இலங்கைச் செய்திகள்

கடந்த ஜூலை 13 நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார் 

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழருக்கு வீடு

பிரபல பாடகர் பம்பா பாக்யா காலமானார்

 இலங்கை பிரஜைகள் சிலரின் சொத்துக்கள் பறிமுதல்


கடந்த ஜூலை 13 நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார் 

கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி அதிகாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் நாட்டை விட்டுச் சென்றிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக  விமானப்படை விமானமொன்று அவர்களுக்கு வழங்கப்பட்டதாக, இலங்கை விமானப்படை அறிவித்திருந்தது.

மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

சிங்கப்பூர் சென்ற அவர், அங்கு தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்தார்.

சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி பெற்றிருந்த நிலையில், அக்காலக் கெடு நிறைவடைந்த நிலையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

சுமார் 4 வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர், கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுமார் 3 வாரங்கள் தாய்லாந்தில் தங்கியிருந்த அவர், நேற்று (02) இரவு 11.48 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SU-468 எனும் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு சில அமைச்சர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்க வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 

 
தமிழகம் முழுவதும் இலங்கை தமிழருக்கு வீடு

அமைச்சர் மஸ்தான் உறுதியளிப்பு

தமிழகம் - திண்டுக்கல்லில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை மாதிரியாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்து ஊராட்சிப் பகுதியில், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 17.17 கோடி இந்திய ரூபா செலவில் 321 வீடுகளை நிர்மாணிக்கும்  பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கட்டுமானப் பணிகளை, தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பார்வையிட்டுள்ளார். இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், திண்டுக்கலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 321 வீடுகளை மாதிரியாகக் கொண்டு, தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தக் குடியிருப்புகளை இலங்கைத் தமிழர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 
பிரபல பாடகர் பம்பா பாக்யா காலமானார்

தமிழில் வெளியான எந்திரன் 2.0, சர்கார், பிகில், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களில் பாடிய திரையிசைப் பாடகர் பம்பா பாக்யா நேற்று காலமானார்.

பாடகர் பம்பா பாக்யா தனது  49ஆவது வயதில் நேற்று (02) மாரடைப்பால் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர், எந்திரன் திரைப்படத்தில் புள்ளினங்காள், சர்கார் படத்தில் சிம்ட்டங்காரன், பிகில் படத்தில் காலமே காலமே, பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 

இலங்கை பிரஜைகள் சிலரின் சொத்துக்கள் பறிமுதல்

இந்திய அரசினால் 337 மில். சொத்துக்கள் அரசுடமையானது

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணிய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பணமோசடி தடுப்பு வழக்கில் பறிமுதல் செய்துள்ளதாக இந்தியாவின் அமுலாக்க பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) என்ற இடத்திலுள்ள ஒரு பங்களாவும்,

 திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரம குமார் என்ற குணசேகரன் மற்றும் அவருடைய மகன் திலீப் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விவசாய நிலங்களும் இதில் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் குற்றப்புலனாய்வு பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமுலாக்க பணியகம் பணமோசடி விசாரணையை ஆரம்பித்தது.

குமார், அவரது மகன் மற்றும் பலர், வெளிநாட்டினர் சட்டம், கடவுச்சீட்டு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழுள்ள குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற போலி அடையாள அட்டைகளை உருவாக்கி இந்தியாவில் பயன்படுத்தியுள்ளதுடன் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

விசாரணையில் குமார், சுரேஷ் ராஜ், முகமது ஷெரீப், காமினி என்ற ராஜா மெதுரகெதர ஆகியோர் போதைப்பொருள் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டமை தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2011 ஆம் ஆண்டு குற்றத்துக்காக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை முடிந்த பிறகு, அவர்கள் தங்கள் அடையாளத்தை மாற்றி, குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இச் சொத்துக்களின் மதிப்பை விட சந்தை மதிப்பு அதிகமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    நன்றி தினகரன் No comments: