எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 29 அவுஸ்திரேலியாவில் இலக்கிய சிற்றிதழ்களின் தோற்றமும் மறைவும் முருகபூபதி

மெல்பனிலிருந்து 1988 – 1989 காலப்பகுதியில் வெளியான மக்கள் குரல் கையெழுத்து மாத இதழ், சமூகத்தில் எதிர்வினைகளையும்


சர்ச்சைகளையும்  ஏற்படுத்தி பின்னர் வெளிவராதுபோனாலும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே அரசியல் விமர்சனத்தேடலுக்கும் மாற்றுக்கருத்து பரிமாறலுக்கும் – இதழ்களை – அவை செய்தி ஏடாகவிருந்தாலும், இலக்கியம் சம்பந்தப்பட்டதாகவிருந்தாலும் வெளியிட முடியும் என்ற நம்பிக்கைக்கு வித்திட்டது.

மக்கள் குரல் ஏற்படுத்திய தாக்கமே 1989 நவம்பரில் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாணவர் அமைப்பின் வெளியீடாக உணர்வு என்ற இதழ் வெளியாகத் தொடங்கியது.

எனினும்,  உணர்வு மூன்று இதழ்களுடன் நின்றுவிட்டது.


1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சுழலும் சக்கரத்தின் சுழலாத புள்ளியே மரபு என்று தனது வருகையை அறிவித்தவாறு மரபு மாத இதழ் வெளிவரத்தொடங்கியது.

அவ்விதழில்   முதலாவது  ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறும் எழுதப்பட்டிருந்தது:

    இச்சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள் யாவும் சஞ்சிகையின் கருத்துக்களை பிரதிபலிப்பவையல்ல. எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வரையறை போடாமல் முழுப்பத்திரிகைச் சுதந்திரத்தையும் அளித்து,  அவர்களின் சிந்தனை ஊற்றுக்கள் சந்திக்கும் ஒரு தளமாகவே இருக்க விரும்புகின்றோம்.  

இவ்வாறு எழுத்தாளனின்  உரிமை – சுதந்திரம் பற்றி மரபு பேசியிருந்தாலும்,  இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும்  என்ற எனது கட்டுரையை முழுமையாக மரபு வெளியிடாமல், அக்கட்டுரையின் முதல் இரண்டு பக்கங்களை மாத்திரமே பிரசுரித்தது.

மரபு ஆசிரியர் விமல். அரவிந்தன் அந்தத்தணிக்கையை


செய்திருக்கமாட்டார். யாரோ  அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

யார் என்பதையும் பின்னாளில் தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பிட்ட நபர்,  வானொலியிலும் ஊடகவியலாளராக பணியாற்றியவர். மரபு எத்தகைய விடயதானங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் பாடம் நடத்தியிருக்கிறார்.

காலப்போக்கில் விடுதலைப்புலிகளின்  பொருளாதார ஆலோசகராகவும் மாறினார்.  சந்திப்புகளுக்காக வன்னிக்கும் அடிக்கடி சென்று வந்தார்.  2009 மே மாதத்திற்கு பின்னர் அவர் எங்கோ அஞ்சாதவாசம் மேற்கொள்கிறார்.


மரபு இதழ் இற்றைக்கு 32 வருடங்களுக்கு முன்னர் இதே செப்டெம்பர் மாதம் வெளிவந்தது.  கடந்த 32 வருடங்களுக்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்…?!

சில வருடங்களில் மரபு இதழும் மறைந்துவிட்டது. எனினும் எனது நெஞ்சறையிலும் சேகரிப்பிலும் குறிப்பிட்ட  கட்டுரை தங்கியிருக்கிறது.

இத்தருணத்தில் எழுத்தாளர் - கலைஞர் குறித்து மூன்று முக்கியமான ஆளுமைகள் சொல்லியிருக்கும் கருத்துக்களை இங்கே தொகுத்துத்  தருகின்றேன்.

   “ எழுத்தாளன் சாதாரண மனிதனைவிடச் சற்று உயர் நிலையில் இருக்கிறான்.  எதனையும் தொகுத்து வகுத்து அலசிப்பார்க்கும் ஆய்வறிவுத்திறனும் , நுட்பமாகத் தன் சூழலைப் புரிந்துகொள்ளும் உணர்திறனும், தான் அறிந்ததை வெளிப்படுத்தும் திறனும் எழுத்தாளனிடம் இருக்கிறது. சாதாரண மனிதன் தன் சிந்தையில் விடும் இடைவெளிகளை எழுத்தாளன் தன் பார்வைத்திறனாலும் சிந்தனைப் பயிற்சியாலும் நிரப்பிச் சிந்தனையை முழுமையாக்குகிறான். பெரியதொரு பின்புலத்தில் அவன் பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறான்.

( பேராசிரியர் சி. மௌனகுரு – நூல்: கலை இலக்கிய கட்டுரைகள்


)

 “ வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை.

கரையைத் தழுவும் அலைகளை

திரும்பிப்போ என்று

எவரும் கட்டளை இடுவதில்லை.

குருவிகளுக்கு இதுதான் உங்கள் கூடு என்று

எவரும் பாதை காட்டி விடுவதில்லை.

கவிஞனும் இப்படித்தான்.

அவனுக்கு எவரும்

அடியெடுத்துக் கொடுக்க முடியாது.

கொடுக்கவும் கூடாது.

மூண்ட நெருப்பைக் காற்றால் தூண்டமுடியுமே தவிர

காற்றே நெருப்பின் மூலமாக முடியாது.

இதுபோன்றதுதான் கவிதையும். 

-      கவிஞர் புதுவை இரத்தினதுரை – நூல் நினைவழியா நாட்கள்


ஒரு படைப்பாளியும் மனிதனே… இன்னும் சொல்லப்போனால், மற்ற மனிதர்களை விடச் சற்று முழுமைபெற்ற மனிதன். தனது வாழ்க்கைச் சூழலில் இருந்தும் அத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் அன்றாடக் கருமங்களிலிருந்தும் முழுவதுமாகத் தன்னைப் பிரித்துக்கொள்வதென்பது அவனால் முடியாத காரியம். எனவேதான் எந்தவொரு படைப்பிலும் ஏதோ ஒருவகையில் இந்த சமூகப்பிரக்ஞை என்பது இடம்பெற்றே தீரும். ஒரு படைப்பாளி பார்த்துக்கொள்ளவேண்டியதெல்லாம், தான் ஒரு பிரசாரகனாக மாறிவிடக்கூடாது என்பது பற்றித்தான். பிரச்சாரம் செய்வது படைப்பாளியின் வேலையல்ல.

எந்தவொரு சமூகப்பிரச்சினைக்கும் தீர்மானமான – முடிவான தீர்வுகளை கொடுக்க எவராலும் இயலாது. சரியா – தப்பா – என்று நியாயம் வழங்குவதோ தீர்வு சொல்வதோ ஒரு படைப்பாளியின் வேலையல்ல. அவனுக்கு அது முக்கியமல்ல. கட்டாயமுமல்ல. சரியுமல்ல    

-      சத்தியஜித்ரே – நூல் ஒரு மேதையின் ஆளுமை – பாலுமகேந்திரா .

 

மரபுவில் வந்த எனது இரண்டு பக்கக் கட்டுரைக்கு ந. இளங்கோ,  கலாநிதி செ. வே. காசிநாதன், சுதந்திரன், சதீஸ் நாகராஜா,


ஆரூரன், எஸ். கே. தாஸ், மாவை தி. நித்தியானந்தன் ஆகியோர் எதிர்வினையாற்றியிருந்தனர்.

 

கலாநிதி காசிநாதன்,   நானோர் சின்னவீரன்தானே… என்ற தலைப்பில் என்னை கிண்டலடித்து எழுதியிருந்தார்.

அதில் அவர் இருபது தடவைகள் பூபதி எனக்குறிப்பிட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினார்.  அவ்வாறு அவர் எழுதியதனால், இந்த நனவிடை தோய்தற்குறிப்புகளை படிக்கும் வாசகர்கள்,  அவரது உரைநடையை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்று வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

 

அக்காலப்பகுதியில் சமகாலம்போன்று ஆளையாள் கழுவி ஊற்றும் முகநூல் இருக்கவில்லை.  ஒரு இதழோ பத்திரிகையோ வெளியானால்,  அதில் இடம்பெறும் படைப்புகள் பற்றிய வாசகர் கடிதங்கள் மாத்திரமே வெளியாகும்.  இலங்கையில் சில இதழ் ஆசிரியர்கள் தாங்களாகவே புனைபெயர்களில் வாசகர் கடிதங்கள் எழுதியிருப்பார்கள்.

 


பின்னாளில்  நம்மவர்களினால் தொகுத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஈழத்து முன்னைய இதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்த்து  இந்த வேடிக்கைகளையும் தெரிந்துகொள்ளமுடியும்.

 

மரபு இதழில் அதன்பிறகும் தொடர்ந்து எழுதினேன்.  எனது கட்டுரைக்கு எதிர்வினையாற்றியவர்களுடனும் தொடர்ந்து நட்புறவோடு பழகினேன்.

 

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ்சமூகத்துக்கான முதலாவது செய்தித்தாள் என்ற பிரகடனத்துடன் 1994 மே மாதம் தமிழ் – ஆங்கிலத்தில் முதலாவது அறிமுக இதழை விக்ரோரியா LIMAT MULTIMEDIA PUBLICATION நிறுவனத்தினர் இரண்டு பக்கங்களில் வெளியிட்டு, பின்னர் இரண்டு மொழிகளிலும் மாதாந்தம் வெளியிட்டனர். ஆரம்பத்தில் விற்பனைக்கு விட்டும் பின்னர் இலவசமாக விநியோகித்தும் இறுதி இதழை ( 1995 ஜூன் ) சஞ்சிகை வடிவத்தில் விற்பனைக்கு விட்டும் பார்த்த மேற்படி நிறுவனத்தினர்,  ஒரு இதழை வெளியிடும் அனுபவத்தையும் பாரிய நட்டத்தையும் புத்திக்கொள்முதலாகப் பெற்றனர்.

 

அதனை வெளியிட்டவர் மருத்துவ கலாநிதி பொன். சத்தியநாதன். தமிழ் உலகத்தின் ஆசிரியர் குழுவில் எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராஜா உட்பட வேறு சிலரும் இருந்தனர்.

 

LIMAT என்றால்  என்ன..?   வாசகர்கள் ஒவ்வொரு எழுத்தையும் வலமிருந்து இடமாக சேர்த்துப்படித்தால் TAMIL என்று புரியும்.

 

குறிப்பிட்ட  1994 ஆம் ஆண்டிலேயே ஜூலை மாதம் சிட்னியிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக  “ மனித மனதை உழுகின்ற கலப்பை உலகத் தமிழர்களின் உணர்வை உயர்த்தி நிற்கும்  “ என்ற அறிவிப்புடன்  கலப்பை என்ற இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் குழுவில் மருத்துவர் கேதீஸ்வரன் இருந்தார்.

 

கலப்பை இதழ் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியானது.

 

இலங்கை மற்றும் ஐரோப்பிய கனேடிய இதழ்களுக்கு எழுதிக்கொண்டே   மெல்பன்   அவுஸ்திரேலிய முரசு, மரபு,   அக்கினிக்குஞ்சு,  தமிழ் உலகம்,  சிட்னி கலப்பை இதழ்களுக்கும் எழுதினேன்.

 

சிட்னியில் 1995 ஆம் ஆண்டு நடந்த கலப்பை முதலாவது ஆண்டுவிழாவில் உரையாற்றுவதற்கும் அழைப்பு வந்து சென்று உரையாற்றித்  திரும்பினேன்.

 

1997 ஏப்ரில் மாதம் மெல்பனிலிருந்து உதயம் – தமிழ் – ஆங்கில மொழிகளில் வெளிவரத்தொடங்கியது.  இதனை வெளியிடுவதற்கு முன்னர் மெல்பன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் ஒரு மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டமும் நடந்தது.

 

ஏன் பத்திரிகை வேண்டும்?  அது எவ்வாறிருக்கவேண்டும் என்ற தொனிப்பொருளில் நண்பர் மாவை நித்தியானந்தன் வருகை தந்திருந்தவர்களிடம் வகுப்பு எடுத்தார்.  உதயம் பத்திரிகையை வெளியிடுவதற்கும்  ஒரு நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. அதன் பெயர்: TAMIL NEWS PTY LTD.

 

உதயம் வெளியிடுவதற்கு பலர் பங்குதாரர்களாக இணைந்தார்கள்.  அவர்களில் சிலர் பணம் செலுத்தினர். சிலர் செலுத்துவதாகச் சொல்லி உறுதியளித்துவிட்டு பின்வாங்கினர்.

 

உதயம் ஆசிரியர் குழுவில் நானும் இணைந்தேன்.  அதில் தமிழ்ப்பகுதிகளுக்கு வரும் செய்திகள், ஆக்கங்களை செம்மைப்படுத்துவது முதல், ஒப்புநோக்குவது கடைகளுக்கு விநியோகிப்பது வரையில் சில பணிகளைச் செய்தேன். 

 

நண்பர்கள் நொயல் நடேசன், இராஜரட்ணம் சிவநாதன், மாவை நித்தியானந்தன்,  கணேசலிங்கம்,  தில்லைக்கூத்தன் சிவசுப்பிரமணியம் ஆகியோரும் உதயம் வெளியீட்டில் பங்கேற்றனர்.

 

இறுதியில் அதில் இணைந்திருந்த சிலர் படிப்படியாக கருத்து முரண்பாடுகளினால் விட்டு விலகினர்.  நடேசன் தொடர்ந்தும்  உதயம் பத்திரிகையை நடத்தினார். அதன் ஆண்டுவிழாக்களையும் ஒழுங்கு செய்தார்.

 

ஜெயமோகன்,  எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா,  பாவண்ணன் ஆகியோர் உதயத்தில் எழுதினர்.   சென்னையிலிருந்து மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம், கொழும்பில் தினகரனில் பணியாற்றிய சிவா சுப்பிரமணியம் ஆகியோரும் எழுதினர்.

உதயம் பத்திரிகை பல சுவாரசியமான அனுபவங்களை சந்தித்தது. 

 

உதயம் பத்திரிகையின் கதையை நான் எழுதுவதை விட, இறுதிவரையில் அதனை நடத்திய நண்பர் நொயல் நடேசன் எழுதுவதுதான் மிகப்பொருத்தமாக இருக்கும்.

 

உதயம் பத்திரிகை செய்த பெரிய நன்மை யாதெனில் நடேசன் என்ற எழுத்தாளரை உருவாக்கியதுதான்.  அவர் தொடர்ந்தும் எழுதிவருகிறார். நாவல், சிறுகதை , பயண இலக்கியம்,  அரசியல் பத்தி எழுத்துக்கள், மற்றும் தனது விலங்கு மருத்துவ தொழில் சார் அனுபவக்கதைகள் என்று எழுதிக்கொண்டே இருக்கிறார்.

 

உதயத்தின் மூலமும் தங்கள் அடையாளத்தை தக்கவைக்க முயன்ற சிலருக்கு மிஞ்சியது என்ன..? எஞ்சியது என்ன என்பதை சுயவிமர்சனம் செய்து பார்க்கவேண்டும்.

 

இணைந்திருந்தவர்கள் விலகிச்செல்லவும், நடேசன் உதயத்தின் முழு நிருவாகப்பொறுப்பினையும் சுமந்தார். அத்துடன் பங்குதாரர்களை ஒரு ஒன்றுகூடல் விருந்துக்கு அழைத்து, அவரவர் பங்குப்பணத்தையும்  திருப்பிக்கொடுத்தார்.  

 

நான் இலங்கையில் பத்திரிகையில் பணியாற்றிவிட்டு , வந்தவன்.  எழுத்துத்தான் எனது அடையாளம்.    ஒரு பத்திரிகையை அல்லது இலக்கிய இதழை நடத்தக்கூடிய அனுபவம் எனக்கு இருந்தபோதிலும்,   அந்த விஷப்பரீட்சையில் ஈடுபடவிரும்பவில்லை.

 

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால்,  அந்த அனுபவத்தின் மூலம்  அவர் திரைப்படங்கள் இயக்குவதற்கு முன்வரவில்லை. 

இறுதியில் உதயம் நிற்கும் வரையில் நடேசனுக்கு பக்கத்துணையாக நானும் கணேசலிங்கமும் நின்றோம்.  கணேசலிங்கம் ஆங்கிலப்பகுதிகளை கவனித்தார்.  நண்பர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உதயத்தில் சினிமா விமர்சனங்கள் எழுதினார்.  அவற்றின் தொகுப்பினையும் திரைக்கண் என்ற பெயரில் அண்மையில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மகிழ் பதிப்பகத்தின் சார்பில் நண்பர் கருணாகரன் இதனை பதிப்பித்துள்ளார்.

உதயம் நின்றாலும் இரண்டு  படைப்பாளிகள் அதன் மூலம் எம்மத்தியில்  அறிமுகமானார்கள்.  அவர்கள்தான் நடேசனும் கிருஷ்ணமூர்த்தியும். இவர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

  உதயம் நிற்கும்  காலப்பகுதியில் இணைய இதழ்கள் வரத்தொடங்கிவிட்டன.  நம்மவர்கள் அச்சிடப்பட்ட   இதழ்கள் – பத்திரிகைகளில் வாசித்துக்கொண்டிருந்த காலம் சென்றுவிட்டது.  தற்போது வாட்ஸ் அப்பில் படித்துக்கொண்டிருக்கின்றோம்.

அனைத்தும் ஒரு சின்னஞ்சிறிய கைத்தொலைபேசிக்குள் வந்துவிட்டது.  யாரும்  யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.  பிடிக்காவிட்டால்,  முடக்கத்தான் முடிகிறது.

 

( தொடரும் )


No comments: