முதல் சந்திப்பு வன்னியின் நிலக்காட்சியை படைப்பு இலக்கியத்தில் சித்திரித்த தமிழ்க்கவி அம்மா முருகபூபதி


லங்கையில்  போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில்  நான் அவுஸ்திரேலியாவுக்கு  வந்துவிட்டேன். 

போருக்கு  தூபம் போட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் வாழ நேர்ந்திருந்தாலும்,  அவர்களிடமிருந்து தூர விலகியே இருந்தேன். தாயகத்தில் போர் நீடித்தால்,  இறுதியில் என்ன எஞ்சும், என்ன மிஞ்சும் என்பதில் பத்திரிகையாளனாக போர்க்கால செய்திகளை எழுதி வந்த எனக்கு தீர்க்கதரிசனமாகத் தெரிந்திருந்தது.

அதனால், போரில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரையும்


விமர்சிப்பதை விடுத்து,  போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத் தமிழ் மாணவர்களின் தேவைகளை கவனிக்க தன்னார்வத் தொண்டு அமைப்பினை ( இலங்கை மாணவர் கல்வி நிதியம் )  உருவாக்கி செயற்படுத்தினேன்.

ஆயினும்,  தாயகம் செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்தும், வடபகுதிக்குச்  செல்ல நீண்ட காலம் எடுத்தது.

1997 இல் பதினொரு வருடங்களின் பின்னர் சென்றவேளையிலும், அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு சென்றபோதும் வடக்கிற்கு செல்ல முடியவில்லை.

2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தம் வந்தபோது, இரண்டு பெரிய கொல்கலன்களில் நிவாரணப்பொருட்களுடன் அங்கே சென்றவேளையிலும்,  வடக்கிற்கு செல்வதற்கு தயக்கம் இருந்தமையால், கிழக்கிற்கு மாத்திரம்  சென்று திரும்பிவிட்டேன்.

2009 மே மாதம் போரின் இறுதிநாட்களை அவுஸ்திரேலியா கண்டத்திலிருந்து ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

2010 ஜனவரி மாதம் வடக்கிற்கு சென்றபோதுதான் எழுத்தாளர் கருணாகரனின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின்னர் அங்குசெல்லும் சந்தர்பங்களில்  கிளிநொச்சியில் அவரது இல்லம் எனது மற்றும் ஒரு இல்லமாகியது.


அங்குதான் 2017 ஆம் ஆண்டில் முதல் தடவையாக தமிழ்க்கவி அம்மாவை சந்தித்தேன். அவரது எழுத்துக்களை ஊடகங்களில் படித்திருந்தேன். அவர் எமது இலக்கிய நண்பர்களுக்கு                               ( கருணாகரன் – ஷோபா சக்தி – கோமகன் – தெய்வீகன்  ) வழங்கிய நேர்காணல்களின் ஊடாக அவர் வாழ்ந்த போராட்ட கால வாழ்க்கையை தெரிந்துகொண்டேன்.

புகழேந்திப் புலவரின் காவியத்தில் வரும் தமயந்தி வாழ்வில் பட்ட சோகத்தை படித்திருப்போம். அந்தப்பெயரையே இயற்பெயராகக் கொண்டிருக்கும்  சமூகப்போராளி தமிழ்க்கவி அவர்களின் போராட்ட வாழ்வை எம்மவர்களில் எத்தனைபேர் அறிந்திருப்பார்கள்.

இவருடனான முதல் சந்திப்பில், இவருக்கும் நண்பர் புதுவை இரத்தினதுரைக்கும் எனக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருப்பதை அன்றைய இவரது  பேச்சில் தெரிந்துகொண்டேன்.  நாங்கள் மூவரும் ஜூலை மாதத்தில் வெவ்வேறு திகதிகளில் பிறந்திருப்பவர்கள்.

அன்று தமிழ்க்கவி அம்மா என்னிடம் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமானது. போருக்குப்பின்னர் ஒரு புகழ்பெற்ற  சிங்களப் புலனாய்வு எழுத்தாளர் இவரைச்சந்தித்து பேசியபொழுது, புதுவை இரத்தினதுரை பற்றி இவர்  விசாரித்திருக்கிறார்.  அந்தப்புலனாய்வாளரோ,   புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினத்தை  இவரிடம் கேட்டு உறுதி செய்திருக்கிறார்.

இருவரும் ஜூலை மாதத்தில் பிறந்திருப்பதை தமிழ்க்கவி அம்மா நினைவூட்டியிருக்கிறார்.  குறிப்பிட்ட  புலனாய்வாளருக்கு புதுவை இரத்தினதுரையின்  பிறந்த திகதியும் தெரிந்திருக்கிறது.

போர் முடிவுற்றதும் சரணடைந்தவர்களில் ஒருவர் புதுவை இரத்தினதுரை. வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு வண.பிதா ஜோசப் அடிகளார் முன்செல்ல புதுவை இரத்தினதுரை, யோகி, லோரன்ஸ் திலகர், இளம்பரிதி, எழிலன், தங்கன், திலக், பேபி சுப்பிரமணியம் உட்பட பலர் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால், இன்றுவரையில் இவர்களுக்கு என்ன நேர்ந்தது ? என்பது தெரியாது.

இது இவ்விதமிருக்க, புதுவை இரத்தினதுரையின் பெயரையும் அவரது பிறந்த திகதியையும் குறிப்பிட்டு அந்த புலனாய்வு எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மாவிடம் விசாரித்திருப்பது பேராச்சரியம்தான்.

அப்படியாயின் வெளிநாடொன்றிலிருந்துகொண்டு இயங்கும் அந்தப்புலனாய்வு எழுத்தாளருக்கு பல விடயங்கள் தெரியும் என்பதிலிருக்கும் உண்மைத்தன்மை குறித்து காணாமல் போனவர்களுக்காக அலுவலகம் அமைத்திருப்பவர்கள் ஆராயவேண்டும்.

இதுகுறித்து நான் அப்போது ஆழ்ந்து யோசித்தமையினால், தமிழ்க்கவி அம்மாவின் ஊழிக்காலம் நாவல் குறித்தும், மலையக மக்கள் தொடர்பான அவருடைய கட்டுரை அவ்வேளையில் எழுப்பியிருந்த சர்ச்சைகள் பற்றியும் மேலும் பேசுவதற்கு  தவறிவிட்டேன். அவரும்  ஒரு கள ஆய்வுப்பணிக்கு செல்லும் அவசரத்திலிருந்தார்.

இறுதியாக 2019 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த 49 ஆவது இலக்கிய சந்திப்பில் இவரது உரத்த குரலைக்கேட்டேன்.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்ட களத்தில் இறுதிவரையிலும் நின்றவர்கள் விடுதலைப்புலிகள். இடையில் சமாதான காலம் வந்தபோது ஆயுதங்களை மௌனமாக்கியிருந்தாலும்,  மீண்டும் களம் புகுந்தனர்.  அதன் முடிவை நாம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் பார்த்தோம்.

அத்தகைய பேரியக்கத்தில் இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக அதன் பல்வேறு பகுதிகளிலும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்திருக்கும் தமிழ்க்கவி அம்மா, விடுதலைப்புலிகள் உருவாக்கிய சட்டவல்லுநர் குழுவிலும் இணைந்திருந்தவர். அத்துடன் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ தேசியத் தொலைக்காட்சி முதலானவற்றில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர்.

சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நடிப்பு, இசை முதலான கலைத்துறைகளிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர்.  அதனால் தமிழ்க்கவி அம்மாவின் இயங்கு தளம் விரிவானது.

தன்னை ஒரு இயக்கமாகவே பிரகடனப்படுத்திக்கொண்டிருந்த தமிழ்க்கவி அம்மாவின் வாழ்க்கை வலி நிரம்பியது.  இனவிடுதலைப்போரட்டத்தில் இவரது குடும்பம் உயிர்த்தியாகங்களை புரிந்திருக்கிறது. அக்கதைகளை கேட்டால்,                 “ இவ்வளவு இழப்புகளின் வேதனைகளையும் சுமந்துகொண்டு  எவ்வாறு நிமிர்ந்து நிற்கிறீர்கள்..? “  என்றுதான் எவருக்கும் கேட்கத் தோன்றும்.  

இறுதிப்போரையடுத்து சுமார் இரண்டு வருடகாலம் தடுப்புக்காவலில் இருந்து மீண்டவர்,  தனது எழுத்துக்களை அச்சுவாகனம் ஏற்றினார்.

தடுப்பு முகாமிலிருந்தபோது நாட்குறிப்பு எழுதுவதையும் கைவிட்டுவிடாமல், அக்குறிப்புகளையே படைப்பு இலக்கியமாக்கியவர்.

2013 இல் தமிழ்நாடு தமிழினி வெளியீடாக வந்துள்ள இவரது ஊழிக்காலம் நாவலில் என்னுரை இவ்வாறு தொடங்குகிறது:

 “ வட்டக்கண்டல் தொடங்கி வட்டுவாகல் வரையான பயணமிது. போராட்டக் காலத்தினூடே, களத்தினூடே நிகழ்ந்தது. வாழ்க்கை அனுபவங்களைப் புடம்போட்டு அதன் சாரத்தை உணரவைத்த பயணம் .  இந்தப்பயணமும் அதன் பின்னரான நடவடிக்கைகளும் எனக்கு ஞானத்தைத் தந்தன என்றால் அது மிகையில்லை. சாவு ஒவ்வொரு தடவையும் கடந்து போனது. வாழ்க்கையின் அழகு, சொத்து, சுகம், நான், நீ, என்னுடையது , உன்னுடையது என்பதெல்லாம் இறுதியில் பொய்யாகிப் போயின.  வாசலில் கோலம் போட்டு வா வா என்றழைத்தவர்கள் முகத்தை திருப்பிக்கொண்டு போனார்கள். யார் நண்பன் யார் எதிரி என்பதும் புரியாமல் போயிற்று.

வீட்டுக்கொருவர் நாட்டைக் காக்க விரைந்து வாரீர் ! என்றும்,

விடுதலையின்றேல் அழிவுகள் தொடரும். புரிந்து வாரீர் ! என்றும்,

எழுந்து வாடா தம்பி இந்த நாடு இருக்குதுன்னை நம்பி ! என்றும்,

வாக்களித்துத் திரட்டப்பட்ட சேனை வலுவிழந்தது எப்படி ? எல்லாம் ஒரு கனவுபோலக் கலைந்தது எப்படி? 

இத்தகைய ஓலத்துடன் எழுதப்பட்ட வரிகளை படித்த பின்னர்தான் தமிழ்க்கவி அம்மாவை நான் முதல் முதலில் சந்திக்கின்றேன். அவரது முகத்தில் யாவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத்தான் சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

 ஊழிக்காலம் நாவலை,  “ தர்ப்பணம் செய்யவும் முடியாமல் போன பல்லாயிரம் உயிர்களுள் ஒன்றாகிக் காணாமல் போய்விட்ட என் பேத்தி மாயாவுக்கு  “ என்று சமர்ப்பணம் செய்துள்ளார் தமிழ்க்கவி அம்மா.

வவுனியாவில் சின்னப்புதுக்குளம் கிராமத்தில் வாழ்ந்த விவசாயக் குடும்பத்தில் மண்ணை நம்பியிருந்த  கந்தப்பு – லட்சுமி தம்பதியரின் பிள்ளைகள் பன்னிரண்டு பேரில் இரண்டாவது பிள்ளை தமயந்திதான், பின்னாளில் ஆளுமை மிக்க பெண்ணாக வளர்ந்திருக்கும் தமிழ்க்கவி அம்மா.

இலக்கிய நண்பர்ஷோபா சக்திக்கு இவர் வழங்கியிருக்கும் நேர்காணலில் சொல்லியிருப்பதை  அதே வார்த்தைகளில் அவரது குரலிலேயே இங்கு தருகின்றேன்.

 “ என் தந்தை காடுவெட்டி, விவசாயி, வேட்டைக்காரன், கடின உழைப்பாளி. அப்பு இரண்டாம் வகுப்புப் படித்தவராம். அம்மா அவரிடம் எழுத வாசிக்கக் கற்றிருந்தார். அப்புவுக்கு கல்கி, கலைமகள், ஆனந்த விகடன் இவற்றுடன் தினசரி வீரகேசரியும் வேண்டும். காலையில் தன் கொட்டப் பெட்டியிலிருந்து பத்துச்சதம் எடுத்து என்னிடம் தருவார். நான் அதை வைத்துக்கொண்டு படலைக்குள் நின்று பேப்பர்காரரிடம் ஒரு ‘வீரகேசரி’ வாங்குவேன். அதில் டார்ஸான், உதயணனின் கடற்கன்னி, கிருஷ்ணாவதாரம் என்பவற்றைப் படித்துவிட்டு அப்புவுக்காக வைத்திருப்பேன்.

ஏழுவயதிலேயே சேனைப்புலவுக்கு குரங்குக் காவல். மந்துக்காடுகளில் மாடு கலைக்க, வட்டுக்காய் குருவித்தலைப் பாகற்காய் ஆய, வற்றுக்குளத்தில் மீனுக்கு கரப்புக் குத்த, சீலைவார, ஊர்ப் பொடியளோடு கிட்டியடிக்க, மாபிளடிக்க, அப்பு பன்றிக்கு வெடிவைத்தால் நெருப்புமூட்ட, வாட்ட, மான்மரைக்கு வெடிவைத்தால் இறைச்சி விற்பனையைப் பார்க்க, காடுகளில் கதிகால் வெட்ட, அப்புவோடு காட்டுக்குப் போக என்றெல்லாம் இயங்கியவள்,  மேலதிகமாக ஒருமைல் தொலைவிலிருந்த பாடசாலைக்கும் போவேன். பாடசாலை விட்டு வந்ததும் சாணியள்ளி பட்டி கூட்ட, மாடுகளைச் சாய்த்துப் பட்டியடைக்க என்று முடிக்க எப்படியும் இருளும். இருண்டதும் சாப்பிட்டுவிட்டு நேரத்தோடு படுத்து நேரங் கழித்து எழுவேன். அப்பு செல்லம், அவரோடுதான் உறங்குவேன். அவரோடு காடு கரம்பையெல்லாம் திரிவேன். வேட்டைக்காடுகளில் தடயம் பார்ப்பது எல்லாம் அத்துப்படி.

என்னுடைய படிப்பை அய்ந்தாம் வகுப்போடு நிறுத்தினார் அப்பு.

“பிள்ளைக்கு எழுத வாசிக்க ஏலுந்தானே இனிக் காணும். பிலவுக்கு குரங்கு வருதம்மா விட்டா இந்த வரிச உழைப்புப் போச்சு” என்றார்.

“ஓ” என்று மகிழ்ச்சியாகத் தலையாட்டி ஏற்றுக் கொண்டேன். அதற்கு முந்தைய வருடம் அய்ந்தாம் வகுப்புக்கான அரசாங்கப் பரீட்சையில் மாகாணத்தில் முதல் மாணவியாகத் தேறியிருந்தேன். அது எனக்கும் தெரியாது, என் வீட்டுக்கும் தெரியாது. ஆனால்,  பாடசாலைக்கு அதற்கான விருது வந்து விட்டது. அப்போது நான் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தேன். பாடசாலையிலிருந்து முத்துலிங்கம் ஆசிரியர் வந்து என் தந்தையைக் கண்டித்து மீண்டும் என்னைப் பாடசாலைக்கு இழுத்துச்சென்றார்.

                                            நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்தது. அப்போது எனது படிப்பு மீண்டும் நின்று போனது. அதற்குப் பிறகு பதினான்கு வயதில் எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள், பதினைந்து வயதில் தாயானேன். முப்பத்தியிரண்டு வயதில் எனக்குப் பேத்தி பிறந்தாள். அது என் வாழ்வின் இருண்ட காலம். இளவயதுத் திருமணங்கள் பற்றி யாரும் பேசினாற்கூட என் உடலும் உள்ளமும் நடுங்குகின்றன. “ 

தமிழ்க்கவியின் வாக்குமூலத்தை கேட்கும்போது நாமும் நடுங்குகிறோம்.  பதறிப்போகிறோம்.

அத்தகைய ஒரு ஏழைக்குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தமிழ்க்கவி என்ற தமயந்தி எவ்வாறு தமிழ் இலக்கியப்பரப்பில், மிகுந்த கவனத்திற்குள்ளான படைப்பாளியாக மாறினார் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்தே நாம் தெரிந்துகொள்கின்றோம்.

வவுனியாவில் வாழ்ந்த காலப்பகுதியில் அங்கு செல்வாக்குடனிருந்த புளட் இயக்கம் இவரது மகனை அழைத்துச்சென்றது. அவனை மீட்டு வந்தபோது, புலிகள் இயக்கம் இழுத்துச்சென்றது. இறுதியில் காணாமலேயே போனான்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் இவரும் புலிகளுடன் சங்கமித்தார்.  அதன் நீதித்துறையில் பணியாற்றினார்.  இறுதியில் சரணடைந்தார்.

வாழ்க்கை இனிது என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே என்றும் வாழ்ந்து காட்டு என்றும் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கிறார்கள்.

போர்க்காலத்து வாழ்க்கை எத்தகையது என்பதை, அதில் வாழ்ந்து காண்பித்து தான் கண்டதையும் அனுபவித்ததையும் படைப்பிலக்கியத்தில் ஆவணமாக்கியிருக்கிறார் தமிழ்க்கவி அம்மா.

இவரது ஊழிக்காலம் நாவல் வன்னி பெரு நிலப்பரப்பின் நிலக்காட்சியை அழகுற சித்திரிக்கிறது. எத்தனை ஊர்களின் பெயர்களை வாசகர்களாகி நாம் அறிந்துகொள்கின்றோம்.  அந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதன் இயல்புடன் சித்திரித்திருந்தார்.

தமிழ்க்கவி  அம்மாவின்      இனி வானம் வெளிச்சிரும்,  இனி ஒருபோதும் , காடுலாவு காதை, நரையன் , வாழ்வாதாரமா சேதாரமா உட்பட   பல பதிவுகள் ஈழத்  தமிழ் சமூகத்தின் ஆவணமாகத் திகழ்பவை.

நான் வதியும் அவுஸ்திரேலியாவின் தேசிய வானொலியான S B S  தமிழ் ஒலிபரப்பில், இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான தெய்வீகனும், பாரிஸிலிருந்து நடு இணைய இதழை வெளியிட்டு வரும் எழுத்தாளர் கோமகனும் தமிழ்க்கவியின் இனி ஒரு போதும் நாவல் குறித்து, அவருடன் நடத்திய உரையாடலை,  இணையத்தில் கேட்டுப்பாருங்கள்.

ஆயுதம் ஏந்திய விடுதலை இயக்கங்கள் தமிழ் ஈழப்போரை நடத்தின. அதில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும்,  ஆயிரக்கணக்கான போராளிகளும் மடிந்தனர். சகோதரப் படுகொலைகளும் நடந்தன.

எம்மிடம் எஞ்சியிருப்பது, இந்தப்போரில் நமது சமூகம் இழந்தவர்கள் பற்றிய நினைவுகளும், தமிழ்க்கவி அம்மா போன்ற இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் அந்தப்போரில் வாழ்ந்து மீண்டவர்களின் பதிவுகளும்தான்.

                                         ---0---

 

No comments: