யாழ். குடாநாடு, எங்கிருந்து எங்கே செல்கிறது …? அவதானி

 அண்மையில் மறைந்த எலிஸபெத் மகாராணியாரின் இறுதி


நிகழ்விற்கு சென்றவர்கள் எத்தனைபேர், அவரது மருமகள் வேல்ஸ் இளவரசி  டயானாவின் இறுதி நிகழ்வுக்கு எத்தனைபேர் சென்றனர்..? என  அனைத்துலக சமூகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் அதேசமயம்,  இலங்கையில் யாழ். குடாநாட்டில் எத்தனைபேர் தற்போது கெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கின்றனர் என்ற புள்ளி விபரங்களை வைத்து ஆழ்ந்த கவலையில் இருக்கின்றனர் சமூக நலன் குறித்து சிந்திக்கும் அவதானிகள்.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் வடக்கிற்கு  வருகை தந்த இஸ்ரேலிய


விஞ்ஞானிகள்,  இங்கு நிலத்தடி நீரை பரிசோதித்துவிட்டு,  காலப்போக்கில் இந்நீர் உவர்ப்பாக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது என எச்சரிக்கையாக சொல்லிவிட்டுச்சென்றதாக  முன்னர் கூறப்பட்டது.

குறிப்பிட்ட ஏழு தசாப்த காலத்தில், வடபுலத்திலிருந்து  தென்னிலங்கையில்  அமைந்த  பாராளுமன்றத்திற்கு சென்ற மக்களின் பிரதிநிதிகள் நன்னீர், உவர் நீராக மாறுவது குறித்து ஆராய்ந்து அதற்கு மாற்று நடவடிக்கை எடுத்தார்களா..?

1970 இற்குப்பின்னர்  வடக்கிலிருந்து  உருவான ஆயுதம் ஏந்திய விடுதலை இயக்கங்களாவது ஏதும் உருப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தார்களா..?

நல்ல குடிநீருக்காக மக்கள் கோயில் கிணறுகளை நோக்கி படையெடுத்த காட்சிகளைத்தான் பார்த்தோம்.  அவ்வாறு சென்றவர்களின் சாதி அடையாளம் குறித்தும் கவனம் செலுத்திய மேட்டுக்குடி  சமூகத்தையும் கடந்து வந்திருக்கின்றோம்.

1970 களில் புங்குடுதீவு பிரதேசத்தில் வாழ்ந்த எமது தமிழ் மக்கள்,  ஒருவரை மறந்திருக்கமாட்டார்கள்.  அங்கிருந்த கண்ணகி ஆலயத்தில் இருந்த குடிநீர் கிணற்றில் அடிநிலை மக்களும் தண்ணீர் பெறல்வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து அந்த  காந்தீயவாதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.  இறுதியில் உயர் சாதிமான்களின் தூண்டுதலினால், காவலர்களிடம் அடிவாங்கியே இறந்தார்.


இவரை இன்றைய தலைமுறை அறியுமா..?

அவர்தான் எழுத்தாளரும் சிந்தனையாளருமான மு. தளையசிங்கம். பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள், யாழ்ப்பாண கலாசாரம் கந்த புராணக் கலாசாரம் என்றார்.  அதே கலாசாரம் ஒரு கால கட்டத்தில் ஆயுத கலாசாரமாக திரிபடைந்தது,  பின்னர்  ஜனநாயகத்தின் பேரில் தற்போது, பல்வேறு அரசியல் கட்சிகளின் தோற்றுவாயாக யாழ். குடாநாடு  மாறியிருக்கிறது.

அதன் பெறுபேற்றை அண்மையில் தியாகி திலீபனின் நினைவு தின நிகழ்விலும் காண முடிந்தது.

இறுதியில் இனிவரும் காலத்தில் தியாகி திலீபனை நினைவு கூர்வதற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இதேவேளை,  “ கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்  “ என்ற தொனிப்பொருளில் தொடங்கப்பட்ட போராட்டம். வானத்தில் பட்டம் விட்டும் கவனஈர்ப்பை நடத்தும் காட்சிகளையும் அவதானிக்க முடிகிறது.

அத்துடன் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி ( P to P ) வரையில் தொடங்கப்பட்ட பேராட்டத்திற்கு வேறு வடிவங்கள் வழங்கி,  அதற்கும் உரிமை கோரும் சாரார் நடத்தும் அறிக்கை சமர்களும் வெளியாகின்றன.  

இது தொடர்பான செய்திகளுக்கு மத்தியில்தான் மக்களை பதற வைக்கும் போதைப்பாவனை பெருக்கம் தொடர்பான செய்திகளும் வெளிவருகின்றன.

தீம்புனலின் கடந்த வார இதழிலும் இது பற்றி சுட்டிக்காண்பித்திருந்தோம்.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் கெரோய்ன் போதைக்கு அடிமையான  பத்துப்பேர் இறந்திருப்பதாகவும், முன்னூறுக்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்  130 பேருக்கும் மேல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும்,  பெரும்பாலும் 18 முதல் 23 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினரே இந்நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் உயிர்க்கொல்லியின்  தீவிரம், யாழ். மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் எனச்சொல்லப்படும் எவரது கண்களுக்கும் இதுவரையில் தென்படவில்லையா…?

கண்களை  பாதுகாக்கும் இமை கண்களுக்குத் தெரியாதிருப்பது  உடல் அமைப்பின் காரணம்.  ஆனால்,  எதிர்காலத்தையே உருவாக்கவேண்டிய  இளம் சமுதாயம், தங்களுக்கு வாக்களித்து அனுப்பும் தலைமுறை இவ்வாறு படிப்படியாக அழிவின் விளிம்பை நோக்கி நகர்வது தெரியாமல் இருக்கிறதா..?

பொலிஸ்காரர்கள் செய்யவேண்டிய வேலையை நாம் ஏன் செய்யவேண்டும் என்ற மனப்பான்மையில் இந்த மக்கள் பிரதிநிதிகள், கண்டும் காணாமலும் இருக்கிறார்களா..?

 “ விடுதலைப்புலிகளின் காலத்தில் யாழ். குடாநாடு மாத்திரமல்ல வடக்கு – கிழக்கு தமிழர் பிரதேசம் எங்கும் போதை வஸ்து உட்புகவில்லை.  எவரும் கசிப்பு காய்ச்சி விற்கவில்லை  “  என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறாயின்,  புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், இயங்கும் முன்னாள் போராளிகளின் அமைப்புகள் , தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள், இன்னமும்  13 ஆவது திருத்தச்சட்டம்,  ஜெனீவாவுக்கான தீர்மானம் பற்றி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும்  தமிழ் அரசியல் வாதிகளால், ஏன் யாழ். குடாநாட்டை இந்த உயிர்கொல்லியிலிருந்து  முற்றாக விடுவிக்க முடியவில்லை…?

எவ்வாறு…  எந்த மார்க்கத்தில் யாழ். மாவட்டத்திற்குள்  இந்த போதைப்பொருள் வருகிறது..?  யார் விநியோகிக்கிறார்கள்…? என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டியவர்கள் பொலிஸார் மாத்திரமல்ல,  அந்தக்கடமை மக்களிடம் தேர்தல் காலத்தில் வாக்குப்பிச்சை கேட்டுவரும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறது.

இதுவிடயத்தில் குறைந்தபட்சம் பிரஜைகள் குழுக்களுடன் இந்த மக்கள் பிரதிநிதிகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளில் துரிதமாக இறங்கவேண்டும்.

மாநகர சபை, மற்றும் பிரதேச சபைகள்  தங்களிடம் நீடித்திருக்கும் தன்முனைப்பு ஆணவத்தையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு,  இளம் தலைமுறையை சரியான வழியில் அழைத்துச்செல்வதற்கு ஏற்ற செயற்பாடுகளில் தாமதமின்றி இறங்கவேண்டும்.

போதைக்கு அடிமையான தமது பிள்ளைகளை பெற்றவர்களே பொலிஸாரிடம் ஒப்படைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

போதைக்கு அடிமையான சிறுவன்,  ஏழுவயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தியையும்,  உடன் பிறந்த சகோதரியையே ஒருவன் வன்கொடுமை செய்து, அவள்  தற்கொலை செய்துகொண்ட செய்தியையும் அறியும் துன்பியல் கலாசாரத்திற்குள் எம்மவர் மூழ்கியிருக்கின்றனர்.

இப்போது  எதனை உடனடியாக கவனிக்கவேண்டும்..? என்ற உணர்வு யாழ். குடாநாட்டு அரசியல்வாதிகளிடத்திலும் நாடாளுமன்றம் சென்ற மக்கள் பிரதிநிதிகளிடத்திலும் வரல்வேண்டும்.

இல்லையேல்,  யாழ். குடாநாட்டின் நன்நீர் படிப்படியாக உவர் நீராக மாறியதுபோன்று,  ஒரு இளம் தலைமுறையையே நாம் உயிர்கொல்லி போதைக்கு இழந்துவிடுவோம். 

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்யாதீர்கள்.

---0--- 
No comments: