வார்க்கப்பட்டும் வைக்கோல் கலவையில்
குடிசைக் கைத்தொழிலாகத் தயாரிக்கப்பட்ட காகிதங்களில் பதிவாகிய தமிழ் இன்று கணினியில்
பதிவாகிக்கொண்டிருக்கிறது.
உலகமயமாதலில் ஒருபுறம் பொருளாதாரச் சுரண்டல் நிகழ்ந்துகொண்டிருக்க – இந்த உலகமயமாதலிலும் தமிழின் தேவை உணரப்பட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தமிழ்மொழிக்கு அணிசேர்த்த ஐரோப்பியர்களைப்பற்றி அறிந்திருக்கிறோம்.
இன்று ஐரோப்பாவில் அங்கம் பெற்ற பிரித்தானியாவின் காலனியாக விளங்கிய இந்தக்கடல் சூழ்ந்த
கண்டத்திலிருந்து சங்க இலக்கியம் முதல் – போர்க்கால இலக்கியம் வரையில் தேடுவதற்கும்
– பேசுவதற்கும் கூடியிருக்கிறோம்.
புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
. மெத்த வளருது மேற்கே – இந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் – என்று படைப்பாளிகளின் பூட்டன் பாரதி அன்று சொன்னதும் தீர்க்கதரிசனத்துடன்தானா என்று எண்ணத்தோன்றுகிறது.
நாம் புலம்பெயர்ந்தோம். தாயகத்தில் எம்மவர் இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
நாம் விரும்பியும் விரும்பாமலும் இரண்டகத் தன்மையுடன் இயந்திரமயமான
வாழ்வுக்கு எம்மை காவுகொடுத்துக்கொண்டு நம்மை நமது மொழியை நமது இனத்தை அடையாளப்படுத்தி
பேணிப்பாதுகாத்துக்கொள்வதற்கான பகீரதப்பிரயத்தனத்தில் ஒரு சின்னஞ்சிறு துளி முயற்சிதான்
இந்த எழுத்தாளர் விழா.
அயர்லாந்தைச் சேர்ந்த கால்டுவல், பிரிட்டனில் பிறந்த எல்லீஸ், டாக்டர் ஜி.யூ.போப், இத்தாலியரான கொன்ஸ்ட்டன்டைன் ஜோஸப்பெஸ்கி என்ற வீரமாமுனிவர், ஜெர்மனியரான சீகன் பால்கு, ருஷ்யா உக்ரேயினைச் சேர்ந்த விதாலிஃபூர்ணிகா, இலங்கைக்கு வந்து தமிழ் மருத்துவ முன்னோடியாக விளங்கிய டாக்டர் கிறீன்.... இப்படி எத்தனையோபேர் தத்தம் தாயகம் விட்டு வந்து தமிழகத்தில், இலங்கையில் தமிழைத் தேடினர் ஆராய்ந்தனர், தமிழுக்கு அணி சேர்த்தனர். சிலர் இந்தத் தமிழ் மண்ணிலேயே அடக்கமாயினர்.
இந்த வரலாற்றை
அறிந்த நாம், தாய்மண்ணை விட்டகன்று அந்நிய மண்ணில் வேர் பதிக்க முனையும்போது, எழுத்தாளர்கள்,
கலைஞர்கள் எனச்சொல்லிக்கொள்ளும் நாம், அதில் காணப்போகும் அர்த்தம் யாது என்பதையும்
கவனத்தில் கொள்ளவேண்டும்.
எமக்குப்பின்பு வரும் அடுத்த சந்ததி – நாளைய உலகை
நிர்மாணிக்கும் நிர்ணயிக்கும் புதிய தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லவிருப்பது எமது சொத்து சுகங்கள் மாத்திரம் அல்ல – வங்கிக்கடன் செலுத்தப்பட்ட சொகுசு கார்களும் சீதனங்களும் மாத்திரம் அல்ல,
ஆள்பலம் தேடுவதிலும்
அரசியல் பலம் உருவாக்குவதிலும பணபலம் பெருக்குவதிலும் காலத்தை விரையம் செய்த நாம்,
இவற்றுக்கெல்லாம் அப்பால் ஆத்ம பலத்தை வளர்த்துக்கொள்ள ஏதும் செய்தோமா..?
கலையும் இலக்கியமும் எமது இனத்தின் கண்கள் மாத்திரம் அல்ல. எமக்கு நாம் ஆத்மபலத்தை ஊட்டிக்கொள்ளும் ஊடகமாகவும் திகழுகின்றது. பதட்டத்துடன் வாழும் மூத்த தலைமுறை, பரவசத்துடன் வாழும் இளம் தலைமுறை – இவர்களுக்கிடைய நீண்டுகொண்டிருக்கும் இடைவெளி – அந்த இடைவெளியை நிரப்புவதற்காக ஆத்மபலத்தை கைவிட்டு, வேறு பலத்தை நாடித்தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்புதிய நூற்றாண்டிலும், கழுத்தில் சயனைற்றும் கரத்தில் ஆயுதத்தையும் ஏந்திக்கொண்டு ஒரு தலைமுறை தாயகத்தில் போராடியது என்பதையும் மறந்துவிட முடியாது.
போரை என்றைக்கும் எவரும் விரும்புவதில்லை. உண்மைதான். கலைஞர்களும் படைப்பாளிகளும் போரை விரும்பமாட்டார்கள்தான்.
போர் பெறுமதியான மனித உயிர்ளை அழிக்கும் – விலை மதிப்பிட முடியாத வாழ்வை அழிக்கும். மக்களை அகதிகளாகவும் அனாதைகளாகவும் பெண்களை விதவைகளாகவும் ஆக்கும்.
அதனால்தான்,
ஆக்கத்தையே விரும்பும் கலைஞர்கள் , படைப்பாளிகள் அழிவை விரும்பமாட்டார்கள். ஆனால்,
மனித உரிமைக்கு அச்சுறுத்தலும் பாதுகாப்புக்கு
குந்தகமும் ஆக்கிரமிப்பும் அட்டுழியமும் பாலியல் வன்முறைகளும் தொடர்ந்து பேரினவாதப்பேயாக
உலாவி வரும்போது, அந்த பேரினவாதப் பேயை அழிக்க
எதிர்க்க போர் தேவையானதுதான். நியாயமானதுதான்.
அந்த போரின்
மீதான முற்றுப்புள்ளிக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய கடப்பாடு எழுத்தாளர்களையும் கலைஞர்களையும்
பத்திரிகையாளர்களையும் பொதுசன ஊடகவியலாளர்களையும் சார்ந்தது.
யுத்தமும் சமாதானமும் ( War and Pease ) படைத்த ரோல்ஸ்ரோயின் வழித்தோன்றல்களான படைப்பாளிகளே… மனித உரிமை மீறல் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்பும் அட்டுழியமும் முற்றாக நிறுத்தப்பட்டு பாலியல் வன்முறை ஒழிக்கப்பட்டு பேரினவாதம் அடங்கி ஒடுங்கினால் மாத்திரமே சமாதானம் என்ற மலர் பூக்க வழிபிறக்கும்.
அத்தகைய ஒரு
சமாதானத்தையே கலைஞர்களும் படைப்பாளிகளும் விரும்புகிறார்கள். அதற்காகவே அவர்கள் குரல்
கொடுப்பார்கள்.
இனவாதம், சர்வாதிகாரம்,
மேலாதிக்கம், ஆக்கிரமிப்பு…. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் இறுதி வெற்றி எப்பொழுதும்
மக்களுக்கே.
இன்றைய எழுத்தாளர்
விழா கருத்தரங்கு, அமர்வுகள் இந்த பின்னணி
பகைப்புலத்துடன் அங்குரார்பணமாகிறது.
சங்க இலக்கியம்,
சங்கம் மருவிய கால இலக்கியம், நவீன இலக்கியம்,
தேசிய இலக்கியம் , மண்வாசனை இலக்கியம், போர்க்கால இலக்கியம் , புலம்பெயர்ந்தோரின் புகலிட
இலக்கியம் , தாயகத்தில் இடம்பெயர்ந்தோரின் இடப்பெயர்வு இலக்கியம் என்று எமது மொழி பல்வேறு
பரிமாணங்களுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது.
இந்தப்பரிமாணங்களில்
நிகழ்ந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு, பொய்மைகளை கேள்விக்குட்படுத்தி விவாதித்தவாறு வளர்ந்து
வரும் எம்மத்தியில், கையில் பேனையை ஏந்தாமல்,
கணினி முன்பாக அமர்ந்து புதுமைகளைத்தேடி சாதனைகள் படைக்க முனைந்துள்ளது புதிய தலைமுறை.
உலகில் ஆறாயிரத்திற்கும்
அதிகமான மொழிகள் இருப்பதாகவும், இவற்றில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு மொழிக்கு சாவு
மணி அடிக்கப்பட்டுவிடுவதாகவும் உயிரினங்கள் போன்று மொழிகளும் வாழ்க்கைச்சுற்று வட்டத்தை
பின்பற்றி புதிது புதிதாக பிறந்தும் தாழ்ந்தும் வளர்ந்தும் அழியும் காலமும் இருப்பதாகவும்
மொழியியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றார்கள்.
இந்த மொழிகள்
ஏனைய மொழிகளை தமக்கு அடிமைப்படுத்துவதாகவும், அல்லது ஏனையவற்றுக்கு அடிமைப்பட்டுவிடுவதாகவும்
கூறப்படுகிறது. இன்றைய தமிழகம் இதற்கு ஒரு சான்று.
தமிழுக்கு இடையூறு
வந்தால், சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு
எனப் பாடியவரும், தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று எழுதியவரும்
பிறந்த நாட்டில், தாய்மொழிக்கல்விக்காக உண்ணாவிரதப்போர்
தொடங்கப்பட்டதாகவும் அறிவோம்.
அவுஸ்திரேலியா
கண்டத்தில், இந்த குடியேற்ற நாட்டில், பல்தேசிய கலாசாரத்தை பேணுகின்ற தேசத்தில் அரசாங்க
பரீட்சையில் தமிழும் ஒரு பாடமா..? இது உண்மையா..? என்று விழியுர்த்திக்கேட்டு திக்பிரமையடைகிறார்கள்
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்.
அங்கே….
Twinkle
Twinkle Little Star
How I wonder
what you are
Jack
and Jill went up the hill
To
fetch a pail of water
என்று பாடிக்கொண்டிருக்கையில்,
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பிறந்த குழந்தைகள், வாழ்க நிரந்தரம்
வாழ்க தமிழ் மொழியும், அச்சமில்லை…. அச்சமில்லையும் – ஓடிவிளையாடு பாப்பாவும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகு உன்னதமான
மாற்றத்தை தோற்றுவித்த இங்குள்ள தமிழ் அன்பர்களை நாம் போற்ற வேண்டும். தமிழுக்கு விழா
எடுத்தும் போட்டிகளின் மூலம் இளம் தலைமுறையினரை ஊக்குவித்தும் ஆக்கபூர்வமான பணிகளை
மேற்கொள்ளும் அமைப்புகளை வாழ்த்தவேண்டும்.
தமிழிலே பேசுவோம் இயக்கத்தை முன்னெடுத்த தமிழ்ப் பாடசாலைகளைப் பாராட்ட வேண்டும்.
1816 இல் ஜெர்மனியில்
யூத இனத்தில் பிறந்த ஜூலியஸ் ரோய்ட்டர் புறாக்களை பழக்கி, அவற்றுக்கு கடின பயிற்சிகளைக்
கொடுத்து செய்திகளை பரப்பினார்.
தேடல் மனப்பான்மை
கொண்ட இந்த கடின உழைப்பாளியின் பெயரே இன்று பொதுசன ஊடகத்துறையில் நிரந்தரமாகியுள்ளது.
இன்று இன்டர்
நெட் – ஈமெயில் வசதிகள், வாய்ப்புகள் எதிர்காலத்தில் அஞ்சலகத்தையும் அஞ்சல் தபால் தலைகளையும்
( முத்திரை ) நூதனசாலைகளாகவும் நூதனப்பொருட்களாகவும் மாற்றும் வல்லமையை பெற்றுக்கொண்டிருக்கின்றன.
தகவல் தொழில்
நுட்பத்தில் மொழிவடிவ மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும்போது
வாழ்க்கைப்பாடத்தின் அரிச்சுவடியையும் நாம் ஒரு தரம் திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது.
கடந்து வந்த
பாதையை நாம் மறப்போமேயானால், செல்லும் பாதையும் இருளடைந்தே காணப்படும்.
சிட்னியிலிருந்து
மெல்பனுக்கு வரும் பாதை நன்கு தெரிந்திருந்தால்தான், மீண்டும் நாம் சிட்னிக்கு மெல்பனிலிருந்து
புறப்பட முடியும்.
-----
இருபத்திரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர், 2001 ஆம் ஆண்டு இதே
ஜனவரி மாதத்தில் முதல் வாரம் எமது முதலாவது தமிழ் எழுத்தாளர் விழா மெல்பன் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடந்தது.
அவ்வேளையில்
நான் நிகழ்த்திய தொடக்கவுரையையே மேலே படித்தீர்கள். இந்த உரையைத்தான், 2003 ஆம் ஆண்டு
மீண்டும் மெல்பனில் நடத்திய மூன்றாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் நான் வெளியிட்ட எம்மவர்
என்ற நூலின் முன்னுரையிலும் பதிவேற்றியிருந்தேன்.
இந்நூலுக்கான
முகப்பு ஓவியத்தை சிட்னியில் வதியும் ஓவியக்கலைஞர் – நண்பர் குணசிங்கம் வரைந்து தந்தார்.
2003 விழாவில்
இந்நூலை மதிப்பிற்குரிய திருமதி பாலம் லக்ஷ்மணன் அம்மையார் வெளியிட்டு வைத்தார்.
( தொடரும்
)
No comments:
Post a Comment