பட்டிக்காடா பட்டணமா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழர்கள் இலட்சக்கணக்கில் இன்று மேல் நாடுகளில் வாழ்ந்து


வருகிறார்கள்.அந்நாட்டின் கலாசாரங்கள்,பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.ஆனாலும் தங்கள் பண்பாடு,கலாசாரங்களை அவர்கள் மறக்கக் கூடாது என்பதை விளக்கும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் தான் பட்டிக்காடா பட்டணமா.

டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவி டைரக்டராக சில காலம் பணியாற்றி

விட்டு இயக்குனரானவர் பி மாதவன்.சிவாஜியின் நடிப்பில் பல வெற்றி படங்களை தந்த இவர் தனது சொந்த பட நிறுவனமான அருண் பிரசாத் முவீஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்தார்.ஏற்கனவே இவர் தயாரித்து டைரக்ட் செய்த எங்க ஊர் ராஜா,ராமன் எத்தனை ராமனடி படங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்தப் படமும் தயாரானது.

சோழவந்தான் கிராமத்தை சேர்ந்த மூக்கையா சேர்வை ஊரில் மதிப்பும்,மரியாதையையுமாக வாழ்கிறான்.ஊரில் அவன் இட்டதே சட்டம் ஆகிறது.அவனின் முறைப் பெண் கல்பனா லண்டனில் படித்து விட்டு பெற்றோருடன் ஊருக்கு வருகிறாள்.அங்கே மூக்கையா தலையில் குடிமியுடனும்,வேட்டியம் சால்வையுமாக கையில் தீச்சட்டி ஏந்தி ஆடிப் பாடுவதை கண்டு அதிசயிக்கிறாள்.அவனின் வீரத்தை மெச்சுகிறாள்.சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனை திருமணமும் செய்கிறாள்.ஆனால் அவளுடைய நாகரீக மோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மூக்கையா தடுமாறுகிறான்.இருவரின் மண வாழ்விலும் விரிசல் ஏற்படுகிறது.இதற்கிடையில் மூக்கையாவை ராக்கம்மாவுக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது.கல்பனா, மூக்கைய்யா மீண்டும் இணைந்தார்களா,பட்டிக்காடும்,பட்டணமும் சேர்ந்ததா என்பதுதான் மீதிக்கு கதை.


மூக்கைய்யாவாக வரும் சிவாஜி பாத்திரமாகவே மாறி விட்டார்.ஒவ்வோர் காட்சியிலும் அவர் காட்டும் நடிப்பு கன ஜோர்.சந்தோசம் சோகம் இரண்டு குணாம்சங்களையும் அருமையாக காட்டியிருந்தார்.
கிராமத்து மூக்கையாவாக வரும் சிவாஜி சில காட்சிகளில் நகரத்து முகேஷாகவும் வருகிறார். அலட்சியம்,திமிர்,என்று வரும் கதாபாத்திரம் ஜெயலலிதாவுக்கு புதிதில்லை.இப் படத்திலும் அதனை இலகுவாக செய்திருந்தார்.ஆனாலும் இறுதி காட்சியில் தாயுடன் அவர் வாதாடும் காட்சியில் உணர்ச்சிகரமாக நடிதித்திருந்தார்.

இயக்குனர் பீம்சிங்கின் துணைவியான சுகுமாரிக்கு அவரே தராத நல்லதொரு கதாபாத்திரத்தை மாதவன் வழங்கியிருந்தார்.சுகுமாரியும் விட்டு வைக்கவில்லை.அவருக்கு சரி ஜோடி வி கே ராமசாமி என்ன போடு போடுகிறார்.இவர்களுடன் மனோரமா,எம் ஆர் ஆர் வாசு பண்ணும் கூத்து செம காமெடி.இவர்களுடன் எஸ் என் லட்சுமி,செந்தாமரை,ராக்கம்மாவாக புதுமுகம் சுபா ஆகியோரும் நடித்திருந்தனர்.

இப்படி பொருத்தமான நடிகர்கள்களைக் கொண்டு பாத்திரங்களை

பலப்படுத்தி இருந்தார்கள்.படத்திற்கு கதை வசனம் எழுதியவர் பாலமுருகன்.இவருடைய நேர்த்தியான கதையும்,கருத்தான வசனங்களும் காட்சிகளை மெருகூட்டின.மாப்பிள்ளை லண்டன்ல ,பொண்ணு கர்ப்பம் இது எப்படி என்ற வசனம் தியேட்டர்களை அதிர செய்தது.அந்த காலத்தில் வியாபாரத்துக்கு வெளிநாடு செல்லும் நம்மவர்கள் அங்கே நம் கலை கலாசாரங்களை பரப்பி விட்டு வருவார்கள் இப்போ அங்கே போய் வரும் சிலதுகள் இங்கேவந்து கண்டதையும் பரப்பறாங்க என்ற வசனம் காலம் கடந்தும் ஒலிக்கிறது.ஆனாலும் ஜெயலலிதா அடிக்கடி நான் லண்டன் ரிட்டர்ன் என்று சொல்வது செயற்கையாக தெரிந்தது!


படத்திற்கு மேலும் பலம் சேர்த்து பாடல்கள்.என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என்நெஞ்சை இழுக்குதடி,கேட்டுகோடி உறுமி மேளம்,அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆளவந்து,நல்வாழ்த்து நான் சொல்லுவேன் ஆகிய கண்ணதாசனின் பாடல்கள் விஸ்வநாதனின் இசையில் ரசிகர்களை சுண்டி இழுத்தது.

படத்தின் பெரும் பகுதி சோழவந்தானில் படமாக்கப்பட்டது.பி என் சுந்தரம் ஒளிப்பதிவை கையாண்டார்.ஆனாலும் படம் கருப்பு வெள்ளையில் உருவானது ஒரு குறைதான்.தமிழகத்தில் வெள்ளிவிழா கண்ட பட்டிக்காடா பட்டணமா இலங்கையிலும் வெற்றி படமானது.





No comments: