மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 2 : அழகான பெண்

 


வான் மான் நூஜ்ஜின்
ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான்.

 நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

 வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதினைந்து வருடங்களாக அங்கே குப்பை கொட்டுகின்றான். அவன் ஒரு வேடிக்கைப் பேர்வழியும் கூட.

 ஒருநாள் இப்பிடித்தான் அவனது மொட்டந்தலைக்கு முடி வளர நந்தன் ஒரு மருந்து சொன்னான். ‘பசுவின் கன்றைப் பிடித்து அதன் நாக்கினால் தலை முழுவதையும் நக்க விடு’ என்றான் நந்தன். சொன்னதுதான் தாமதம் தன் மூக்கை அகல விரித்தான். வியட்நாம் பாஷையில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பாவித்து நந்தனைத் திட்டத் தொடங்கிவிட்டான்.

 நூஜ்ஜின் சொல்வான், தங்கள் நாட்டில் ஏதாவது முக்கிய அலுவலாக வீட்டைவிட்டு வெளிக்கிழம்பிப் போகும் போது எதிரே யாராவது கறுப்பின மனிதர் வந்தால், சற்றே கொஞ்சம் ஒதுங்கி நின்று அந்த மனிதர் போன பிற்பாடுதான் தாங்கள் போவோம் என்று. இந்தச் சகுனம் பாக்கிற விடயம் தங்கள் நாட்டிலும் உண்டு என்று நந்தன் சொன்னபோது நூஜ்ஜினுக்கு சங்கடமாகிப் போய்விட்டது. நாங்களும் யாராவது சப்பை மூக்குக்காரர்களை எதிரே கண்டால் ஒழித்துக் கொள்வோம் என்றான் நந்தன்.

 எங்கேயாவது அழகிய பெண்களைக் கண்டுவிட்டால் போதும், நூஜ்ஜின் குஷியாகிவிடுவான். அப்படித்தான் தூரத்தே அடுத்த பகுதியில்---பிறைமரில்---வேலை செய்யும் ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டி, ‘வெரி ஃபியூட்டிபுல்’ என்றான் நூஜ்ஜின்.

 இவர்கள் ‘ரொப் கோற்’ என்ற பகுதியில் வேலை செய்கின்றார்கள். இந்த ‘ரொப் கோற்’றிற்கு முதல்பகுதி பிறைமர். பெயின்ற் ஷொப்பில் காரின் வெற்றுடலுக்கு பிறைமர், ரொப் கோற் என்ற இரண்டுவித வர்ணங்கள் அடிக்கப்படுகின்றன. பிறைமரில் வேலை செய்பவர்களை ’ரொப் கோற்’றிலிருந்தே பார்க்கமுடியும். அவன் காட்டிய திக்கில் ஒரு சிறு மெல்லியபெண் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை நந்தன் ஒருபோதும் முன்னர் கண்டிருக்கவில்லை. சமீபத்தில்தான் அவள் இங்கு வந்திருக்க வேண்டும்.

 “இவள் எப்போது இங்கே வந்தாள்? பள்ளிக்கூடப் பெண் போல இருக்கின்றாளே?” என்றான் நந்தன்.

 “இல்லை… இல்லை. அவள் ஒரு வியட்நாமியப் பெண். அவளிற்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு” என்றான் நூஜ்ஜின்.

 “அத்தோடு எட்டு வயதில் இன்னொரு பெண்குழந்தையும் உண்டு” என்று இவர்களின் பேச்சுக்குள் தலையை நீட்டினான் ஐசாக் என்ற ஆப்பிரிக்க நாட்டவன்.

 எல்லோருக்குமே விஷயம் தெரிந்திருக்கின்றது. நந்தனுக்குத்தான் கடைசியில் தெரியவருகின்றது. வழமையான சங்கதிதான்.

 “அவளே குழந்தைமாதிரி. அவளுக்குக் குழந்தைகளா?” நந்தன் வியப்படைந்தான்.

 இங்கிருந்து பார்க்கும்போது அழகானவளாக, கூடவே விவேகமானவள் போலவும் சுறுசுறுப்பானவள் போலவும் தென்பட்டாள் அவள்.

 “என்ன பெயர்?”

 “லோம்”

 நிட்சயமாக ‘லோம்’ என்பதாக இருக்காது என்பது நந்தனுக்குத் தெரியும். பெரும்பாலான வியட்நாமியர்கள் தாங்கள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளிலிருந்து முதல் எழுத்தை வெட்டிச் சொல்வார்கள். அது கடவுள் அவர்களுக்குக் கொடுத்த தண்டனை. Exactly என்பதை ‘சக்லி’ என்றும், Group Leader என்பதை ‘றூப் லீடர்’ என்றும் சொல்லுவார்கள். primer றைமர் என்றும் brother றடர் என்றும் Friday றைடே என்றும் வந்துவிடும். அவர்களின் பெயர்கள் சின்னச் சின்னதாக இருப்பதற்கு காரணமும் இதுதானோ?

 ஒருதடவை குறூப் லீடர் ஜோசுவா வந்து எல்லோரும் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான். ஜோசுவா பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தன். “வேலையை மெதுவாகச் செய்யுங்கள். Slowly…. Slowly” என்று சொன்னான் ஜோசுவா. வேலையை மெதுவாகச் செய்யுங்கள் என்று சொன்னது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. குறூப் லீடர் அப்பால் சென்றதும் நூஜ்ஜின் “லோலி…. லோலி” என்று அவனைப் பார்த்து நையாண்டி செய்தான். எல்லோரும் நூஜ்ஜினின் இங்கிலிஷை நினைத்து வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்கள் ஏன் சிரிக்கின்றார்கள் என்பது புரியாமலே அவனும் சேர்ந்து சிரித்தான்.

 அன்று முழுவதும் இங்கிருந்தபடியே அவளைப் பார்த்தபடி இருந்தான் நந்தன், இந்த ‘லோம்’ என்பதன் முதல் எழுத்து எதுவாக இருக்கும் என்று சிந்தித்தான்.

 அழகான மனிதர்களைப் பார்ப்பதிலும் அவர்களுடன் கதைப்பதிலும் தப்பேதும் இல்லை என்பது நந்தனின் கருத்து. எல்லாமே மனிதர்களின் கண்ணோட்டத்திலும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திலுமே தங்கியிருக்கின்றது என்பது அவன் அபிப்பிராயம். எல்லை மீறிப் போகாமல் இருக்க வேண்டும் என்பான் நந்தன்.

 மேலும் அழகான ஆண் என்றோ அல்லது அழகான பெண் என்றோ நந்தன் ஒருவரைச் சுட்டிக் காட்டிச் சொல்வதை இன்னொருவர் மறுதலிப்பார். அவ்வாறே அவர் சொல்லும்போதும் சிலவேளைகளில் நந்தனும் மறுத்திருக்கின்றான்.

 “வாற திங்கள்கிழமையில் இருந்து ஒவ்வொருநாளும் இவ்விரண்டு பேராக ’ஸ்பிறே பூத்’திற்குச் சென்று பெயின்ற் ஸ்பிறே பண்ணிப் பழக வேண்டும்” என அன்றைய கூட்டம் ஆரம்பிக்கும்போது ஜோசுவா சொல்லியிருந்தான். சொல்லிவிட்டு ஜோசுவா வாய் விட்டுச் சிரித்தான். அவனது சிரிப்பு குதிரையின் கனைப்பு போல் இருந்தது.

 நந்தனுக்கு பெயின்ற் மணம் ஒத்து வருவதில்லை. அதனால் பெயின்ற் ஸ்பிறே செய்யும் வேலையைத் தவிர்த்து ஏனைய வேலைகளைச் செய்து வந்தான். இதனால் நந்தன் மீது ஜோசுவாவுக்குக் கோபம் இருந்தது.

ஒருதடவை கணனி தொடர்பான வேலை ஒன்றிற்கு உள்ளக வெற்றிடம் (internal vacancy) வந்திருந்தது. மனுப்போட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தான் நந்தன். தொழிற்சாலைக்குள் வெற்றிடங்கள் வரும்போது, பொருத்தமானவர்கள் விண்ணப்பித்து வேலை மாறும் வழக்கம் அங்கே நடைமுறையில் இருந்தது. நந்தன் தனக்கு அந்த வேலை கிடைக்கும் என்பதில் நூறு சதவிகிதம் நம்பியிருந்தான். நேர்முகப்பரீட்சைக்கே அவனுக்கு அழைப்பு வராதபோதுதான் தனது விண்ணப்பப்படிவத்தை குறூப்லீடர் ஜோசுவா கிழித்து எறிந்துவிட்டான் என்று தெரிந்து கொண்டான். இன்னொரு தடவை மெயின்ரனன்ஸ் பகுதிக்குள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தபோது, நந்தன் அதற்குத் தகுதியற்றவன் என்று சொல்லி போட முடியாது என்று தடுத்துவிட்டான் அவன்.

 அங்குள்ளவர்கள் பலர் பல வருடங்கள் வேலை செய்து, படிப்படியாக முன்னேறியவர்கள். ஒருவர் திடீரெனப் புகுந்து வேலையில் உயர்ச்சி பெறுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. உண்மையில் சொல்லப் போனால் அங்கு வேலை செய்யும் ஜெனரல் போர்மன் 10ஆம் வகுப்பு வரையே படித்திருக்கின்றார். அதே போல குறூப் லீடர் ஜோசுவா தரம் 11 வரை.

 திடீரென ஒருநாள் நந்தன் பிறைமர் பகுதிக்கு காரணம் இல்லாமல் இடம் மாற்றப்பட்டான். அது ஜோசுவாவின் வேலை என்பதைப் புரிந்து கொண்டான். அப்படி மாற்றியதையிட்டு நந்தன் தொழிற்சங்கத்திற்கு முறையிட்டான். பலனில்லாது போக நந்தன் பிறைமருக்குப் போனான்.

 அங்கே பிறைமரில் நந்தனுக்குக் காத்திருந்தது அந்தப்பெண்ணின் புன்சிரிப்பு. அவனது தலைக்குள் பகவத் கீதை உபதேசம் செய்தது.

  தொடரும்….

No comments: