இயல் விருது பெறும் எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். செ .பாஸ்கரன்

 .

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் 2022. இந்த விருதுகள் வருடம் தோறும் இலக்கியவாதிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறந்த விருதாகும். இந்த விருது கோவிட் நோய்த்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டில் வழங்கப்படவில்லை. அதனால் 2022ஆம் ஆண்டு இந்த இயல் விருது இருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர், படைப்பாளி, ஆசிரியர் இப்படி பல முகங்களை கொண்ட அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரிலே வாழுகின்ற திரு முருகபூபதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக பாவண்ணன் என்று அழைக்கப்படுகின்ற பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களை தமிழ்முரசு அவுஸ்திரேலியா வாழ்த்துகின்றது.

எமது அன்புக்குரிய மூத்த எழுத்தாளரும், இனிய நண்பரும், எழுத்தாளர்களை எப்போதுமே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவருமான திரு முருகபூபதி பல படைப்புகளை தந்தவர், சமூக சேவையாளர்.

திரு லட்சுமணன் முருகபூபதி அவர்களுக்கு இந்த இயல் விருதுகள் 2022 கிடைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சி அடையக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையிலே பிறந்த ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்,எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்கள் இன்றும் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு தொடர்ச்சியாக வாரம் தோறும் பல பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நேர்மையான எழுத்தாளர்.

தினமுரசுஅவுஸ்ரேலியா என்ற இணையதள பத்திரிகையிலே வாரம்தோறும் அவருடைய எழுத்துக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றது. இயல்பாகவே எல்லோரையுமே ஆதரிக்கும் ஒரு மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இணையதள பத்திரிகையாக பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் முரசு ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்ப காலங்களிலேயே ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உள்ளுர் பத்திரிகைகள் வளரவேண்டும் என்று ஊக்குவித்த ஒரு எழுத்தாளர்.


திரு முருக பூபதி அவர்கள் 1972 ஆம் ஆண்டிலே எழுத்தாளராக அறிமுகமாகி இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்ற எழுத்தாளர். வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் மாணவர் விழாவில் கலந்து கொண்ட ஒரு எழுத்தாளர். இவர் சுமையின் பங்காளிகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதை 1975ஆம் ஆண்டு பெற்றவர். 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது பறவைகள் என்ற நாவலுக்கு கிடைத்திருந்தது. இப்படி பல விருதுகள் இவரை தேடி வந்திருக்கிறது.இந்த மூத்த எழுத்தாளர் திரு முருக பூபதி அவர்களுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருதுகள் கிடைத்ததையிட்டு நாங்கள் மகிழ்வோடு அவரை வாழ்த்துகின்றோம். அவர் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் இன்னும் எழுத்துத்துறையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தமிழ்முரசு அவுஸ்திரேலியா சார்பாகவும், எமது வாசக அன்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

No comments: