இலங்கைச் செய்திகள்

 தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் தலவாக்கலை நகரில்

 நாடளாவிய ரீதியில் அரச எதிர்ப்பு போராட்டம்

 எத்தகைய நெருக்கடியிலும் மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பேன்

மூன்று மாதங்களில் இலங்கைக்கு 2.5 பில்.டொலர் கடனுதவி

மக்கள் போராட்டங்களில் பின்னணியில் எதிர்க்கட்சி

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை அமைச்சுப் பணிகள் யாவும் சுமுகம்


தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் தலவாக்கலை நகரில்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நேற்று தலவாக்கலை நகரில் நடைபெற்ற து. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், மனோகணேசன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டபோது.

(கிருஷாந்தன், கே. சுந்தரலிங்கம்)  நன்றி தினகரன் 


நாடளாவிய ரீதியில் அரச எதிர்ப்பு போராட்டம்

 ஐ.ம.சக்தியினால் முன்னெடுக்க முடிவு

ஐக்கிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் அரசாங்க எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளது.

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியதற்கும், எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கம் பொறுப்பை ஏற்கத் தவறியுள்ள அதேவேளை தீர்வுகளையும் வழங்கத் தவறியுள்ள நிலையில் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். பொதுமக்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக தமிழ்,சிங்கள புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமையை தாங்க முடியாத பொதுமக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 



எத்தகைய நெருக்கடியிலும் மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பேன்

-அங்கஜன்

எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்.மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேனென யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர்   மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை ஆணையாக வழங்கிய என் மாவட்ட உறவுகளும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் மக்களை நேரில் சந்தித்து அவர்களது நிலைப்பாடுகளை நேரில் கேட்டறிந்து கொண்டேன்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில், மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நான் மதிக்கின்றேன்.எங்கள் உறவுகள் இன்று பசியோடு இருக்கிறார்கள், நீண்ட வரிசையில் நின்று பொறுமையிழந்து இன்று வீதிகளில் போராட ஆரம்பித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை முற்றாக முடக்கிய கொரோனா பாதிப்பின் உடனடி எதிர்வினைகளை இப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினூடாக நாம் எதிர்கொண்டுள்ளோம். நாட்டில் 'இல்லை' என்கிற வார்த்தைகளே இப்போது எங்கும் கேட்கிறது. இது இந்த தேசத்துக்கு மிகவும் சவாலான காலப்பகுதியாகும். இதிலிருந்து நாம் மீண்டேயாக வேண்டும்.

நாட்டின் நிகழ்கால பிரச்சினைக்குரிய தீர்வை மக்கள் கோரி நிற்கிறார்கள். அதனூடாக தமது எதிர்காலத்தை வளர்த்தெடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நோக்கம் அதுவாகவே உள்ளது.

எனவே, பிரதான எதிர்க்கட்சி செயற்படுவது போன்று நாட்டை மீட்டெடுப்பதற்கான தீர்வுகளின்றி, வெறுமனே எதிர்ப்பரசியலை மாத்திரம் மேற்கொள்வதை நாம் விரும்பவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே நாம் விரும்புகிறோம்.

சாவகச்சேரி விசேட நிருபர்   நன்றி தினகரன் 



மூன்று மாதங்களில் இலங்கைக்கு 2.5 பில்.டொலர் கடனுதவி

இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை

 

 ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக  இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடமிருந்து , வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டிருந்தார்.

இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக இந்த டீசல் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆம் திகதிகளில் எரிபொருள் தொகை நாட்டை வந்தடைந்தது. அதற்கமைய கடந்த சனிக்கிழமை நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் எரிபொருள் உள்ளடங்கலாக 50 நாட்களில் 200 000 மெட்ரிக் தொன் எரிபொருளை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, தற்போதைய சூழ்நிலையில் அண்டை நாட்டுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு இணங்க இலங்கை மக்களுக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பின் உறுதியான வெளிப்பாடாக எரிபொருள் விநியோகத்தை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இந்த உதவிகளுக்கு வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான சமீபத்திய இந்திய பொருளாதார மேம்பாட்டு உதவி மற்றும் கடன் வசதிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கையின் வளர்ச்சியில் இந்திய அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் இலங்கை அரசாங்கமும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் திறைசேறி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கையெழுத்திட்டதோடு , எக்ஸிம் வங்கி சார்பில் அதன் பிரதம பொது முகாமையாளர் கௌரவ் பண்டாரி இந்தியாவின் சார்பில் கையெழுத்திட்டார். மேலும், இலங்கை அரசாங்கத்தின் தனியான மற்றும் அவசர கோரிக்கைக்கு இணங்க, உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக 1 பில்லியன் டொலர் கடன் வசதியை நீடிப்பது இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வசதியின் கீழ் இந்தியாவிலிருந்து அரிசியின் முதல் ஏற்றுமதி விரைவில் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் இலங்கையில் மேம்படுத்தப்பட்ட இந்திய முதலீட்டின் மூலம் நடுத்தர முதல் நீண்ட கால திறன் உருவாக்கத்திற்கான முயற்சிகளை இந்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது   நன்றி தினகரன் 



மக்கள் போராட்டங்களில் பின்னணியில் எதிர்க்கட்சி

பதவிக்காலம் வரை பதவி வகிப்பேன் -ஜனாதிபதி

எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை. எதிரணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதி பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 



அடுத்த வாரம் புதிய அமைச்சரவை அமைச்சுப் பணிகள் யாவும் சுமுகம்

சபையில் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு

புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர்கள் அதுவரை அமைச்சுக்களில் பணியாற்றி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதிக்கு முகம் கொடுக்க முடியாததாலேயே எதிரணி பாராளுமன்றத்துக்கு தாமதமாக வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு நிலைமை தொடர்பில் நேற்றும் பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. நாட்டு நிலைமை தொடர்பாக எதிரணி எம்.பிக்கள் நேற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,

தாம் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்ததாக எதிரணி எம்.பிக்கள் கூறினர். ஆனால் அவருக்கு முகம் கொடுக்க முடியாமல் எதிரணி எம்.பிக்கள் தலைமறைவாகினர். ஆளும் தரப்பு எம்.பிக்கள் அவருக்கு ஆதரவை தெரிவித்ததை முழுநாடும் கண்டது.2018 இல் வீதிக்கு இறங்கு அரசியலமைப்பை மீறி செயற்படாதீர்களென கோரியவர்கள் இன்று அரசியலமைப்புக்கமைய தெரிவான ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கேட்கிறீர்கள். எதிரணிக்கு பிரதமர் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். விரும்பிய அமைச்சரவையை நியமிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் போதுமான எம்.பிக்களின் ஆதரவு அவர்களிடமில்லை. அரசாங்கம் செயற்படுகிறது. இராஜாங்க அமைச்சர்களாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். அமைச்சுக்களில் பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த வாரம் அமைச்சரவை நியமிக்கப்படும் என்றார். (பா)

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்      நன்றி தினகரன் 





No comments: