கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும், தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை அண்மையில் படிக்க நேர்ந்தது.
தமிழர் தகவலை கடந்த மூன்று
தசாப்த காலமாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக வெளியிட்டுவரும், இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் “ எஸ்தி
“ என அழைக்கப்படும் எஸ். திருச்செல்வம் அவர்களின் கடின உழைப்பு அதன் தொடர் வருகைக்கு
சாட்சி பகருகின்றது.
சிறந்த பல ஆக்கங்களை உள்ளடக்கி
மாதந்தோறும் தமிழர் தகவலை வெளியிட்டுவரும்
எஸ்தி, ஆண்டுமலரையும் அதிக பக்கங்களில் வெளியிட்டு அதன் உள்ளடக்கத்திற்கு கனதியை சேர்த்து
வருபவர்.
ஊடகத்துறையில் அவர் பெற்றிருக்கும்
பட்டறிவே, தமிழர் தகவலுக்கும் மூலதனம் எனச்சொல்லலாம்.
எஸ்தியின் ஊடக வாழ்வு குறித்தும், அதனால் அவர் கற்றதையும்
பெற்றதையும் இழந்ததையும் பற்றி தனியாக – விரிவாகவே எழுதமுடியும். அதனைத்தவிர்த்துக்கொண்டு 30 ஆவது ஆண்டுமலருக்குள் பிரவேசிக்கின்றேன்.
“ சாதனச் சமூகவியலில் (Media sociology) தகவல்
பதிவும் தகவல் பரிமாற்றமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள். இந்த இலக்குடன்தான்
முப்பதாண்டு காலம் தமிழர் தகவல் உருமாறாது வெளிவந்துகொண்டிருக்கிறது.
மனித வாழ்வின் வளர்ச்சிக்கும்
உயர்ச்சிக்கும் நேர்த்தியான மேம்பாட்டுக்கும் தொடர்பாடலே (Communication) மூலவேர். இதனைப் பூரணமாக
உணர்ந்துள்ள தமிழர் தகவல், கடந்த கால நிகழ்கால மாற்றங்களையும் வளர்காலத்தில் வரப்போகும்
மாற்றங்களை எதிர்வு கூறுவதையும் சமூக நடைமுறைக்கு உட்படுத்தி பதிவாக்கி வருகிறது “ இவ்வாறு
இம்மலரின் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவிக்கும் ஆசிரியர், அதற்கேற்பவே மலரின் உள்ளடக்கத்தையும் வடிவமைத்துள்ளார்.
ஆசிரியத் தலையங்கத்தில்
அவர் பதிவிட்டுள்ள மற்றும் ஒரு கருத்தும் கவனத்திற்குரியது. எஸ்தி இவ்வாறு சொல்கிறார்: “ புலம்பெயர் அகதிச்சமூகமாக கணிக்கப்பெற்ற
நாங்கள், இன்று கனடிய வாழ்வின் அம்சங்கள் ஒவ்வொன்றிலும் எங்களை இணைத்து வருகின்றோம்.
இதனால் எம்மக்களின் வரலாற்றெழுத்தியலுக்கு அறிகை முறையான பதிவாகவும் உறுதுணையாகவும்
தமிழர் தகவல் தன்னை உட்படுத்தியுள்ளது. “
சமகாலத்தில் இலங்கை அரசும் புகலிடத் தமிழர்களின் மூலதனங்களை நாட்டுக்குள் எதிர்பார்த்திருக்கின்றது. அகதியாக விரட்டப்பட்ட தமிழர் சமூகம், கடந்த முப்பது ஆண்டு காலத்தில், வெளியே எவ்வாறிருக்கிறது என்பதை தொடர்ச்சியாக ஆவணப்படுத்திவரும் கனடா தமிழர் தகவல், புகலிடத்தமிழரின் தற்போதைய நிலை குறித்தும் ஆசிரியத் தலையங்கத்தின் மூலம் சுட்டிக்காண்பித்திருக்கிறது.
கனடாவிலிருந்து இம்மலர்
வெளியிடப்பட்டிருந்தாலும், முழு உலகிலும் தமிழர்
வாழும் தேசங்களிலிருந்தும் படைப்பாளிகள் எழுதியிருக்கின்றனர். அந்தவகையிலும்
இம்மலர் குறிப்பிடத்தகுந்த ஆவணமாகவே திகழுகின்றது.
1992 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் வெளியான தமிழர் தகவலின் ஆண்டு மலர்களின் முகப்பினையும் இணைத்திருப்பதையும் ஒருவகையில் நனவிடை தோய்தலாகவே கருதமுடிகிறது.
இத்தனையையும் கடந்துவிட்டுத்தான் இந்த 30 ஆவது ஆண்டு மலர் வெளியாகிறது என்பதை உறைபொருளாக காண்பிக்கின்றது. அரசியல், வரலாறு, பொருளாதாரம், சமூக, கலை ( இசை – நடனம் ) , இலக்கியம், ஊடகம் ( இதழியல் ) , விஞ்ஞானம், மருத்துவம், விவசாயம், சினிமா, ஆய்வு மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த பல்வேறு படைப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இம்மலருக்கு கனதியை தந்துள்ளன.
அவற்றை மூத்த – இளம் தலைமுறையினர் எழுதியிருப்பதனால், இந்த இரண்டு
தரப்பாருக்கும் மத்தியில் தமிழர் தகவல் பாலமாகவும் அமைந்திருக்கிறது.
மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால், ஒன்பதாம் வகுப்பு மாணவனும் எழுதியிருக்கிறார். 90 வயதை கடந்தவர்களும் எழுதியிருக்கிறார்கள். அந்தவகையில் தலைமுறைகளின் சங்கமமாகவும் தமிழர் தகவலின்
30 ஆவது ஆண்டு மலர் அவதானத்திற்குள்ளாகியிருக்கிறது.
இருநூறு பக்கங்களுக்கு மேல் உள்ளடக்கம் கொண்ட தமிழர் தகவல்
மலரிலிருந்து கனடாவைப்பற்றி மாத்திரமல்ல, பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா
முதலான நாடுகளில் கலை, இலக்கிய செல்நெறியையும் அங்கு இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வகிபாகத்தையும்
தெரிந்துகொள்கின்றோம்.
அத்துடன் சில சாதனையாளர்கள்
பற்றிய குறிப்புகளும் பதிவாகியிருப்பதிலிருந்து, அவர்கள் வாழும் காலத்திலேயே கௌரவிக்கப்படவேண்டியவர்கள்
என்ற கவனத்தை நோக்கியும் மலர் நகர்ந்திருக்கிறது.
மலரின் பிரதியை மின்னஞ்சலில்
பெற்று வாசிக்க விரும்புவர்களுக்கு :
No comments:
Post a Comment