உலகச் செய்திகள்

 இராணுவத்தை அணிதிரட்ட புட்டின் அதிரடி உத்தரவு

ரஷ்யாவில் போருக்கு எதிரான பேரணிகளில் 1,300 பேர் கைது

ஈரானில் ‘ஹிஜாப்’ ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்: பலி ஒன்பதாக அதிகரிப்பு

தாய்வானை பாதுகாக்க பைடன் மீண்டும் உறுதி

சிரியாவில் தஞ்சப் படகு மூழ்கியதில் 61 பேர் பலி


இராணுவத்தை அணிதிரட்ட புட்டின் அதிரடி உத்தரவு

மேற்கு நாடுகள் மீதும் எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக இராணுவ அணிதிரட்டலுக்கான உத்தரவை ரஷ்யா நேற்று (21) பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான போர் ஏழு மாதங்களை எட்டி இருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டு மக்களுக்கு நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ரஷ்ய ஆட்புலங்களை தாம் பாதுகாத்திருப்பதாகவும் மேற்குலகம் நாட்டை அழிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (21) புதன்கிழமை அமுலாகும் வகையில் பகுதியளவு இராணுவ அணிதிரட்டல் உத்தரவில் கையெழுத்திட்டதாகவும் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதியளவு அணிதிரட்டலின் கீழ் 300,000 மேலதிக படையினர் அழைக்கப்பட்டிருப்பதோடு அது கடந்த கால இராணுவ அனுபவம் இருப்பவர்களுக்கு பொருந்தும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது ஏற்கனவே இராணுவப் பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களையும் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு பணிகளில் உள்ளோரையும் திரட்ட புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் அழித்துவிட மேற்கு நாடுகள் சதிசெய்வதாக புட்டின் குற்றம்சாட்டினார்.

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் பின்னடைவை சந்தித்தும் சில பகுதிகளில் சுற்றிவளைப்பை எதிர்கொண்டிருக்கும் நிலையிலேயே மேலதிக துருப்புகள் அழைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் ரஷ்ய கட்டுப்பாட்டு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து சர்வஜனவாக்கெடுப்புகளை நடத்தும் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியான அடுத்த தினமே புட்டின் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

எனினும் இத்தகைய போலியான தேர்தல்களை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

“எமது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், எமது மக்களை பாதுகாப்பதற்கு நாம் அனைத்தையும் செய்வோம்” என்று புட்டின் குறிப்பிட்டார். பதிலடி கொடுப்பதற்கு ரஷ்யாவிடம் அதிக ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

உக்ரைனின் லுஹன்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளை ஒன்றிணைத்த டொபாஸ் பிராந்தியத்தை சுதந்திர நாடுகளாக ரஷ்யா கருதுகிறது. எனினும் உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

டொனெட்ஸ்கில் சுமார் 60 வீதமான பகுதி தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு லுஹன்ஸ்கின் கிட்டத்தட்ட அனைத்து நிலங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

எனினும் ரஷ்ய படை தற்போது உக்ரைனில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அண்டை மாகாணமான கார்கிவில் இருந்து ரஷ்ய துருப்புகள் இந்த மாதத்தில் பின்னடைவை சந்தித்ததோடு, லுஹன்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் முன்னரங்குகளில் பெரும் பகுதிக்கான விநியோகப் பாதைகளையும் இழந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்ய இராணுவ அணிதிரட்டல் அறிவிப்பு உக்ரைன் போரை வேகப்படுத்தும் திட்டத்தை காண்பிப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.    நன்றி தினகரன் 

 



ரஷ்யாவில் போருக்கு எதிரான பேரணிகளில் 1,300 பேர் கைது

உக்ரைன் போருக்காக ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புகளை அணிதிரட்டும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவுக்கு எதிராக ரஷ்யாவில் இடம்பெற்ற பேரணிகளில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 1,300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செயின் பீட்டர்ஸ்பேர்க் மற்றும் மொஸ்கோவில் பெரும் எண்ணிக்கையானோர் கைதாகி இருப்பதாகவும் ரஷ்ய மனித உரிமைகள் குழுவான ஓ.வி.டி–இன்போ தெரிவித்துள்ளது. மொஸ்கோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், “போர் வேண்டாம்” என்று மக்கள் கோசம் எழுப்பியதோடு செயின் பீட்டர்ஸ்பேர்க்கில் அணிதிரட்டலுக்கு எதிராக குரலெழுப்பினர்.

இராணுவம் மற்றும் போரை விமர்சிப்பதற்கு எதிராக ரஷ்யாவில் கடும் சட்டங்கள் இருந்தபோதும் 38 நகரங்களில் கடந்த புதன்கிழமை (21) இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அனுமதியற்ற ஒன்றுகூடல்களுக்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 




ஈரானில் ‘ஹிஜாப்’ ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்: பலி ஒன்பதாக அதிகரிப்பு

ஈரானின் கண்டிப்பான ஹிஜாப் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெடித்த ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

இதில் பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடு நடத்தியதில் 16 வயது சிறுவன் ஒருவனும் கொல்லப்பட்டுள்ளான். தலைநகர் டெஹ்ரான் உட்பட 20 பிரதான நகரங்களுக்கு இந்த பதற்ற சூழல் பரவியுள்ளது.

இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெண்கள் தமது ஹிஜாப் துணியை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

22 வயதான மஹ்ஷா அமீன் என்ற பெண் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக அறநெறிப் பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தாக்கப்பட்டதாக கூறப்படுவதை பொலிஸார் மறுத்து வருகின்றனர்.

நன்றி தினகரன் 




தாய்வானை பாதுகாக்க பைடன் மீண்டும் உறுதி

சீனாவின் தாக்குதல் ஒன்றில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின்போது, அமெரிக்க துருப்புகள் தாய்வானை பாதுகாக்குமா? என்று கேட்கப்பட்டபோது, “ஆம், உண்மையில், அது முன்னெப்போதும் நிகழாத ஒன்றாக இருக்கும்” என்று பதிலளித்தார்.

இருப்பினும் தாய்வானுக்கான அமெரிக்கக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தாய்வான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இராணுவ ரீதியாக அமெரிக்கா பதிலடி கொடுக்குமா என்பதற்கு வொஷிங்டன் நீண்ட காலமாகத் தெளிவான பதிலை வெளியிட்டதில்லை.

இருப்பினும் அமெரிக்கா, தாய்வானின் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்று பைடன் கூறினார்.

‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து கடப்பாடு தெரிவிக்கும் என்று அவர் கூறினார்.

கிழக்கு சீன கடற்கரைக்கு அப்பால் இருக்கும் சுயாட்சி புரியும் தீவான தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. இது தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து முறுகல் நீடிக்கிறது.

தாய்வானுடன் நெருக்கமான உறவை பேணி வரும் அமெரிக்கா அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.   நன்றி தினகரன் 




சிரியாவில் தஞ்சப் படகு மூழ்கியதில் 61 பேர் பலி

லெபனானில் இருந்து தஞ்சக்கோரிக்கையாளர்களை ஏற்றி வந்த படகு ஒன்று சிரிய கடல் பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர் தப்பிய இருபது பேர் தெற்கு சிரிய நகரான டார்டூசில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லெபனான் துறைமுக நகரான திரிபோலிக்கு அருகில் இருக்கும் மின்யேவில் இருந்து 120 தொடக்கம் 150 வரையானோரை இந்தப் படகு ஏற்றி வந்ததாக உயிர் தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் கடுமையான காலநிலைக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. லெபனானில் 1.5 மில்லியன் சிரிய அகதிகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 14,000 அகதிகள் வாழ்கின்றனர். லெபனானில் தற்போது மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் அந்நாட்டில் உள்ள அகதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டில் வாழும் அகதிகள் மற்றும் குடியேறிகள் ஐரோப்பா உட்பட வேறு இடத்திற்கு செல்ல முயன்று வருகின்றனர். இந்நிலையில் மூழ்கிய படகில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட லெபனான், சிரியா மற்றும் பலஸ்தீன நாட்டவர்கள் இருந்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.

ஐரோப்பாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே அந்தப் படகு மூழ்கியுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் லெபனானில் இருந்து தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு ஒன்று ஐரோப்பாவை நோக்கி பயணித்தபோது துருக்கிக் கடலில் மூழ்கியதில் சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். நான்கு படகுகளில் இருந்து 73 குடியேறிகள் மீட்கப்பட்டதாக துருக்கி கரையோர காவல் படை கூறியது.   நன்றி தினகரன் 



No comments: