இலங்கைச் செய்திகள்

துபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினார் 

குமார் நடேசனுக்கு இந்திய உயர்விருது

முழுமையான அதிகார பரவலாக்கத்துடன் மாகாண சபைகள்

தமிழின நலனுக்காக பாடுபட்ட அமரர் குமார் பொன்னம்பலம்; நினைவுதினம் இன்று

தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில்


துபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினார் 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

விடுமுறைக்காக துபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி தனது மனைவியுடன் துபாய்க்கு தனிப்பட்ட சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர், துபாயிலுள்ள சைஃப் பெல்ஹாசா ஃபேம் பார்க் (Fame Park - Dubai Saif Belhasa) மிருகக்காட்சிசாலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அந்த விஜயத்தின் பின்னரே அவர் நாடு திரும்பியுள்ளார்.

இதன் போது அவர் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாகவும், அந்நாட்டு குடியுரிமைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குமார் நடேசனுக்கு இந்திய உயர்விருது


சமூக சேவையாளரும் ஊடகத்துறைசார் பிரதிநிதியும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்ர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநருமான குமார் நடேசனுக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கப்படவுள்ளது.

பிரவாசி பாரதீய சம்மான் விருது என்பது வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய கெளரவமாகும். இந்த விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தின் அங்கமாக மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

17 ஆவது தடவையாக வழங்கப்படும் இந்த விருதுகள் வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி தனிநபர்கள், இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தனிநபர்கள் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவர்கள் மேற்கொண்ட சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான பாரதிய சம்மான் விருதுகள் அந்த விருதுகள் தொடர்பான நடுவர்கள் சபையில் முன்வைக்கப்பட்ட விருது பெறுபவர்கள் பட்டியலைப் பின்பற்றி வழங்கப்படுகின்றன. உப ஜனாதிபதியை தலைவராகவும் வெளிவிவகார அமைச்சரை உப தலைவராகவும் தமது வாழ்நாளில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த ஏனைய கீர்த்திபெற்ற உறுப்பினர்களையும் கொண்ட மேற்படி விருதுகளுக்கான நடுவர் சபையால் இந்த ஆண்டுக்கான பிரவாசி பாரதீய சம்மான் விருதுகளுக்கான நியமனங்கள் பரிசீலிக்கப்பட்டு விருது பெறுவோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை உலகளாவியரீதியில் 27 பேர் இந்த விருதுக்கு தெரிவாகியுள்ளனர். இதில் இலங்கையிலிருந்து சிவகுமார் நடேசன் (குமார் நடேசன்) இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். குமார் நடேசன் பிரிட்டிஷ் பேரரசின் ஆணையைப் பெற்ற ஆர்.ஏ. நடேசனின் புதல்வராவார். கொழும்பில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும் உயர் கல்வியை சென்னை லோயலா கல்லூரியிலும் சென்னை பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.   நன்றி தினகரன் 

முழுமையான அதிகார பரவலாக்கத்துடன் மாகாண சபைகள்

- இயங்குவதை வலியுறுத்தும் கூட்டம் நாளை சென்னையில்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளினூடாக முழுமையான அதிகார பரவலாக்கம் இடம்பெறுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒப்பந்தத்தின் முழுமையான நிர்வாக நடைமுறைகளைப் பொறுத்தவரை பல்வேறு தடைகளும் பின்னைடைவுகளும் காணப்படுகின்றன.

இருநாடுகளின் அரசத் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பரஸ்பரமுடன் இரு தரப்பினரும் செயற்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் முகமாக தமிழக அரசியல் வட்டாரங்களில் கலந்துரையாடல்கள், கருத்து பரிமாறங்களை ஏற்படுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

அந்தவகையில் முதற்கட்டமாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகங்களை ஒன்றிணைத்து கருத்தரங்குகள், சர்வ கட்சிகளின் மாநாடுகள், செய்தியாளர் சந்திப்பு போன்ற செயற்பாடுகளை சென்னையிலும், புது டெல்லியிலும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன் முதலாவது கட்டமாக அரசியல் கலந்துரையாடல் மற்றும் செய்தியாளர் சந்திப்பு என்பன நாளை (ஜன 06) வெள்ளிக்கிழமை முற்பகல் சென்னை பிரஸ் கிளப்பில் இடம்பெறவுள்ளது.

மனித உரிமை அடிப்படையிலான சமாதானம் மற்றும் அபிவிருத்திகான அமைப்பின் அழைப்பின் பேரில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, பாராளுமன்ற உறுப்பினர்களான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான சி.நல்லகண்ணு, சி மகேந்திரன், பழ.நெடுமாறன் பேராசிரியர் டேவிட் ஸ்டான்லி, மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் சதீஷ்குமார் சிவலிங்கம், விசிக பேச்சாளர் வன்னி அரசு, தினகரன் தலைமை ஆசிரியர் தே. செந்தில்வேலவர், முனைவர் ரங்கராஜன், பாமக, மதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளால், உருவான வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு தீர்வுகாணும் முகமாகவே சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஜேஆர் ஜயவர்த்தன மற்றும் பிரதமர் ராஜீவ் ஆகியோருக்கிடையி ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கையின் அரசியலமைப்பு சாசனத்தில் 13ஆவது திருத்தம் வாயிலாக தோற்றுவிக்கப்பட்ட மாகாண நிர்வாக செயல்முறைகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக சட்டப்பூர்வமாக தடையின்றி மக்களின் ஜனநாயக தெரிவுகள் அடிப்படையில் இயங்க வேண்டுமென்பதே பிரதான நோக்கமாகும்.

இருப்பினும் கடந்த சில வருடங்களாக இலங்கையில் நிலவிவரும் பல்வேறு அரசியல், சமூக பொருளாதார சூழ்நிலைகள், அரசின் உதாசீனங்கள் காரணமாக வடக்கு கிழக்கு மலைநாடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

எனவே துரிதமாக தேர்தல்களை நடாத்தி மக்களின் ஜனநாயக கடமைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனவே இந்த விடயத்தில் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளினதும் வலியுறுத்தலும் உரிய தீர்வுக்கு உறுதுணையாக அமையுமெனவும் எதிர்பாக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் உள்ளூராட்சி, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியை தெரிவு செய்வது தேர்தல்கள் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகின்ற சூழ்நிலையில், வருடக்கணக்கில் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் முழுமையான அதிகார பரவலாக்கம் தொடர்பாக தமிழகத்திலிருந்து ஏற்படக்கூடிய அழுத்தங்கள் காரணமாக மத்திய அரசின வெளியுறவு கொள்கைகளில் 13 திருத்தம் தொடர்பாக சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது வடகிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் முகமாக சர்வகட்சிகளின பங்கேற்புடன் கூட்டங்களை நடாத்தி வருகிறார்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழகத்திலிருந்தும் ஏற்படக்கூடிய கருத்தாக்கங்கள் தமிழ் மக்களுக்கு சாதகமாகவே அமையும்.   நன்றி தினகரன் தமிழின நலனுக்காக பாடுபட்ட அமரர் குமார் பொன்னம்பலம்; நினைவுதினம் இன்று

இன்று 23 ஆவது நினைவுதினம்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 23 ஆவது நினைவு தினம் இன்றாகும். இலங்கைவாழ் தமிழ் சமூகத்தின் அரசியல் நலன்களில் அவருக்கிருந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவர் அரசியலில் பாரிய ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்த இக்கட்டான நேரத்தில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக அவர் அயராது உழைத்தார். தமிழர் நலன்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடிவரலாறு படைத்தவர். உலகில் எவ்விடத்திலும் தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை அவர் வலியுறுத்தி வந்தார்.

எந்தவொரு அரசியல் தலைமையும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளுமானால் அத்தலைமையே அரசியல் தீர்வைத் தரவல்லதென்று குமார் பொன்னம்பலம் நம்பினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான சகவாழ்வு சாத்தியப்படுமென அவர் நம்பினார்.

1988 ஜனாதிபதித் தேர்தலில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை ஆதரிப்பதற்காக வடக்கின் இடதுசாரிக் கம்யூனிஸ்ட்கள் ஏனைய முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தபோது, குமார் பெறுமதிமிக்க பங்களிப்பை ஆற்றினார். அது திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடனான நட்புறவிற்குக் காரணமாயிற்று. சம்பிக்க ரணவக்கவும் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் சார்பாக இதில் கையொப்பமிட்டிருந்தார்.

அவரது கடைசி வருடங்களின்போது அவர் காட்டிய மனவலிமையானது அதீதமானது. குமார் பொன்னம்பலம் அவர்களின் அரசியல் நிலைப்பாடானது சந்தர்ப்பவாதப் போக்குடையதாக இருக்கவில்லை. ஆனால் தமிழர்களின் அபிலாசைகளை வலியுறுத்துவதாகவே இருந்தது.

"கருத்து வேற்றுமைகள் வேறு, மனித அன்பும் மனிதப்பண்பும் வேறு" என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரை அனைத்து இயக்கங்களையும் வரவேற்று தனது இல்லத்தில் விருந்தோம்பி ஒன்றுபடுத்தி பொதுக்கருத்திற்காக சந்திப்புக்களை ஏற்படுத்தினார். அவர் இரத்தத்தையும் துன்பியலையும் பார்க்க முடியாதவர்.

இனப்பிரச்சினைக்கு நீதியானதும் நிலையானதுமான ஒரு தீர்வைக் காண்பது தொடர்பில் உள்ளொன்றும் புறமொன்றுமாக விளங்கும் குறுகிய எண்ணம் கொண்ட சக்திகள்தான் சுயநிர்ணய கோரிக்கைக்குப் பாரிய அளவில் பாதகமேற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

குமார் வாழ்ந்த காலம் மிகமிகக் கடினமான காலமாகும். ஆயுதம் ஏந்தாத தமிழ் அரசியல்வாதியாக அவர் இருந்தும்கூட அதிக பிரச்சினையை அவர் எதிர்நோக்கினார். நேர்மைமிக்க அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார். அன்னாரின் மறைவு இலங்கைத் தமிழினத்துக்கு பேரிழப்பாகும். அவர் வெளிநாட்டுத் தூதரகங்களோடு மதிப்பிற்குரிய பிரமுகராக உறவை வளர்த்துக் கொண்டிருந்தார்.

தமிழினத்தின் விடிவுக்காக வாழ்ந்த அவரை தமிழ் மக்கள் என்றுமே நன்றியுடன் நினைவில் வைத்திருப்பர்.

கலாநிதி 

நல்லையா குமரகுருபரன்...

நன்றி தினகரன் தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில்


திங்களன்று விசேட கூட்டம்

 தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.

தேசிய பொங்கல் நிகழ்வு  தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு நடைபெறவுள்ளது.

 யாழ்.விசேட நிருபர்

நன்றி தினகரன் 


No comments: