ஸ்வீட் சிக்ஸ்டி 9 - வீரத் திருமகன் - - - ச சுந்தரதாஸ்

 .

அதிரடி,ஆக்சன்,அட்டகாசம் என்று தமிழ் திரையுலகில் அடையாளம் காணப்பட்டவர் சி எல் ஆனந்தன்.நடன நடிகரான இவரை திடுதிடுப்பென்று தான் தயாரித்து இயக்கிய விஜயபுரி வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக்கினார் சிட்டாடல் பிலிம்ஸ் அதிபர் ஜோசப் தாளியத்.விஜயபுரி வீரன் படத்தின் வெற்றி ஆனந்தனுக்கு மற்றுமொரு பெரிய பட நிறுவனமான ஏவி எம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க கதவைத் திறந்தது.அப்படி உருவான படம் தான் வீரத் திருமகன்.


ஏவி மெய்யப்பன் செட்டியார் தனது பிள்ளைகளின் பெயரில் முருகன் பிரதர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தைத் தொடங்கி முதன் முதலில் இந்தப் படத்தை உருவாக்கினார்.முருகன்,குமரன்,சரவணன் மூவரும் படத்தை தயாரிக்க ஏ சி திரிலோகசந்தர் முதல் தடவையாக டைரக்டராக இப் படத்தின் மூலம் அறிமுகமானார்.படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதினார்.வசனங்களை அன்று பிரபலமாகிக் கொண்டிருந்த ஆரூர்தாஸ் எழுதினார்.

ஏவி எம் படங்களுக்கு அதுவரை காலமும் ஆர் சுதர்சனம் இசை அமைத்துக் கொண்டிருந்தார்.இளைய தலைமுறையினர் படத் தயாரிப்பில் சம்பந்தப்பட்டவுடன் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன்,ராமமூர்த்தி எவி எம் நிறுவனத்துக்கு முதல் தடவையாக நுழைந்தார்கள்.

படத்தின் கதாநாயகியாக குமாரி சரஸ்வதி அறிமுகமானார்.இவர் வேறு யாருமல்ல, பிற் காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகையான சச்சு தான் அவர்.அழகும்,யௌவனமும் கொண்ட இளம் நாயகியாக படத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் அவர்.





நடனமாடுவதிலும்,வாட் சண்டை போடுவதிலும் வல்லவரான ஆனந்தன் தன் திறமையை இப் படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.காட்டில் திறந்த வெளியில் கொட்டும் மழையில் அசோகனுடன் அவர் போடும் சண்டை அற்புதம்.ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனுக்கு சபாஷ் சொல்லலாம்.அதே போல் வில்லன் ராமதாசுடம் போடும் சண்டையும் விறுவிறுப்பாக படமாக்கப் பட்டது.

நாட்டின் அரசனை எதிரிக்கு காட்டிக் கொடுத்து ,கொலை செய்து புதிய மன்னனிடம் தன் பதவியை தக்க வைத்துக் கொள்கிறான் திவான்.காலங்கள் ஓடுகிறது.இறந்த மன்னனின் மகன் ரவீந்திரன் எங்கோ வளர்ந்து தான் அரசகுமாரன் என்று அறியாமல் திவானிடமே படைவீரனாக வேலைக்கு அமர்கிறான்.அரசுக்கு எதிராகக் புரட்சி செய்யும் விக்ரமசிங்கனை அடக்கும் பணி அவனிடம் வழங்கப்படுகிறது.இதில் ஏற்படும் அனுபவம் ரவியை புரட்சி வீரனாக மாற்றுகிறது.அதே சமயம் அரசிளங்குமரிக்கும் அவனுக்கும் இடையே காதல் மலர்கிறது.

இப்படி அமைந்த கதையை தொய்வில்லாமல் டைரக்ட் செய்திருந்தார் திரிலோகசந்தர்.ஆடல்,பாடல்,மோதல்,சென்டிமென்டல் என்று சம கலவையாக உருவான படத்திற்கு ஆரூர்தாஸின் வசனங்கள் துணை நின்றன .குறிப்பாக அசோகன் பேசும் புரட்சிகரமான வசனங்களும்,எம் வி ராஜம்மாவுடன் அவர் பேசும் உணர்ச்சிகரமான வசனங்களும் ரசிகர்களை கவர்ந்தன .அசோகனுக்கு சண்டை போடுவதுடன் உணர்ச்சிகரமாக நடிக்கவும் இந்தப் படத்தில் வாய்ப்பு கிட்டியது.அதை அவரும் தவற விடவில்லை.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவி எம் சரவணனுக்கு திரிலோகசந்தரை அறிமுகம் செய்து வைத்தது அசோகன்தான்.அதனைத் தொடர்ந்தே திரிலோகசந்தர் டைரக்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


சச்சுவுடன் இணை கதாநாயகியாக ஈ வீ சரோஜா நடித்தார்.இவர்களின் தந்தையாக,மன்னராக டி எஸ் முத்தையா நடித்திருந்தார்.இந்தப் படத்தின் மூலம் புது வில்லனாக நடிக்கும் வாய்ப்பை எஸ் வி ராமதாஸ் பெற்றார்.வில்லன் நடிப்பில் அவர் சோடை போகவில்லை.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இருக்கும் போது பாடல்களை பற்றி ஏது கவலை.கண்ணதாசனின் வரிகளில் அவர்கள் இசை அமைத்த அனைத்துப்பாடல்களும் ஹிட்டாகின.குறிப்பாக ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக்கிளியே அழகிய ராணி,பாடாத பாட்டெல்லாம் பட வந்தாள்,நீள பட்டாடை கட்டி,அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு ஆகிய பாடல்கள் 60 ஆண்டுகள் கடந்தும் ஒலிக்கின்றன.

படத்தில் ஆனந்தன் பெண் வேடத்தில் தோன்றி ஆடிப் பாடும் வெத்தலை போட்ட பத்தினிப் பொண்ணு சுத்துது முன்னாலே பாடல் காட்சி ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்றுக் கொண்டது.இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான திரிலோகசந்தர் பின்னர் புகழ் பெற்ற இயக்குநராகி சிவாஜியின் பல படங்களை இயக்க செய்தார்.அது மற்றுமின்றி ஏவி எம் சரவணனின் மிக நெருங்கிய நண்பருமானார்.




No comments: