வெள்ளிவிழா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 இந்தியாவின் 75வது சுதந்திரத் தினம் சில தினங்களுக்கு முன்


கொண்டாடப்பட்டது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் இருபத்தைந்தாவது சுதந்திர வெள்ளிவிழா கொண்டாடப்பட்ட போது ,

அதனை முன்னிலைப் படுத்தி தான் இயக்கிய படத்துக்கு வெள்ளிவிழா என்று பெயரிட்டு வெளியிட்டார் இயக்குனர் சிகரம் கே பாலசந்தர்.

படத்தின் பேர் வெள்ளிவிழா என்பதால் எதோ இந்திய சுதந்திரத்தை

முன்னிலைப் படுத்தும் கதை,படம் என்று நினைத்து விடக்கூடாது. படத்தின் ஆரம்பத்தில் 25வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது கதாநாயகன் 25ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்தவற்றை அசைபோடுவதாக கதை தொடங்குகிறது. படம் இரண்டு நாயகிகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு சுதந்திரத்தை இழந்து தடுமாறும் நாயகனின் கதை ஆகும்.இப்படி சொன்னவுடன் கதாநாயகன் யார் என்று யூகித்து விடலாம்.ஆம் காதல் மன்னன் ஜெமினி கணேசன் தான் படத்தின் ஹீரோ.அவரின் ஜோடிகளாக ஜெயந்தி,வாணிஸ்ரீ இருவரும் நடித்திருந்தனர்.இவர்களுடன் பாலசந்தரின் நிரந்தர குரூப்பை சேர்ந்த வி கோபாலகிருஷ்ணன்,மனோரமா,எஸ் வரலஷ்மி,வீ எஸ் ராகவன்,எஸ் வீ சகஸ்ரநாமம் ,எஸ் என் லஷ்மி,ஆகியோரும் நடித்தனர்.

பாலசந்தர் படம் என்றால் நாகேஷ் அதில் நிச்சயம் நடிப்பார்.நீர்க்குமிழி படம் முதல் தொடர்ந்த இந்த உறவு கண்ணா நலமா படத்துடன் அறுந்தது.நாகேஷின் கால்ஷீட் கிடைக்காமல் விரக்தியடைந்த பாலசந்தர் வேறு வழியின்றி நகைச்சுவை வேடத்துக்கு இந்த படத்துக்கு தேங்காய் சீனிவாசனை அமர்த்திக் கொண்டார்.அதன் பிறகு ஐந்து ஆண்டுஆண்டுகள் கழித்து அபூர்வ ராகங்கள் தான் மீண்டும் இவர்களை இணைத்தது.


பிரபல விளையாட்டு வீரனான பாலாவின் மனைவி பானு சுத்த கர்நாடகம்.கணவன் மீது உயிரையே வைத்திருக்கும் அவள் அவனின் ஆசைக்கு இணங்கி மெல்ல மெல்ல தன்னுடைய ஆசாரங்கள் அனுஷ்டானங்களை விட்டுக் கொடுக்கிறாள்.அப்பாவியான தன் மனைவி பானுவுடன் சந்தோசமாக வாழும் பாலாவின் வாழ்வில் சூறாவளியாக நுழைகிறாள் ஷீலா.ஆரம்பத்தில் பாலாவின் ரசிகையாக அவனை நெருங்கும் ஷீலா நாளாவட்டத்தில் தன்னை அறியாமல் அவனை காதலிக்கத் தொடங்குகிறாள்.இதை பார்த்து பானுவின் மனம் பதை பதைக்கிறது.பாலுவோ இருவருக்கும் இடையே திண்டாடுகிறான்.

அப்பாவி மனைவி,துடுக்குக்காரியான காதலி இவர்கள் இருவரையும்

வைத்து அனாயசியமாக தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தார் பாலசந்தர்.அதற்கு அவர் தெரிவு செய்த ஜெயந்தி,வாணிஸ்ரீ இருவரும் கச்சிதம்! காட்சிக்கு காட்சி ஜெயந்தி அப்பாவித்தனத்தைக் காட்டுகிறார் என்றால் வாணிஸ்ரீ துடிப்பாக துள்ளுகிறார்.அவர்களின் பாத்திரத் தன்மையை விளக்கும் விதத்தில் மிருதுவான குரலில் எல் ஆர் ஈஸ்வரி பாடும் காதோடுதான் நான் பாடுவேன் பாடல் தேன் என்றால் அட்டகாசமான குரலில் சுசீலா பாடும் நான் சத்தம் போட்டுதான் பாடுவேன் பாடல்ஒரே காரம்! படைத்த கவிஞர் வாலி,இசையமைத்த வீ குமார் இருவருக்கும் சபாஷ்.இது தவிர வி குமாரின் இசையில் உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா பாடலைப் பெருந்தன்மையோடு பாடி அசத்தியிருந்தார் எம் எஸ் விஸ்வநாதன். இருகோடுகள் படத்தில் புன்னகை மன்னன் பூ விழி கண்ணன் பாடல் மூலம் ஜாலம் செய்த வி குமாரும்,வாலியும் இந்தப் படத்தில் அதே பாணியில் கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி பாடல் மூலம் இனிமை சேர்த்திருந்தார்கள்.

படத்தில் தம்பதிகளாக வரும் தேங்காயும் மனோரமாவுக்கு

எல்லாவற்றிலும் எதிரும் புதிரும்!மனோரமாவின் நடிப்பு ஏ ஒன்! தேங்காயும் ஈடு கொடுக்கிறார்.மருமகளின் மனம் அறிந்து நடக்கும் வேடம் மாமியார் எஸ் வரலஷ்மிக்கு.அவரை வம்புக்கு இழுக்கும் வேலை வாணிஸ்ரீக்கு.பாலசந்தரின் டைரக்ட்ஷன் பல இடங்களில் பளிச்சிட்டது.ஆனால் மாற்றாள் கணவனை துணிந்து காதலிக்கும் ஷீலா பிறகு அவனை மணக்க வாய்ப்பு வரும் போது மதத்தின் மீது பழி போட்டு அதனை மறுத்து அவனை விட்டு பிரிந்து சிங்கப்பூர் போகும் போது கதை தடுமாறுகிறது , பாலசந்தரும் தடுமாறுகிறார்.

என் பாலகிருஷ்ணன் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.என் ஆர் கிட்டு படத்தொகுப்பை கவனித்துக் கொண்டார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது பாலசந்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் படப்பிடிப்பு சில மாதங்கள் தாமதப்பட்டு பின்னர் திரைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகி , பொன்விழா ஆண்டில் இந்தப் படங்கள் வரிசையில் வெள்ளிவிழா இடம் பெறுவது பெருமைதான்!

No comments: