எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 32 1995 இல் மரணங்கள் மலிந்த பூமியாக மாறிய எங்கள் தேசம் ! முருகபூபதி

நவாலி புனித பேருவானவர் தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல்  1995 – ஜூலை.

வடமராட்சி நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான குண்டுத்தாக்குதல்  1995 – செப்டெம்பர்.


இலங்கை சுதந்திரம்பெற்ற காலம் முதல்  அரசியல் படுகொலைகளும் இனரீதியான படுகொலைகளும் நீடித்துகொண்டிருப்பதை அவதானித்து வருகின்றோம்.

தமது கணவர்மார் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இரண்டு பெண்களின் பதவிக்காலத்திலும் அரசியல் படுகொலைகளும், இன ரீதியான படுகொலைகளும் குறைவின்றி தொடர்ந்தன.

1959 ஆம் ஆண்டு பிரதமராக பதவியிலிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ


. பண்டாரநாயக்கா,  இதே செப்டெம்பர் மாதத்தில் அவரால் வளர்த்துவிடப்பட்ட  பௌத்த பிக்குகளின் சதியினால் சுட்டுக்கொல்லப்பட்டபோது,  எனக்கு எட்டு வயது.  அவ்வேளையில்  சரஸ்வதி பூசை காலம்.

எங்கள் நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலய தலைமை ஆசிரியர் பண்டிதர் மயில்வாகனம்,  சரஸ்வதி பூசை நிகழ்ச்சி முடிந்தபின்னர்,  கொல்லப்பட்ட பிரதமர் பற்றி சில வார்த்தைகள் பேசி அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

பண்டாரநாயக்காவின் மறைவுக்குப் பின்னர் சரியாக ஒருவருடம் கழித்து 1960 ஆம் ஆண்டு அவரது மனைவி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமரானார்.  இவர் 1960 – 1965 , 1970 – 1977 ,  1994 – 2000  காலப்பகுதிகளில் மூன்று தடவைகள் பிரதமராகவிருந்தார். அத்துடன் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் பெற்றார்.

இவரது புதல்வி சந்திரிக்கா பண்டாரநாயக்கா,  வெளிநாடொன்றுக்கு படிக்கச்சென்றவர்.  மீண்டும் வந்து அரசியலில் ஈடுபட்டார்.

தந்தை ஆரம்பித்து, தாயார் வளர்த்துவிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவேளையில், நடந்த இடைத்தேர்தல் ஒன்றில்  அறிமுகமான திரைப்பட நடிகர் விஜயகுமாரணதுங்கவை காதலித்து கரம்பிடித்தார்.

இவர்களின் திருமணத்தை தாயார் ஶ்ரீமாவோ,  சகோதரன் அநுரா


ஆகியோர் விரும்பவில்லை.  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு தோன்றியபோது,  காதல் தம்பதியர்  மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் இயக்கத்தையும் ஆரம்பித்தனர்.

விஜயகுமாரணதுங்க, எங்கள் நீர்கொழும்பூருக்கு அருகாமையில் சீதுவை என்ற பிரதேசத்தை சேர்ந்தவர்.  சிறந்த திரைப்பட நடிகர். பாடகர்.  மனிதநேயம் மிக்கவர்.  யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டபோது தென்னிலங்கையில் அதனை கண்டித்து நாம் நடத்திய இயக்கங்களில் எம்மோடு இணைந்து நின்றவர்தான் விஜயகுமாரணதுங்க.   1985 இல் மாஸ்கோவுக்கு சென்றபோது, இவரும்  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும்  அந்தப்பயணத்தில் இணைந்திருந்தனர். 

மாஸ்கோவிலிருந்த  இலங்கைத் தூதுவராலயத்தில்


இலங்கைப்பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட இராப்போசன விருந்துபசாரத்தில் விஜயகுமாரணதுங்கவும் ரணில் விக்கிரமசிங்காவும்   இணைந்து பாடல்களும் பாடினர்.  அந்த விருந்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் தயான்  ஜயதிலக்க  பின்னாளில் ருஷ்யாவுக்கான இலங்கைத்தூதராகவும் பணியாற்றியவர்.

விஜயகுமரணதுங்க  பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதியிருக்கின்றேன்.

எனது ஊடக எழுத்துலக வாழ்வில் இத்தனை பேரைச்சந்தித்திருந்தாலும், அரசியல்வாதிகளிடமிருந்து முடிந்தவரையில் தூரவே விலகியிருந்தேன்.

அரசியல்வாதிகளிடம் அதிகாரம் வந்துவிட்டால், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் அவதானித்திருப்பதனாலும் ஆளும் அதிகார வர்க்கத்தின் நலன்கள் எத்தகையது என்பதை புரிந்துவைத்திருந்தமையாலும்  அவர்களிடமிருந்து தூரவே விலகியிருந்தேன்.

கணவரின் படுகொலையுடன் அரசியல் பிரவேசம் மேற்கொண்டு, பிரதமரான ஶ்ரீமாவின் பதவிக்காலத்திலும்  – அதேபோன்று  கணவரின் படுகொலையுடன் அரசியலில் தீவிரம் காண்பித்து,  முதலில் மாகாண முதல்வராகவும் பின்னர் பிரதமராகவும் அதன்பின்னர் ஜனாதிபதியாகவும் பதவிகளுக்கு வந்த சந்திரிக்கா விஜயகுமாரணதுங்கவின் காலத்திலும் அரசியல் படுகொலைகள் மலிந்திருந்தன.

1971 இல்  கதிர்காமம் அழகுராணி பிரேமாவதி மனம்பேரி இராணுவத்தினரால்  மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டபோது பிரதமராகவிருந்தவர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா.

1996 செப்டம்பர்  மாதம் கைதடி இராணுவ காவலரணில் தடுத்துவைக்கப்பட்டு,  செம்மணியில் மாணவி செல்வி கிருஷாந்தி குமாரசாமி அவரது தாயார் மற்றும் தம்பி அயலவர் உட்பட  நால்வர் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் நடந்தபோது ஜனாதிபதியாகவிருந்தவர் சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா.

இவ்வாறு இரண்டுபெண்களும்  நாட்டின் உயர்பதவிகளிலிருந்தபோதுதான் பெண்கள் மீதான வன்கொடுமையும் படுகொலையும் நடந்தது.

மனம்பேரி பிரேமாவதி கொலையுண்ட இடத்தைப்பார்க்கச்சென்ற என்னால்,  கிருஷாந்தி கொல்லப்பட்ட இடத்தைச்சென்று பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  அவ்வேளையில் நான் மெல்பனிலிருந்தேன்.

அக்காலப்பகுதியில்தான் வடக்கில் பின்வரும் சம்பவங்கள் நடந்தன.

நவாலி புனித பேருவானவர் தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல்  1995 – ஜூலை.

வடமராட்சி நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான குண்டுத்தாக்குதல்  1995 – செப்டெம்பர்.

இக்காலப்பகுதியில் அதிகாரத்திலிருந்தவர் சந்திரிக்கா. 

தனது குடும்பத்தில் தந்தையையும் கணவரையும் கொலையாளிகளிடம் பறிகொடுத்த சந்திரிக்கா ,  பல இன்னுயிர்கள் இராணுவத்தினரதும் விமானப்படையினரதும் தாக்குதலில் கொல்லப்பட்டபோது  பதவியிலிருந்தார்.

Operation Liberation , முன்னோக்கிப் பாய்தல்  ( LEAD FORWARD ) ஜெயசிக்குரு ( வெற்றி நிச்சயம் ) 


இத்தகைய பெயர்களை சூட்டிக்கொண்டுதான் இலங்கைப்படையினர் மக்கள் மீது தாக்குதல்களை தொடுத்தனர். 

விடுதலைப்புலிகளும் தங்கள் தாக்குதல்களுக்கு பெயர்களை சூட்டிக்கொண்டனர்.

இடையில் சிக்குண்ட மக்கள் கொல்லப்பட்டபோது  மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.  2009  மே மாதத்துடன் உள்நாட்டுப்போர் முடிவடைந்திருந்தாலும், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் அறப்போராட்டங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.   இந்தப்பதிவை எழுதும்  இந்த செப்டெம்பர்  மாதத்தில்தான் கிருஷாந்தியும்  அவருடன் கொல்லப்பட்டவர்களும் வடமராட்சி நாகர்கோவில் படுகொலையில் உயிரிழந்தவர்களும் நினைவு கூறப்படுகின்றனர்.

1995 ஆம் ஆண்டு,  நவாலி புனித பேதுருவானவர் தேவாலயத்தின் மீது நடந்த குண்டுத்தாக்குதலில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். 

அதனைக்கண்டித்து ஆர்ப்பாட்டப்பேரணியை முன்னின்று நடத்தியவர் தில்லை ஜெயக்குமார்.  அதற்காக விக்ரோரியா மாநிலத்தில் இயங்கிக்கொண்டிருந்த அனைத்து தமிழ் அமைப்புகளையும் இணைத்து அந்த மாபெரும் ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தார்.

எமது அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தையும் அந்த ஊர்வலத்தில் இணைத்துக்கொள்வதற்காக ஒன்றியத்தின் ஸ்தாபகர்  சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணருடன் சில சுற்றுப்பேச்சுவார்த்தைகளையும் தில்லை ஜெயக்குமார் நடத்தினார்.

மெல்பன் நகரின் மத்தியில் அந்த கண்டனக்கூட்டம் நடந்தது. அச்சமயம் எமது ஒன்றியத்தின் தலைவராகவிருந்த நண்பர் தருமகுலராஜா உரையாற்றினார்.

பேராசிரியர் எலியேஸர்,   “ நாமார்க்கும் குடியல்லோம்  “ என்று தமிழில் உரத்துச்சொல்லி உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

அந்த மேடைக்கருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம்  விக்ரோரியா நாடாளுமன்றத்தின் முன்பாக நிறைவடைந்தது.  நவாலி தேவாலயத்தின் மீதான குண்டுத்தாக்குதலை கண்டிக்கும் அதேசமயம் இலங்கை வரலாற்றை சித்திரிக்கும் ஊர்திகளும் அந்த ஊர்வலத்தில் வந்தன.

நண்பர்  நந்தகுமார்  பண்டார வன்னியன் தோற்றத்தில் வந்தார்.  நண்பர் சபேசனின் மனைவி பவளம் அக்கா சந்திரிக்காவின் தோற்றத்தில் நீல நிறச் சேலை அணிந்து வந்தார்.

நான் அவர் அருகில் சென்று  “ கோகமத..?  “ ( எப்படி..? ) எனக்கேட்டேன்.

அதற்கு அவர்  “ பெல்ல கப்பனவா..,?  “ ( கழுத்தை அறுப்பேன் )  என்றார். என்னுடன் வந்தவர்கள் அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு சிரித்தார்கள்.

1995 ஆம் ஆண்டு நடந்த அந்த ஊர்வலம்  அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்த தமிழ் மக்களைப்பொறுத்த மட்டில் ஒரு மைல் கல் எனலாம். அதனை ஒழுங்கு செய்த தில்லை ஜெயக்குமார் ஈழவிடுதலைப்போராட்டத்தில் விசுவாசத்துடன் இயங்கியவர்.

ஒரு பத்திரிகையாளனாக  இலங்கையில் இயங்கியபோது,  போர்க்காலச் செய்திகளையே அதிகம் எழுதினேன்.  ஈழப்போரின் திசை குறித்து என்னிடம் தெளிவிருந்தமையால்,  தில்லை ஜெயக்குமாருடன் முரண்படாமலேயே  எனது தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டேன்.

அவர் எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கும் வருகை தந்தார்.  என்னைவிட ஐந்து வயது குறைந்தவர்.  எதிர்பாராமல் 2007 ஆம் ஆண்டு தனது 56 ஆவது வயதில்  திடீரென மறைந்தார்.

அவர் குறித்து  நீண்ட  அஞ்சலிக்குறிப்புகளை நண்பர் நடேசன் நடத்திய உதயம் பத்திரிகையிலும் எழுதினேன்.

எனது இலக்கியப் பிரதிகளை எழுதியவாறே, அவுஸ்திரேலியாவில் சமூகப்பணிகளில் ஈடுபட்டு மறைந்தவர்கள் பற்றியும்  எழுதினேன். தொடர்ந்து எழுதிவருகின்றேன்.

இந்தப்பதிவில்  நாவலி தேவாலய குண்டுத்தாக்குதல் தொடர்பாக நண்பர் – ஊடகவியலாளர் பூபாலரத்தினம் சீவகன் தயாரித்த ஆவணப்படத்தை இணைத்திருக்கின்றேன்.

( தொடரும் )

 




No comments: