உலகச் செய்திகள்

ரஷ்யாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்தது உக்ரைன் 

40 ஆண்டு சிறை இருந்த பலஸ்தீன கைதி விடுதலை

யூரோ வலயத்தில் குரோசியா இணைவு

உலகப் பொருளாதாரம் 2022ஐ விடவும் 2023 ஆம் ஆண்டு கடினமாக அமையும்


ரஷ்யாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்தது உக்ரைன் 


உக்ரைனில் 36 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டபோதும் உக்ரைன் அதனை நிராகரித்துள்ளது.

ரஷ்யாவில் பழைமைவாத கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ஒட்டி வெள்ளிக்கிழமை தொடக்கம் போர் நிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்க பாதுகாப்பு அமைச்சுக்கு புட்டின் உத்தரவிட்டிருந்தார். எனினும் அந்தக் கோரிக்கையை உக்ரைன் உடன் மறுத்துள்ளது.

தனது நாடு இராணுவ ரீதியில் முன்னேறுவதை தடுக்கும் முயற்சியாகவே இந்த போர் நிறுத்தம் உள்ளது என்று உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பழைமைவாத திருச்சபையின் தலைமையிடம் இருந்து வந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து போரை நிறுத்துவதற்கு தமது தரப்புகளுக்கு ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டதாக ரஷ்ய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூலியன் நாட்காட்டிக்கு அமைய ரஷ்ய பழைமைவாத கிறிஸ்தவர்கள் இன்று ஜனவரி 7ஆம் திகதியே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மோதல் இடம்பெறும் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான பழைமைவாத கிறிஸ்தவ குடிமக்கள் இருக்கும் நிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு முந்திய தினம் மற்றும் கிறிஸ்மஸ் தினத்தில் போர் நிறுத்தத்தை பரிசீலனை செய்யும்படி புட்டினின் உத்தரவில் உக்ரைனை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கடந்த வியாழன் இரவு வீடியோ ஒன்றில் தோன்றி உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, கிழக்கு டன்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் முன்னேறுவதை நிறுத்தவும் அங்கு மேலும் ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை குவிக்கவும் போர் நிறுத்தத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டமிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் மகீவ்கா நகரில் உக்ரைனிய தாக்குதலில் பெரும் எண்ணிக்கையிலான ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டு சில நாட்களிலேயே ரஷ்யா இந்தப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதில் 89 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டது.

உக்ரைன் போர் ஆரம்பித்தது தொடக்கம் அதிக துருப்புகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்ட சம்பவமாக இது உள்ளது.

புத்தாண்டு அரம்பித்து சில நிமிடங்களில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் 400 ரஷ்யத் துருப்புகள் வரை கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
40 ஆண்டு சிறை இருந்த பலஸ்தீன கைதி விடுதலை


இஸ்ரேலிய சிறையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதி 40 ஆண்டுகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவி ப்ரோபர்க் என்ற இஸ்ரேலிய இராணுவ வீரரை கடத்திக் கொன்றதாக கரீம் யூனிஸ் என்ற அந்தக் கைதி 1983 ஆம் ஆண்டு குற்றங்காணப்பட்டார்.

அரசியல் செயற்பாடுகள் மற்றும் இஸ்ரேலுடன் உடன்படிக்கைக்கான அழைப்பு என அவர் சிறையில் முக்கியமான கைதியாக இருந்து வந்தார். யூனிஸ் இஸ்ரேலிய குடியுரிமையை வைத்திருந்த நிலையில் இஸ்ரேலிய உள்துறை அமைச்சு அதனை நீக்கும்படி கேட்டுள்ளது.

இஸ்ரேலிய மத்திய நகரான ரானாவில் கடந்த வியாழக்கிழமை சூரியோதயத்திற்கு முன் யூனிஸ்் விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் இருக்கும் அவரது சொந்த ஊரான ஆராவில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.   நன்றி தினகரன் 

யூரோ வலயத்தில் குரோசியா இணைவு


குரோசியா யூரோ நாணயத்திற்கு மாறியதோடு ஐரோப்பிய கடவுச்சீட்டு சுதந்திர வலயத்திற்குள் நுழைந்துள்ளது.

கடந்த ஞாயிறு (01) நள்ளிரவுடன் பல்கான் நாடான குரோசியா தனது குனா நாணயத்திற்கு விடைகொடுத்து யூரோ வலயத்தில் அங்கத்துவம் பெறும் 20ஆவது நாடாக பதிவானது.

அதேபோன்று 27அவது செங்கன் வலய நாடாகவும் அது அங்கத்துவம் பெற்றது. செங்கன் வலயம் உலகின் மிகப்பெரிய கடவுச்சீட்டு இன்றி பயணம் செய்ய முடியுமான பகுதியாக உள்ளது. இந்த வலயத்தில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உறுப்பு நாடுகளிடையே பயணிக்க முடியுமாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் குரோசியா இணைந்து 10 ஆண்டுகளின் பின்னர் இந்த மாற்றங்கள் நடப்புக்கு வந்துள்ளன.   நன்றி தினகரன் 


உலகப் பொருளாதாரம் 2022ஐ விடவும் 2023 ஆம் ஆண்டு கடினமாக அமையும்

சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற பெரும்பாலான உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சி மந்தமடைந்திருக்கும் நிலையில் 2022ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு கடுமையானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்கீவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகப் பொருளாதாரங்களின் மூன்றில் இரண்டு பங்கு மந்தநிலையை பதிவு செய்வதால் 2023 “கடுமையான ஆண்டாக இருக்கும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஏனென்றால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகிய மூன்று மிகப்பெரிய பொருளாதாரங்களும் ஒரே நேரத்தில் மெதுவடைந்துள்ளன” என்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றும்போது ஜோர்கீவா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் கடந்த ஜூலையில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.9 வீதம் என எதிர்வுகூறிய நிலையில் கடந்த ஒக்டோபரில் 2.7 வீதமாக குறைத்துக் கொண்டது. உக்ரைன் போர் மற்றும் வட்டி வீதத்தின் வேகமான அதிகரிப்புக் காரணமாகவும் அந்த நிறுவனம் இந்த முன்னறிவித்தலை வெளியிட்டிருந்தது.

உலகின் மிகப்பெரிய பொருளாதரமான சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நோய்த்தொற்று அதிகரித்த நிலையில் 40 ஆண்டுகளில் முதல் முறையாக உலகப் பொருளாதார வளர்ச்சியை விடவும் பின்தங்கியுள்ளது என்பதை ஜோர்கீவா சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் நான் சீனா சென்றிருந்தேன். அங்கே கொரோனா தொற்றே இல்லாத வலயத்திற்கு சென்றேன். ஆனால் பயணத் தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் தொற்று பரவலைத் தடுக்க முடியாது.

அடுத்த 2 மாதங்கள் சீனாவுக்கு மிகவும் கடினமான காலம். சீனப் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படலாம். அந்த எதிர்மறை விளைவுகள் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம்.

ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியையோ அல்லது மந்தநிலையையோ தவிர்க்கும் சூழலே இருக்கிறது. காரணம் அங்கு தொழிலாளர் சக்தி இன்னும் வலுவாகவே உள்ளதாக அவர் கூறினார்.

“பணவீக்கத்தை சந்திக்காத நாடுகள் கூட, பண வீக்க சூழலை சந்திக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை, சாட், எத்தியோப்பியா, நமீபியா, கானா, லெபனான், சுரினாம் போன்ற நாடுகள் முகம்கொடுத்திருக்கின்ற கடன் பிரச்சினை உலகளாவிய பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தும் அளவுக்கு குறிப்பிடும் படியான அளவுக்கு வரவில்லை என்றபோதும் அந்த நாடுகளின் மக்களுக்கு கடன் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பது மிக முக்கியம் என்று சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்தார்.

என்றாலும் கடன் பிரச்சினைக்கு முகம்கொடுத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் சர்வதேச பொருளாதாரத்துக்கு பாதகமான தாக்கம் ஒன்று ஏற்படக் கூடும் என்றும் அதன் காரணமாக இந்த நாடுகளுக்கு கடன் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் கடுமையாக பாடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 


No comments: