உலகச் செய்திகள்

 பாகிஸ்தான் வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 1200 ஐத் தாண்டியது

படுகொலை முயற்சி: நூலிழையில் உயிர் தப்பினார் ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 வருட சிறை

 கொர்பச்சேவ் காலமானார்


 பாகிஸ்தான் வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 1200 ஐத் தாண்டியது

பாகிஸ்தான் வெள்ள அனர்த்தத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,200ஐத் தண்டியுள்ளது. இவர்களில 400க்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர்.

பாகிஸ்தானின் தென் பகுதியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஐம்பதாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் 17 மில்லியன் டொலர் வழங்க முன்வந்துள்ளது. பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர உதவி வழங்க 160 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

பருவ மழையின் காரணமாகவும் மலைப் பிரதேசத்தில் பனிப்பாறைகள் உருகுவதாலும் இந்து நதியில் இருந்து வெள்ளம் பெருக்கெடுக்கிறது.

சிந்து மாநிலத்தின் தெற்கில் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கியிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையத்தின் செய்மதிப் படங்கள் காட்டுகின்றன.

பாகிஸ்தானில் வழக்கத்தைவிடப் பத்து மடங்கு அதிகமாக மழை பெய்வதாக ஆய்வு நிலையம் கூறியது.

6.5 மில்லியன் பேருக்கு அவசர உதவி தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 




படுகொலை முயற்சி: நூலிழையில் உயிர் தப்பினார் ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி

துப்பாக்கிதாரி ஒருவரால் குறிவைக்கப்பட்ட ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி கிறிஸ்டீனா பெர்னாண்டஸ் டி சிர்ச்னர் படுகொலை முயற்சியில் இருந்து நுலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

கிறிஸ்டீனா தனது வீட்டுக்கு வெளியில் ஆதரவாளர்களை வரவேற்றிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரது முகத்துக்கு நேரே துப்பாக்கியை நீட்டியுள்ளார்.

அந்தத் துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தபோதும் துப்பாக்கிதாரி விசையை அழுத்தவில்லை என்று ஜனாதிபதி அல்பார்டோ பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

கிறிஸ்டீனா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி நீதிமன்றத்தில் இருந்து திரும்பி இருந்தார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

35 வயதான பிரேசில் நாட்டவர் என்று உள்ளூர் ஊடகங்கள் அடையாளப்படுத்தி இருக்கும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் முயற்சிக்கான காரணத்தை கண்டறியும் விசாரணையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (01) நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி பொர்னாண்டஸ், “கிறிஸ்டீனா தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான தொழில்நுட்ப ரீதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஏனெனில் துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தபோதும் சுடப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலை கண்டித்த அவர் இந்தக் கொலை முயற்சி 1983 இல் நாட்டில் ஜனநாயகம் திரும்பிய பின் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் என்றும் விபரித்தார்.

ஊழல் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்து வரும் 69 வயதான கிறிஸ்டீனாவுக்கு ஆதரவாக அவரின் வீட்டுக்கு வெளியில் அண்மைக்காலத்தில் மக்கள் திரண்டு வருகின்றனர்.

2007 தொடக்கம் 2015 வரை கிறிஸ்டீனா ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது கோட்டையாக உள்ள படகோனியாவில் அரச ஒப்பந்தங்களை மோசடியாக வழங்கியதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவர் குற்றங்காணப்பட்டால் 12 ஆண்டுகள் சிறை மற்றும் அரசியலில் ஈடுபட ஆயுள் காலத் தடையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனினும் அவர் மீது மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அதன் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி தினகரன் 




ஆங் சான் சூகிக்கு மேலும் 3 வருட சிறை

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் தலைவருக்கு ஏற்கனவே 17 வருடங்களுக்கும் அதிகமாக அந்நாட்டு நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





கொர்பச்சேவ் காலமானார்

பனிப்போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவர் மிகைல் கொர்பச்சேவ் தனது 91ஆவது வயதில் காலமானார்.

1985 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கொர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தை உலகுக்கு திறந்துவிட்டதோடு உள்நாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

எனினும் நவீன ரஷ்யா உருவெடுப்பதற்கு காரணமான, சோவியத்தின் மெதுவான வீழ்ச்சியை அவரால் தடுக்க முடியாமல்போனது.

அவரது மரணத்திற்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருவிதோடு “வரலாற்றின் போக்கை மாற்றியவர்” என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அவர் பற்றி வர்ணித்துள்ளார்.

“மிகைல் கொர்பச்சேவ் இரக்கம் மிகுந்த அரசியல் தலைவர். அமைதிக்காக சோர்வின்றி பாடுபட்ட, பலமுனை உறவுகளுக்கு ஆதரவான, மிக உயர்ந்த தலைவர் ஒருவரை உலகம் இழந்துவிட்டது” என்று அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கொர்பச்சேவ்் மறைவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கொர்பச்சேவ் நீண்ட காலமாக தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததாக அவர் மரணித்த மொஸ்கொ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சேருவதும், வீட்டுக்குத் திரும்புவதுமாக அவர் இருந்தார். சிறுநீரக கோளாறு ஒன்றுக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கடந்த ஜுன் மாதம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அவரது மறைவுக்கான காரணம் தற்போது விவரிக்கப்படவில்லை.

“மிக அரிதான தலைவர்” என்று அவரை வர்ணித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பனிப்போர் பதற்றத்திற்கு மத்தியில் வேறுபட்ட எதிர்காலம் ஒன்றை கற்பனை செய்ய காரணமானவராக அவர் இருந்தார்” என்றார்.

கொர்பச்சேவின் துணிச்சலையும், நம்பகத் தன்மையையும் எப்போதும் வியந்து வந்ததாகவும், சோவியத் சமூகத்தை அவர் திறந்துவிட்டது, புடினின் ஆக்கிரமிப்புக் காலத்தில் எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

1985ஆம் ஆண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அதன் வழியாக நாட்டின் தலைவராகவும் ஆனவர் கொர்பச்சேவ்.

அவர் அமெரிக்காவுடன் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களைச் செய்து பனிப்போர் பதற்றத்தை தணித்தார். மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு ஐரோப்பா பிளவுபட்டிருக்கக் காரணமாக இருந்த இரும்புத் திரையை நீக்கினார். ஜெர்மனி மீண்டும் ஒன்றிணையவும் வழிவகுத்தார். 1990ஆம் ஆண்டு அவர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.   நன்றி தினகரன் 





No comments: