இலங்கைச் செய்திகள்

வழக்கு விசாரணை நவ.17க்கு ஒத்திவைப்பு

தேசிய சபைக்கு 27 உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நேற்று நியமனம் 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி

வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்

நிலக்கரி இறக்குமதியை தடுக்க சதித் திட்டம்

சட்டவிரோத ஆர்ப்பாட்ட பேரணி என தெரிவித்து 83 பேர் கைது

வசந்த முதலிகேயின் மனு விசாரணை ஒக்டோபர் 18 இல்


வழக்கு விசாரணை நவ.17க்கு ஒத்திவைப்பு 


பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பாகி சிறையிலடைக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு அப்போதய ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நேற்று (23) இடம்பெற்றது.

இதன்போது இந்த விசாரணையை நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.    நன்றி தினகரன் 
தேசிய சபைக்கு 27 உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நேற்று நியமனம் 

07 தமிழர்கள், 05 முஸ்லிம்களும் நியமிப்பு
 
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சபாநாயகர் தலைமையிலான தேசிய சபையில் 07 தமிழர்களும் 5 முஸ்லிம்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. வழமையான பணிகளுக்குப் பின்னர் கடந்த 20ஆம் திகதியன்று பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட தேசியசபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

தேசிய சபையின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுவதுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருடன் அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் 27 பேர் இந்த தேசியசபையில் செயற்படுவரென்றும் சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவு செய்த 35க்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய சபைக்கு நியமிக்கப்படவேண்டுமென்ற விதி முறைக்கமைய 27 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தேசிய சபையில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர்களான சிசிர ஜயக்கொடி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டிரான் அலஸ், பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம் அதாவுல்லா , திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்ச, உதய கம்மம்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரோஹித்த அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரதன தேரர், அசங்க நவரட்ண, சி.வி விக்னேஸ்வரன், வாசுதேவ நாணயக்கார, வீரசுமண வீரசிங்க, சாகர காரியவசம் ஆகியோர் மேற்படி சபையின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

குறுகிய, நடுத்தர, நீண்ட கால தேசிய கொள்கைகளைத் தயாரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்குரிய முன்னுரிமைகளை நிர்ணயித்தல், பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய , நடுத்தர பொது குறைந்தபட்ச வேலைத்திட்டம் தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்தல் , அமைச்சர்கள் விசேட தெரிவுக்குழுக்களின் தலைவர்கள், இளைஞர் அமைப்புகளை கண்காணிப்போரின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டத்துக்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது தேசிய சபையின் பொறுப்பாகும்.

தற்போது நடைமுறையிலுள்ள தெரிவுக்குழுக்களிடமிருந்து அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் இயலுமையும் தேசிய சபைக்கு காணப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்    நன்றி தினகரன் 
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி

- பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியினால் நடவடிக்கை

கொழும்பு மாவட்டத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி 

வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க கொண்ட அரச இரகசிய சட்டக் கோவையின் 2ஆவது பிரிவின் கீழ், பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் (கொழும்பு மாவட்டம்)

 • பாராளுமன்றம்
 • உயர், மேல், நீதவான் நீதிமன்றங்கள்
 • சட்ட மா அதிபர் திணைக்களம்
 • ஜனாதிபதி செயலகம்
 • ஜனாதிபதி மாளிகை
 • கடற்படை தலைமையகம்
 • பொலிஸ் தலைமையகம்
 • பாதுகாப்பு அமைச்சு
 • அக்குரேகொட இராணுவத் தலைமையகம்
 • விமானப்படை தலைமையகம்
 • பிரதமர் அலுவலகம்
 • அலரி மாளிகை
 • பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள - நன்றி தினகரன் வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்


யாழ். காரைநகரில் 10 பேர் அதிரடி கைது
 
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர் கசூரினா கடற்கரைக்கு ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் சுற்றுலா வந்திருந்த போது அங்கு போதையில்இருந்த ஒரு குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் இருந்த 10 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.    - நன்றி தினகரன் 

நிலக்கரி இறக்குமதியை தடுக்க சதித் திட்டம்

- மின்வெட்டு நேரத்தை நீடிக்கவும் முயற்சி

இலங்கைக்கு உரிய நேரத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடுக்கும் சதி நடப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த நேரத்தில் நிலக்கரி விநியோகத்தை மறுப்பதற்கும் மின்வெட்டை நீடிப்பதற்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். சமீபத்தில் வழங்கப்பட்ட நிலக்கரி விலைமனுக்கள், கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை விட குறைவான ஏலத்துக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கை நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யத் தவறினால் அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், எனவே அவசர முடிவொன்றை எடுப்பதற்கு அமைச்சரவை உபகுழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்ததாகவும், மக்களை பாதிக்காத வகையில் கொள்முதல் செய்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்வெட்டு நீடிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் மின் உற்பத்தி நிலையத்தை மூடுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முடிவுகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அமைச்சரவை துணைக் குழு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில், தேசிய அவசர தேவையாக நிலக்கரி கொள்முதல் செய்யப்படும்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கை மீண்டும் மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வாய்ப்புள்ளது. 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குள் நிலக்கரி கிடைக்காவிட்டால் நாளாந்த மின்வெட்டு பத்து மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.    நன்றி தினகரன் 

சட்டவிரோத ஆர்ப்பாட்ட பேரணி என தெரிவித்து 83 பேர் கைது

- அடிப்படை கருத்துச் சுதந்திரம் மீறப்படுகிறது; கண்டனம் வெளியீடு

நேற்று பிற்பகல் மாலை லிப்டன் சுற்றுவட்டத்தில் சோசலிச வாலிபர் சங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த போது, ​​தொடர்ந்தும் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறித்த 83 பேரை பொலிஸ் காவலில் எடுத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லிப்டன் சுற்று வட்டத்திலிருந்து டீன்ஸ் வீதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லத் தொடங்கியவுடன், அது 1865 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டளைச் சட்டம் இலக்கம் 16 மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டவிரோதமானது எனவும் கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பொலிசார் அறிவித்தனர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் சென்ற போது அவர்களை கலைந்து செல்லும்படி பொலிசார் மீண்டும் நடவடிக்கை எடுத்தனர், அதையும் பொருட்படுத்தாமல் டீன்ஸ் வீதி வழியாக போராட்டத்தை தொடர்ந்ததால், தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, அது சட்டவிரோத போராட்டம் என்பதால் மீண்டும் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல எச்சரிக்கைகளையும் மீறி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது இது தடவைகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி, ஒரு சட்டவிரோத ஆர்ப்பாட்டம் என்பதாலும், வீதியில் பயணிக்கும் நபர்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைய முயற்சித்தால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டங்களின் பிரகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தேவையான பலத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 77 ஆண்களும், 04 பெண்களும், 2 பௌத்த பிக்குகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சோசலிச வாலிபர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகரவும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது கருத்துக் கூறும் அடிப்படை உரிமை மீறப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மற்றும் சிவில் அமைப்புகள் இக்கைது நடவடிக்கை எதிராக குரல் கொடுத்து வருவதோடு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

நன்றி தினகரன்

வசந்த முதலிகேயின் மனு விசாரணை ஒக்டோபர் 18 இல்

உயர்நீதிமன்றம் நேற்று அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்கள செயற்பாட்டாளர்களான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர்- வசந்த முதலிகே உட்பட்ட மூவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.

பிரியநாத ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று அழைக்கப்பட்டன. இதன்போது, அடிப்படை உரிமைமீறல் மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.    நன்றி தினகரன்
No comments: