எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -08 காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் ! சிநேகத்துடன் நிராகரித்த இதழாசிரியர் பணி !! முருகபூபதி

மெல்பனில் West Brunswick இல் ஒரு படுக்கை அறை வீட்டை


வாடகைக்கு எடுத்தபோது,   “ சாம் அண்ணர்  “ என்ற ஆறுமுகசாமி எனக்கு பலவழிகளிலும் உதவினார்.  அவரே என்னை வீடுகள் வாடகைக்கு கொடுக்கும் Real Estate இடம் அழைத்துச்சென்றார்.

நண்பர் இராஜரட்ணம் வைத்தியநாதன் ( ரஞ்சன் ) ஒருநாள் தனது வாகனத்தில் வந்து எனக்கு ஒரு கட்டிலும் மெத்தையும் வாங்குவதற்கு உதவினார்.

Brunswick இல் எனக்கு கிடைத்த வேலைக்கு மாலை 5 மணிக்கு பஸ்ஸில்  புறப்படவேண்டும்.  Australian Textile Printing Company இல் எனக்கு எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத வேலைதான் கிடைத்தது.  அங்கே கட்டில் விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சேலைகள் அச்சிடப்பட்டன.  பல நாடுளையும் சேர்ந்தவர்கள் பணியாற்றினார்கள்.

எனக்கு இரவு நேர வேலைதான் கிடைத்தது.  மாலை 5-30 மணிக்கு


தொடங்கும் அந்த வேலை , மறுநாள் அதிகாலை 3-30 மணிக்குத்தான் முடிவடையும்.  நான் வசித்த குடியிருப்புக்கு அருகிலிருக்கும் தாய்லாந்தைச்சேர்ந்த இளைஞரும்  அங்கே பணியாற்றினார்.

வேலை முடியும் அந்த அதிகாலை வேளையில் பஸ்போக்குவரத்து இல்லை. அந்தத்  தாய்லாந்து இளைஞர் என்னை தனது காரில் அழைத்துவருவார்.  அவருக்கு வாராந்தம் 20 வெள்ளிகள் கொடுத்துவிடுவேன்.

அப்போது எமக்கு வாராந்தம்தான் சம்பளம் தரப்பட்டது. அதுவும் ஒரு கடித உறையில் தரப்படும்.  பிற்காலத்தில்தான் எமது வங்கிக்கணக்கிற்கு சம்பளம் வரத்தொடங்கியது.

பகல்பொழுதில் நான் மாத்திரம்தான் வீட்டில் இருப்பேன். அறை நண்பர்களுக்கு பகல் நேர வேலை. அந்தவேளையில்தான் நான் வீட்டுக்கும் இலங்கையிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கும் கடிதங்கள் எழுதுவேன். தினமும் மூன்று – நான்கு கடிதங்கள் எழுதுவேன்.  வீரகேசரியில் என்னுடன் பணியாற்றிய சக நண்பர்களுக்கு மட்டுமன்றி, பொது முகாமையாளர்,  விநியோக – விளம்பர முகாமையாளர், பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன், செய்தி ஆசிரியர் நடராஜா உட்பட அனைவருக்கும் எழுதுவேன். அவர்களிடமிருந்து பதில் வராது.  எனினும் எழுதுவேன்.

அமர்ந்து எழுதுவதற்கும் மேசை இருக்கவில்லை. தரையில் அமர்ந்து தலையணையை மடியில் வைத்துக்கொண்டு ஒரு அட்டையில் காகிதம் வைத்து எழுதி எழுதி குவித்த காலம்தான் அது.


அன்று ஒருநாள் சனிக்கிழமை காலைப்பொழுது. நான் மாத்திரம் வீட்டிலிருந்தேன். நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் தொலைபேசியில் தொடர்புகொண்டு,    தருமகுலராஜா என்பவர் என்னிடம் வருவார் எனவும், அவருடன் ஒரு இடத்திற்குச் செல்லுமாறும் சொன்னார். அவ்விடத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது.  நீர்  இப்போதுதானே வந்திருக்கிறீர்.  அந்தக்கூட்டத்திற்கு வருபவர்களை தருமகுலராஜா உமக்கு அறிமுகப்படுத்துவார்.  நீர் வீரகேசரியிலிருந்தமையால், நாட்டின் தற்போதைய நிலைவரங்களை அவர்களுக்குச் சொல்லும்  “ எனத் தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார்.

யார் தருமகுலராஜா..? யார் கூட்டம் நடத்துகிறார்கள்..? அது என்ன கூட்டம்..? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.   நான் எனது குடும்பத்திற்காக நாட்டை விட்டு வந்தேன்.  குடும்பத்திற்காக  முதலில் உழைக்கவேண்டும்.  எனது வதிவிட உரிமைக்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.  இவற்றில் கவனம் செலுத்துவதா..? அல்லது முன்பின் தெரியாதவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வதா..?

மனதில் போராட்டம் நடந்தாலும்,  சிவநாதனின் பேச்சை தட்டமுடியவில்லை.   சிறிது நேரத்தில் எனது வீட்டின் கதவு தட்டப்பட்டது.

ஒருவர், தான்தான் தருமகுலராஜா என்று சொல்லிக்கொண்டு


அறிமுகமானார்.  அவருடன் அவரது காரில் புறப்பட்டேன்.  வழியில் நாட்டின்  புதினங்களைக் கேட்டார். சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவர் ஈ.பி. ஆர்.எல். எஃப் . இயக்கத்தின் வடபிராந்திய தளபதியாக அப்போதிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனின் நெருங்கிய உறவினர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

தருமகுலராஜா, Mel way பார்த்து தனது காரைச்செலுத்தினார்.  அந்தக்கார்  Doncaster என்ற ஊரை நோக்கி விரைந்தது.  அங்கே வதியும் பொறியியலாளர் மகேஸ்வரன் வீட்டுக்குத்தான் செல்கிறோம்.  அவரை Doncaster மகேஸ்வரன் என அழைப்பார்கள் என்றார் தருமகுலராஜா.

இலங்கையில் ஊரின் பெயருடன் பிரபலமடைந்த பல எழுத்தாளர்கள், கலைஞர்கள்தான் எனது நினைவுக்கு வந்தார்கள். மாவை நித்தியானந்தன், திக்குவல்லை கமால், சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை…. இவ்வாறு இங்கும் ஒருவர் Doncaster மகேஸ்வரன்  என்ற பெயரில் இருக்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.


அவரது வீட்டின் முன்னால் கார் நின்றது. அங்கே மேலும் சில கார்கள் நின்றன.

உள்ளே சென்றோம். அங்கிருந்தவர்கள் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அந்தக் கூடத்திலிருந்த மேசையில் வடை, கட்லட், பிஸ்கட், தேநீர் இருந்தன. 

தேநீர் அருந்தி தமிழ்த்தேசியம் பேசுபவர்களாகத்தான் இவர்கள் இருக்கவேண்டும்…. வடை சாப்பிட்டுத்தான் அரசியல் வம்பளப்பில் ஈடுபடுபவர்களாக இருக்கவேண்டும் என்பதை முதலிலேயே கணித்துவிட்டேன்.

இந்த இடத்திற்கு நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் ஏன் என்னை அனுப்பினார்..? என்று யோசித்தேன்.  பொறுமையாக அங்கிருந்தவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்.

பின்னாளில்தான் அவர்களின் பெயர்கள் எனக்குத் தெரியவந்தது.

அங்கிருந்தவர்கள்:  Doncaster மகேஸ்வரன்,  சோமா சோமசுந்தரம், தில்லை ஜெயக்குமார், மனோ நவரத்தினம், ராஜா வில்சன், சுந்தரமூர்த்தி. இன்னும் சிலர் இருந்தனர். ஆனால்,  தற்போது பெயர் நினைவில் இல்லை. இவர்கள் மெல்பன் தமிழ் சமூகத்தில் பிரபலமானவர்களாக விளங்கியமையால், 35 வருடங்களின்


பின்னரும்  தற்போதும்  நினைவில் தங்கியிருக்கிறது.

Doncaster மகேஸ்வரன் யார் என்பதை அன்று கண்டதும் தெரிந்துகொண்டேன். அவர் எங்கள் நீர்கொழும்பில் முன்னர்               P.  W. D . இல்  பிரதம பொறியிலாளராக பணியாற்றியவர். அத்துடன் எமது இந்து இளைஞர் மன்றத்திலும் அங்கம் வகித்தவர்.  அவருடைய வாசஸ்தலம் P.  W. D . அலுவலகத்திற்கு அருகில் கடற்கரை ஓரமாக இருந்தது.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன், பின்னாளில் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்தின் செயலாளராக பணியாற்றிய பேரின்பநாயகம் ஆகியோரெல்லாம் அந்த வீட்டுக்கு வந்து சென்றதை அறிவேன்.

நான் இடதுசாரிகளுடன் ஐக்கியமாகியிருந்த அக்காலப்பகுதியில்,  நான் எட்டத்திலிருந்து பார்த்த மகேஸ்வரனை அன்று அருகிலிருந்து பார்த்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

பின்னாளில் இந்த மகேஸ்வரன் எனக்கு பழகுவதற்கு இனிமையானவராகத் தென்பட்டார்.

அக்காலப்பகுதியில் அவர் விக்டோரியா  இலங்கைத் ( C T A )  தமிழ்ச்சங்கத்தில் செயலாளராகவிருந்தார்.

நான் வீரகேசரியில் பணியாற்றிவிட்டு வந்திருப்பதை தருமகுலராஜா மூலம் அறிந்துகொண்ட சோமா சோமசுந்தரம் அவர்கள்,   சுந்தரமூர்த்தியிடம்,  “ உமக்கு ஒரு ஆள் கிடைத்திருக்கிறார்.  இவரை எமது சங்கத்தின் ஏட்டிற்கு துணையாகச் சேர்த்துக்கொள்ளும்  “ என்றார்.

அவ்வேளையில் சங்கத்தின் தென்துருவ தமிழ் முரசு இதழுக்கு சுந்தரமூர்த்திதான் ஆசிரியராக இருக்கிறார் என்பதும் அன்று எனக்குத் தெரியவந்தது.

அன்றைய சந்திப்பில், ஒரு கோவை ஒவ்வொருவரிடமும் நகர்ந்தது.  அவர்கள் எதற்கோ நிதி திரட்டுகிறார்கள் என்பது புரிந்தது.

நான் அவுஸ்திரேலியா – மெல்பன் வந்து வேலை எடுத்து முதல் வாரச் சம்பளமும் பெறாதிருந்த காலம் அது.  தருமகுலராஜா, குறுக்கிட்டு,  “ இவர் இப்போதுதான் இங்கே வந்துள்ளார்  “ என்று சொல்லி, அந்தக்கோவையை வேறு பக்கம் திருப்பிவிட்டார்.

சுந்தரமூர்த்தி என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார்.

 “ உங்கள் தென்துருவ தமிழ் முரசு இதழை நான் இதுவரையில் பார்த்திருக்கவில்லை.  அதன் பிரதிகளைத் தாருங்கள். படித்துப்பார்த்துவிட்டு, சொல்கின்றேன்  “ என்றேன்.

எனது முகவரியை கேட்டு வாங்கிக்கொண்டார்.

நானும் தருமகுலராஜாவும் அங்கிருந்து விடைபெற்றோம்.

   இந்த ஈழப்போராட்டம் வெற்றிபெறும் என்று நீங்கள் நம்புகிறீர்களா..?  “ என்று அவரிடம் கேட்டேன்.

அவர்,  தான் அணிந்திருந்த கண்ணாடிக்கூடாக என்னை  ஏறெடுத்துப்பார்த்தார்.

அவர் கோப்பாயைச்சேர்ந்தவர். அவரது ஊருக்குப்பக்கத்தில்தான் கட்டைப்பிராய் என்ற இடமும் இருக்கிறது.  அங்குதான் டெலோ இயக்க இளைஞர்கள் புலிகள் இயக்கத்தினரால் ஈவிரக்கமற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.  அந்த டெலோ இயக்கத் தலைவர் ஶ்ரீசபாரத்தினமும் கொல்லப்பட்டார்.  மானிப்பாய் எம்.பி. தருமலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.  சகோதரப் படுகொலைகள் நடந்துகொண்டிருந்த வேளையில்தான் அந்தக்காட்சிகளை செய்திகளாக எழுதிவிட்டு , விரக்தியோடு நாட்டை விட்டு வெளியேறி வந்திருக்கின்றேன்.

இந்த ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர் இயக்கங்கள்,  என்றைக்கு ஆளையாள் சுட்டுக்கொன்றார்களோ… அன்றே இவர்களின் தமிழ் ஈழக்கனவும் செத்துப்போய்விட்டது எனது பார்வையில்.  இனிமேல் என்னை இதுபோன்ற கூட்டங்கள் , சந்திப்புகளுக்கு தயவுசெய்து அழைத்து வந்துவிடாதீர்கள் .    என்றேன்.

தருமகுலராஜா சிரித்தார்.  தொடர்ந்தும் எனது நல்ல நண்பராகவே திகழ்ந்தார்.

இரண்டு நாட்களில் எனது வீட்டு முகவரிக்கு சுந்தரமூர்த்தி தபாலில் அனுப்பிவைத்த தென்துருவ தமிழ் முரசு இதழ்கள் சில வந்து சேர்ந்தன.

அவற்றைப் படித்தேன். அதன் உள்ளடக்கமும், இடம்பெற்ற செய்திகளும் எனது கருத்தியல்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை. சோமா சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளை சிநேகபூர்வமாகவே நிராகரித்தேன்.

எனினும் சுந்தரமூர்த்தி அவர்களுடனான எனது நட்புறவு இற்றை வரையில் எந்த விக்கினமும் இன்றி தொடருகிறது.

அவுஸ்திரேலியாவில் நான்  சந்தித்த அன்பர்களிடமிருந்து நான் பெற்றதையும்  கற்றதையும் இனிவரும் அங்கங்களிலும் எழுதுவேன்.

35 வருடங்களுக்கு முன்னர், நானும்   விக்ரோரியா இலங்கைத்தமிழ்ச்  சங்கத்தின் முக்கியஸ்தர் சோமா சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று,  முகவரி  தேடுவதற்கு முனைந்திருப்பேனேயானால்,  அந்தச்சங்கம் காலத்துக்கு காலம் தனது பெயரை மாற்றிக்கொண்டதற்கும் துணையாகியிருந்திருப்பேன்.

அன்றிருந்த இலங்கைத்  தமிழ்ச்சங்கம், ஈழத்தமிழ்ச்சங்கமாக பெயர் மாற்றப்பட்டு, மீண்டும் பெயர் மாற்றப்பட்டு  தற்போது விக்ரோரியா தமிழ்ச் சங்கமாகியிருக்கிறது.  வாழ்க பல்லாண்டு.

“ மாறியது நெஞ்சம்… மாற்றியவர்… யாரோ..?   “ என்றுதான் பாடத் தோன்றுகிறது.

-----

 ஒருநாள் குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து பொறியியலாளர் வாகீசன் என்பவர் மெல்பனுக்கு வந்து சேர்ந்தார்.  இவர் யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் கந்தசாமியின் மகன்.  சில நாட்கள் அவரும் எம்முடன் தங்கினார்.  பின்னர் அவரை பென்ஹர் என்ற நண்பருடன் சேர்த்துவிட்டோம். இருவரும் West Footscray என்ற இடத்தில் ஒரு வாடகைக் குடியிருப்பை தேடிக்கொண்டு சென்றனர்.

 “ சாம் “  ஆறுமுகசாமியும்  இதர நண்பர்கள் செல்வேந்திரன், வரதலிங்கம், ஆயுள்வேத மருத்துவர் குணரட்ணம்  ஆகியோரும் அதே West Footscray பக்கம் சென்றுவிட்டனர்.

நல்ல தொழில் எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே செல்லவேண்டும். ஒருநாள் மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து பிரேம்குமார் என்பவர் என்னிடம் வந்து சேர்ந்தார். அவர் லண்டனிலிருந்து வந்தவர். அதனால், அவரை லண்டன் என்று அழைக்கத் தொடங்கினோம்.

தாயகத்தில் எங்கள் ஊரில் ஶ்ரீசிங்கமாகாளி அம்மன் கோயிலில்  நவராத்திரி காலத்தில் ஒன்பதாம் திருவிழா எங்கள் குடும்பத்திற்குரியது. வீட்டிலும் நவராத்திரி கொலு வைத்து வணங்குவோம்.

1987 ஆம் ஆண்டு முதல் தடவையாக நான் தங்கியிருந்த வீட்டில்  சரஸ்வதி பூசை நடத்த விரும்பினேன்.  இதுபற்றி சாம் அண்ணரிடம் சொன்னேன்.

நண்பர்கள் பலரும் West Footscray பக்கம் வசிப்பதனால், அங்கேயே நடத்துவோம் என்றார் அவர்.

அதன்பிரகாரம் அவரது   வாடகை குடியிருப்பில் சரஸ்வதி பூசையை நடத்தினோம். 

என்னதான் பயபக்தியுடன் சரஸ்வதி பூசை நடத்தி பிரார்த்தனை செய்தாலும்,  அதன்பிறகு வரும் சனி, ஞாயிற்றுக் கிழமை இரவுகளில்  “ தண்ணீர் பந்தல்      திறக்கப்பட்டுவிடும்.

சிலர் அருந்துவார்கள், சிலர் குளித்து கும்மாளமிடுவார்கள்.

அவரவருக்குத் தெரிந்த அரசியல் பேசுவார்கள். அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் மேதைகளும் இவர்களிடம் பிச்சைதான் வாங்கவேண்டும்.  வாதங்களில் அனல் தெறிக்கும்.

திங்கள் முதல் வெள்ளி வரையில் முறிந்து களைத்து வேலை செய்தவர்களுக்கு அந்த தாகசாந்திதான் ஒத்தடம். அத்துடன் வீட்டு நினைவுகள் கவலையாக படருவதனால், அதிலிருந்து தப்பிக்கவும் இந்த உபாயத்தை நாடியவர்கள்.

ஒவ்வொருவருக்கும் குடும்பங்கள் வந்து சேரும்வரையில், நண்பர்கள்தான் ஒருவருக்கு கொருவர் துணை.

Australian Textile Printing Company இல் வேலைசெய்துகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வந்த போர்க்காலச் செய்திகள் மிகுந்த வேதனையைத் தந்தது.

வவுனியாவிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற எமது உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் படகு மார்க்கமாக  தமிழ்நாடு மண்டபம் முகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கடலில் மூழ்கி ஜலசமாதியானார்கள்.

அதில் ஒரு குழந்தையும் இறந்தது. எவரது சடலமும் கண்டுபிடிக்கப்படவில்லை.  தினம் தினம் எனக்குள் அழுது வருந்தினேன்.

அதனால், பிறந்த கதைதான் தவிப்பு.  மல்லிகை இதழுக்கு அனுப்பினேன். பிரசுரமானது.

அந்தக்கதை பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வாராந்த நிகழ்ச்சியில் திருமதி சாந்தி சந்திரகுமார்  அண்மையில்  சமர்ப்பித்து உரையாற்றினார்.

இவர் யார் தெரியுமா..?

இந்த அங்கத்தின் தொடக்கத்தில் வரும் Doncaster மகேஸ்வரனின் தங்கை. இவரது மற்றும் ஒரு சகோதரியின் மகள் கலைச்செல்வியின்  ( தற்போது திருமதி கலைச்செல்வி ஆதித்தன் – எழுத்தாளர் விஜயராணி – அருணகிரி தம்பதியரின் மருமகள் ) பரதநாட்டிய அரங்கேற்றம்  நடந்தபோது நான்தான் பிரதம விருந்தினராகத் தோன்றி உரையாற்றினேன்.

காலம் எத்தனை விந்தைகளை காண்பித்திருக்கிறது..?

( தொடரும் )

 

 

 

 

 

 

 

No comments: