உலகச் செய்திகள்

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரொக்கெட் வீச்சு; 30 பேர் பலி

மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா இடைநிறுத்தம்

கிழக்கு உக்ரைனிலிருந்து வெளியேறும் பொதுமக்கள்

கிம்மின் சகோதரி அணு தாக்குதல் எச்சரிக்கை

ரஷ்யா மீது மேலும் தடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நடவடிக்கை


உக்ரைன் ரயில் நிலையத்தில் ரொக்கெட் வீச்சு; 30 பேர் பலி

உக்ரைனின் கிராமடோர்ஸ்க் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அரச ரயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து இயங்கி வரும் ரயில் நிலையமாக இந்த ரயில் நிலையம் உள்ளது என டொனெட்ஸ்க் ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெறும்போது அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு ரொக்கெட் குண்டுகள் ரயில் நிலையத்தில் விழுந்ததாக உக்ரைனிய ரயில் நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கான பிரதான பாதையாக கிராமடோர்ஸ்க் உள்ளது.

எனினும் இந்த தாக்குதலை மறுத்திருக்கும் ரஷ்யா, இது உக்ரைனின் ஆத்திரமூட்டும் செயல் என்று குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் கியெவில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படை தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு படைகளை குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை ஒட்டி கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி உள்ளூர் நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா தனது தாக்குதல்களை திசை திருப்பி இருக்கும் நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பொதுமக்கள் வெளியேறுவதில் நெருக்கடியை சந்தித்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 
மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா இடைநிறுத்தம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதன் மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவைத் இடைநிறுத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதன் விளைவாக ரஷ்யா அந்த அமைப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

பொதுச் சபையின் வாக்கு சட்டவிரோதமானது என்றும் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்றும் ரஷ்யா சாடியது. மனித உரிமை பேரவையில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானத்தை அமெரிக்கா வழிநடத்தியது.

உக்ரைன் மீது படையெடுத்ததற்கு ரஷ்யாவுக்குக் கிடைத்த பதிலடி அது என்று அமெரிக்கா கூறியது. ரஷ்யாவுக்கு எதிராக 93 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக 24 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

உக்ரைனில் ரஷ்யாவின் பிடியில் இருந்த தலைநகர் கியேவுக்கு அருகில் உள்ள புச்சா நகரில் பொதுமக்களின் சடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தரும்படி உக்ரைன் தூதுவர் செர்கி கிஸ்லிட்சியா உறுப்பு நாடுகளை வலியுறுத்தினார்.

இதில் இந்தியா, இலங்கை 54 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டன.

58 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது நாடு ரஷ்யா. 2011இல் லிபியா அதிலிருந்து நீக்கப்பட்டது.   நன்றி தினகரன் 
கிழக்கு உக்ரைனிலிருந்து வெளியேறும் பொதுமக்கள்

ரஷ்யாவின் தாக்குதல் பற்றிய எச்சரிக்கையை அடுத்து கிழக்கு உக்ரைனிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதில் முண்டியடித்து வருகின்றனர். தலைநகர் கியேவைச் சூழ இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகளை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் தலைநகர் கியேவை சூழ உள்ள பகுதிகள் மற்றும் வடக்கில் இருந்து பின்வாங்கிய நிலையில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் வெளியேறும்படி டோன்பாஸிலுள்ள லுஹான்ஸ்க், டோனட்ஸ்க் பகுதிகளில் இருக்கும் மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். எதிரிப் படைகள் எல்லா இடங்களையும் முற்றிலும் அழித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. உக்ரைனிய படைகளும் இந்தத் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.   நன்றி தினகரன் 
கிம்மின் சகோதரி அணு தாக்குதல் எச்சரிக்கை


தென் கொரியா முன்கூட்டிய தாக்குதலை நடத்தினால் அந்த நாட்டின் இராணுவத்தை அழிப்பதற்கு வட கொரியா அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் அதிகாரம் மிக்க சகோதரி எச்சரித்துள்ளார்.

அண்மையில் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர், வட கொரியா மீது தாக்குதல் நடத்துவது பற்றிக் கலந்துபேசியதை அவர் சுட்டிக்காட்டினார்.

அது மிகப்பெரிய தவறு என்று ஆளுங்கட்சியின் மூத்த அதிகாரி கிம் கூறியதாக வட கொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தென் கொரியாவிடம் பலதரப்பட்ட ஏவுகணைகள் உள்ளதாகவும் வடகொரியாவில் உள்ள எந்த இலக்கையும் தங்களால் துல்லியமாகத் தாக்கமுடியும் என்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் சொ ஊக் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். அது குறித்து வடகொரியா கண்டனம் தெரிவித்தது.

தென் கொரியா சினமூட்டும் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அங்குள்ள முக்கிய இலக்குகள் அழிக்கப்படும் என்று வட கொரியா எச்சரித்திருந்தது.   நன்றி தினகரன் 

ரஷ்யா மீது மேலும் தடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நடவடிக்கை

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. மறுபுறம் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து மேலும் உயிரிழப்புகள் கண்டறியப்படலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

ரஷ்யப் படைகள் கடந்த வாரம் தலைநகர் கியேவின் வடக்கு நகரங்களில் இருந்து வாபஸ் பெற்ற நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுதியுள்ளது. உக்ரைன் படைகள் மீட்டுக்கொண்ட நகரங்களில் இந்த ஆறு வார போரில் பேரழிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் புச்சா நகர் மற்றும் பல வீதிகளிலும் சடலங்கள் சிதறிக் காணப்படுகின்றன.

புச்சாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் நெருங்கிய தூரத்தில் இருந்து தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட உடல்கள் சர்வதேச அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமை கௌன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த ஐ.நா பொதுச் சபையை அமெரிக்கா கோரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புச்சா படுகொலைகள் புட்டினைப் போர்க் குற்றவாளியாகக் கருதப் போதுமானவை என்றார் பைடன். ஆனால் இன்னும் ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டியுள்ளது என்றார் அவர்.

எனினும் பொது மக்களைக் கொன்றதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இந்தக் கூற்றுக்கு எதிரான ஆதாரங்களை பாதுகாப்புச் சபையில் தாம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

மறுபுறம் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி நேற்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றினார். இதன்போது அவர் புச்சா நகரில் இடம்பெற்றிருக்கும் கொலைகள் தொடர்பில் விசாரணை ஒன்றுக்கு ஆதரவு திரட்டினார்.

நேற்றுக் காலை வீடியோ மூலம் உரையாற்றிய செலென்ஸ்கி, 'இது ஒரே ஒரு நகர் தான். ரஷ்யப் படைகள் கைப்பற்றிய பல உக்ரைனிய பகுதிகளில் ஒன்றாகவே இது உள்ளது. பிரோடியன்கா மற்றும் ஏனைய உக்ரைனிய நகரங்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என்று தற்போது தகவல்கள் கிடைக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புட்டின் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் புச்சா நிகழ்வுகளின் விளைவுகளை உணர்வார்கள் என்று ஜெர்மனி சான்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்க மேற்கத்திய கூட்டணி இணங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய தடைகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலிவன் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி குறிப்பிட்டுள்ளன.

இதற்கு ரஷ்யா பதலளிக்கும் என்றும் மேற்கத்திய தூதரகங்களின் கதவுகள் இழுத்து மூடப்படும் என்றும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்புச் சபையின் பிரதித் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் குறிப்பிட்டுள்ளார்.

'இது எல்லோருக்கும் லேசானதாக இருக்கும். பின்னர் எல்லோரும் வேறு வழி இல்லாமல் துப்பாக்கி முனையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கும்' என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய எரிவாயுவை தடை செய்வது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லம்ப்ரட்ச் தெரிவித்துள்ளார். எனினும் இது ஐரோப்பாவில் பெரும் எரிசக்தி பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் ஏனைய அதிகாரிகள் இது பற்றி அவதானத்துடனேயே கருத்து வெளியிடுகின்றனர்.

ஐரோப்பிய எரிவாயுவின் மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யாவே வழங்குகிறது. மேற்கத்திய தடைகளுக்கு எதிராக இதனை பயன்படுத்த புட்டின் முயன்று வருகிறார். எனினும் ரஷ்யா ஐரோப்பாவுக்கான குழாய்கள் வழியாக தொடர்ந்து எரிவாயுவை விடுவித்து வருகிறது. எரிவாயுவுக்கு தமது சொந்த நாணயமான ரூபிளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புட்டின் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பில் நிச்சயமற்ற சூழல் நீடித்து வருகிறது.

இதேவேளை உக்ரைனின் கிழக்கில் ரஷ்யாவின் தாக்குதலுக்காக சுமார் 60,000 ரஷ்ய மேலதிக துருப்பு தயார் நிலையில் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா மரியுபோல் மற்றும் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ் உட்பட கிழக்கு பக்கம் அவதானம் செலுத்தியுள்ளது.   நன்றி தினகரன் No comments: