பத்தியொடு திருமுறையைச் சித்தநிறை வுடன்ஓதப் பரிதிதனைக் கண்டவிருள் போற்றுடக்கும் மறையாதோ

                                                                                                           



………………………. பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.

 




சொந்தமாமோ? பந்தமாமோ? தூரத்து உறவுதானோ?

தூயநல்ல நண்பனாமோ? தொடர்பற்ற யாரெவரோ?

அந்தகன்வந்(து) உயிரெடுத்த அடுத்தகணம் போயந்த

ஆவியில்லா உடல்தன்னைப் பார்த்ததுமே துடக்கென்பார்!

 


 


 

 

 

 

 

 

எந்தவொரு சத்தமின்றி எட்டநின்று பார்த்தாலோ

இழவுவீட்டுத் துடக்கெல்லாம் இங்குகொண்டு வந்தாயே

வந்தபடி பின்கோடி வழியாலே சென்றுநல்ல

வடிவாகத் தலைமுழுகி வந்திடுவாய்என்றுசொல்வார்!

 

இது நடைமுறை உண்மையாயிற்றே!

 

 ‘துடக்ககற்றல்கட்டாயம் எனஎடுத்துக் கொண்டாலும்

சுத்தஞ்செய்(து) இல்லத்தில் மஞ்சள்நீர் தெளித்தபின்னர்

அடைக்கலமே நீயென்று அம்மையப்பன் தாள்வணங்கி

அருள்பில்கும்  தமிழ்மறையை ஓதிடுதல் போதாதோ?

 

வடமொழியில் பொருள்தெரியா மந்திரத்தை ஐயரவர்

வரிந்துசொல்லக் கேட்டபின்தான் துடக்குமோடித் தெற்காலே

இடம்பெயர்ந்து கழிந்திடுமோ? இதன்மர்மம் தெரியலையே?

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

 



 

 




தூய்மையாக இருப்பதற்கும் தொற்றுநோய்கள் தவிர்ப்பதற்கும்

தொன்றுதொட்டு மூத்தோர்கள் துடக்குத்தொடா தீர்என்று

சேய்பிறந்த துடக்கென்றால் மாதமொன்று எனச்சொன்னார்

செத்தவீட்டின் தீட்டென்றால் முப்பதுநாள் பொறுமென்றார்!

 

சாதி இனம் மதம் கண்டு துடக்குக் காலமும் மாறுதல் நியாயமாமோ?

 

வாய்பேசும் மனிதர்க்குத் துடக்கென்று ஒன்றிருந்தால்

வருந் துடக்குஆளுக்காள் மாறுவது நியாயமாமோ?

நேயமனங் கொண்டோரே நீதியறம் இறந்ததுவோ?

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

 

குழவியொன்று பிறந்தபின்னர் குழந்தையொடு தாயவளும்

குளித்தாலோ முழுகினாலோ துடக்கெல்லாம் போகணுமே!

இழவுவீட்டில் பிணமதனை எரித்துவிட்டோ புதைத்துவிட்டோ

இருப்பவர்கள் முழுக்கோடு இத்துடக்கும் ஓடணுமே!

 

அழகாக அந்நாளில் அனுபவம்மிக் கோராலே

அறிவுறுத்தப் பட்டதெலாம் சடங்காக்கப் பட்டதன்றோ!

விளங்கிடுவீர்! துடக்ககற்றத் தரகரொன்று தேவைதானோ?

வீண்மூட நம்பிக்கை? விளங்கமனம் மாறாதோ?

 

 

கிருமிகொல்லும் தெளிப்பானோ கேட்டவுடன் மருத்துவமோ

கிடைக்காத மூத்தோரின் காலத்தில் அமுலான

அருவம்போல் துடக்குகளும் அவற்றைச்சில நாள்களிலே

அகற்றியோட்டப் பூசைகளும் ஐயர்வந்து ஆற்றிவந்தார்!

 

தருப்பணமும் செய்யவைத்துத் தெட்சணையும் கொடுக்கவைத்த

தமிழரன்று செய்ததெல்லாம் காரணத்தோ டுடனென்றால்

உருகித்தமிழ் மந்திரமாம் திருமுறையை ஓதிநிற்க

உண்மையிலே துடக்கென்று ஒன்றிருந்தால் ஓடாதோ?

 

 

அடடா இப்படியும் பேசுகிறார்களே!

 

இறந்தகோழிக் கறியதனை இதமாக உண்டபின்னர்

எஞ்சியிருப் பவற்றையெலாம் குளிர்ப்பெட்டி ஏற்றுநிற்கும்!

மறந்துபோக விட்டகறி மாதங்களாய்ப் புளுத்திருக்கும்!

மறுபடியும் சூடாக்கி ஆசையொடு; மகிழ்ந்துண்பர்!

 

சிறந்தபாரை மீனுக்கும் இறைச்சிக்கும் கதியொன்றே! சிரித்திடாதீர்!

எள்ளளவும் பொய்யில்லை! உண்மையிது!

இறந்தவரால் துடக்கென்றால் பிணக்கறிக்குஎன்சொல்வேன்?

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

 

 


 

 

 







துடிதுடிக்கக் கழுத்தரிந்து  கோழிதனைப் பிணமாக்கித்

தோலுரித்துக் கறிசமைத்துச் சுவைத்துத்தினம் உண்பவர்கள்

கடிதினிலே தொத்திவிட்ட பிணத்துடக்கைப் போக்குதற்குக்

காலைமாலை முழுகுவாரோ? காசிக்குப் போவாரோ?

 

 

இதுவும் நியாயமாகத்தான் படுகிறதே!

 

நடிப்பேது? ‘இறந்தவரைப் பார்த்தாலே துடக்கென்றால்

நாளாந்தம் செத்தகோழி தனைத்தின்போர் துடக்கெங்கே?

இடித்திடித்துக் கேட்கின்றேன் இதற்கென்ன பதில்சொல்வர்!

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

புரியாதோ? எம்முடம்பு ஆலயமாம்! அதையியக்கப்

புகுந்திருக்கும் உயிருடனே ஒன்றாயும் வேறாயும்

பரிந்தருளி உடனாயும்  பரந்திருப்பான்  சிவனன்றோ?

த்தியொடு திருமுறையைச் சித்தநிறை வுடன்ஓத.....

 

பரிதிதனைக் கண்டவிருள் போற்றுடக்கும் மறையாதோ?

பகலிரவாய்ச் சிவமிருக்கும் உயிரைத்தூய் மைசெய்யத்

தெரியாமற் கேட்கின்றேன் தரகர்களுந் தேவைதானோ?

தெளியாதோ நம்பிக்கை? சிந்தனையும் மாறாதோ?

 

என்றாலும் உலகம் கண்டு வியப்பது  உயரிய தமிழர் நாகரிகம்!

           

அன்றுதொட்டுத் தமிழரெல்லாம் அணுகிவந்த துடக்குமுறை

அற்புதமாயச் சுத்தத்தை அருமையாய்ப் பேணிடுதே!

நன்றென்று நோய்பரவா தியற்றிவந்த நடைமுறையை

நல்லுலகம் நலம்பெருக்க நாடெல்லாம் பரப்பிடுதே!

 

என்றென்றும்  உயர்வான இறைசிந்தை யுடனாய

ஏற்றம்மிகு வாழ்வியலை இனங்கண்டோர் தமிழரன்றோ?

குன்றின்மேற் சுடர்விரிக்கும் ஞாயிறெனத் துலங்கிடுமெம்

கோடிபெறும் நாகரிகம் மங்காது காத்திடுவோம்!

 

                       


 

 










பலரின் எண்ண அலைகள் கவிதை வடிவம் பெற்றது
. சரியோ பிழையோ என்பது அவரவர்களி
ன் நம்பிக்கையைப் பொறுத்ததே!
ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ? …..தொடரும்

No comments: