தாயகத்தில் பாடசாலைப்பருவத்தில் எமக்கு பொழுதுபோக்கிற்கு வானொலிதான் முக்கியமாக அமைந்தது. காலப்போக்கில்தான் தொலைக்காட்சி அறிமுகமானது.
இதன் வருகைக்கு முன்னர்
எமது பொழுதுபோக்காக இருந்தது கதைப்புத்தகங்கள் படிப்பதுதான். எனினும்
பாடசாலைப் பாடங்கள், அங்கே ஆசிரியர்கள் தரும் வீட்டுப்பாடங்கள் ( Home work )
இவற்றில்தான் நாம் கவனம் செலுத்தவேண்டும். அதனால் கதைப்
புத்தகங்களை பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்து படித்த காலமும் எமது பாடசாலைக்
காலத்தில் அன்றிருந்தது.
பாடசாலைப் புத்தகங்களுக்கு அப்பால், கதைப்புத்தகங்கள்
விடயத்தில் வாசிப்பு அனுபவம் என்பது இத்தகைய எல்லைக்குள்தான் மட்டுப்பட்டிருந்தது.
காலப்போக்கில் தொழில்,
புலப்பெயர்வு, திருமணம், புதிய வாழ்க்கை என வந்தகாலத்தில் பொழுதுபோக்கிற்கு நிறைய சாதனங்கள்
வரவாகிவிட்டன.
நாம் எண்ணிம உலகத்திற்குள்
( Digital World ) பிரவேசித்த பின்னர், அந்தச்சாதனங்களும் புதிய புதிய வடிவமெடுத்துவிட்டன. முக்கியமாக இணைய இதழ்கள், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டகிராம்…. என்பனவற்றின் அறிமுகத்தினால்,
எமது வாசிப்பின் திசையும் மாறிப்போய்விட்டது.
கைத்தொலைபேசியிலேயே உடனுக்குடன்
தரவிறக்கம் செய்து படிப்பதற்கு நிறைய விடயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட
ஒரு கதைப் புத்தகத்தை வாங்கி பொறுமையாக படிப்பது என்பதும், அதுபற்றிய வாசிப்பு அனுபவத்தை எழுதுவது என்பதும்
அபூர்வம்தான்.
சில மாதங்களுக்கு முன்னர்,
மெல்பனில் வதியும் எழுத்தாளர் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு
சென்றிருந்தேன்.
அவற்றில் ஒன்று சிறுகதை இலக்கியம் சார்ந்தது. அதன்பெயர் கதைத் தொகுப்பின் கதை. அந்த நூல்பற்றி இரண்டு பேர் உரையாற்றினார்கள்.
மனிதர்களுக்குத்தான் கதைகள் இருக்கும். மனிதர்கள்தான் கதைகளின் பாத்திரங்களாகவும் இருப்பர். அது என்ன கதைத் தொகுப்பின் கதை… ? ! தலைப்பே ஆச்சரியம் தந்தது.
அந்த விழாவில் குறிப்பிட்ட
புத்தகத்தையும் வாங்கி வந்தேன். அதனை படிப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல், எனது கணவர் ( அமரர் ) சண்முகம் சபேசனின் நூல் வெளியீட்டு
விடயங்களில் கவனம் செலுத்த நேர்ந்தது.
பல நாட்களாக எனது மேசையில்
இருந்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் கதைத்
தொகுப்பின் கதை நூலை ஒருநாள் எடுத்து படிக்கத்தொடங்கினேன்.
மொத்தம் 15 சிறுகதைகளைக்கொண்ட நூல் இது. வழக்கமாக கதைகள் மாத்திரம்தான் இருக்கும் எனப்
பார்த்தால், இதன் நூலாசிரியர் முருகபூபதி இதனை சற்றுவித்தியாசமாக வெளியிட்டிருக்கிறார்.
அதாவது 15 சிறுகதைகள் பற்றியும் 15 பேர் தத்தமது வாசிப்பு அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அவுஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, கனடா
முதலான நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவற்றையும் வாசித்தேன். அதனையடுத்து கதைகளையும் வாசித்தேன்.
15 பேரின் வாசிப்பு அனுபவத்துடன், முருகபூபதியின் கதைகளுக்குள் பிரவேசித்தபோது, எனக்குள்ளும்
புதிய வாசிப்பு அனுபவம் பிறந்ததை உணர்ந்தேன்.
அனைத்துக் கதைகளையும் ஒரே
நாளில் படித்து முடித்தேன். எனினும் அக்கதைகளின் பாத்திரங்களிடமிருந்தும், அவற்றில்
வரும் சம்பவங்களிலிருந்தும் சில மணி நேரம் நகர முடியாமலிருந்தது.
ஒவ்வொரு கதையின் முடிவின்போதும்
பெருமூச்சும் எழுந்தது. சில கதைகளில் அங்கதம் இழையோடியமையால், சிரிப்பும் வந்தது. அவை எமது புலம்பெயர் தமிழ்மக்களின் கதைகள் என்பதனால் வாசிப்புக்கு நெருக்கமானது. புகலிட தமிழ் மக்களை
இந்த படைப்பாளி ஆழ்ந்து அவதானித்திருப்பதும் புலனாகிறது.
ஆயினும், இக்கதைத் தொகுப்பின் கதை நூலில் இடம்பெற்றுள்ள அவள்
அப்படித்தான் என்ற கதை என்னை ஆழ்ந்து யோசிக்கவைத்தது.
இந்தத் தலைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ரஜனிகாந்த்,
கமல், ஶ்ரீபிரியா நடித்திருந்த திரைப்படமும் நினைவுக்கு வந்தது. ஆனால், இரண்டு கதையும் முற்றிலும் வேறு வேறானவை.
இந்த வாசிப்பு அனுபவத்தை
எழுதும் நானும் ஒரு பெண் என்பதனால், ஆசிரியர் “ அவள் அப்படித்தான் “ என்று குறிப்பிடும் பெண் எப்படி இருப்பாள்
என்பதை கூர்ந்து அவதானித்தேன்.
முருகபூபதி அவர்களின் அவள் அப்படித்தான் கதையில் வரும் நாயகி பிரபாலினி சமூகத்தில் மிகவும்
வித்தியாசமான பாத்திரம். திருமணம் செய்யாமல் ஒரு குழந்தைக்கு தாயாகவிரும்புகிறாள்.
அவள் எமது தமிழ் சமூகத்தினால் கற்பனையும் செய்து பார்க்க முடியாத ஒரு எண்ணத்தை நோக்கி
எவ்வாறு நகர்ந்திருக்கிறாள் என்பதையும் ஆசிரியர் சொல்லிச்செல்கிறார்.
இலங்கை அல்லது இந்தியாவை
தாயகமாகக்கொண்டிருக்கும் எமது பெண்கள் குடும்பம், பண்பாடு, பாரம்பரியம் என்ற சிந்தனைவயப்பட்டவர்களாக, “ ஊர் என்ன சொல்லும்…? உறவுகள் எப்படிப்பார்க்கும்…? “ என்ற யோசனையில் தயங்கக்கூடிய விடயத்தில், அவளது
புலம்பெயர் வாழ்க்கை தந்துள்ள சமூக பாதுகாப்பு
அவளை அவ்வாறு மாற்றச்செய்துவிடுகிறது.
சமகாலத்தில் இலங்கையிலும்
இந்தியாவிலும் கூட இவ்வாறு திருமணம் செய்யாமல், ஆண் துணை இன்றி குழந்தை பெற்றுக்கொள்ள
முடியும் என்பதற்கு ஏற்ற மருத்துவமனைகள், சிகிச்சை
முறைகள் வந்துவிட்டன.
இக்கதையில் வரும் நாயகியின்
இந்த முடிவை அவளது தாயும் சிநேகிதிகளும் கூட ஏற்றுக்கொள்ளாமல், “ அவள் அப்படித்தான், அவளை எவராலும் மாற்ற முடியாது, அவள் மாற்றத்தை எமது சமூகத்திற்குள் அறிமுகப்படுத்துகிறாள்
“ என்று ஒதுங்கிச்செல்கின்றனர்.
அவள் அவ்வாறான ஒரு திசையில்
தனது சிந்தனைகளை திருப்பியதற்கு ஊற்றுக்கண் எதுவெனப்பார்த்தால், எமது சமூகத்தில் நீடித்திருக்கு
ஆணாதிக்கத்தின் அடக்குமுறைதான் என்பது தெரியவருகிறது.
தன்னைப்பெற்ற தாய், தனது
தந்தையினால் அடக்குமுறைக்கும், வன்முறைக்கும் ஆளானதை குழந்தைப்பருவம் முதலே பார்த்து
வளர்ந்த அவளுக்கு ஆண்கள் மீதே வெறுப்பு வளருகிறது.
ஆண்களின் ஸ்பரிஸம் கொடுமையானது என்ற உணர்வு வருகிறது. வீடு தேடி வரும் வரன்களையெல்லாம் ஏதாவது காரணம்
சொல்லி தடுத்துவிடும் அவள், திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறாள்.
தனக்கு ஆண்துணையே வேண்டாம்
என்று சிநேகிதிகளிடம் சொல்கிறாள். “ அந்திமகாலத்தில்
உன்னை பராமரித்து பார்ப்பதற்காகவது ஒரு துணை வேண்டுமே “ என்று அவர்கள் சொன்னதும், எந்த தயக்கமும் இன்றி,
திருமணமே செய்யாமல் பிள்ளை பெற்றுக்கொள்வேன். அந்தப்பிள்ளை தனது அந்திமகாலத்தில் துணையிருக்கும்
என்று ஒரு குண்டை தூக்கிப்போடுகிறாள்.
அந்த அதிர்வுதான் இக்கதையின்
உச்சம். தன்னை பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை
வீட்டாருடன் இன்முகத்துடன், இங்கிதமாகப்பேசி வழியனுப்பிவைக்கும் அவளின் மற்றும் ஒரு முகமும் இக்கதையில் காண்பிக்கப்படுகிறது.
முருகபூபதி அவர்கள், இனிவரும்
தமிழர் சமூகம் இத்தகைய திசையிலும் பயணிக்கலாம் என்பதை கூறிச்செல்கிறாரோ..!? என்றும் யோசிக்கவைத்தது.
---0---
No comments:
Post a Comment